0,00 INR

No products in the cart.

மீசை வளர்க்கும் ஆசை வந்த காலத்தில்…

சுஜாதா தேசிகன்                                               

 

சோப் அனுபவம்

ரண்டு வாரம் முன் கல்கியில் நண்பர் ரகுநாதன்  “மக்களின் சுகாதாரத்தையும் தாண்டி மனதில் இடம் பிடித்த சோப்” என்ற தலைப்பில் ‘லைஃப்பாய்’ புராணத்தை எழுதி, கடைசியில் “இன்று இந்தியாவில் அந்தக் கார்பாலிக் ஆசிட் அடங்கிய லைஃப்பாய் சோப் இல்லை” என்று எழுதியிருந்தார்’.

சென்ற மாதம் சென்னை விஜயத்தின்போது இந்த ’கார்பாலிக் சோப்’ வாங்கினேன். அதை பெங்களூர் வந்து உபயோகித்துப் பார்த்தபோது கிட்டத்தட்ட பழைய ’லைஃப்பாய் சோப்’ மாதிரியே இருந்தது. அது எங்கே கிடைக்கும் என்று கடைசியில் சொல்லுகிறேன். அதற்கு முன் வழக்கம்போல என் சோப்பு கதைகளை நீங்கள் படிக்க அழைக்கிறேன்.

முன்னொரு காலத்தில் டி.வி.யில் கிரிக்கெட் போட்டிக்கு நடுவில் விக்கெட் விழும்போது வெறுப்பேற்றாத விளம்பரம்  “பால்மாலிவ் கா ஜவாப் நஹி” என்ற கபில்தேவ் வரும் ஷேவிங் கிரீம் விளம்பரம்.  தியேட்டரில் காண்பிக்கப்படும்போது கபில்தேவ் வந்தவுடன் கைதட்டுவார்கள்.
கபில்தேவ் ரசிகனான எனக்கு பால்மாலிவ் உபயோகப்படுத்த ஆசை. ஆனால், நேற்றுப் போட்ட விதை நெல் போல் மீசை எட்டிப்பார்த்த காலம். மீசை தீர்மானமாக வளர்ந்த பிறகு இந்திய கிரிக்கெட் அணித் தலைவராக கபில்தேவ் போய் அசாருதீன், ஸ்ரீகாந்த் மாறியப் பிறகு, பால்மாலிவ் உபயோகிக்கும் ஆசை நீர்த்து,  மீசை வளர்க்கும் ஆசை வந்த காலத்தில், கிளுகிளுப்பாக எலுமிச்சைப் பழத்தையும் லிரில் சோப்பையும் காண்பித்து புத்துணர்ச்சி ஏற்படுத்தினார்கள். அந்த விளம்பரத்தில் ‘லா லா லா லாலா” என்று பாடலுடன் அந்தப் பெண் (கேரன் லுனல்) அருவியில் ’குஷி’ படத்தில் ஜோதிகா போல ஆட்டம் போடுவதைப் பார்க்கும்போது உடனே போய்  (வேற எங்கே வீட்டுக் குளியலறையில்தான்) குளிக்க வேண்டும் என்ற ஆசை வரும்.

“சோப்புகளுக்கு மாடல் என்றால் பெண்கள் மட்டுமே” என்று இருந்த காலத்தில், ஒரு சோப் மட்டுமே ஆண்களைக் காண்பித்தது. இதில் பெருமைப்பட எதுவுமில்லை. எவ்வளவு தேய்த்தாலும் லேசில் கரையாது, நுரையும் வராது, வாசனையும் அவ்வளவாக இருக்காது. உடம்பை தேய்த்துவிட்டு சோப்பை முகர்ந்து பார்த்தால், நம்ம வாசனைதான் சோப்பிலும் வரும். குளித்து முடித்ததும் தோல் பூசினியின் மேல் வெள்ளையாகப் பூத்தாற்போல் ஆகியிருக்கும். இத்தனை நேரம் என்ன சோப் என்று ஊகித்திருப்பீர்கள். விளம்பரத்தில்  ரெட் பைப்பிங்கில் மஞ்சள் கலர் பனியன் அணிந்த கால் பந்து வீரர் விழுந்து புரண்டு கோல் அடித்துவிட்டு வேர்த்துக் கொட்டிக்கொண்டு ஷவரில் சோப் தேய்த்துக் குளிப்பார்.

“ஆரோக்கிய வாழ்வினையே காப்பது லைஃப்பாய்!
லைப்பாய் எவ்விடமோ ஆரோக்கியம் அவ்விடமே!
லைப்பாய்!”
– என்று பாடல் அடங்கும் வரை அவருக்கு மட்டுமே நுரை வரும். ’நிறைய வேர்த்துக்கொட்டினால்தான் லைஃப்பாயில் நுரைவரும் போலிருக்கிறது’ என்று நானும் எக்கச்சக்கமாக விளையாடியும் அந்த அளவு எனக்கு வேர்த்துக்கொட்டியதில்லை. நுரையும் வந்ததில்லை.

ஒரு சமயம் தாத்தா பாட்டியைப் பார்க்க கும்பகோணம் சமீபத்தில் உள்ள பாபநாசம் கிராமத்திற்குப் போயிருந்தேன். வீட்டுக்கு அருகில் இருந்த மளிகைக் கடையில் நிறைய லைஃப்பாய் அடுக்கி வைத்திருந்தார்கள். கடைக்காரரிடம் விசாரித்ததில் “அதுங்களா தம்பி, இங்கே மாட்டைக் குளிப்பாட்ட இந்த சோப்புதான் உபயோகப்படுத்துவாங்க” என்றார்.

சென்னை வெங்கட் நாராயணா சாலையில் வண்டிக்குப் பெட்ரோல் போட நடு  ராத்திரிக்குப் பத்து நிமிடம் முன் சென்றேன். பெட்ரோல், ‘பங்க்’ வளாகத்தில் இருந்த கடைக்குள் ’மைசூர் கார்பாலிக் சோப்’ (Mysore Carbolic Soap) கண்ணில்பட, உள்ளே நுழைந்து அதை கையில் எடுத்தபோது மூளைக்கும் மூக்குக்குமான தொடர்பைக்  கருவிலிருக்கும் போதே குழந்தை பெற்றுவிடும் என்பதை நிரூபிக்கும் வண்ணம் என் மோப்ப சக்தி வெளிப்பட்டு அட ‘லைஃப்பாய்’ என்று கண்டுபிடிக்க…

கட்டுரையைப் படிக்கும் நீங்கள் அந்த சோப்பை வாங்க உடனே அந்த பங்கிற்குப் படை எடுக்காதீர்கள். ’மணி ஹெய்ஸ்ட்’ (Money Heist) கொள்ளையர்கள் தங்கக் கட்டிகளை அபகரிப்பது போல மொத்த  சோப்புக் கட்டிகளையும் அபகரித்துவிட்டேன்!

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் செய்தித்தாளில் தினமும் சாவைப் பற்றிய செய்திகள், நினைவு அஞ்சலி என்று சிரஞ்சீவியாக இருப்பது மரணம் என்று நினைக்கிறேன். எனக்கு யாரைக் கண்டாலும் பயமே இல்லை என்று சொல்லுபவர்கள் சாவிற்குப்...

“கில்லி விஜய் மாதிரி இந்த வேலை எல்லாம் எதற்கு உங்களுக்கு ?”

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு வார்த்தை ! சில நாட்கள் முன் இந்த செய்தி கண்ணில் பட்டது. “ராணிப்பேட்டை அருகே, தெரியாமல் பைக்கில் இடித்த கார்.. நண்பர்களை வரவழைத்து காரில் இருந்தவரை சரமாரியாக தாக்கிய நபர்’ இது...

சைடு பெட்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நான் பள்ளிச் சிறுவனாக  படித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை நேற்று படித்துக்கொண்டு இருந்தேன்.( நம்புங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது! )  சிறுவனாக அன்று படித்த அதே அனுபவம் நேற்றும்...

இன்னும் எத்தனை காலம் தான் ….

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் தலைப்பை படிக்கும் போது ‘ஏமாற்றுவார்’ என்ற வார்த்தை உங்கள் மனதில் இந்நேரம் உதித்திருந்தால் தொடர்ந்து படிக்கலாம். சென்ற ஆண்டு ‘ஹர்ஷிதா’ என்ற பெண் பழைய சோபாவை ஆன்லைன் மூலம் விற்பனை...