தமிழுக்கு மரியாதை !

தமிழுக்கு மரியாதை !
Published on

தலையங்கம்

"எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழென்று சங்கே முழங்கு"
– என்று முழங்கினான் கவிஞர் பாரதி தாசன்

ஆனால்  கடந்த  30 ஆண்டுகளில் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் படிப்படியாகத் தமிழ் கற்பிப்பது குறைந்துக் கொண்டே வந்தது. தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து படித்த மாணவர்களுக்கு தமிழ் எழுதப்படிக்காத நிலை உருவானது. அதன் விளைவாக தமிழ் நாட்டு அரசுப் பணிகளில்  நியமிக்கப்படுவதை தவிர்க்க முடியாத ஆபத்தான சூழல் உருவானது.

தமிழக அரசுத் துறைகளில்  காலியாக உள்ள பணியிடங்கள் நேரடி நியமனம் மற்றும் போட்டித் தேர்வுகள் மூலம்  நிரப்பப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் எனப்படும்  டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வுகள் நடத்தப்பட்டு காலிப் பணியிடங்கள்  நிரப்பப்படுகின்றன.

அதன் மூலம், தமிழகத்தில் உள்ள அரசுப்பணிகளில்  தமிழர்கள் அல்லாத பிற மாநிலத்தவர் நியமிக்கப்பட்டனர். காரணம் அந்தப் போட்டித் தேர்வுகளில் வெற்றிப்பெற,  தமிழ் மொழிதேர்வு கட்டாயமில்லை.

இதனால்  அரசு போட்டித் தேர்வுகளில் 100 சதவீதம் தமிழக இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு  கிடைக்கும் வகையில் அரசு போட்டித் தேர்வுகளில், "தமிழ் மொழி பாடத்தாள்  கட்டாயமாக்கப்பட வேண்டும்" என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், தேர்வர்களும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

கடந்த சட்டமன்ற கூட்டத் தொடரின்போது, மனிதவள மேலாண்மை துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது  இத்துறை அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்தார். அவர், தமிழ்நாடு அரசுத்துறைகளில் உள்ள காலிப் பணியிடங்கள் மற்றும் மாநில பொதுத்துறை நிறுவன பணியிடங்களில் தமிழகத்தை சேர்ந்த  இளைஞர்களை 100 சதவீதம் தேர்வு செய்யும் வகையில் அனைத்து போட்டித் தேர்வுகளிலும்  தமிழ்மொழி பாடத்தாளில் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்படும் என அறிவித்திருந்தார்.

அமைச்சரின் அந்த  அறிவிப்பையடுத்து, தமிழக அரசின்  போட்டித் தேர்வுகளில் தமிழ்மொழி பாடத்தாளில் தேர்ச்சியை கட்டாயமாக்கி, தமிழக அரசு தற்போது அரசாணை  வெளியிட்டுள்ளது.

இதன்மூலம்  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய  தேர்வுகளில், தமிழ் மொழித்தாள், தேர்வர்கள் அனைவருக்கும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதி தேர்வுக்கான பாடத் திட்டம் பத்தாம்  வகுப்பு தரத்தில் நிர்ணயம் செய்யப்படுவதாகவும், மேற்கண்டவாறு நடத்தப்படும்  கட்டாய தமிழ் மொழித் தாளில் குறைந்தபட்சம் 40 சதவீத மதிப்பெண் தேர்ச்சி  கட்டாயமாக்கப்படும் எனவும், 'தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர  போட்டித்தேர்வு தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது' எனவும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இந்த அறிவிப்பு,  நம் தாய் மொழியை தமிழ் மொழியை நேசிக்கும்  நெஞ்சங்களில் பால்வார்த்தது. தமிழ் நாட்டில் அரசுப் பணிகளில் மக்களுடன் நேரடித் தொடர்பு உள்ள பணிகளில் தமிழ் மொழி அறியாதவர்கள் அமரும் அவல நிலை மறைந்தது.  அதுமட்டுமில்லாமல் இதுவரை அரசுப் பணிக்கு செல்ல முடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருந்த தமிழக இளைஞர்கள் பலர் இந்த அரசாணையால் அதிகளவில் அரசுப்பணியில் சேரும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

ஊடகங்களும், தமிழார்வலர்களும், சமூக செயற்பாட்டாளர்களும் கடந்த சில ஆண்டுகளாக வலியுறுத்தி வந்த  இந்த விஷயத்தை, தாய் மொழியாம் தமிழ் மொழியை சிறப்பிக்கும் வகையில்  ஓர் அரசாணை வெளியிட்டிருப்பதற்காக  இந்த அரசைப்  பாராட்டுவோம்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com