0,00 INR

No products in the cart.

“அந்த சிறிய ரோலுக்கு ரஜினி வேண்டாம்”

அண்ணாத்தே வந்த பாதை – 9

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

வரசத்திலகம் முத்துராமன், ஜெயசித்ரா இருவரும் நடிக்க  “ஆளுக்கு ஒரு ஆசை” என்று ஒரு படத்தை நான் இயக்கினேன். அந்தப் படத்தில் ஒரு சில காட்சிகளே வரக்கூடிய ஒரு சின்ன கதாபாத்திரத்தில் “யாரை நடிக்க வைக்கலாம்” என்று யோசித்தபோது, பஞ்சு அருணாசலம், ரஜினிகாந்த் பெயரைச் சொன்னார். அப்போது ரஜினி வில்லன் வேடங்களில்தான் நடித்து வந்தார். “ஸ்டைலாக கண்ணாடியை சுழற்றி அணிவது, தலைமுடியை தள்ளிவிட்டுக்கொள்வது, சிகரெட்டை தூக்கிப் போட்டுப் பிடிப்பது, நடையில் ஒரு வேகமான ஸ்டைல்” என்று செய்துகாட்டி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தார்.

ரஜினியை வரவழைத்தோம்.  அவரது செயல்கள்  எங்களுக்குப் பிடித்திருந்தது. ஆனாலும், “அந்த சிறிய ரோலுக்கு ரஜினி வேண்டாம்” என்று முடிவு செய்தோம். என்ன காரணம்? “இவருக்கு நல்ல திறமை இருக்கிறது; இந்தப் படத்தில்  இருக்கும் கதாபாத்திரம் இவரது திறமைக்கு ஏற்றபடி இல்லை” என்று நாங்கள் இருவருமே நினைத்ததுதான். எனவே, ரஜினியிடம், விஷயத்தை வெளிப்படையாகச் சொல்லி, “அடுத்து உங்களுடைய திறமைக்கு ஏற்ற நல்லதொரு  கேரக்டர் வரும்போது, உங்களுக்கு  நிச்சயமாக வாய்ப்புத் தருகிறோம்”  என்று சொன்னோம். அவரும், அதனை ஓர் ஏமாற்றமாக எடுத்துக் கொள்ளாமல் சென்று விட்டார். ஆனால், “அடுத்த சில மாதங்களிலேயே, ரஜினி என் இயக்கத்தில் நடிக்கப் போகிறார்”  என்பது அப்போது எங்களுக்குத் தெரிந்திருக்கவில்லை.

ஏவி. எம்மில் தயாரிப்பு நிர்வாகியாக இருந்த என்.எஸ். மணி படம் தயாரிக்க முடிவு செய்தார்.  அவருக்காக எழுத்தாளர் மகரிஷி எழுதிய நாவலை வாங்கினோம்.  மகரிஷியின் ’புவனா ஒரு கேள்விக்குறி’ கதையில் ஹீரோ உண்டு; வில்லனும் உண்டு. ஆனால், நல்லவன் போலத் தோற்றமளிக்கும் ஹீரோ உண்மையில் கெட்டவன்; கதையின் முற்பகுதியில் யாரை கெட்டவன் என்று நினைக்கிறோமோ, அவன்தான் நல்லவன். இப்படிப்பட்ட வித்தியாசமான ஒரு கதையில், முக்கியமான இரண்டு கதாபாத்திரங்களுக்கான நடிகர் தேர்விலும் ஏதாவது வித்தியாசமாக செய்யாமல் இருக்கலாமா?   எனவே, கதாநாயகனாக நடித்துக் கொண்டிருந்த சிவகுமாரை அணுகினோம்.  “நான் மகரிஷியின் அந்தக் கதையைப் படித்திருக்கிறேன்” என்றார். ஆனால்,   “வில்லங்கமான ஹீரோ ரோல்தான்  அவருக்கு” என்று சொன்னவுடன், சற்று பின்வாங்கினார், “அது நெகடிவான ரோல் ஆயிற்றே! நான் ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறவன்; எனவே, நான் அந்த நெகடிவ் ரோலில் நடித்தால் மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்களே!” என்று கூறினார். “இந்த கதாபாத்திரம் இதுவரை நீங்கள் நடிக்காத ஒன்று. நீங்கள்தான் கதையில் உண்மையான வில்லன் என்று தெரிய வரும்போது, ரசிகர்களுக்கு அது எதிர்பாராத ஒன்றாக இருக்கும்! இன்றைய தேதியில் இந்த ரோலுக்கு நீங்கள்தான் மிகவும் பொருத்தமானவர்” என்று சொன்னவுடன், சிவகுமார் நடிக்க ஒப்புக் கொண்டார்.  “என் இயக்கத்திலேயே கதாநாயகனாக பல படங்களில் நடித்த சிவகுமாரை, வில்லனாக நடிக்க வைக்கிறோமே”  என்ற லேசான வருத்தம் எனக்கு இருக்கவே செய்தது. ஆனாலும், அந்த கேரக்டர் சிவகுமாருடைய ஒரு   வித்தியாசமான பரிமாணத்தை வெளிப்படுத்தும் என்று எங்களுக்கு நம்பிக்கை இருந்தது. அதை சிவகுமாரும் தெளிவாகப் புரிந்து கொண்டு எங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பு அளித்தார்.

அடுத்து, வில்லன் ரோல்களில் நடித்துக் கொண்டிருந்த ரஜினியை, ‘மேலோட்டமாகப் பார்த்தால் வில்லன்; உண்மையில் மிக நல்லவர். நண்பனுக்காக தன் நல்ல பெயரையும் தியாகம் செய்யும் பாத்திரம். ரஜினியிடம் விஷயத்தைச் சொன்னோம். “உங்களுக்கு இது ஒரு வித்தியாசமான கதாபத்திரம்; உங்களுடைய ஸ்டைலான நடிப்புக்கும் அப்பால், திறமையை வெளிப்படுத்த ஒரு மிகச் சிறந்த வாய்ப்பாக இருக்கும். இதன் மூலமாக மக்கள் மனதில் உங்களுக்கு ஒரு நல்ல இடம் கிடைக்கும்” என்று சொன்னதும், ரஜினி மகிழ்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். இதுதான் ரஜினிகாந்த் எங்களோடு பணியாற்றத் தொடங்கியப் படம். நல்ல தொடக்கம். இன்றும் தொடர்கிறது. என்றும் தொடரும்.

இப்போது, ரஜினியின் பஞ்ச் டயலாக்குகள் சொல்லும்போது, தியேட்டரில் கைத்தட்டல் வானைப் பிளக்கிறதில்லையா? ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில், ரஜினி  தன்னுடைய கேரக்டரை நன்றாக உள்வாங்கிக்கொண்டு, திறமையான நடிப்பை வெளிப்படுத்தியதன் மூலமாக, பல காட்சிகளில் ரசிகர்கள் அவரது வசனங்களையும், நடிப்பையும் கைத்தட்டி ரசித்தார்கள். உதாரணமாக,  அப்பாவிப் பெண்ணான சுமித்ராவைக் கெடுத்துவிட்டு, நல்லவன் போல நடமாடிக் கொண்டிருக்கும் சிவக்குமாரைப் பார்த்து ரஜினி சொல்லும் ஒரு டயலாக் என் நினைவுக்கு வருகிறது.” நீ கடப்பாரையை முழுங்கிட்டு, சுக்கு தண்ணியைக்  குடிச்சா ஜீரணிச்சிடும்னு நினைக்கிறே! அது நடக்காது. அந்தக் கடப்பாரை ஒரு நாள் உன் வயிற்றை கிழிச்சிக்கிட்டு வெளியிலே வரும்”  என்று ரஜினி ஸ்டைலில் படபடவென வசனம் பேசினவுடன், கைத்தட்டல் பிய்த்துக்கொள்ளும்!

ஏவி.எம்.மில் பணியாற்றிய லட்சுமி நாராயணன் எனக்கு காட் ஃபாதர்.  அவர்தான் படப்பிடிப்பின்போது, நடிகர்களுக்கு வசனம் சொல்லிக் கொடுக்கும் வாத்தியார். படம் பார்க்கிறபோது, எந்த நடிகராவது சரியாக வசனம் பேசவில்லை என்று ஏவி.எம். செட்டியாருக்குத் தோன்றினால், “என்ன, லட்சுமி நாராயணன் செட்டில் இல்லையா?” என்று கேட்பார். அந்த அளவுக்கு ஏவி.எம்.காம்பவுண்டுக்குள் வசனத்துக்கு லட்சுமி நாராயணன் ஒரு அத்தாரிடி. ’புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தில் அவர் என்னோடு பணியாற்றினார். முதல் நாள் படப்பிடிப்பு.   ரஜினி வந்தவுடன், லட்சுமி நாராயணனை அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தோம். ரஜினிக்கு அவர் வசனங்களைப் படித்துக் காட்டினார்.

சிறிது நேரத்தில், லட்சுமி நாராயணன் வசனப் பேப்பர்களுடன் என்னிடம் வந்தார். “சார்! ஒரு சிக்கல்” என்றார். ரஜினிகாந்த், “எனக்கு கொடுத்திருக்கிற வசனம், டைரக்டர் பாலச்சந்தர் மொத்த படத்துக்கும் கொடுத்த வசனங்களைவிட அதிகமா இருக்கே!” என்று தயங்குகிறார் என்றார்.

உடனே ரஜினி காந்திடம் மிகவும்  பொறுமையுடன், “ரஜினிகாந்த்! நீங்க பேசவேண்டிய வசனங்கள் நிறைய இருந்தாலும், அவை எல்லாவற்றையும், ஒரே மூச்சில் நீங்கள் பேச வேண்டும் என்ற கட்டாயமில்லை. நீங்கள் வசனங்களைப் படிக்கக் கேளுங்கள்.உங்களாம் எந்த அளவுக்குப் பேச முடிகிறதோ, அந்த அளவுக்கு கொஞ்சம், கொஞ்சமாக பேசுங்கள். அதற்கு தகுந்தாற்போல நான் ஷாட்களை அமைத்துக் கொள்ளுகிறேன். கவலைப் படாதீங்க!” என்று உற்சாகமூட்டி சில வார்த்தைகள் சொன்னதும், ரஜினி சகஜ நிலைக்குத் திரும்பினார். அன்று எழுதிக்கொடுத்த வசனத்தை ’பேசமுடியுமா?’ என்று தயங்கிய ரஜினி, இன்று தானாகவே எத்தனை சரளமாக, ஸ்டைலாக வசனங்களைப் பேசுகிறார்! அவர் எப்போது பஞ்ச் டயலாக் பேசுவார்  என்று ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்!ஏவி. எம்.மின் ’சிவாஜி’ படத்தில், ரஜினி பேசிய வசனத்தால்,  ’உலகமே அதிருதில்லே!’  இந்த அளவுக்கு ரஜினி வளர்ந்ததற்குக் காரணம் அவரது ஈடுபாடு, உழைப்பு, தன்னம்பிக்கை. சும்மா கிடைத்ததில்லை “சூப்பர் ஸ்டார்” அந்தஸ்த்து!

கதைப்படி, பசுத்தோல் போர்த்திய புலியான சிவகுமாரால், கெடுக்கப்பட்ட சுமித்ராவையும், அவரது குழந்தையையும் ரஜினி தன் கூட வைத்து பரிவுடன் பராமரித்து வருவார். ஒரு கட்டத்தில், திருமணம் செய்துகொள்ளாமல், சுமித்ராவுடன் வாழ்வதைவிட, “அவரை ஏன் நாம் திருமணம் செய்துகொள்ளக்கூடாது?” என்று நினைப்பார் ரஜினி. தன் எண்ணத்தை சுமித்ராவிடம் தயங்காமல் வெளிப்படையாகவே  கேட்டு விடுவார். அப்போது, சுமித்ரா “நான் ஒரு அழுகிய பழம்; கசங்கிய மலர்; நான்  தெய்வமாக மதித்து, மனதுக்குள் வணங்குகிற உங்களுக்கு, அழுகிய பழத்தை, கசங்கிய மலரை  அர்ப்பணிக்க விரும்பவில்லை” என்று  மிகவும் சென்டிமென்டலாக  பதிலளிப்பார்.  அதைக் கேட்டதும், ரஜினி உணர்வுபூர்வமாக பாடி நடித்த காட்சிதான்  “ராஜா என்பார், மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை ஆள”  இப்போது கூட  சேனல்களில் ‘புவனா ஒரு கேள்விக் குறி’ படத்தைப் பார்த்தால், நான் சொல்வதை நூற்றுக்கு நூறு ஏற்றுக்கொள்ளுவீர்கள்.  ரஜினியையும், என்னையும் முதல் முறையாக சேர்த்து வைத்த அந்தப் படம், ரஜினியின் திரையுலக வாழ்க்கையில் ஒரு திருப்புமுனை ஏற்படுத்திய படம்.

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...