கிரிக்கெட்டின் நிறம் என்ன?

கிரிக்கெட்டின் நிறம் என்ன?
Published on

சிறுகதை

ஜே.எஸ்.ராகவன்                                                                           ஓவியம் : தமிழ்

சந்த கால அறுபதுகளில்  என் இளம் உடலில் அட்ராலினன் ஹார்மோனைப் பாய்ச்சிய மூன்று அம்சங்கள்.  ஒன்று கிரிக்கெட், இரண்டாவது கிரிக்கெட், மூன்றாவதும் அதே.  பூந்தமல்லி, ஆலந்தூர் பகுதிகளிலிருந்து சல்லடை போட்டு சலித்து எடுத்த  இளைஞர் டீமுக்கு  ஆலந்தூர் லெவன் என்று பெயர் சூட்டப்பட்டு, அதன் கேப்டன், காரியதரிசி, பொருளாதாரராக ஏகமனதாக தேர்ந்தெடுத்து, ஹெல்மெட்டுக்குப் பதிலாக  கிரீடத்தை என் தலையில்  சூட்டினார்கள். மௌலி அழுத்தியது. இருந்தாலும் பெருமையாக இருந்தது.

ஒரு ஞாயிறுமாலை, பாபு, ஜூகன், வெங்கி, கே,எஸ்.வியும் டீமுக்காக நன்கொடை வசூல் செய்ய பூந்தமல்லியை வலம் வந்தோம். அன்று காலைதான் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் கோயில் கட்ட, கணபதி, ரகுபதி, பசுபதி,  படை எடுத்தது எங்களுக்குத் தெரியாமல் போய்விட்டது. ஆனால், முன்வைத்த காலைபின்வைக்கக் கூடாது என்றும், நன்றாக பிட்ச்சில் ஏறிபந்தை அடிக்கும் பாணியில் முயற்சி செய்வது என்றும் தொடங்கினோம். 'பட்டாபாக்கியம், படாட்டாலேகியம்' என்று வெங்கி சொல்லி சிரித்தான். அவனுக்குப் பிடிச்ச மற்ற பரிபாஷை அறுபத்திமூவர், லைனாக அவுட் ஆகி வருவதைக் குறிக்கும்.

முதல் வீடு தேரடித் தெருவில் இருந்த வக்கீல் சடகோபாச்சாரியின் அகம். ஜன்னலில் பிங்க் நிறத் திரை போட்டிருந்தது. 'அப்படீன்னா வைதேஹி உள்ளே இருக்கான்னு அர்த்தம்டா' என்று பாபு புளகாங்கிதத்துடன் சொன்னான். அந்த பாவாடை மேலாக்கு மேனாமினுக்கி அவனுடைய ஹார்ட் திராப். வக்கீல்  சாரி ஈஸிசேரில் கால்களை 45 டிகிரி கோணத்தில் அகல விரித்து, துருத்தியிருந்த நீண்ட கட்டைகள் மேல் போட்டு, விசைத் தறியாக ஆட்டிக் கொண்டே அன்றைய இந்து பேப்பரை அலசிக் கொண்டிருந்தார்.'வாடா பாபு, என்னடா சகாக்களோட வந்திருக்கே? எப்போடா உனக்கு  சீமந்தம் என்று கேட்டார். 'உங்க வைதேஹிக்கு என்னிக்கோ அன்னிக்குத்தான் மாமா'.  பாபுவின் முணுமுணுப்பு  அவர் காதில் விழுந்திருந்தால் பூண் போட்ட வாக்கிங் ஸ்டிக்கை எடுத்திருப்பார்.

வருகையின் நோக்கம் விவரிக்கப்பட்டது. 'கிரிக்கெட் டீமா? சபாஷ். என்னையும் சேத்துக்கோங்கடா. நான் அந்தக் கால பிளேயர் தெரியுமா? இங்கிலாந்து லார்வுட் மாதிரி வேகமா வீசுவேன். அடியே, வைதேஹி, அந்த சாத்துக் குடியை எடு' என்று கேட்டு வாங்கிக் கொண்டார். 'இதோ கவனமா பாத்துக்கோங்கோ.  இப்படி க்ரிப் பிடித்து தலைக்கு மேல் பிரதட்சணமா சுத்திப் போட்டா அது இன் ஸ்விங்கர். அப்பிரதட்சணமா போட்டா அவுட் ஸ்விங்கர்' என்று டெமோ கொடுத்து அருளினார். வைதேஹி  சுறுசுறுப்பாக ஓடி இரண்டு பழங்களை பீல்டு பண்ணி ஸ்டூலில் வைத்தாள்.

குறிவைத்த டோனரை மேட்டருக்குள் இழுத்தேன். 'எங்களோடது சின்ன பசங்க டீம், மாமா. நீங்க ரொம்ப பெரியவா.  செமத்தியா டொனேஷன் கொடுத்து ஆசிர்வதிக்கணும். நோட்டு புஸ்தகம் பேனா எல்லாம்  ரெடியா இருக்கு. தேவரீர் உபயமா எவ்வளவு எழுதிக்கிறது?' என்று  கேட்டேன்.

விசைத்தறி சடக்கென்று  நின்றது. கண்களை மூடிக் கொண்டு இரண்டு கை விரல்களையும் தலைக்குப் பின்னால்  கோத்து வைத்து, 'அதனாலென்ன திவ்யமா செஞ்சுட்டாப்  போச்சு. ஆனா இது தேய்பிறை ஆச்சே? ஆகாதே. இன்னிக்கு கரி நாள் வேற. எனக்கு சந்திராஷ்டமம். ஆகையினாலே என் பேரை எழுதிண்டு அமௌன்ட்டுக்கு  எதிரா பிளான்க்கா விட்டுடுங்கோ. வர அமாவாசை அன்னிக்கு வாங்கோ, நான் தரப் பார்க்கிறேன். அட! மணி நாலா? கிருஷ்ண, கிருஷ்ணா!  டயமாச்சு, சுகீர்தாம்பா வெஸர்ஸ் நஞ்சுண்ட ராவ்  கேஸிலே ஒரு அபிடவிட் தயார் பண்ணுனும்'னு' எங்களை விரட்டினார்.  நாங்கள் வெளியே வந்தோம். 'ஜன்னல் திரைக்கு மேல வைதேஹியின்  கண்கள் சாரி கேக்கிறது தெரியறதுடா' என்றான் பாபு 'போடா கிறுக்கு', என்றான் ஜூகன்.

வீடு வீடாக ஏறி இறங்கி நிதிக்காக யாசகம் செய்ய வேண்டிய நிலை எங்கப்பாவின் கட்சிக்காரர் மாங்காடு மந்திரமூர்த்தியின் பரந்த இதயத்தால் ஏற்படாமல் போய்விட்டது. காரணம்? பல வருஷங்களாக இழுத்துக் கொண்டிருந்த  கேஸ் அன்று அவர் பக்கம் சாதகமாக தீர்ப்பாகி இருந்தது. 'சாமி, இதை வெச்சிண்டு தேவையானதை வாங்கிக்கோங்க என்று நாங்கள் வாயைப் பிளக்கும் வகையில் பெரிய தொகையைக் கொடுத்தார். 'எண்ணி எண்ணிப் பார்க்கும்போது இன்பம் கொண்டாடுதே' என்று பாடிக்கொண்டு மறு நாளே மௌன்ட் ரோடு ஷெர்மன் அன்டு கோவிற்குப் போனோம்.  பளபளவென்று காஷ்மீர் வில்லோ பேட்டுகள், லின்சீட் ஆயில்,  பந்துகள், ஸ்டம்ப்ஸ், பெயில்ஸ், கிளௌஸ், கிட் பேக், மறக்காமல்  கிட்னி கார்டு எனறு வாங்கித் தள்ளி விட்டோம். எல்பின்ஸ்டன் தியேட்டர் வளாக சோடா பவுன்டனில் உயரமான  பலூடா சாப்பிட்டுவிட்டு குஷியாகத்  திரும்பினோம்.

முதல் மேட்ச் ஏரிக்கரை கிரௌன்ட்ஸில் நடந்தது. அங்கே தடிதடியாகத் திரண்டிருந்த சுமார் பன்னிரண்டு ரௌடி எருமைகளை, 'ஹேய், டிர், டிர் என்று  விரட்டி, சுண்ணாம்புத் தூளால், பாப்பிங் கிரீஸ், பேட்டிங் கிரீஸ், பௌன்டரி லைனை மார்க் பண்ணி முடிப்பதற்கும், ஆங்கிலோ இந்தியர்களின் பிரதான வாசஸ்தலமான செயின்ட் தாமஸ் மௌன்ட்டின் பட்ரோடு லெவன் ஆர்பாட்டத்துடன் வந்திறங்கியது. கேப்டன் கிரென்வில் ஜோசப் டிக்ரூஸ். சுருள் முடி. பூனைக் கண்கள்.  வைஸ் கேப்டன் கம் விக்கெட்கீப்பர் ஆல்பர்ட் பெர்னான்டோ, மற்றும் ரஸ்ஸல், டிமான்ட்டி, பெரேரா, பொல்லார்டு, செபாஸ்டின், கர்வாலோ. பாக்கி  பேர் ஞாபகமில்லை.

மேட்சை ஸ்பான்ஸர் செய்த கிரிக்கெட் காதலர் வள்ளல் சௌந்திரம் சார், பிளம் கேக், க்ருசோம்,  மினி சமோசா, நவரத்தின மிக்ஸர், காபி என்கிற ஹை டீயை கனகா பேக்கரியிலிருந்து  வரவழைத்து அளித்து  எங்களைக் குஷிப் படுத்தினார். மென்று துப்ப சூயிங்கம்மும் கூட. 'தாங்க்ஸ் மேன்' என்று டீக்ரூஸ் கைகுலுக்கினான். மேட்சில்  அதிக ரன் அடிக்கும் பாட்ஸ்மெனுக்கு  ஒரு அஞ்சு செல் எவரெடி டார்ச், மற்றும் மான் மார்க்  குடை என்றும் பரிசுப் பொருள்களை  அறிவித்து ஊக்குவித்தார்.

டிரில் மாஸ்டர் பிள்ளை துக்காராம்தான் அம்பயர். ரயில்வே கைகாட்டி மரமாக  கையைத்  தூக்கி விடமாட்டான். எல்.பி.டபிள்யூ  ரூல்ஸ் தெரிந்தவன்.   சிங்கிள் விக்கெட் கேம் ஆனதால் லெக் அம்பயர் கிடையாது. டாஸை ஜெயித்த எங்கள் ஆலந்தூர் டீமின் ஓபனர்கள் காடா கண்ணப்பாவும், கட்டை கணபதியும் பலத்த ஆரவாரத்துக்கு இடையே களம் இறங்கினர். பதினாறு அடி வேங்கை வேகத்தில் பாய்ந்து வந்து டி மான்ட்டி போட்ட பந்தை காடா கண்ணப்பா வாங்கி, தூக்கி அடித்தான். பறந்த பந்து பவுண்டரிக்கு வெளியே தயிர் சட்டியைத் தலையில் சுமந்து தள்ளாடிச் சென்ற கிழவியின் பானையில் பட்டு அன்னாருக்கு தயிராபிஷேகம் செய்தது. என்னதான் தயிர் குளிர்ச்சியை அளித்தாலும் அந்த மூதாட்டி தன் வசவுகளை தங்கு தடை இன்றித் தொடுத்து,  கண்ணப்பாவின் மூன்று தலைமுறைகளை அசிங்கப்படுத்தினாள். ஸ்டேடியத்தில் இருந்த வள்ளல் சௌந்திரம் சார்  தலையிட்டு, பேச்சு வார்த்தை நடத்தி,  ஆவன செய்ததால் அரை மணி நேரத் தடங்கலுக்குப் பின் மேட்ச் தொடர்ந்தது.

எங்கள் டீம் இருபது ஒவர்களில் 108 ரன்கள் ஏழு விக்கெட் இழப்பிற்கு  எடுத்து பௌலிங்கில் இறங்கியது. பட் ரோடு லெவன் எங்கள் டீமின் அதிரடி  பந்து வீச்சுகளை எதிர்கொள்ள முடியாமல் பதினைந்து ஓவர்களிலேயே 87 ரன் மட்டும் எடுத்து  சுருண்டது. ஆஃப் ஸ்பின் போலரான எனக்கு ஆறு விக்கெட்டு அறுவடை. எனக்கு டார்ச்சும், குடையும் கிடைத்தன தானத்துக்கு வந்த குடையை ஆய்வு செய்த சுந்தரா மாமா, 'அர்த்த ராத்திரியில் பிடிக்காதே' என்று உபதேசித்தார்.

அடுத்த மாதம் கன்டோன்மென்ட்டில இருக்கும் பெண்கள் உயர் நிலைப் பள்ளி மைதானத்தில்  மேட்ச் நடத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. ஏரிக்கரை கிரௌன்ட்ஸ் லார்ட்ஸ் என்றால் பள்ளி மைதானம் லீட்ஸ். அதைப் பற்றி பேச ஒரு மாலை பொடி நடையாகக் கிளம்பி பட் ரோடுக்குப் போனேன். டிக்ரூஸின் வீடு கம்பீரமாக தெருக்கோடியில் இருந்தது.  வாசற்படிக்கு மேல் ஆஞ்சநேயர் சிலைக்கு துளசி மாலை சாத்தின மாதிரி போகன்வில்லாக் கொடி ரத்தச் சிவப்பு பூக்களுடன்  மிளிர்ந்தது. வெளித் தோட்டத்தில் குருவிகளும், மாடப் புறாக்களும் றெக்கை அடித்துக் குளிக்க,  குடிக்க சின்ன ஸ்தூபியின் மேல் வைத்த தண்ணீர் பேஸின். நம்மூர் எம்.டி.ராமநாதனுக்கு இணையான ஜிம் ரீவ்ஸின் கனமான குரல் வீட்டிலிருந்து சுகமாகத் தவழ்ந்து வந்தது. பாடல் 'வெல்கம் டு மை வேர்ல்டு'. எனக்குப் பிடித்தது. வெளியே நின்று கேட்டு ரசித்து விட்டு  அழைப்பு மணியை அடித்தேன்.

'ஆரு?' என்று லோக்கல் குரல் கேட்டு கதவு திறக்கப்பட்டது.  வேலைக்காரியாக இருக்க வேண்டும்.

'டிக்ரூஸ் இருக்காரா?'

'எந்த டிக்ரூஸ்? இங்கே மூணு டீக்ரூஸு இருகுது. கிரான்டுபா டிக்ரூஸு, டாடி டிக்ரூஸு, சின்ன டீக்ரூஸூ'  தாத்தா டிக்ருஸு தொரை ரூமிலே  தூங்குது. டாடி தொரையும்,  தொரசாணி அம்மாவும் பாட்டு கேட்டிண்டு இருக்காங்க. சின்ன துரை  மாடிலே  பொஸ்தகம் படிக்குது.'

'எனக்கு சின்ன டிக்ரூஸ்தான் வேணும்  பேரு ஜோசப்.'

'ஆ! அப்படிச் சொல்லு. தோ இட்டாரேன். இங்கே சோபாலே குந்து.'

குந்தினேன். ஜூக் பாக்ஸில் ஜிம் ரீவ்ஸ் பாட்டு நின்று விட்டிருந்து, அமைதி சூழ்ந்தது. சுவற்றுப் புகைப் படத்தில்,  வேட்டை உடையில் சர்வேயர் ஹாட் அணிந்த முரட்டு மீசைக்காரர், தான் சுட்ட காடை, கவுதாரி பட்சிகளோட போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். கைகளில் குருவிக்காரராக நீண்ட துப்பாக்கி. கூண்டில் இருந்த பச்சைக் கிளி தலையை சாய்த்து என்னைப் பார்த்து கீக்கீ என்றது. நான் பதில் குரல் கொடுக்கவில்லை.

திடீரென்று மறு பக்கம் பார்த்தேன். கதவின் அடிப்பக்க வழியாக ஒரு பழுப்பு நிற மூக்கு தெரிந்தது. டீக்ரூஸ் உருமாறிவிட்டானா? சேச்சே. நாயாகவோ அல்லது நரியாகவோ இருக்கும். மூக்கு வெளியே வந்தது. நாய்தான் அதுவும். ஜெர்மன் ஷெப்பர்டு என்கிற நாமறிந்த  அல்சேஷன். தின்று கொழுத்திருந்த வளர்ப்பு நாய்.

என்னை முறைத்து விட்டு, தார்மீகத்துடன் தாக்குதலுக்கு முன் கிர்ரென்று முதல் எச்சரிக்கையை விடுத்தது. பயத்தில் உறைந்து நான், ஐயனார் சிலையாக ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தேன். 'உர்ரென்று' இரண்டாவது எச்சரிக்கை விடுத்தும் நான் அசையாமல் இருப்பதைப் பார்த்து, அடுத்த அஸ்திரமாக 'வ்வள்' என்று லோ டிசிபலில்  குரைத்தது. நாய் பாயத் தயாராக முஸ்தீபுகள் செய்து கொண்டும், நான் ஓடத் தயாராக  முஸ்தீபுகள் செய்து  கொண்டிருக்கும்போது, 'டைகர். ஷட் அப். அவுட், ஐ ஸே, அவுட்' என்று சத்தம் போட்டுக் கொண்டு  நடு வயது டிக்ரூஸ் வந்தார். கையில புகையும் பைப். கம்மென்று இதமான டுபாக்கோ மணம். 'இன்னா மேன்,  இன்னாவேணும் உனக்கு?' என்றார் தெள்ளு தமிழில்.

''குட் ஆப்டர்நூன், மிஸ்டர் டிக்ரூஸ். ஐ ஆம் எ பிரெண்டு ஆப் ஜோசப்.'

என்னுடைய துனி நாக்கு  ஆங்கில உச்சரிப்பு அவரைப் பின் வாங்க வைத்தது. 'ஓ! யூ டாக் இங்கலீஷ்?? குட் மேன்.  யூ ஆர் இஸ் பிரண்டு? வெயிட், ஐ வில் கால் ஹிம்.  பை தி வே யூ ஆர் ராக்-வனா?  தி கேப்டன் ஆப் தி டீம் தட் திராஷ்டு தி கிரேட் பட்ரோடு லெவனா?'

'எஸ் மிஸ்டர் டிக்ரூஸ், ஐ ஆம்', என்றேன்  பெருமையுடன்.

'டிஸ்கிரேஸ்புல், மேன். ஹவ் ஆன் ஆங்கிலோ இன்டியன் டீம் ஹாவிங் ரூட்ஸ் இன் அவர் கிரேட்  கன்ட்டிரி இங்கிலன்டு கேன் பீ டிபீட்டட் பை இன்டியன்ஸ் ஹூ ப்ளே கில்லி அண்டு கோலி?'

இதற்கு சூடாக என்ன பதில் சொல்வது என்று முழித்தேன். நல்ல வேளையாக ஜோசப் வந்தான், 'ஹேய் ராக் வந்துட்டியா? வா வெளிலே போலாம். பை டாடி, பை டைகர்'.

அப்பன் டிக்ரூஸ் வாயில் புகைந்து கொண்டிருந்த பைப்பை எடுத்து விட்டு  என்னை  சுட்டும் சுடர் விழிகளுடன்  பார்த்தார். அவர் உள்ளேயும் கோபம் புகைந்து கொண்டிருக்க வேண்டும். 'டைகரும் எஜமான விஸ்வாசத்துடன் தடித்த லொள் ஒன்றைத் தன் பங்குக்குப்  போட்டது.

இருவரும் வெளியே வந்தோம். 'ராக்! டோன்ட் மைன்ட் மை டாடி. அவரு இன்னும் இன்டியாவை பிரிட்டிஷர்ஸ் ரூல் பண்ணிண்டு இருக்காங்கிற நினைப்பிலே இருக்கார். நல்ல வேளை என் கிரான்ட்பாவை நீ பாக்கலே.  ஹர் ஹைனஸ் குயின் எலிசபெத் தி செகண்டு பொறந்த நாள். குயினாக காரனேஷன் ஆன நாள், வெட்டிங் நாள்னு ஒண்ணுவிடாம கேக் வெட்டி ஒயின் குடித்துக் கொண்டாடி God save the queenன்னு  நடுங்கிற வாய்ஸில் பாடுவார். சரியான நட். இவரைத்தான் God சேவ் பண்ணணும். இவங்க ரெண்டு பேரையும் பிரிட்டன் உள்ளே விடாது. . கடைசிவரை இப்படியே இருந்துட்டுப் போவாங்க போல இருக்கு. சரி, வா,  டீ குடிச்சுண்டே மேட்சைப் பத்திப் பேசலாம்' என்றான் இரண்டு ஜெனரேஷன்களைத் தாண்டி இந்தியமயமாகும் ஜோசப், என் தோளில் கை போட்டுக் கொண்டு.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com