0,00 INR

No products in the cart.

கலைந்த ஜமுக்காளத்தில் படுத்து உறங்கிய இடம்… இன்று கனவாக வந்து போகிறது…

ண்ணப்பச் செட்டியார் அப்பாவின் சகோதரர்… நாங்கள் பெரியப்பச்சி என்றழைப்போம். பஞ்சு அருணாச்சலம் அவர்களின் தந்தை…ஐயா சாத்தப்பச் செட்டியாருக்கு மூன்று ஆண் வாரிசுகள். கண்ணப்பச் செட்டியார், A .L .ஸ்ரீனிவாசன், கண்ணதாசன்.

காரைக்குடியில் கண்ணப்பச் செட்டியார் வீடு…

அந்த வீட்டிற்கு நான் பெரும்பாலும் திருமண நிகழ்ச்சிகளுக்காகவே சென்றிருக்கிறேன். பெரியப்பச்சிக்கு பஞ்சண்ணன் உட்பட 5 மகன்கள். இரண்டு மகள்கள். ஒவ்வொரு வருடமும் ஏதாவது விசேஷம் நிகழும். யாராவது ஒருவருக்குத் திருமணம்… அல்லது நெருங்கிய உறவினருக்குத் திருமணம் என்று… விசேஷம் இல்லாத நேரங்களில் அந்த வீடு எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை மட்டுமே செய்து பார்த்திருக்கிறேன்.

வீட்டின் முன் இரும்பினால் ஆன சின்ன கேட். அத்தனை பெரிய வீட்டிற்கு அத்தனை சின்ன கேட் பொருத்தமில்லாமல் இருக்கும். ஆனால் அத்தனை ஆண்டு காலம் அதைப் பார்த்துப் பழகிவிட்ட எனக்கு ஏனோ உறுத்தவேயில்லை. உள்ளே நுழைந்ததும் வலது பக்கம் கேணி. அங்கேதான் எல்லோரும் குளிப்பது வழக்கம். கேணியைத் தாண்டி சிறு சிறு அறைகள் நடுவே பாதை விட்டு அங்கேயும் ஒரு இரும்பிலான கேட். அதைத் தாண்டி வெராந்தா. வெராந்தா தரை கிரானைட் கற்களால் ஆனது. நடுவில் பாதை விட்டு இருபுறமும் வெராந்தா. சுவற்றில் அலங்கார வேலைப்பாட்டுடன் டைல்ஸ். கையினால் செய்யப்பட்டது. தேக்கில் கடையப்பட்ட ஆறு தூண்கள். அந்த வெராந்தா கிட்டத்தட்ட வரவேற்பறை போன்றது. மேலே சுழன்று களைத்த கிராம்ப்டன் காற்றாடி. மெதுவாய் எப்போதும் ஓடிக்கொண்டேயிருக்கும். திருமண நிகழ்வின்போது அங்கே ஜமுக்காளம் விரிக்கப்பட்டிருக்கும். அதில் அன்றைய நாளிதழ்கள், வெற்றிலை, பப்பாளி விதை மற்றும் சர்க்கரைப் போட்டு வறுத்த செட்டிநாட்டு ஸ்பெஷல் வறுவல் சீவல், சுண்ணாம்பு போன்றவை ஒரு தட்டில்… ஆண்கள் அங்கேதான் பெரும்பாலும் கூடியிருப்பார்கள். மதியம் உணவுக்குப் பிறகு படுத்துக் கிடப்பதும் அங்கேதான். வெராந்தாவையும் உள் வீட்டையும் பிரிக்கும் சுவற்றில் பர்மா தேக்குக் கதவு. பூண் போன்ற அலங்கார வேலைப்பாட்டுடன். இரும்புத் தாழ்ப்பாள், முட்டையின் வெள்ளைக்கருவை வெள்ளை சுண்ணாம்புடன் சேர்த்துப் பூசப்பட்ட பளபளக்கும் சுவர். உள்வீட்டிலும் நிறைய அறைகள். இடதுபக்கமும் வலதுபக்கமும். பங்காளிகளுக்கு நடுவே முற்றம். அங்கேதான் வத்தல், அப்பளம் போன்றவற்றை பெரியம்மா காயவைப்பார். முற்றத்தைத் தாண்டி ஒரு நீளமான டைனிங்க் ஹால். அங்கேதான் உணவு பரிமாறப்படும். அதைத்தாண்டி செங்குத்தாக இறங்கும் படிகளில் கீழே இறங்கினால் பின் வாசல். விறகு அடுப்புக் கொண்டு அண்டா குண்டாவில் சமையல். ஒரு ஓரத்தில் தலைமுடியை ஓரக் கொண்டையாகப் போட்ட ரவிக்கை அணியாத ஆயாக்கள் பாத்திரம் கழுவிக்கொண்டிருப்பார்கள்.

விசேஷத்தின்போது காலை டிஃபனுக்கே இரண்டடியில் வாழை இலை. சிறுவர்களுக்கும் கூட… தும்பைப்பூ இட்லி…வடை, பணியாரம், தேங்காய்ச் சட்னி, காரச் சட்னி, மிளகாய்ப் பொடி, நெய், சாம்பார், கொத்சு, பஞ்சாமிர்தம் போன்ற ஒரு சுவீட், இறுதியாக காபி.

ஆண்கள் கண்ணைப் பறிக்கும் வெள்ளையில்… பெண்கள் பலவண்ண கண்டாங்கிச்சேலையில் வண்ணத்துப் பூச்சிகளாக வலம்வருவர்.

வாங்க… அய்த்தை சுகமா இருக்காகளா…?

வாங்க…உடம்பு தேவலையா…? என்று பல வருடங்கள் கழித்துப் பார்த்துக்கொள்ளும் உறவுகளின் அன்பு மொழிகள் ரீங்காரமிடும்.

“வாங்க” என்ற வார்த்தையில் உங்கள் இணக்கத்தையும் பிணக்கத்தையும் காட்டிவிடலாம். ஒருவர் உங்களைப் பார்த்து “வாங்க” என்று சொல்லாவிட்டால் அவர் உங்களுடன் “டூ” விட்டிருக்கிறார் என்று பொருள்.

அப்பா கேணிக்கு அருகேயுள்ள அறைகளின் அருகே சேரைப் போட்டுக்கொண்டு மௌனத்தில் ஆழ்ந்திருப்பார். ALS , பெரியப்பச்சி இல்லாத நேரங்களில் கேணிக்கு அருகே நின்று புகைபிடிப்பார்.

அந்தக் காலங்களில் கழிவுநீர் அகற்றலுக்கு நிலத்தடிக் குழாய்கள் நிறுவப்படாத நேரம். பெரும்பாலான வீடுகளில் Indian toilet மட்டுமே இருந்தது. ஊரில் சில பெரிய மனுஷர்கள் வீட்டில் மட்டும்தான் Western Toilet இருந்தது. அதில் ஒரு பெரிய மனுஷர் வீட்டில் உள்ள அறையை அப்பாவிற்குத் தந்துவிடுவார்..அங்கே Western toilet உண்டு..அப்பா அங்கேதான் தங்குவார். இப்போது இருப்பதுபோல் ஸ்டார் ஓட்டல்கள் இல்லாத நேரம்.

பஞ்சு அண்ணன் சென்னையிலிருந்து வந்த பிரபலங்களுடன் தெரு முனையில் காரில் இருந்துகொண்டு பேசிக்கொண்டிருப்பார். அப்பா, பெரியப்பா, சிற்றப்பா தொல்லை இல்லாமல் சிகரெட் பிடிக்கும் சுதந்திரம் அங்கே கிடைக்கும்..

திருமண வைபவத்தின் எல்லாக் காரியங்களையும் ஒரு ராணுவ தளபதியின் மிடுக்கோடு மேலும் கீழுமாக நடந்து, கட்டளைகள் விட்டபடியே செய்துகொண்டிருப்பார் பெரியப்பச்சி. வேட்டி நுனியைப் பிடித்துக்கொண்டே. அப்பாவிற்கும் ALS பெரியப்பாவிற்கும் பின் மண்டையில் சிறு வழுக்கை இருந்தாலும் முன்னாலிருந்து பார்ப்பவர்களுக்குத் தெரியாது. பெரியப்பச்சிக்கு கிட்டத்தட்ட முழு வழுக்கை. தலையிலும் நெற்றியிலும் ரத்தநாளங்கள் புடைத்துக்கொண்டிருக்கும்.

அப்பாவிற்கு நான் உடம்பு பிடித்துவிட்டிருக்கிறேன். அவர் உள்ளங்கைகள் அத்தனை மிருதுவாய் இருக்கும். பாதம் கூட பதமாய்ப் பழுத்த மாம்பழத்தின் வண்ணத்தைக் கொண்டிருக்கும். சின்ன வயதிலேயே பேனாவைப் பிடித்த கைகள். அதிகம் உடலை வருத்தும் வேலை செய்ய வேண்டிய நிர்பந்தம் இல்லாமல் போனது.

ALS பெரியப்பாவும் அப்படியே…

அப்பாவும் ALS பெரியப்பாவும் சேரில் அமர்ந்து பத்திரிகை படித்துக்கொண்டிருக்கையில் பெரியப்பா சூறாவளிக்காற்றைப் போல கடந்து போவார். குரலும் கணீர் என்று இருக்கும்.

சாத்தப்பச் செட்டியார் குடும்பம் தன வணிக இனத்தைச் சேர்ந்தது. என் கொள்ளுத் தாத்தா வெள்ளையன் செட்டியார் பர்மாவில் வட்டிக்கடை வைத்திருந்து செல்வம் சேர்த்தவர். ஆனால் சம்பந்தமே இல்லாமல் அந்த வாரிசு வரிசையில் ஒரு கவிஞர், ஒரு ஸ்டூடியோ முதலாளி என்று இன்றைக்குப் பல்வேறு திசைகளில் பேரப் பிள்ளைகளும் கொள்ளுப் பேரன்களும் பறந்து விரிந்து கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள். எங்கள் குடும்பம் ரொம்ப பெருசுதான்.

சாத்தப்பச் செட்டியார் மகன்களில் நிர்வாகத்திறன் கொண்டவர் பெரியப்பச்சி. அவர் ஒரு திருமண நிகழ்வை நிகழ்த்தும் நேர்த்தியிலேயே அது வெளிச்சம். பெரியப்பச்சிக்கு எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாது.

மூத்தவராக இருப்பினும் அப்பாவையும், ALS பெரியப்பாவையும் கடந்து ஆரோக்கியமாக வாழ்ந்து மறைந்தவர்.

இறுதிக் காலத்தில் அவரை சென்னையில் ஒரு மருத்துவமனையில் வைத்துக் கவனித்துக் கொண்டார்கள் அவரது மகன்கள். என் உறவினர் ஒருவர் அந்த மருத்துவமனையில் டாக்டராகப் பணிபுரிந்து கொண்டிருந்தார். ஒவ்வொரு முறையும் அந்த டாக்டர் அவரைப் பார்க்கும்போது,

“அப்பச்சி… இன்னக்கி காலையிலே கூட்டுற பெண் மொழுகாம போய்ட்டா… சொல்லி சுத்தமா மொழுகச் சொல்லு…

“அப்பச்சி… இன்னக்கி நர்ஸ் ரத்தம் எடுக்குறத்துக்கு நாலு முறை குத்தி அஞ்சாவது முறைதான் எடுத்தா. நல்லா வேலை தெரிஞ்ச நர்சா பார்த்து அனுப்பு…”  என்று சொல்லுவாராம்.

எனக்குக் காரைக்குடியில் வேட்டியைப் பிடித்தபடி கர்ஜிக்கும் பெரியப்பச்சிதான் நினைவுக்கு வந்தார். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கு… ஒரு நேர்த்தி.

பெரியப்பச்சிக்கு பிறகு அவரின் மகன் திருச்சவை என்கிற திருச்சபை அண்ணன் காரைக்குடி வீட்டை கவனித்து க்கொண்டிருக்கிறார்.

அப்பா அமர்ந்த இடம், நான் சிறுவனாக என் வயது நண்பர்களுடன் ஓடிப் பிடித்து விளையாடிய இடம், அம்மாவும் அத்தைகளும் அமர்ந்து கதையடித்த இடம்… காரைக்குடி. வெயில் சுட்டெரிக்க மதியம் வெராந்தாவில் கலைந்த ஜமுக்காளத்தில் படுத்து உறங்கிய இடம்.

இன்று கனவாக வந்து போகிறது…

கோபி கண்ணதாசன் முகநூல் பக்கத்திலிருந்து…

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....

என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…

0
முகநூல் பக்கம்   முதுமை + தனிமை= கொடுமை ! பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...இங்கு... 70...

“என் உயிரைக் குடுத்தாவது நமக்கு பொறக்கப் போற கொழந்தைய நான் நல்லா படிக்க வெப்பேன்!”

0
முகநூல் பக்கம் அண்மைக்காலமாக, பொதிகை தொலைகாட்சியில்  ஒளிபரப்பாகும்  “மங்கையர் சோலை” நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  எளிய மற்றும் மீடியா வெளிச்சம் விழாத சாதனைப் பெண்களைத் தேடிப்பிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்துப் பாராட்டுகிறார்கள்.  எதிர்வரும் 14.04.2022...