ஆளுநர்: ஆட்சி: மாணவர்கள்

ஆளுநர்: ஆட்சி: மாணவர்கள்
Published on

நீட் தேர்வுக்கு விலக்களித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவை, ஆளுநர் திருப்பியனுப்பியது தொடர்பாக எழுந்த அரசியல் அலைகளைத்   தொடர்ந்து  சிறப்புச் சட்டமன்றத் தொடரைக் கூட்டி, இளநிலை மருத்துவப் படிப்புகளில் நீட் தேர்வுக்கு விலக்களிக்கும் மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த விஷயத்தில் மாநில அரசும்  ஒன்றிய அரசும்  அரசியல் அமைப்பு சட்டத்தில் தங்களுக்குள்ள உரிமைகளைச் சுட்டிக்காட்டிப் போராடிக் கொண்டிருக்கின்றன.

ஏற்கெனவே, அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வுக்கு விலக்களித்து நிறைவேற்றப்பட்ட மசோதா குடியரசுத் தலைவரால் திருப்பியனுப்பப் பட்டது. இப்போது தி.மு.க. ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆளுநராலேயே திருப்பியனுப்பப்பட்டிருக்கிறது. சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாவின் மீது கையெழுத்திடுவது தவிர்த்து, சட்டமன்றத்துக்குத் திருப்பியனுப்பவும், குடியரசுத் தலைவரிடம் கருத்துக் கேட்டு அனுப்பவும் ஆளுநர் பிரிவு 200ன் கீழ்  முழு அதிகாரத்தைப் பெற்றிருக்கிறார். ஆனால், மற்றொரு  சட்டப்பிரிவைச்  சுட்டிக்காட்டி குடியரசுத் தலைவருக்கு அனுப்பியிருக்க வேண்டும் என்று மாநில அரசு வாதிடுகிறது.

அரசியலமைப்பு சட்டம் பிரிவு 254(2)-ன்படி, இத்தகையத் தீர்மானங்கள்  ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டு, ஒப்புதல் பெறவேண்டும். அவர் மாநில அரசின் மசோதாவைப் பரிசீலனை செய்துவிட்டு, ஒப்புதலும் அளிக்கலாம், நிராகரிக்கவும் செய்யலாம்.

அதாவது இப்போது ஆளுநர் மாளிகையில் 5 மாதம் தாமதமானதைப் போல குடியரசுத் தலைவர் மாளிகையிலும் தாமதமாகும் வாய்ப்பு அதிகம்.

ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும்  நிலுவையிலிருக்கிறது. இந்தச் சூழலில் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மறந்த விஷயம்  தமிழக மாணவர்களின் நிலை.

நீட் தேர்வு இருக்குமா? நீங்கிவிடுமா? என்ற நிலையில்  அதற்கு தங்களைத் தயாரித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள்  குழப்பத்திலிருக்கிறார்கள். பெற்றோர்கள்  பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கிறார்கள்.  மாநில அரசு இதைக் கருத்தில் கொண்டு பிரச்னை சட்டங்கள் மூலமாகவோ உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலமாகவோ தெளிவாகும் வரை  நீட் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகளை   இலவசமாக அல்லது குறைந்த கட்டணங்களில் அளிக்க உடனடியாக முன்வர வேண்டும்.

தமிழக அரசியல்வாதிகளுக்கு மாநில உரிமைகளுக்காகப் போராடும்  உரிமை மட்டுமில்லை; தமிழக மாணவர்களின்  எதிர்காலத்தைக் காக்கும் கடமையும் இருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com