0,00 INR

No products in the cart.

முதல் ரசிகனின் ரத்தம் தோய்ந்த முகம்

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

 

ஞ்ஞேரியும் மலப்புரமும் என் வாழ்வில் பசுமையான நினைவுகளை இன்னமும் தக்கவைத்திருக்கிறது. முதல் வேலையின் சுகமான நினைவுகளையும், ஹாஸ்டல் வாழ்க்கையின் பசுமையையும் தாண்டி வந்த எனக்கு மறக்க முடியாமல் படிந்துபோன எத்தனையோ முகங்கள் உள்ளே பதிந்திருக்கின்றன. இருபது வருடங்களுக்குப் பிறகும் பிம்பங்களாய் தெளிந்து வரும் எத்தனையோ முகங்கள்.

மஞ்ஞேரியில் வக்கீல் அலுவலகத்தில் வேலை பார்க்கும்போது மத்தியான வேளைகளில் நானும் கிளார்க் மோகனனும் மட்டும்தான் இருப்போம். சீனியர்களான ஸ்ரீதரன் நாயர், சலாஹதீன், அபுபக்கர் என்ற வக்கீல்கள் மதிய வேளையில்கூட நீதிமன்றத்திலேயே இருப்பார்கள். சில நேரங்களில் மாலையில் வருவார்கள். நான் மதிய வேளைகளில் வெளியில் போவதில்லை. வழக்கின் நிலைமையைத் தெரிந்துகொள்ள, வக்கீலைப் பார்க்க எனப் பலரும் வராந்தாவில் உட்கார்ந்திருப்பார்கள். நான் அவர்களிடம் வழக்குகள் பற்றிப் பேசிக்கொண்டிருப்பேன். அவர்களுடைய கேஸ் ஃபைலைத் தேடி எடுத்துப் புரிந்துகொள்ள முயற்சிப்பேன். ஒவ்வொரு கேஸ் ஃபைலிலும் ஒவ்வொரு வாழ்க்கையைத் தரிசித்திருக்கிறேன். அதன் முறிவை வாசித்திருக்கிறேன். அவை ஒவ்வொன்றும் வாழ்வின் வித்தியாசமான அனுபவப் படிமங்களை உள்ளடக்கியிருந்தது.

ஒவ்வொரு வாரமும் வழக்கின் நிலை பற்றி தெரிந்துகொள்ள பதினெட்டு வயது மதிக்கத்தக்க பையனொருவன் வருவான். அவன் வராந்தாவின் கட்டைச் சுவரில் கால் நீட்டித் தெருவைப் பார்த்து உட்கார்ந்திருப்பான். நானும் வராந்தாவில் சேரைப் போட்டு உட்கார்ந்து படித்துக்கொண்டிருப்பேன். எங்களிருவருக்கும் இடையில் பேசிக்கொள்ள பெரிதாக ஒன்றுமிருக்காது.

அவனுடைய அப்பாவின் சொத்தை யாரோ மோசடி செய்துவிட்டார்கள் என்பதுதான் வழக்கு. வழக்கத்திற்கு பலம் கிடைக்கவேண்டும் என்பதற்காகப் பொய் வழக்கு ஜோடித்திருப்பதாக அவன் என்னிடம் சொன்னான். வழக்கின் தன்மையைப் பார்த்தபோது அது சற்றேறக்குறைய சரியென்றே தோன்றியது. முக்கியமான சில வழக்குகளுக்கிடையில் அந்தப் பையனின் வழக்கு அவ்வளவு முக்கியத்துவத்தோடு பார்க்கப்படாமல் இருந்தது. வழக்கு வாய்தாவிற்கு வந்தாலும், இல்லையென்றாலும் அதைப்பற்றித் தெரிந்துகொள்ள அவன் வந்து கொண்டேயிருந்தான்.

ஒருநாள் மதியம் நான் ஃபைல் பார்த்துக் கொண்டிருந்தபோது கட்டைச் சுவரில் உட்கார்ந்து என்னையே அவன் பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்தேன். நான் அதைக் கவனிக்காததுபோல இருந்தேன். சட்டென அவன் ஒரு கேள்வி கேட்டான்.

“ஏன் சார் நீங்க சினிமாவில் நடிக்கக்கூடாது?”

“ஏன் அப்படி கேக்கற?”

“உங்களுக்கு ஒரு சினிமா நடிகனுக்கான முகவெட்டு இருக்கு சார்”

‘சினிமாவில் நுழைய வேண்டும்’ என்ற வெறி கால் பெரு விரலிலிருந்து உச்சந்தலை வரை திகுதிகுவெனப் பற்றியெரிந்த நாட்கள் அவை. ’எப்படியாவது சினிமாவிற்குப் போய்விடலாம்’ என்ற ஆசையால்தான் வக்கீல் வேலையைக் காரணமாக வைத்து நான் மஞ்ஞேரிக்கு வந்திருந்தேன். என்னுடைய அலுவலகத்திலேயே என்னைவிட அழகான, கம்பீரமான வக்கீல்கள் இருக்கிறார்கள். இருந்தாலும் என்னிடம் மட்டும் ஏன் அப்படிக் கேட்க வேண்டும்?

அதைக் கேட்டு மனம் ரெக்கை கட்டிப் பறந்தாலும் அதன் பிறகான நாட்களில் அது குறித்த மெலிதானப் புன்னகையை மட்டுமே பரிமாறிக்கொண்டிருந்தோம். அவனுடைய வழக்கு முடிவதற்குள்ளாகவே நான் மஞ்ஞேரியிலிருந்து புறப்பட்டிருந்தேன்.

பல வருடங்கள் கடந்து போயிருந்தன.

‘1921’ என்ற படத்தின் படப்பிடிப்பு மஞ்ஞேரிக்குப் பக்கத்தில் ‘ஆனைக்கயத்து’ ஆற்றின் கரையில் நடந்து கொண்டிருந்தது. மக்கள் திரள் சமுத்திரம்போல நான்கு பக்கங்களிலிருந்தும்  வந்து கொண்டிருந்தது. எம்.எஸ்.பி. ஆட்கள் கூட்டத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தார்கள். ஆற்றின் இரு கரையிலும் மக்கள் வெள்ளம் கரைபுரண்டு கொண்டிருந்தது. அந்தப் பகுதி எனக்கு ஏற்கெனவே பரிச்சயம்  இருந்ததால்தான் படப்பிடிப்பினை அங்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். மக்களுடைய ஒத்துழைப்பு இல்லையென்றால் அங்கே படப்பிடிப்பு நடத்த முடியாது. கூட்டத்தைக் கட்டுப்படுத்த போலீஸ் கயிறு கட்டியிருந்தார்கள். படப்பிடிப்பில் கூட்டம் அதிகமாக, அதிகமாக கயிறு அறுபட்டது. மக்கள் போலீஸ்காரர்கள் மேல் அப்படியே விழுந்தனர். கோபத்தில் எழுந்த போலீஸ் மக்களை நாலாபுறமும் அடித்து விரட்டியது. மக்கள் கூட்டம் போலீஸைத் திருப்பி அடித்தது.

ஆற்றின் அக்கரையிலிருந்தபடி நாங்கள் இதைப் பார்த்து பதைத்துப்போனோம். நிலைமை மோசமாவற்குள் நாம் ஏதாவது செய்யலாமே என்று நினைத்து நான் ஆற்றில் குதித்து மறு கரையில் ஏறும்போது  யுத்தபூமி போல மாறியிருந்தது. நான் கூட்டத்தில் என்னென்னவோ பேசிப் பார்த்தேன், கத்தினேன். பிறகு அலறினேன். சட்டென ஜனம் அமைதியாயிற்று. அவர்கள் இப்படி ஒரு கிளைமாக்ஸை எதிர்பார்த்திருக்கவில்லை. சிதறும் ஜனக்கூட்டத்தை இருபக்கமும் பிரித்து நடந்து வழி உண்டாக்கினேன். அவர்களில் பலரும் “மம்முட்டிக்கா”, “மம்முட்டிக்கா” என்று கூவிக்கொண்டிருந்தார்கள். ஆழ்ந்த வேதனையுடன், பதற்றத்துடன் கூட்டத்திற்குள் நடந்து கொண்டிருந்தபோது ஒரு வாலிபன் என் கையைப் பிடித்தபடி படபடத்துக் கேட்டான்.

“சார், சார், என்னை ஞாபகமிருக்கா? நான்… பஷீர்…. பஷீர்….”

“எந்த பஷீர்? எங்கேயிருந்த பஷீர்?”

லத்தி ஜார்ஜ் ஆரம்பிக்க இருந்த நேரத்திலான கலவரமது. அப்போது என்னால் எதையும் அனுமானிக்க முடியவில்லை. போலீஸின் உதவியால் மக்களைச் சமாதானப்படுத்திக் கலவரத்தைச் சாந்தப்படுத்த முயன்று கொண்டிருந்தேன்.

ஆனால், அந்த வாலிபன் கூட்டத்திற்கிடையில் பரபரப்புடன் என்னைப் பின்தொடர்ந்து கூக்குரலிட்டபடி ஓடி வந்து கொண்டிருந்தான். அவ்வப்போது என்னைப் பிடித்திழுக்கிறான். அதனிடையில் அவன் தலையில் ஒரு போலீஸ்காரனின் லத்தி விழுகிறது. நான் திரும்பிப் பார்க்கிறேன். கலவரத்தில் மண்டை உடைந்து ரத்தம் கொட்டும் போதும் சிரித்தபடி அவன் முகம் எதிலோ லயித்திருந்தது. போலீஸ் மீண்டும் ஜனக்கூட்டத்தை ஆற்றின் கரைகளுக்குள் ஒடுக்க முயற்சித்தது. ஒரே சத்தமும் கூக்குரலுமாகக் கிடந்தது ஆற்றங்கரை. யார் யாரோ என்னைப் பிடித்திழுத்து கூட்டத்திலிருந்து தனியே அழைத்துப் போக முயற்சித்தார்கள்.

கூட்டம் அமைதியாக நிறைய நேரமானது.  இடையிடையே அந்த முகம் என்னைத் தொந்தரவுக்குள்ளாக்கிக் கொண்டேயிருந்தது. இந்த முகத்தை எங்கோ பார்த்திருக்கிறேன்? எங்கே?… மின்னல்கள் போல ஞாபகங்கள் கடந்து போயின.

மஞ்ஞேரியின் வக்கீல் வேலை செய்து கொண்டிருந்த காலத்து மதிய வேளையில் ‘ஏன் சார் நீங்க சினிமாவில் நடிக்கக் கூடாது?’ என்று கேட்டது இவன்தானா? அய்யோ… அதற்குள் நான் அதிக தூரம் நடத்திக் கூட்டிப் போகப்பட்டிருந்தேன். கலவரத்திலும், அதிர்ச்சியிலும் இருந்த என்னால் மீண்டும் அந்த முகத்தைக் கண்டுபிடிக்க முடியவில்லை. பிறகெப்போதும் நான் அவனைப் பார்க்கவில்லை. ஆனால் குருதி, முகத்தின் நிறம் மாற்றி ஒழுகும்போதும் அந்தக் கண்களில் மிதந்து வந்த ப்ரியம் என் கண்களுக்குள்ளேயே இருக்கிறது. என்னை நடிகனென்ற முறையில் பார்த்த முதல் ரசிகன் பஷீராகத்தான் இருப்பான். மின்னல் போல என்னைக் கடந்த பஷீர் இப்போது எங்கேயிருக்கிறான்? தெரியாது. எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் நிறம் மங்கிப்போன அலுவலகத்தில் ஒரு மத்தியான வேளையில் அவனிடமிருந்து வெளிவந்த வார்த்தைகள்,  அது அன்றைக்குத் தந்த புளகாங்கிதம் கொஞ்ச நஞ்சமல்ல. நடிப்பிற்கான தேசிய விருதுகளும், பரிசுகளும் கிடைத்தபோதும் எனக்குள்ளிருந்த நடிகனை மிக நுட்பமாய்க் கண்டறிந்த பஷீர் என் நினைவுக்கு வருகிறான். எப்படி அவன் என் கனவுகளின் நிறங்களை உணர்ந்திருந்தான்?

நேரில் பார்க்காமலேயே களங்கமில்லாத அன்பு செலுத்துபவர்கள் நிறைய இருக்கிறார்கள். எப்போதாவது பார்க்கும்பொழுது பெருக்கெடுத்து உடைபடும் பிரிய முகங்களை நான் பார்ப்பதுண்டு. அவர்களின் அன்பின் கதகதப்பில் என்னை ஒடுக்கிக் கொள்வது எதையும் எதிர்பார்த்தல்ல என்று எனக்குத் தெரியும்.

களங்கமில்லாத எத்தனையோ மனசுகளிலிருந்து இந்த அன்பும், பிரார்த்தனையும் இல்லையென்றால் இந்த மம்முட்டி யார்? ஜனக்கூட்டத்தில் யாருக்கும் தெரியாமல் கரையும் ஒரு முகம் மட்டுமே. அன்று பார்த்த அந்தப் பையனை நினைக்கும்போது மனதில் ஆர்ப்பரிப்பது ப்ரியத்தின் கடல் மட்டுமே. என்னை உடன்பிறப்பாகவும், நண்பனாகவும், மகனுமாக்கியவர்களுடைய அன்பினை உள்வாங்கும் கடல். அந்த அலைகளுக்கு முன்னால் ஒரு குழந்தை மனநிலையில் இப்போதும் ஏதோ ஒரு அற்புதத்தைப் பார்த்ததுபோல நின்று கொண்டிருக்கிறேன்.

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

குருடர்களின் யானை

1
ஒரு நிருபரின் டைரி - 21 - எஸ். சந்திரமெளலி லயோலா கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த சமயம், “லுக் அவுட்” என்ற லயோலா கல்லூரியின் மாணவர் பத்திரிகையின் ஆசிரியர் குழுவில் நானும் இருந்தேன். நாங்கள் அதன் தமிழ்ப்...

தேவ மனோகரி – 21

1
தொடர்கதை                                               ...

இது கடவுளின் ருசியுள்ள நாடு

0
ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 21 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா   கொச்சியிலிருந்து அதிரப்பள்ளிக்குப் போகும் வழியில்தான் அந்த டீக்கடை இருக்கிறது. பதினெட்டு வருடங்களுக்கு முன்பு ஸ்ரீகுமாரன் தம்பியின் ‘விளிச்சு விளி கேட்டு’ (அழைத்தாய் கேட்டேன்) என்ற...