0,00 INR

No products in the cart.

ராஜய்யா இட்லி வண்டி

                                                                        ஓவியம் : தமிழ்

தெலுங்கில் : பி.என்.மூர்த்தி

தமிழில்: ராஜி ரகுநாதன்

மையல் செய்யும் யாதம்மா, “ஐயா! என் மகளுக்கு பிரசவம் ஆகியிருக்கு. ஒரு பதினைந்து நாள் வரமாட்டேன்” என்றாள்.

“சரிம்மா” என்று கூறி ஒரு ஆயிரத்து ஐநூறு ரூபாயை கொடுத்து அனுப்பி வைத்தார் ஜகன்னாதராவு.

“பணத்துக்கு கஷ்டப்படாதே, தல்லி! ஏதாவது தேவைன்னா சொல்லியனுப்பு”

“சரிங்க ஐயா” என்று வணங்கினாள். “நீங்க எப்படி சமாளிப்பீங்களோ என்னவோ… வேறே வழி இல்லாமத்தான் போறேன்”

“அதெல்லாம் பரவாயில்லை. பேரனை தூக்கி வைத்து கொஞ்சு… அவசரம் இல்லை. மெதுவா வா”

ஜகன்னாத ராவு பாசத்தோடு பேசுவார். தன்னிடம் பணி புரிபவர்களை பரிவோடு பார்த்துக் கொள்வார். அது அவர் பரம்பரை குணம்.

நூறு ஏக்கர் நிலத்தோடு கூட அவருடைய பெற்றோர் விலைமதிப்பில்லாத நல்ல இதயத்தையும் அவருக்கு விட்டுச் சென்றனர்.

இன்றோ நாளையோ இருபத்தைந்தாவது திருமண நாள் கொண்டாடலாம் என்று நினைத்த போது மனைவி அன்னபூர்ணா கைலாசம் போய்ச் சேர்ந்தாள். ஜமீன்தாரின் மனைவி சாட்சாத் அன்னபூரணி தேவியே என்று கூறி அவள் மரணத்திற்கு ஊரே அழுதது. அவர் யாருமில்லாத தனி மரமாகி விட்டார்.

“நாமெல்லாம் இல்லையா என்ன அவருக்கு?” என்று ஊரே நினைத்தது. ஆனால் அவரருகில் சென்று, “ஐயா! ஏதாவது வேண்டுமா?” என்று கேட்பதற்கு ஜகன்னாத ராவு ஒன்றும் சாதாரண மனிதர் இல்லை. கோடீஸ்வரர். “எது வேண்டுமென்றாலும் அவர்தான் ஆணையிடவேண்டும். அவர் நம்மை வேலை வாங்க வேண்டுமே தவிர நாமாகப் போய் எதுவும் கேட்ககூடாது” என்று ஊரே நினைத்தது.

யாதம்மா அந்த வீட்டுப் பணிப்பெண். அன்னபூர்ணா போன பின், “ஐயா! அம்மா சமையல் நானும் சாப்பிட்டிருக்கேன். அவுங்க பக்குவம், விருப்பம் எல்லாம் எனக்கு அத்துப்படி. நீங்க சரின்னு சொன்னா நானே உங்களுக்கு சமையல் செய்து போடுறேங்க” என்றாள் யாதம்மா.

ஜகன்னாத ராவுக்கு ஸ்டவ் மூட்டுவது கூட தெரியாது. யாதம்மாவுக்கு வேலைக்காரியிலிருந்து சமையல்காரியாக பிரமோஷன் அளித்தார். அப்போதிலிருந்து அவளை “யாதம்மா தல்லீ!” என்று அழைக்கத் தொடங்கினார்.

அவள் இப்போது லீவு போட்டுவிட்டாள்.

“வேறொரு சமையல்காரியைப் பார்க்கட்டுமா ஐயா?” என்று கேட்டான் அவருடைய மூத்த தொழிலாளி ரங்கன்.

“வேண்டாம்டா…! நாம ஒரு ருசிக்கு பழக்கமாயிட்டோம். வேறே புது ஆள் வந்தால்  நமக்கு எந்த சமையல் எப்படி செய்தால் பிடிக்கும் என்று சொல்லிக் கொடுப்பதற்கு நமக்கு அந்த கலை தெரியாது. ஏதாவது நல்ல ஹோட்டல்லேர்ந்து கேரியர் எடுத்து வரலாம். காலையில் கொஞ்சம் டிபன். மத்தியானம் தயிர் சாதம். இரவு சப்பாத்தி… இப்படி சமாளிச்சுடலாம்னு நினைக்கிறேண்டா. கடைகளில் கெட்டுப் போன எண்ணெய், அழுக்கு பாத்திரங்கள் என்று இருக்கும். எனக்கு அதெல்லாம் பிடிக்காதுரா…! நம்ம யாதம்மா தல்லி ஏதேதோ ஊறுகாயெல்லாம் செய்து வெச்சிருக்காளாம். எந்த நாள் என்ன சாப்பிடணும்னு லிஸ்ட் கூட எழுதி வெச்சிருக்காளாம். நமக்கு ஒண்ணும் பிராப்ளம் இருக்காது. நீ போய் உனக்கும் எனக்கும் இட்லி வாங்கிட்டு வா! சூடா இருக்கணும்டா!”

*** ***

“அட…! நல்லாயிருக்குடா இட்லி. எந்த ஹோட்டல்லேருந்து வாங்கி வந்த?”

“நல்லாயிருக்கு இல்ல? சாப்பிடுங்க ஐயா! எந்த ஹோட்டலா இருந்தா என்ன?”

“உங்க வீட்டுல செய்யச் சொல்லி கொண்டாந்தியாடா?” ஐயத்தோடு கேட்டார் ஜகன்னாதராவு.

“உங்க மேல சத்தியமுங்க ஐயா! எங்க வீட்டுது இல்லீங்க… இதோ மீதி சில்லறை”

“எங்கே வாங்கினடா?”

“நம் தெருவுக்கு கடைசீல இருக்குற ராஜய்யா இட்லி வண்டில வாங்கினேங்கையா! அவுரு ரொம்ப நல்லா சுத்தமா செய்வாருன்னு எல்லாரும் பேசிக்குவாங்கையா!” சங்கோஜத்தோடு சொன்னான் ரங்கன்.

“நிஜமாவே நல்லாயிருக்குடா. தினமும் இதேமாதிரி வாங்கி வா. அது சரி… நீ சாப்டியா?”

“எனக்கு ராஜய்யா இலவசமா கொடுத்தாருங்க”

“இலவசமாகவா? எதுக்காக? என் பெயரை சொன்னாயா?” கோபம் வந்தது ஜகன்னாத ராவுக்கு.

“இல்லீங்க ஐயா! அவரு தினமும் ஒரு பத்து பேருக்கு ப்ரீயா பொட்லம் கட்டி கொடுப்பது வழக்கமாம்”

“ஆச்சரியமா இருக்கே!”

*** ***

ஜகன்னாத ராவு காலை வாக்கிங் வயல் வரை சென்று வந்தார். ரங்கனும் உடன் சென்றான். தொலைவில் ஒரு பெரிய கும்பலை கவனித்தார் ஜமீந்தார்.

“என்னடா அங்கே கூட்டம்? ஏதாவது சண்டை சச்சரவா?”

“இல்லங்கையா! அதுதான் நம்ம ராஜய்யா இட்லி வண்டிங்க!” என்றான் ரங்கன். ஜகன்னாதராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

“கலவரம் நடக்குறாப்புல இத்தனை பேரு கூடியிருக்காங்களே!”

“ராஜய்யா இட்லியோட ருசி அப்படிப்பட்டதுங்க ஐயா!”

“எனக்குக் கூட அந்த கும்பல்ல புகுந்து இட்லி வாங்கிச் சாப்பிடணும் போல இருக்குடா…”

“நான்தான் வாங்கிட்டு வரேனே ஐயா! நீங்களெல்லாம் அங்கே போகக் கூடாதுங்க. எதுக்காக சொல்றேன்னு தெரியுதாங்க ஐயா?”

“நான் ஏன் போகக் கூடாதுடா?”

“உங்களைப் போன்ற பெரிய மனுஷங்க வந்தால் அவரு பரபரப்பாயிடுவாரு. தினப்படி கிராக்கிங்க கூட பயப்படுவாங்க. ஜமீந்தார் தானே நேரா வந்திருக்காருன்னு தெரிஞ்சா அவரு கூட விலையை உயர்த்திபுடுவாரு. வேண்டாம் ஐயா! ஏழைகளின் வயிற்றில் அடித்த பாவம் நமக்கு வேண்டாம்” ரங்கன் ஜகன்னதராவின் உற்சாகத்தை அடக்கி வைத்தான். ஆனால் அவருடைய மனக்கிளர்ச்சியை அவனால் தடுக்க முடியவில்லை.

*** ***

ஜகன்னாதராவு சாதாரண ஆடை அணிந்து எந்தவித ஆர்ப்பாட்டமும் இன்றி ஒரு தலைப்பாகை கட்டிக் கொண்டு ராஜய்யா இட்லி வண்டியை நோக்கிச் சென்றார். அவரை ஜமீந்தாராக யாரும் அடையாளம் காணவில்லை.

“ஒரு பிளேட் இட்லி வேணும்” என்று கேட்டார்.

இட்லி வண்டி ராஜய்யா, “ஒரு நிமிஷம் பொறுமையா இருக்க முடியாதா? இந்த ஈடு இட்லி எல்லாம் வேறே பிள்ளைங்களுக்கு கொடுக்கணும்” என்றார்.

ஜகன்னாதராவு சற்று ஒதுங்கி நின்று பார்த்துக் கொண்டிருந்தார். ராஜய்யா இட்லி பொட்டலங்கள் கட்டி அங்கு வந்து கூடிய குழந்தைகளுக்கு கொடுத்துக் கொண்டிருந்தார். அவர்களில் யாரும் பணம் கொடுக்கவில்லை என்பதையும் ஜமீந்தார் கவனித்தார். ராஜய்யா அவற்றை இலவசமாக கொடுப்பதை அறிந்து கொண்டார்.

“தலைப்பாகை அணிந்து ஜமீந்தார் தன் இட்லி வண்டிக்கு வருவார் என்று ராஜய்யா நினைத்துக் கூட பார்க்கவில்லை. அவரை ராஜய்யா நேரில் பார்த்ததில்லை. யாரோ புது கஸ்டமர் என்று நினைத்து அடுத்த ஈடு இட்லியை எடுத்து தட்டில் போட்டு அவரிடம் நீட்டினார் ராஜய்யா.

அங்கேயே நின்று சாப்பிட்டபோது சூடாக இன்னும் நன்றாக இருந்தது இட்லி. அன்னபூர்ணா செய்வதைப் போலவே இருக்கிறது என்று எண்ணிக் கொண்டார். இட்லி வண்டியை ராஜய்யா சுத்தமமாக வைத்திருப்பதையும் கவனித்தார். எப்போதையும் விட இரண்டு இட்லிகள் அதிகமாகவே சாப்பிட்டார். “சுடச்சுட எத்தனை ருசியாக உள்ளது… இந்த ராஜய்யாவிடம் இட்லி வண்டியை தன் வீட்டு வாசலிலேயே வைக்கச் சொல்லவேண்டும்” என்று நினைத்துக் கொண்டார்.

மெதுவாக ராஜய்யாவோடு பேச்சு கொடுத்தார்.

“சற்று முன் பிள்ளைகளுக்கு இட்லி பாக்கெட் இலவசமா கொடுத்தாயே… எதற்காக?”

“உங்களுக்கு எதுக்கு அதெல்லாம்? உங்களுக்கும் ஃப்ரீயா வேணுமா? அவர்களும் என்னைப் போல் கஷ்டப்படுற பிள்ளைகள். அப்பா அம்மா இல்லாமல் ஒரு இட்லி, அரை இட்லிக்காக எத்தனை கஷ்டப்பட்டேன் என்பது எனக்குத்தான் தெரியும். இன்று நான் செய்யும் தொழிலால் அநாதை பிள்ளைகள் வந்தால் அவர்களுக்குக் கொடுப்பதற்கு என்னிடம் சில இட்லி பொட்டலங்கள் இருக்கு. நான் பெரிதாக தான தர்மம் எதுவும் செய்யவில்லை. ஆனால் என் சின்ன வயதில் எனக்கே பலகாரம் கொடுத்துக் கொண்ட மகிழ்ச்சி எனக்கு ஏற்படுகிறது” என்றார் ராஜய்யா.

ஜகன்னாதராவுக்கு கண்கள் கலங்கின.

“போயிட்டு வரேம்ப்பா!” என்று திரும்ப எத்தனித்தார்.

உடனே ராஜய்யா, “நீங்க யாரோ எனக்குத் தெரியாது. ஆனால் பணம் கொடுக்காமல் போறீங்களே ஐயா! பேசிக்கொண்டே ஆறு இட்லி சாப்டீங்க. உங்களைப் போன்றவங்க பணம் கொடுத்து சாப்பிட்டா தானே சாமி நானும் என் குடும்பமும் பொழைக்க முடியும். உங்களுக்கு இலவசமாக இட்லி கொடுக்க முடியாது. ஆறு இட்லிக்கு ஆறு ரூபாய் கொடுத்துட்டு கிளம்புங்க” என்றார் ராஜய்யா கறாராக.

அறுநூறு ரூபாய்களை ராஜய்யாவின் கையில் வைத்து, “நூறு பேருக்கு இட்லி பரிமாறு அப்பனே!” என்று கூறிவிட்டு ஜகன்னாத ராவு வீட்டை நோக்கி நடந்தார்.

அவர் யாரென்று ராஜய்யாவுக்குத் தெரியாது. ஆனால் மறுநாள் ஐயாவுக்கு டிபன் வாங்குவதற்கு ரங்கன் வந்தபோது, “இன்று என் கடைக்கு வருபவர்களுக்கு எல்லாம் இட்லி ஃப்ரீ. யாரோ பெரிய மனுஷர் நேற்று வந்து அறுநூறு ரூபாய் கொடுத்து நூறு பேருக்கு இட்லி ப்ரீயாக கொடுக்கச் சொன்னாரு. பணம் வேண்டாம். இந்தா இட்லி” என்றார் ராஜய்யா.

அந்த விஷயத்தை ரங்கன் வந்து கூறியபோது ஜகன்னாதராவுக்கு ஆச்சர்யமாக இருந்தது.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

“கண்ணான கண்ணே!”

4
“அப்பா! இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா! கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேள். இதனால ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லப்பா! உங்க ஒருத்தரால, வீட்டுல இருக்கிற எல்லாரும் அவதிப்படணுமா?...

சூது கவ்வும்

2
திலிபனுக்கு அவசரமாக பணம் தேவையாயிருந்தது. அதிக பணம்... நைட் டூட்டி முடிந்து, கண்ணெரிச்சலுடன் ரூமுக்கு வந்து படுத்தவனை செல்போனில் கூப்பிட்டு எழுப்பியது தயாளன்தான். இந்த முறை வழக்கத்தைவிட பேச்சில் வந்து விழுந்த...

வெயிட் பண்ணுங்க

இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே. “சிறுக் கீரை, முளைக் கீரை, முருங்கக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, அகத்திக்...

ஒரு சந்திப்பு

0
“நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக. எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..” உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்... உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே...” பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே...

நடத்தையில் ஊனம்!

2
  “நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!” என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம். தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல...