
? ஜூனியர் கிரிக்கெட் உலக கோப்பையை வென்று அசத்தியிருக்கிறதே இந்திய அணி…!
– வாசுதேவன் , பெங்களூரு
! ஆண்டிகுவாவில் நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் யஷ் துல் தலைமையிலான இந்திய இளம் பட்டாளம் நாட்டிற்காக 5வது முறை கோப்பையை வென்றுள்ளது.
U19 உலகக் கோப்பை தொடரில் 2000, 2008, 2012, 2018, 2022 என ஐந்து முறை கோப்பை வென்ற ஒரே அணி எனும் வரலாற்றுச் சாதனையை நிகழ்த்தியிருக்கிறது. வரும் ஆண்டுகளில் ஐபிஎல், டி 20க்கு செமையான ஆட்டக்காரர்கள் உருவாகிக்கொண்டிருக்கின்றனர் என்ற நம்பிக்கை பிறக்கிறது.
? மறைந்த லதா மங்கேஷ்கரின் மறக்கமுடியாத பாடல்?
– சண்முகசுந்திரம், வேலூர்
! எத்தனையோ. ஆனால் காலம் கடந்து நிற்கப்போவது ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஒலித்த அவரது வந்தேமாதரம்தான்.
? தமிழகத்தில் 9 மாதங்களாக அலங்கோல ஆட்சி செய்யும் ஸ்டாலின் தவறுகளை மறைக்க 'சமூகநீதி' என்கிற போர்வையில் நுழைந்துள்ளார் என்கிறாரே எடப்பாடி பழனிசாமி?
– ஆர்.மாதவராமன், கிருஷ்ணகிரி-635001
! இந்தப் போர்வையில் நுழையாமல் தமிழகத்தில் எந்த கட்சியும் அரசியல் பண்ணமுடியாது.
? 100 வது நாட்களாக அதே விலையில் பெட்ரோல் விற்கிறதே?
– சம்பத் குமாரி, புதுக்கோட்டை
! கவலைப்படாதீர்கள்… இன்னும் 30 நாட்கள் பொருங்கள்… உங்கள் ஆசை நிறைவேறும்.
? "தமிழகத்தில் ஒரு போதும் பா.ஜ.க. ஆட்சி அமைக்க முடியாது" என்கிறாரே ராகுல் காந்தி?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்
! தமிழக அரசியலின் களம் அவருக்கு புரிந்திருக்கிறது. அதேபோல் காங்கிரஸும் ஆட்சி அமைக்க முடியாது என்பதும் அவருக்குத் தெரியும்.
? புள்ளிவிபரங்களை நம்பலாமா? – சத்திய நாரயணன், அயன்புரம்
உண்மை நிலையை அறிய உதவுவது புள்ளி விபரங்கள் மட்டுமே. ஆனால் அதை எப்படித் தருகிறார்கள் என்பதை சரியாகப் புரிந்துகொள்ள திறமை வேண்டும்.
இந்தப் புள்ளிவிபரங்களை கவனியுங்கள்.
கோவிட் தொற்று, பொருளாதார மந்தநிலை இருந்த நிலையிலும், 2021ல் இந்தியாவில் ரூ.3,40,860 பெறுமானமுள்ள 797.3 டன் தங்கம் வாங்கப்பட்டது. முந்தைய ஆண்டை ஒப்பிடும்போது இது மதிப்பு அடிப்படையில் 81 சதவீதம் உயர்வு ஆகும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. 2021ல் இந்தியாவில் மக்கள் வாங்கிய மொத்த தங்கத்தில், 610.9 டன் தங்கம் (மதிப்பு ரூ. 2,61,140 கோடி) நகைகளாக வாங்கப்பட்டது. மதிப்பு அடிப்படையில் பார்த்தால் முந்தைய ஆண்டைவிட இது 96 சதவீதம் என்பது செய்தி.
பல கோடிக்கணக்கனோர் வேலை வாய்ப்பை இழந்த நிலையில் இன்னும் பலர் இரண்டு ஆண்டுகளாக குறைவான சம்பளம் பெற்றுகொண்டிருக்கும் நிலையில் இது எப்படி சாத்தியமாயிற்று எனத் தோன்றுகிறதல்லவா?
நாட்டில் தங்க நகை வாங்கும் வசதி படைத்தோர் எத்தனை பேர்? கடந்த ஆண்டு அவர்கள் அதிகரித்திருக்கிறார்களா? எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கிறார்கள் என்ற புள்ளிவிபரங்கள் கொடுக்கப்படாமல் இதை மட்டும் வெளியிடுவது தவறான ஒரு காட்சியைத்தான் நம் முன் வைக்கும்.
ஒரு அமெரிக்க பொருளாதார பேராசிரியர் எழுதியதைப் போல கவர்ச்சியான புள்ளிவிபரங்கள் மறைக்க வேண்டியதை மட்டும் மறைத்து அழகை காட்டும் நீச்சலுடை போன்றது.
! இதிலொன்றும் தவறு இல்லை. மக்கள் சேவையில் கீழ்ப்பதவி, மேல்பதவி என்றெல்லாம் கிடையாது. உயர் பதவியிலிருந்தவர் அதற்குக் கீழான பதவிக்கு வருவது கெளரவக் குறைச்சல் என்றால் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ராஜாஜி பிறகு நேரு அமைச்சரவையில் உள்துறை அமைச்சராக இருந்திருக்கமாட்டார். பிறகு சென்னை மாகாண முதலமைச்சராகியிருக்கமாட்டார்.
அதேபோல, மக்களவை உறுப்பினராக இருமுறை பதவி வகித்த ராஜாஜியின் மகன் சி.ஆர்.நரசிம்மன் சென்னை மாநகராட்சி கவுன்சிலராக வெற்றிபெற்றிருக்கமாட்டார்.
! இதைவிட மிக முக்கியமான வழக்குகளில் இன்னும் தீர்ப்பு வரவில்லையே என்று கவலைப்படுங்கள் அம்மணி!
? நிதி நிலை அறிக்கையில் கங்கை காவேரி இணைப்பு அறிவிக்கப் பட்டுள்ளது, நடக்குமா?
– மதுரை குழந்தைவேலு, சென்னை
! இந்த இரண்டு நதிகளும் இருக்கும் வரை இந்த விஷயம் பட்ஜெட்களில் பேசப்பட்டுக்கொண்டிருக்கும். இதற்கு முந்தைய பட்ஜெட்களில் இது குறித்த அறிவிப்புகளும் ஆய்வுப்பணிகளுக்காக ஒதுக்கப்பட்ட நிதியும் நினைவிருக்கிறதா?
? குடியரசு தின அணி வகுப்பில் உ.பி மாநில ஊர்திக்கு பரிசு கிடைத்திருக்கிறதே?
– ஜோஷ், அயன்புரம்
!உ.பி தேர்தலுக்கும் தேர்வு குழுவினரின் தேர்வுக்கும் சம்மந்திருக்குமோ என சந்தேகிக்கிறார்களா?
? எல்லோருக்கும் நல்லவனாக இருக்க முடியுமா?
– ராஜ் மாணிக்கம், சேலம்
! நீங்கள் குறிப்பிடும் "எல்லோரும்" நல்லவர்களாக இருந்தால் முடியும்.