0,00 INR

No products in the cart.

பக்‌ஷியார்பூர் பயணம்

சிறுகதை                                                                            ஓவியம்: தமிழ்

– குமார்

 

நீண்ட கரங்கள். ஆனால் சற்றே குள்ளமான உருவம். தனது கரங்களை மடித்த கால்களின் மேல் வைத்திருந்தான். கருநீலக் கண்கள்…பட்டுக் குல்லாய்… நேர்த்தியான மேல் அங்கி. மயூர ஆசனம். இவற்றுடன் சம்பந்தமில்லாதபடி ஒரு குரூரப் பார்வை!

பக்‌ஷியார் கில்ஜி!

துருக்கி நாட்டு அரச வம்சத்தைச் சேர்ந்தவன். பாரத தேசத்தின் செல்வ வளங்களைக் கேட்டறிந்து கொள்ளையடிக்க பெரும் சேனையுடன் வந்தவன். பெரும் அழிவுகளை இதுவரை ஏற்படுத்தியவன்.

கேள்விப்பட்டவைகளை ஆச்சாரியார் நினைவு கூர்ந்தார். அரண்மனை போன்ற அந்த பெரிய கூடாரத்தில் அத்தர் மணம் சூழ்ந்திருந்தது. கில்ஜியே தன்னை அழைத்த காரணத்தைச் சொல்லட்டுமென ஆச்சாரியார் காத்திருந்தார்.

ராகுல் ஸ்ரீபத்ரா ஆச்சாரியா!

ஆயுர்வேதத் துறையின் பிரதான போதகர். நாலந்தா பல்கலைக்கழகம். உலகின் முதல் பல்கலைக்கழகம். பரத தேசத்தைத் தவிர திபேத், கொரையோ [கொரியா] கதாய் [சீனா] என நாற்புறங்களிலிருந்தும் மாணாக்கர்கள் ஆர்வத்துடன் வந்திறங்கிய பல்கலைக்கழகம்.

தன்னைக் கண்டு நடுங்கவில்லை. வந்தனமும் தெரிவிக்கவில்லை. அல்லது இந்த பிக்குவிற்கு முறை தெரியவில்லையா..? பார்வையில் மட்டும் கூர்மை… கில்ஜியும் ஆச்சாரியரை எடைபோட்டுக் கொண்டிருந்தான். கில்ஜியின் கண்கள் அவமதிப்பில் சிவந்து கொண்டிருந்தன.

மௌனத்தை கில்ஜியே கலைத்தான்.

தேசத்தின் இந்தப் பகுதிக்கு வந்தவுடனேயே என் உடல் உபாதைகள் அதிகமாகிவிட்டன. சக்தி குறைந்துவிட்டது. சோர்வு மிகுந்திருக்கிறது. உடற்தோலில் கொப்புளங்கள் .  மேலும்…… கில்ஜி அடுக்கிக்கொண்டே போனான்.

இங்கு நிலவி வரும் சூழ்நிலை, சீதோஷ்ண நிலைக்கேற்ப உன்னால் எனக்குத் தகுந்த வைத்தியம் பார்க்க இயலுமா..?

கில்ஜியின் ஹகீம்கள் [அவனது வைத்தியர்கள்] வெகுநாட்கள் முயன்று தோல்வியுற்றதை ஆச்சாரியரின் சீடர்கள் அவருக்குச் சொல்லியிருந்தனர். மேலும் அவர்களே ஆச்சாரியர் பெயரை பரிந்துரை செய்ததையும் அவர் அறிந்திருந்தார்.

பாரத தேசத்து வைத்திய முறைகள் எப்படி எனது நாட்டு முறைகளைவிட்டு மேம்பட்டிருக்க முடியும்..? முதலில் ஹகீம்களின் வார்த்தைகளை கில்ஜி நம்பவில்லை. வேறு வழியில்லாமல் ஆச்சாரியரை வரவழைத்திருந்தான். கில்ஜியின் மனப்போக்கையும் அகம்பாவத்தையும் ஆச்சாரியர் புரிந்து கொண்டார்.

முடியும் என்பதுபோல் தலை அசைத்தார்.

ஆச்சாரியரது தலையசைப்பு கில்ஜியின் குரூரத்தை தீவிரமாக்கியது.

‘உன்னுடைய வைத்தியத்தில் உங்கள் நாட்டு மூலிகை மருந்துகளையோ கஷாயத்தையோ அருந்த மாட்டேன். மேலும் எனது நோய் குணமாகாவிட்டால் உனது உயிர் போவது நிச்சியம்.’

தனது நிபந்தனைகளை கில்ஜி ஆச்சாரியருக்குத் தெரியப்படுத்தினான்.

ஆச்சாரியர் முதலில் அதிர்ந்தார்!  கில்ஜி அறியாதபடி ஆனால் மறைத்துக் கொண்டார். சிறிது யோசித்துவிட்டு நிபந்தனைகளை ஒப்புக்கொள்வதாக தெரிவித்தார்.

கில்ஜியின் ஆத்திரம் இப்போது பன்மடங்கானது. எப்படி அவர்களது வைத்திய சாஸ்திரம் இந்த அளவு நம்பிக்கையைக் கொடுக்கிறது…? முகத்தைக் கடுமையாக்கிக்கொண்டான். ஆச்சாரியார் செல்லலாம் என கையசைத்தான்.

ள்ளிரவு. ஆனால் ஆச்சாரியரின் இருப்பிடத்தில் தீபம் ஒளிவிட்டுக் கொண்டிருந்தது. கரங்களில் சுவடிகள். ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்துப் புரட்டிக் கொண்டிருந்தார். கவலையில் மடிந்திருந்த நெற்றிச் சுருக்கங்கள் இப்போது சிந்தனையின் தளங்களாய் மாறியிருந்தன.

பதினாயிரம் மாணவர்கள், இரண்டாயிரம் ஆசிரியர்கள் கொண்ட நாலந்தா பல்கலைக்கழகம். மாணவர்கள் உலகின் நாற்புறத்திலிருந்தும் வந்தவர்கள். சனாதன மார்கத்தின் வேதசாஸ்திரங்களுடன் ஹீனாயானம், மஹாயானம் என போதி தர்மங்களையும் போதித்து வந்த தலம். ’நாலம்’ என்பதற்கு ’தாமரை’ என்று பொருள். தாமரை ஞானத்தையும் குறிக்கும். தா [தே] தருவதைக் குறிப்பிடும். நாலந்தா எனவே ஞானிகளை உருவாக்கும் இடமாக இருந்தது.

ஓரிரு நாட்களில் கில்ஜியின் நோயை அவன் நிபந்தனைக்கு உட்பட்டு எவ்வாறு குணமாக்குவது என்று ஆச்சாரியருக்குத் தெளிவானது.

ஒரு வாரத்திற்குள் கையில் ஏட்டுச்சுவடியுடன் வந்து நின்ற ஆச்சாரியரை கில்ஜி ஏளனமாகப் பார்த்தான்.

உனது இயலாமையைக் கூற வந்தாயா..? உங்களது ஆயுர்வேதத்துறை செயலற்றது என்பதை புரிந்துகொண்டாயா….?

ஆச்சாரியரிடம் புன்முறுவல்.

ஒருவரின் நோயைக் குணமாக்குவது எங்கள் ஆயுர்வேதத்தின் உயிர்நாடி. ஏன்…உன்னதமானதும் கூட. வைத்திய காலத்திலோ அதன் பின்போ எங்களது சௌகரியம் முக்கியமல்ல.  இருப்பினும் உனது நோய்க்கு உன் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டே தீர்வு கொணர்ந்திருக்கிறேன்.

கில்ஜி நம்ப முடியாமல் ஆச்சாரியர் கூறுவதையே கவனித்துக் கொண்டிருந்தான்.

நான் கொண்டுவந்திருப்பவை உங்களது புனித நூலான குரானின் சில ஏடுகள். ஒவ்வொரு நாளும் சில ஏடுகளை முகத்தருகில் வைத்து வாசித்து வாருங்கள். அருகில் வைத்து புரட்டி வரவேண்டும். குணமடைய சில நாட்களாகலாம். ஆனால் உன் நோய் தீர்வது உறுதி.

ஆச்சாரியார் அவன் முன் ஏட்டுக்கட்டை வைத்துவிட்டு அகன்றார்.

முழுதும் மழிக்கப்பட்ட சிரம்; துளையிடப்பட்ட செவிகள்; எளிமையான காவி உடை. ஆனால், அந்தக் கண்களில் இருந்த கம்பீரம். மெல்லிய குரலில் வெளிப்பட்ட நம்பிக்கை. இந்த பிக்குகள் இவ்வளவு அறிவார்ந்தவர்களா..? ஒன்றுமேயில்லாத இந்த பிக்குவின் மேலாண்மை ஒரு பாதுஷாவைவிட மேம்பட்டதாக இருக்கிறதே..! நாலந்தாவின் ஒவ்வொரு துறையிலும் இத்தகைய மேதாவிகள் ஒளிந்திருக்கின்றனரா..?

கில்ஜியிடம் குழப்பம்.

அன்று முதலே கில்ஜி ஆச்சாரியர் சொன்னபடி ஏடுகளைப் புரட்டத் தொடங்கினான். தீபச்சுடரில் ஏடுகளுடன் ஆச்சாரியரின் தெய்வீக வதனமும் அவ்வப்போது தெரிந்தது. மறக்க முன்றான்… முடியவில்லை.

சில நாட்களில் உடற்தோலில் இருந்த கொப்புளங்கள் மறையத் தொடங்கின. சுவாசம் சீரானது. பின்னர் உறக்கமும் பசி எடுத்தலும் நேராயின… நாளடைவில் சோர்வு குறைந்து புத்துணர்ச்சி பெருகத் தொடங்கியது. கில்ஜியின் ஒவ்வொரு உபாதையும் படிப்படையாக நீங்குவதை அவனது ஹகிம்களும் புரிந்துகொண்டார்கள். நிம்மதியில் அவர்களும் பெருமூச்சு விடலானர்கள். அவர்கள் உயிரும் தப்பியதே…!

சில வாரங்களில் இயல்பு நிலைக்குத் திரும்பிய கில்ஜியின் மனதில் மட்டும் அக்னி ஜ்வாலை..!

சில குரான் ஏடுகளில் அவர்களது மூலிகை மருந்தை மென்மையான துகள்களாக இடித்து தடவியிருக்க வேண்டும். அந்த ஏடுகளை வருடியபோது அவற்றின் தாக்கம் என் உடலில் பரவியிருக்க வேண்டும். அந்த ஏடுகளை அருகில் வைத்து சுவாசித்தபோது மூச்சு, சளியை இழுக்கும்போதோ உறிஞ்சும்போதோ தொண்டையில் புகுந்திருக்க வேண்டும்… வழக்கமான முறையில் உட்கொள்ளாததால் குணம் சற்றே தாமதம் அடைந்திருக்கிறது… அவ்வளவுதான்… மேலும் நான் நம்பிக்கையுடன் அந்த பிக்கு கூறியதை விடாமல் கடைப்பிடித்ததாலும் மனோதத்துவ முறையில் இந்த அற்புதம் நிகழ்ந்திருக்கிறது.

எனது ஹகீம்களைவிட இவர்கள் இவ்வளவு மேம்பட்டவர்களா..? இவர்கள் வைத்திய சாஸ்திரம் அவ்வளவு திறம்படைத்ததா…?

நினைக்க நினைக்க கில்ஜியின் ஆத்திரம் பன்மடங்கு பெருகியது. தன் நோய் நிவர்த்தியானதை மறந்தான்… சமுதாயம் பெறுகின்ற பலன்களை மறந்தான். பல நூற்றாண்டுகளாக ஊண் உறக்கமின்றி அறிஞர்கள் செய்த ஆராய்ச்சியில் இருந்த உழைப்பையும் மறந்தான். பிறவிக் குரூரமே பொங்கிக் கொண்டிருந்தது.

யாரங்கே..?

சேவகர்கள் ஓடிவந்து கைகட்டி நின்றார்கள்.

படைத்தலைவரை அழைத்து வாருங்கள்.

இடுப்பில் குறுவாள்; கன்னங்களில் கரங்களில் பல வடுக்கள் : இறுகிய முகத்துடன் படைத்தலைவன் கில்ஜியின் முன் வணங்கி நின்றான்.

நமது படையின் பெரும்பகுதியை அழைத்துக்கொள். நாலந்தாவின் நூலகத்தைத் தீ வைத்துக் கொளுத்துங்கள். அங்குள்ள ஏடுகள் அழிய வேண்டும். பரந்து விரிந்த பூமி. சில நாட்கள் ஆகலாம். ஆனால் கொளுத்துவதை நிறுத்தக் கூடாது. ஏடுகளைக் காப்பாற்ற வரும் பிக்குகளையும் இரக்கமில்லாமல் வெட்டுங்கள். ஒவ்வொரு நாளும் அங்கு நெருப்பு கொழுந்து விட்டு எரிவதை என் கூடாரத்திலிருந்து நான் காணவேண்டும்..

ஆணையிட்ட பின் கில்ஜியிடம் பயங்கரச் சிரிப்பு.

ஏதோ சொல்ல வந்த படைத்தலைவனும் கில்ஜி முகத்தில் இருந்த கடுமையைக் கண்டு அச்சத்துடன் நிறுத்திக்கொண்டான்.

மூன்று மாதங்களுக்கு அங்கு நெருப்பு அணையவில்லை. முந்நூறு அறைகளும் ஏழு பெரிய வளாகங்களும் கொண்ட அமைப்பு. மாணவர்களும் ஆசிரியர்களும் ஒரு சேர உறைந்த இடம். அனைத்தும் சூறையாடப்பட்டன. பல பிக்குகளும் தார்மீக சிந்தனையாளர்களும் உயிரிழந்தனர். சில பிக்குகள் தூக்க முடிந்த ஏடுகளுடன் திபேத் பகுதியில் அடைக்கலம் புகுந்தனர். சிலர் சில அரிய குறிப்புகளுடன் பாரத தேசத்தின் மூலை முடுக்குகளில் ஓடி ஒளிந்தனர். சில பிக்குகள் சிங்களத் தீவிலும் குடி புகுந்தனர்….

பிக்கு அனலோயா சொல்லி நிறுத்தினர். சலனமற்ற முகம். வரலாறு தந்த துக்கங்களையும் வருத்தங்களையும் ஆனால் பிக்குவின் முதிர்ச்சி வடிகட்டியிருந்தது. மௌனமாக சிறிது வெளிப்புறம் நோக்கினார்.

சிங்களத்திலிருந்து சில பிக்குகள் உத்திரபிரதேசத்தின் குஷிநகர் வந்திருந்தனர். அவர்கள் புராதன நாலந்தா பல்கலைக் கழகம் இருந்த இடத்தைப் பார்வையிட விரும்பினர். அவர்களுடன் செல்ல வரலாற்று ஆராய்ச்சி மாணவனாகிய எனக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. வழியில் ’பிக்கு அனலோயா சொல்லிய விவரங்களை ஏன் முதலில் நாம் சரிவர அறிந்துகொள்ளவில்லை’ என்ற வதைப்பு ஒருபுறம். ’மறைந்த விவரங்களா வரலாறு மறைத்த உண்மைகளா’ என்ற குத்தல் மறுபுறம்.

மறுநாள் காலை இறங்கவேண்டிய இடம் வந்ததாக குழுத்தலைவர் அறிவித்தார்.

இறங்கி புகைவண்டி நிலையத்தைப் பார்வையிட்டேன்’

பெயர்: ’பக்‌ஷியார்பூர் சந்திப்பு’ என பலகையில் இருந்தது.

‘பக்‌ஷியார்பூர் ‘…கேள்விப்பட்டிருக்கிறேனே… குழம்பினேன்.

‘பக்‌ஷியார் கில்ஜி ‘

அருகிலிருந்த அனலோயா புன்முறுவலுடன் கூறினார்.

நாலந்தாவை எரித்தவன் பெயரில் ஒரு சந்திப்பு..?

இன்னா செய்தாரை தண்டிக்கும் முறையோ..?

நான் நெடுநேரம் திக்பிரமையுடன் நின்று கொண்டிருந்தேன்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

வெயிட் பண்ணுங்க

இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே. “சிறுக் கீரை, முளைக் கீரை, முருங்கக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, அகத்திக்...

ஒரு சந்திப்பு

0
“நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக. எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..” உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்... உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே...” பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே...

நடத்தையில் ஊனம்!

2
  “நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!” என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம். தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல...

வலி

0
சுந்தர்...கொல்லைப் பக்கம் செடிகளுக்கு பாத்ரூம் தண்ணி சரியா போக மாட்டேங்குது...அதக் கொஞ்சம் வாய்க்கால் வெட்டி பாத்தி  பண்ணி விடேன்... சரி மன்னி... சொல்லிவிட்டு மண்வெட்டியை எடுத்துக்கொண்டு பின் பக்கம் போனான். ஒவ்வொரு முறை வரும்போதும்...

பிரம்படி வாத்தியார்

தபால்காரரின் குரல் வாசலில் கேட்டது. பொதுவாக வீட்டுவாசலில் கடுதாசுகளை வீசிவிட்டு செல்கிறவர் நின்று குரல் கொடுக்கிறாரென்றால்….? சமையல்கட்டிலில் இருந்து அம்மாவின் குரல் கேட்டது. “சுந்து. உன்னோட ரிசல்ட் கார்டு கொண்டு வந்திருக்காரு போலிருக்கே... என்னாச்சோ......