தேவமனோகரி – 11

தேவமனோகரி – 11
Published on

தொடர்கதை                                                                 ஓவியம் : தமிழ்

கே.பாரதி

பாண்டிச்சேரி பல்கலைக்கழக நூலகத்தில் புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தாள் இனியா. இவள் ஏற்கெனவே எடுத்து வைத்திருந்த புத்தகத்தை ஆழ்ந்து வாசித்துக் கொண்டிருந்தான் மணிகண்டன்.

எதிரில் வந்து உட்கார்ந்த டாக்டர் சிவநேசனை அவன் கவனிக்கவில்லை. அன்றைய செய்தித்தாளை புரட்டிக் கொண்டிருந்தார் அவர்.

"குட்மார்னிங் சார்" என்ற இனியாவின் குரல் கேட்டு நிமிர்ந்தார். மணிகண்டனும் அவரைப் பார்த்துவிட்டு சட்டென்று எழுந்தான்.

அவனை சைகையால் அமரச் சொன்னார் சிவநேசன்.

"ஸாரி சார், அன்னிக்கு நீங்க எங்க காலேஜுக்கு வந்தப்ப அந்த சம்பவம் நடந்திருக்க வேண்டாம். நாங்க எல்லோரும் ரொம்ப வருத்தப்பட்டோம். எங்க மேடம் கூட ரொம்ப அப்ஸெட் ஆயிட்டாங்க" என்றாள் இனியா.

"இப்ப வலி பரவாயில்லையா ஸார்?" என்று கேட்டான் மணிகண்டன்.

"உங்க காலேஜ் எப்பவுமே இப்படித்தான் இருக்குமா?"

"எப்பவும் இல்லை ஸார். எப்போதாவதுதான்" என்று சொன்னபோது இனியாவின் குரல் தாழ்ந்து ஒலித்தது.

"நிறைய நல்ல ஸ்டூடண்ட்ஸும் இருக்காங்க ஸார். சில பேர்தான் இப்படி ரௌடித்தனம் பண்றாங்க. அவங்களாலதான் காலேஜுக்கே கெட்ட பேரு" என்றான் மணிகண்டன்.

"நீங்கள் வேலையை முடித்துவிட்டுப் போவதற்கு முன்பு டிபார்ட்மெண்ட்டில் வந்து என்னைப் பாருங்க" என்று சொல்லிவிட்டு, செய்தித்தாளில் ஆழ்ந்தார் சிவநேசன்.

மாலையில் இவர்கள் ஆங்கிலத்துறைக்குப் போனபோது தனது மாணவன் ஒருவனை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தார் சிவநேசன். ஒரு கட்டத்தில் கோபம் அதிகமாகி அவன் கொடுத்த ஆய்வுக் கட்டுரையை வீசி எறிந்தார்.

"ஸாரி சார், சரியாக எழுதி எடுத்துகிட்டு வரேன்" என்று கெஞ்சிக் கொண்டிருந்தான் அந்த மாணவன். அவர் வீசியெறிந்த தாள்களை சேகரித்துக் கொண்டு கிளம்பினான்.

இனியாவும் மணிகண்டனும் வெளியில் தயங்கியபடி நின்று கொண்டிருந்தார்கள்.

"யெஸ், கம் இன்" என்று உள்ளிருந்தபடி குரல் கொடுத்தார் சிவநேசன்.

உரத்த குரலில் கத்தியதாலோ என்னவோ ஒரு படபடப்பு இருந்தது அவரிடம். முகம் சிவப்பேறியிருந்தது.

அலமாரியிலிருந்து ஒரு புத்தகத்தை எடுத்து ஏதோ எழுதி கையெழுத்திட்டார். அதை இனியாவிடம் கொடுத்தார்.

"இதை உங்க மேடம் தேவமனோகரியிடம் சேர்த்துவிடு" என்று சொல்லிவிட்டு "நீங்கள் கிளம்பலாம்" என்று கத்தரித்தது போல் அங்கிருந்து வெளியேறினார்.

** ** **                   

 "டியர் டாக்டர் தேவமனோகரி"என்று இவளைக் குறிப்பிட்டு கையெழுத்திட்டிருந்தார் சிவநேசன்.

அந்தப் புத்தகம் அவர் எழுதியதுதான். ரஷ்ய எழுத்தாளர் ஆண்டன் செக்கோவ் பற்றிய ஆராய்ச்சி நூல்.

செக்கோவ் ஒரு சொல் சிக்கனக்காரர். அவரது படைப்புகளைப் பற்றிய இந்த நூலில் சொல் சிக்கனம் இருக்கவில்லை. விரிவாக எழுதப்பட்டிருந்தது.

செக்கோவ்வின் சிறுகதைகளை அவள் நிறைய வாசித்திருக்கிறாள். ஆனால் சிவநேசனின் விளக்கங்கள் அவளை ஆச்சரியப்படுத்தியது. முற்றிலும் புதிய கோணமாக இருந்தது.

'விவாதிக்க வேண்டு' என்று தோன்றிய பத்திகளை பக்கவாட்டில் பென்சிலால் குறித்து வைத்தாள். யாரிடம் விவாதிப்பது? சிவநேசனிடமா? அவரைத்தான் சந்திக்கவே வேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாளே?

இப்போது அந்த முடிவு லேசாக சலசலத்தது. 'அந்த மனிதரை அவசியம் சந்திக்க வேண்டும்' என்ற உணர்வை இந்தப் புத்தகம் அவளுக்குள் ஏற்படுத்தியிருந்தது.

கல்லூரியில் தேர்வு நெருங்கிக் கொண்டிருந்ததால் ஒரே பரபரப்பு. ஒவ்வொரு வருஷமும் இந்தத் தேர்வை நடத்தி முடிப்பது பெரிய சவால்.

மாணவர்கள் பிட் அடிப்பதும், ஆள்மாறாட்டம் செய்வதும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கிறது. அத்தனை ஆசிரியர்களும் விழிப்போடு இருந்து தடுத்தாக வேண்டும்.

தேர்வு முடிந்து பிறகு வரும் விடுமுறைக்காக காத்திருந்தாள் மனோகரி. நாளுக்கு நாள் வெயில் ஏறிக் கொண்டிருந்தது.

இனியா உற்சாகம் குறைந்து காணப்பட்டாள்.

"என்ன விஷயம்?" என்று அவளை விசாரித்தாள் மனோகரி.

"ஹாஸ்டலில் பத்து மணிக்கு மேல் விளக்கு எறியக்கூடாதுங்கறாங்க மேடம். என்னால படிக்கவே முடியலை"

"உன் வேலை முடியும் வரையில் நீ என் வீட்டிலேயே தங்கலாமே இனியா"

மனோகரி சொன்னவுடன் ஒரு சந்தோஷத்துள்ளலுடன் தலையசைத்தாள் இனியா. மறுநாளே தன் துணிமணிகளை எடுத்துக் கொண்டு திருவான்மியூருக்குக் குடிபுகுந்தாள்.

அன்று இரவு நவீனிடமிருந்து ஃபோன் வந்தது.

"உனக்கு ஒரு நல்ல செய்தி நவீன். நான் இப்ப தனியா இல்லை. உன் வயசுப் பொண்ணு ஒருத்தி கூடவே தங்கியிருக்கா. பேரு இனியா. என் பி.எச்.டி ஸ்டூடண்ட்"

நவீன் இவள் சொன்னதை ரசித்ததாகத் தெரியவில்லை. ஒருவேளை அவன் தன் மீது பொசஸிவ்வாக இருக்கிறானோ?

இல்லை. ஒரு போதும் இருக்கமாட்டான். இவள் அவனை அப்படி வளர்க்கவில்லை.

சின்ன வயதில் நவீன் இவளிடம் பல கேள்விகளைக் கேட்பான்.

"என் அப்பா எப்படிப்பட்டவர் அம்மா?

இந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது?

கல்யாணமான இரண்டு வருஷத்தில் மனோகரியின் அப்பா மாரடைப்பில் காலமானார்.

ஒரு மாதத்திற்கு மேலாகியும் இவளால் அந்த துயரத்திலிருந்து மீளமுடியவில்லை. அவ்வப்போது கண்கள் கசியும்.

"இப்படி எத்தனை நாளைக்கு அழப்போறே? போனவர் போனவர்தான். ஆக வேண்டிய வேலையைப் பாரு"

ராஜனின் குரலில் இருந்த கடுமை இவளைத் தாக்கியது. சொந்த அப்பாவுக்காக அவள் துயரப்படுவது கூட தவறா? கல்யாண பந்தம் கண்ணீரைக் கூடவா கட்டுப்படுத்தும்?

பழைய நினைவுகளை உதறிக் கொண்டாள் மனோகரி. இதையெல்லாம் நவீனிடம் பகிர்ந்து கொள்ள முடியுமா என்ன?

ஆனால் ஒரு விஷயத்தில் கவனமாக இருந்தாள் மனோகரி. ராஜனைப் போல் நவீன் உருவாகிவிடக்கூடாது!

அவனுடைய பள்ளிக்கூட நண்பர்கள் வீட்டில் பிறந்தநாள் கொண்டாட்டம் என்றால் அவனை அனுப்பி வைப்பாள். எல்லோரிடமும் பேசிப் பழக உற்சாகப்படுத்துவாள்.

பெரியவர்களைப் பார்த்தால் வணக்கம் சொல்வதும், அவர்கள் ஏதாவது கொடுத்தால் நன்றி சொல்வதும் அவனுக்கு இயல்பாக ஆயிற்று.

சின்ன வயதிலேயே அவனைத் தனியாக தூங்கப் பழக்கினாள். அவன் வேலைகளை அவனே செய்து கொள்ளவும் மெல்ல மெல்ல தயார் செய்தாள்.

வகுப்பில் கூடப்படிக்கும் பெண்களைப் பற்றி மற்ற பையன்களைப் போல் கமெண்ட் அடித்துவிட்டு நவீன் இவளிடமிருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.

பெண்களை மதித்து நடக்க வேண்டும் என்று நேரடியான உபதேசமெல்லாம் செய்ய மாட்டாள். பெண்களையும், அவர்களின் கஷ்டங்களையும் அவன் புரிந்து கொள்ளும்படி ஏதேனும் ஒரு உரையாடலில் சொல்லி வைப்பாள்.

தோளுக்கு மேல் அவன் வளர்ந்ததும் ஒரு தோழனைப் போல ஆகிப்போனான். வயதுக்கு மிஞ்சிய ஒரு மனமுதிர்ச்சியை அவனிடம் பார்க்க முடிந்தது.

அதன் பிறகு அவன் இவள் வாழ்க்கையைக் குறித்து கேட்ட கேள்விகளுக்கெல்லாம் எதையும் மறைக்காமல் சாதாரணமாகப் பகிர்ந்து கொண்டாள் மனோகரி. எதுவும் அவனை உணர்வுப்பூர்வமாக பாதித்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தாள்.

ராஜனின் குணாதிசயத்தை விவரிக்கும்போது மிகுந்த எச்சரிக்கையாக இருந்தாள்.

"அவரை குறை சொல்ல முடியாது நவீன். அவர் வளர்ந்த சூழ்நிலை அப்படி" என்று விளக்கம் தந்தாள்.

தன் பிள்ளை சுற்றியிருப்பவர்களிடம் அக்கறை செலுத்தும் ஒரு இளைஞனாக வளர்ந்து நின்றபோது  மனோகரிக்கு நெஞ்சம் பூரித்தது.

"எதற்கு மனோகரி பிளஸ் டூ முடித்தவுடன் வெளிநாட்டுக்கெல்லாம் அனுப்பறீங்க? மேல் படிப்புக்குப் போனால் போதாதா?" என்று லீலாகூட வாதம் செய்தாள்.

ஆனால் மனோகரி இந்த மாற்றத்தையும் தனக்கு முன்னால் இருக்கும் ஒரு அக்னிப் பரீட்சை போல ஏற்றுக்கொண்டாள்.

பாச உணர்வுகளில் திளைத்துக் கொண்டே அவற்றை ஜெயிக்கவும் வேண்டியிருக்கிறதே! அதற்கான இந்த வாய்ப்பு தனக்கும் நல்லது நவீனுக்கும் நல்லது என்று அவள் நினைத்தாள்.

** ** **

துறைத்தலைவர் கணேசமூர்த்தி மனோகரியை அழைத்தார். எதிரில் இருந்த வெளிநாட்டு இளைஞன் ஒருவனை அறிமுகம் செய்தார்.

"இவர் மிஸ்டர் ஜான் பிரிட்டோ. கலிபோர்னியா யூனிவர்சிடியில ரிசர்ச் பண்றார்.  இண்டர்வ்யூ தரமுடியுமான்னு கேட்டாரு. அதுக்கெல்லாம் நீங்கதான் சரின்னு தோணுச்சு. கொஞ்சம் அவர்கிட்ட பேசுங்க மேடம்."

அந்த இளைஞனை இரண்டு நாட்களாக தூரத்திலிருந்து மனோகரி கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள்.  மரத்தடியிலும், கேன்டீனிலும் மாணவர்களின் தோளில் கையை போட்டுக்கொண்டு ஏதோ பேசிக் கொண்டிருந்தான். தமிழ் பேசும் அந்த வெளிநாட்டுக்காரனை ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள் மாணவர்கள்.

இவள் எதிரில் உட்கார்ந்து கொண்ட பிரிட்டோ "நீங்கள் பேசுவதை ரெகார்ட் செய்து கொள்ளட்டுமா?" என்று கேட்டான்.

"என்ன டாப்பிக்? முதலில் அதைச் சொல்லுங்கள்"

"மாணவர்களுடைய அரசியல் ஈடுபாடு பற்றி சமூகவியலில் ஆராய்ச்சி செய்கிறேன்"

"ஓ! இதில் நான் சொல்றதுக்கு என்ன இருக்கு? சரி கேளுங்கள். எனக்குத் தெரிந்தவரையில் சொல்கிறேன்"

"இந்த காலேஜில் ஏன் ஸ்டூடண்ட் யூனியன் தேர்தலே நடத்துவதில்லை?" என்று கேட்டுக்கொண்டே அவன் ரெகார்ட் செய்ய ஆரம்பித்தான்.

"ஒரு காலத்தில் நடத்திக் கொண்டுதான் இருந்தோம். இப்போது ஐந்தாறு வருஷங்களாகத்தான் நடத்துவதில்லை"

"எதனால் மேடம்?"

"காலேஜ் யூனியன் என்பது எதுக்காக? ஸ்டூடண்ட்ஸ் தங்கள் பிரச்னைகளை சொல்வதற்கு அப்படி ஒரு அமைப்பு அவசியமாய் இருந்தது. ஆனால் இந்த காலேஜைப் பொருத்தவரைக்கும் அது அரசியல் மயமாகிவிட்டது. அரசியலுக்குத் தயாராகிற மாணவர்கள்தான் யூனியன் தேர்தலில் போட்டியிடுவார்கள்"

"அதிலும் குறிப்பாக கலைப்பிரிவு மாணவர்கள்தான் இதிலெல்லாம் ஆர்வம் காட்டுவதாகச்  சொல்கிறார்களே?"

"ஆமாம். சயின்ஸ் மாணவர்கள் சற்று ஒதுங்கியே இருப்பார்கள். அவர்களுக்கு லேப் வொர்க் நிறைய இருக்கும். அதனால் பேராசிரியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். ஆனால் கலைப்பிரிவு மாணவர்கள் அப்படி இல்லை. லிபரேடட்!" என்று சொல்லி புன்னகைத்தாள் மனோகரி.

"அரசியல் கட்சி சார்ந்துதான் போட்டியிடுவார்களா?"

"ஆமாம்."

"அநேகமாக ஆளுங்கட்சி வேட்பாளர்கள்தான் ஜெயிப்பார்கள். அவர்களுக்கு மாணவரணித் தலைவராகும் வாய்ப்பு தேடிவரும். பிறகு படிப்படியாக வளர்ந்து விடுவார்கள்"

"மேடம்,  நீங்கள் என்னுடைய முதல் கேள்விக்கு சரியாக பதில் சொல்லலை. யூனியன் தேர்தல் ஏன் நிறுத்தப்பட்டது?"

"மிஸ்டர் பிரிட்டோ, எனக்கு இப்போ வகுப்புக்குப் போகணும். நாளைக்குப் பேசுவோமா?"

"ஓ. ஷ்யூர்"

மனோகரி வகுப்பை முடித்துவிட்டு வரும்போது பிரிட்டோ கணிதத்துறையில் உட்கார்ந்து கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான்.

(தொடரும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com