0,00 INR

No products in the cart.

மூர் மார்க்கெட் மனதை விட்டு மறையவில்லை…

முகநூல் பக்கம்

 

மூர் மார்க்கெட்

 

து 1973 ஆம் வருடம் ஏப்ரல் – மே மாதம். பள்ளி தேர்வுகள் முடிந்து, விடுமுறை நாட்கள். அப்பா அன்றைய ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்தில், ஒரு கிராமத்தின் உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர். அந்த ஆண்டு பள்ளி இறுதி வகுப்பின் விடைத்தாள் திருத்தும் வேலையாக அன்றைய மெட்ராஸ் பயணத்திற்கு தயாரானார். அடம்பிடித்து நானும் வருவதாக கூறி அவருடன் பயணம். ஸ்டேட் எக்ஸ்பிரஸ் பஸ்ஸில் முதல் தொலை தூர பயணம்.

குரோம்பேட்டையில் உறவினர் வீட்டில் தங்கினோம். உறவினர் ஒருவர் என்னை மெட்ராஸ் நகரை சுற்றிக் காட்டுவதாக கூறினார். தம்பி… மெட்ராஸ்ல என்னென்ன பார்க்கணும்னு சொல்லு என்றார். நான் மூன்று காலேஜ் பார்க்கணும் என்று கூற, ’அட… இந்த சின்ன பையன் இப்பவே காலேஜ் பார்க்கணும்’ என்கிறானே என மொத்த உறவினர் கூட்டமும் வியந்தது. அது என்னென்ன காலேஜ் என்றனர் ஆவலுடன்.

‘முதலில் உயிர் காலேஜ், பிறகு செத்த காலேஜ், அப்புறம் ஓவிய காலேஜ்’ என கூறியதும், ‘கொல்’ என்ற சிரிப்பு. எங்கள் கிராமத்தில் நாங்கள் அடிக்கடி பேசியது இது பற்றிதான்.

Zoo தான் உயிர் காலேஜ். எம்.ஜி.ஆர். அடிமைப் பெண் சினிமாவில் நடித்த சிங்கத்தை கொடுத்துள்ளார் என்பது தான் ஆவலுக்கு காரணம். உயிரனங்களை பதப்படுத்தி வைக்கும் இடம் செத்த காலேஜ் அதாவது மியூசியம். Fine Arts கல்லூரி ஓவிய காலேஜ் என்ற அடிப்படைதான் எங்களது புரிதல்.

இந்த இடங்களை சுற்றி பார்க்கும்போது நான் பார்த்த இடம்தான் மூர் மார்க்கெட்.

அப்போதே 70 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான, சென்னையின் உயிர் நாடி மூர் மார்க்கெட்.

நாற்கோண வடிவத்தில், கோவில் போன்ற அழகிய கலசங்களை கொண்ட, ஒரு புராதானமான கட்டிட கலையின் நேர்த்தியோடு காணப்பட்ட இடம் தான் மூர் மார்க்கெட்.

அங்கும் இங்கும் இருந்த பழைய பொருட்கள் சந்தையை ஒரு அழகு கட்டிடமாக, இந்த இடத்தில் 1898ஆம் ஆண்டு கட்டத் தொடங்கி 1900 ஆம் ஆண்டு முதல் மக்கள் கூடும் சிறந்த இடமாக, விற்பனை கூடமாக மாறியது. அக்கால குஜ்லி பஜார் முதல் சென்ட்ரல் ஸ்டேஷன் வரை மூர் மார்க்கெட்.
Lt. Col. George Moore அவர்களின் brain child தான் இது.

சாப்பாட்டு கூடையில் உணவு வைத்துள்ள பெண்கள், ரிக்‌ஷா வண்டிகள், தாயத்து விற்பவர், மூலிகை விற்பவர், கிளி ஜோசியர், குரங்கு வித்தை, துணிகள், பேனா, மலைத்தேன், மிருதங்கம் போன்ற வடிவில் இருக்கும் ஒரு அசட்டு தித்திப்புடன் உள்ள கிழங்கு, இரும்பு பித்தளை சாமான்கள், ரேடியோ, கிராமபோன், இசைத் தட்டுகள், பறவைகள், உதிரி சாமான்கள், டெலஸ்கோப் என ஏராளமான விஷயங்கள் பார்த்த பசுமையான நினைவு.

எடுப்பு சாப்பாடுகளில் மீதமானவற்றை கலந்து சாதமாக தரும் ஆயாக்கள், அதை சுற்றி விளிம்பு நிலை மக்கள், சீட்டுகளை வைத்துக் கொண்டு, போலீஸ் வருகிறார்களா என்று எட்டி எட்டி பார்த்துக்கொண்டே நடக்கும் சூதாட்டம், வெளி நாட்டு கடிகாரம் என கூவி விற்கும் டுபாக்கூர் பார்ட்டிகள் என கலந்து கட்டி பல விஷயங்கள்.

பழைய புத்தகங்கள் தான் மூர் மார்க்கெட்டின் அடையாளம். பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு புத்தகங்கள் சகாய விலையில் கிடைக்கும் இடம். நான் பார்த்தபோது பல ஆயாக்கள் ’மோரு மோரு’ என்று விற்றுக் கொண்டிருந்தனர். இதனால்தான் இது ’மோரு மார்க்கெட்டா’ என நினைத்தது உண்டு.

ஆந்திரா பஸ் ஒன்று bathikina (உயிர்) காலேஜ் பாஹ உந்தி. Chachina (செத்த) காலேஜ் எக்கட உந்தி..என பேசியதையும் கேட்ட ஞாபகம்.

பின்னாளில், 1983 ஆம் ஆண்டு இறுதியில் சென்னையில் வசிக்க தொடங்கியபோது, மூர் மார்க்கெட்தான் என் பிரதான பொழுது போக்கு.
1985 ஆம் ஆண்டு வரை பல புத்தகங்களை, பல பொக்கிஷங்களை வாங்கி மகிழ்ந்தேன்.

James Hadley Chase, Agatha Christie, William Wordsworth, Somerset Maugham, காண்டேகர், மாப்பசான், புறநானூறு, வாரியார் சுவாமிகள், சுஜாதா என பல எழுத்தாளர்களின் புத்தகங்களை இங்குதான் வாங்கினேன். விக்கிரமன் அவர்களின் ’சித்திரவல்லி’, சாண்டில்யன் அவர்களின் ’ஜலதீபம்’,
ராஜ திலகம், பாலச்சந்தர் அவர்களின் ’மூன்று முடிச்சுகள்’ என பத்திரிக்கையில் வந்த தொடர்களை பைண்ட் செய்த புத்தகங்களையும் வாங்கினேன்.

1985 ஆம் ஆண்டு எரிந்து போன பின், ஆறு ஆண்டுகள் கழித்து 1991 ஆம் ஆண்டு அருகிலிருந்த அல்லிக்குளம் மூடப்பட்டு மூர் மார்க்கெட் கட்டப்பட்டது.

இப்போதும் அல்லி குளத்தில் உள்ள மூர் மார்க்கெட் செல்ல தவறுவது இல்லை. பழைய டெலிபோன்கள், நாணயங்கள், தபால் தலைகள், தீப்பெட்டி மேல் அட்டைகள் என பலவற்றையும் வாங்கிய அனுபவம். மிகவும் அறிவார்ந்த பழைய புத்தக விற்பனையாளர்கள். எந்த எழுத்தாளர்களை பற்றியும் பேசுவார்கள்.

Sidney Sheldon, Daniel Steele, John Ruskin, Keats,

தகழி சிவசங்கரன் பிள்ளை, அசோகமித்திரன், கல்கி, சுஜாதா, சாண்டில்யன், சிவசங்கரி, இந்துமதி என எல்லா எழுத்தாளர்களைப் பற்றியும் அறிந்து வைத்திருப்பார்கள். பிரதாப முதலியார் சரித்திரம், நிகண்டு என அரிய விஷயங்களும் அவர்களுக்கு அத்துப்படி.

ஒரு நாணயத்தை காட்டியவுடன், இது அசோகர், கனிஷ்கர், குப்தா dynasty, இது pre- independence coin, இது மராத்தா region coin என கூறி மிரள வைப்பார்கள்.

இன்றும் மூர்மார்க்கெட் அல்லி குளத்தில் உள்ளது. ஆனால் பழைய உற்சாகம் இல்லை. முதல் ஓரிரு மாடிகளில், பல கடைகள் இயங்குகின்றன. மேல் மாடிகளில் கோர்ட் வளாகம் உள்ளது (வங்கியின் துறை தொடர்பாக, பல முறை அங்கு சென்றிருந்த போது, பல முக்கிய புள்ளிகள், அலைந்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது).

இப்போதும், பொறியியல், மருத்துவம் படிக்கும் மாணவர்களை கூட்டம் கூட்டமாக அங்கு பார்க்க முடிந்தது.

எனக்கு பழைய உற்சாகம் நிறைந்த மூர் மார்க்கெட் மனதை விட்டு மறையவில்லை.

 

 சங்கரின் முகநூல் பக்கத்திலிருந்து…

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

தமிழ்த் தாத்தா சேர்த்து வைத்த சொத்தில் வாழும் பேரன்கள் நாம்.

0
  உ.வே.சவின் "என் சரித்திரம்"   150 ஆண்டுகளுக்கு முன் (தமிழன் இன்று பெருமையாகப் பேசிக் கொள்ளும்) சிலப்பதிகாரம், மணிமேகலை, பத்துப்பாட்டு, எட்டுத்தொகை போன்ற 90க்கு மேற்பட்ட பனையோலைச் சுவடிகளுக்கு அச்சு வடிவம் கொடுத்தவர் உ.வே. சுவாமிநாதய்யர். 3000க்கும்...

எப்படி மரியா இதெல்லாம் சாத்தியமாயிற்று?

0
முகநூல்  பக்கம்   உள்ளத்தில் உறுதியாக ஒன்றை நினைத்து விட்டால் அந்த உள்ளம் எப்பாடுபட்டாவது அதனை முடித்துக் கொடுத்து விடும். டாக்டர் மரியா விஜி. கேரளத்தை சேர்ந்த 25 வயது இளம்பெண். சக்கர நாற்காலி இல்லாமல் எங்கேயும்  போக...

இந்தக் காலத்தில் இப்படியும் மனிதர்களா ??

0
முகநூல் பக்கம்   கண்முன்னால் நேர்ந்த நிகழ்வில் நெகிழ்ந்து எழுதுகிறேன். நிறைகளைச் சத்தமாய்ச் சொல்ல வேண்டும் தானே ? எங்கள் ஸ்டாஃப் ப்ரீத்தி (Woman Health volunteer )சமீபத்தில்தான் 'மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்'கீழ்  பணி அமர்த்தப்பட்டிருக்கிறார்....

என் சொந்த வீடே… எனக்கு அனாதை இல்லமாகிப் போனது…

0
முகநூல் பக்கம்   முதுமை + தனிமை= கொடுமை ! பிள்ளையை... பெண்ணை... பெற்று, வளர்த்து, படிக்க வைத்து..., ஆளாக்கி..., மணமுடித்து... வைக்கிறோம்!வேறு ஊரில்..., வேறு மாநிலத்தில்..., வேறு நாட்டில்... வேலை நிமித்தமாக சென்று விடுகிறார்கள்...இங்கு... 70...

“என் உயிரைக் குடுத்தாவது நமக்கு பொறக்கப் போற கொழந்தைய நான் நல்லா படிக்க வெப்பேன்!”

0
முகநூல் பக்கம் அண்மைக்காலமாக, பொதிகை தொலைகாட்சியில்  ஒளிபரப்பாகும்  “மங்கையர் சோலை” நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.  எளிய மற்றும் மீடியா வெளிச்சம் விழாத சாதனைப் பெண்களைத் தேடிப்பிடித்து நிகழ்ச்சியில் பங்கேற்கவைத்துப் பாராட்டுகிறார்கள்.  எதிர்வரும் 14.04.2022...