
யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு தீவிரமாகி வரும் நிலையில், அந்த நாட்டின் அருகே உள்ள போலந்து, ஹங்கேரி போன்ற நாடுகளுக்கு தப்பி வந்த இந்தியர்கள் பலரும் இந்தியா அனுப்பி வைத்துள்ள சிறப்பு விமானங்கள் மூலம் தாயகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பலர் தனி விமானம் மூலம் டெல்லியை அடுத்த காஜியாபாதில் உள்ள ஹிண்டான் விமானப்படை தளத்துக்கு வந்தனர். அந்த களேபரத்திலும் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் தருமபுரியைச் சேர்ந்த கவுதம். காரணம், அவர் தமது உடைமைகளுடன் மட்டுமின்றி, யுக்ரேன் நாட்டில் தான் வளர்த்த அழகான பூனைக்குட்டியுடன் வந்திருக்கிறார்.
அவரது மனித நேயத்தை அங்கீகரிக்கும் வகையில் யுக்ரேனில் உள்ள அதிகாரிகளும் சரி, இந்திய அதிகாரிகளும் சரி பூனைக்குட்டியை கொண்டு செல்ல ஆட்சேபம் தெரிவிக்காமல் அனுமதி கொடுத்திருக்கின்றனர்.
ஹிண்டான் விமான நிலையத்தில் கவுதமின் ஜாக்கெட்டுக்குள் இருந்தபடி பூனைக்குட்டி தனது தலையை மட்டும் எட்டிப்பார்த்தபடி இருந்தது. இதைப்பார்த்த பலரும் கவுதமின் செயலை நெகிழ்ந்து பாராட்டினர்.
அந்த விமான நிலையத்தில் தமிழக மாணவர்களை வரவேற்ற தமிழக அரசு அதிகாரிகள், டெல்லியில் உள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் இல்லத்துக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மாணவர்களின் பெயர் மற்றும் முகவரிகள் பதிவு செய்யப்பட்ட போது அந்தப் பூனைக்குட்டியின் பெயரும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதன் பெயர் ஸ்காட்டிஸ் போல்ட்.
நன்றி: பிபிசி தமிழ்.