0,00 INR

No products in the cart.

அதுதான் நிஜம். சினிமா அல்ல வாழ்க்கை.

ஒரு கலைஞனின் வாழ்க்கையில் -11

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

ஆக்‌ஷன் பாபு

மிழ்நாட்டு கிராமம் ஒன்றில் அன்று படப்பிடிப்பு நடந்துக்கொண்டிருந்தது. கதாநாயகனான எனக்கும் வில்லனுக்கும் இடையில் நடக்கும் சண்டைக் காட்சி படமாக்க வேண்டியிருந்தது. புதுமையாக ’கிராமத்தில் வாழ்பவர்களின் பெயரையே படத்தில் எல்லோருக்கும் வைப்பது’ என்ற முடிவில் இருந்தார் இயக்குனர். எனக்கெதிராய்ப் போராடும் வில்லனின் பெயர் உண்மையில் வாழ்ந்துகொண்டிருப்பவரின் பெயராக இருந்தது. தமிழ் சினிமாவில் இப்படி பல புதுமைகள் நடக்கும்.

’ஆக்‌ஷன் பாபு’ என்ற வில்லன் பாத்திரத்தை இயக்குனர் அதன் அதிகபட்ச சாத்தியங்களுடன் உருவாக்கி இருந்தார். வில்லன் குடிப்பார், பெண்களிடம் வம்பு பண்ணுவார்,  கடைகளில் மாமூல் வசூலிப்பார், எங்கேயும், எப்போதும் எதையும் எடுத்துக்கொண்டு போய்விடுவார். ஒயின் ஷாப்புகளிலும், அங்காடிகளிலும், சலூனிலும் பணம் கொடுக்கமாட்டார். சட்டைக்குப் பின்னால் பளபளக்கும் வீச்சரிவாள் லேசாய் வெளியில் தெரிய நடப்பதுதான் பாபுவின் அடையாளம். அவரை வில்லன்களின் வில்லன் என்றும் சொல்லலாம்.

சிறு நகரமாக இருந்ததால் அங்கு படப்பிடிப்பு முடிந்தபிறகு தங்குவதற்கு நல்ல விடுதிகள் இல்லை. கேரளத்தின் நகரத்தை ஒப்பிட்டுப் பார்த்தால் இது கிராமம். ஒரு மணிநேரப் பயணத்துக்குப் பிறகுதான் நல்ல விடுதியை வந்தடைய முடியும். இரவு பதினோரு மணிக்குப் படப்பிடிப்பு முடிந்து ஹோட்டலுக்குத் திரும்பினோம். நிலவு வெளிச்சத்தில் அந்த கிராமம் மிகவும் அழகாக இருந்தது. எப்போதும்போல நானே காரை ஓட்டிக்கொண்டு வந்தேன்.

புறப்பட்ட சிறிது நேரத்தில் வழியில் இரு சக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு ஒரு பெண்ணும், உடன் ஆஜானுபாகுவான ஒரு ஆணும் சண்டை போட்டுக்கொண்டே நடந்து போவதைப் பார்த்தேன். அந்த ஆளின் பைக்கும் பக்கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அவன் அவளின் வண்டியைப் பிடித்திழுப்பதும், அவள் அதை எதிர்ப்பதும் கார் அவர்களைக் கடந்து போகும் இடைவெளியில் பார்க்க முடிந்தது.

“என்னடா அங்க பிரச்னை?”

நான் வண்டியின் வேகத்தைக் குறைத்தபடி கேட்க, என் டிரைவர் சொன்னான்.

“வேணாம் சார். பழக்கமில்லாத இடமா இருக்கு. நிறுத்த வேணாம் சார்.”

எனக்கும் சரியென்றே தோன்றியதால் வேகமெடுத்தேன். எனக்குள்ளிருக்கும் கதாநாயகன் மரித்துச் சாதாரண மனநிலையிலான பயந்த மனிதன் விழித்து என்னை ஆக்ரமித்துக் கொண்டிருந்தான். சாலை விபத்தைப் பார்க்க நேர்ந்தால் எல்லாத் தைரியமும் வடிந்து, ஆண்மை ஒளிந்து கொண்டு படபடப்புடன் அதிவேகமெடுத்து வண்டி ஓடுமே அதுபோல வண்டி ஓட்டினேன். சினிமாவில் வில்லன்களின் கூட்டத்தையே அடித்து நொறுக்கிவிடலாம். ஆனால் நிஜத்தில், இந்த இரவில் வண்டியிலிருந்து இறங்கி அந்த ஆஜானுபாகுவான ஆளோடு தகராறு செய்தால் நான் காணாமல் போய்விடுவேன். அதுதான் நிஜம். சினிமா அல்ல வாழ்க்கை.

ஆனால் ஒரு கிலோமீட்டர் கடந்திருந்த நேரத்தில் என்னிலிருக்கும் மனிதம் மீண்டும் உயர்ந்தெழுந்தது. என்னால் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டுப் போய்விட முடியவில்லை.  அந்தப் பெண்ணின் நிலைமை குறித்து யோசித்து திரும்பிப் போக முடிவு செய்தேன். டிரைவர் மீண்டும், மீண்டும் என்னைத் தடுத்தபோதும் நான் அதைக் கேட்கவில்லை.

திரும்பிச் சென்ற சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணையும், ஆணையும் நிலவு வெளிச்சத்தில் மீண்டும் பார்த்தேன். அவன் அவளுடைய இருசக்கர வாகனத்தைத் தள்ளிக்கொண்டு வந்தான். பின்னால் சத்தமாகப் பேசிக்கொண்டே அந்தப் பெண்ணும் நடந்து வந்துகொண்டிருந்தாள். சட்டென உள்ளே புகுந்து சண்டைபோட நேர்ந்தால் வசதியாக இருக்குமென்று என் காரை மரத்தடியில் ஓரமாக நிறுத்தினேன். உதவிக்கு டிவைர் இருப்பதால் இறங்கலாம் என்றும் நினைத்தேன். அதற்குள் சாலை ஓரத்தில் இருக்கும் குடிசை வீட்டின் கதவை அந்த ஆள் பலமாகத் தட்டினான். உள்ளேயிருந்து பதில் வராத கோபத்தில் அவன் கதவை எட்டி உதைத்தான். உட்புறமாக உடைந்து விழுந்த கதவின் மீதேறி திட்டிக்கொண்டே ஒரு மெலிந்த ஆள் வெளியே வந்தான். உள்ளேயிருந்து ஆக்ரோஷத்துடன் வெளியே வந்தவன் வெளியில் நிற்பவனைப் பார்த்ததும் பூனையைப் போலப் பதுங்கினான். கண்ணிமைக்கும் நேரத்தில் ஏதேதோ பொருட்களை அள்ளியெடுத்துக்கொண்டு வெளியே வந்தான் அவன். மண்ணெண்ணெய் விளக்கு பற்ற வைத்து வண்டியின் பஞ்சரைச் சரிபார்க்கத் தொடங்கினான். அவள் வண்டியைப் பிடித்தபடி நின்றிருந்தாள். அவன் பக்கத்தில் கல்லில் உட்கார்ந்தபடி புகைபிடித்துக் கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குள் அவனிடம் ஏதோ சொல்லிவிட்டு அந்தக் பெண் வண்டியை ஓட்டிக்கொண்டுபோக ஐந்து நிமிட இடைவெளியில் அவனும் போனான்.

இருவரும் போய்விட்டார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு நான் என் காரை பஞ்சர் கடைக்காரன் குடிசையின் முன்னால் நிறுத்தி அவர்களைப் பற்றி விசாரித்தேன்.

தமிழில் கதையை ஆரம்பத்திலிருந்து சொன்னான். அந்தப் பெண் பதினைந்து கிலோ மீட்டர் தூரத்திலிருக்கும் மில்லில் வேலை பார்க்கிறாள். இரவு ஷிஃப்ட் முடிய நேரமாகிவிட்டது. திரும்பி வரும்பொழுது வண்டி பஞ்சராகி விட்டது. அதற்குப் பிறகான சம்பவங்களைத்தான் நான் பார்த்தது.

“அந்த ஆள் எதுக்கு அவளைத் தடுத்து நிறுத்தினான்?”

“தடுத்து நிறுத்தல சார். பஞ்சரான வண்டியைத் தள்ளிட்டு போகாம, அவனோட வண்டியில வீட்டுக்குக் கொண்டுபோய் விடறேன்னு அண்ணன் சொல்லிப் பார்த்தாராம் சார்”

“அப்புறம்?”

“அந்தப் பொண்ணு சம்மதிக்கலயாம். அதனால் அண்ணன் இங்கக் கொண்டுவந்து பஞ்சர் ஒட்டிக் கொடுத்தார். அது முன்னாலயே இங்க வந்திச்சு சார். பஞ்சர் ஒட்டற பையன் வீட்டுக்குப் போயிட்டதால நான்தான் கடையைத் திறக்கல.”

“அப்பத் தொறக்காம இப்ப எப்படி தொறந்து வேலை செஞ்சே?”

“அய்யோ சார், நாளைக்கு நான் வாழ வேண்டாமா?”

“அப்படீன்னா?”

“சரியாப் போச்சு போங்க. ஆக்‌ஷன் பாபுவைப் பகைச்சிக்கிட்டு குடும்பத்தையும், கடையையும் நடத்தமுடியுமா? யாரோ அவருக்குத் தெரியாத பொண்ணத் திருப்பி அனுப்பினதுக்கே என் கதவு போச்சு” என்று புலம்பியபடியே அவன் உடைத்த கதவை எடுத்தான்.

நான் அப்படியே அதிர்ந்து போனேன். பகல் முழுவதும் நான் சண்டையிட்டது இந்த ஆக்‌ஷன் பாபுவின் பிரதிபிம்பத்தோடுதான். சினிமாவில் வேடமிட்ட சாயலின்  உருவத்தைத் தான் நான் இப்போது பார்த்தேன்.

இரவில் தனியாக ஒரு பெண்ணை உடல் வலுவுள்ள ஒரு ஆள் வழிமறித்துச் சண்டையிடுவதைப் பார்த்த பின்பும் பேசாமல், வண்டியை நிறுத்தாமல், போன நல்லவனாகிய, படிப்பும், அறிவும், சுயசிந்தனையுமுள்ள நானெங்கே? வண்டியை பஞ்சர் ஒட்டி, அப்பெண்ணைப் பத்திரமாக வீட்டில் சேர்க்க உதவிய எழுத்தறிவற்றவனும் ரவுடியுமான, ஆக்‌ஷன் பாபு எங்கே?

யதார்த்த வாழ்வில் வில்லன் யார்? ஹீரோ யார்?

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...