பிள்ளையின் கனவுகளுக்கு அவை ஓர் தடையாக இருக்கக்கூடாது

பிள்ளையின் கனவுகளுக்கு அவை ஓர் தடையாக இருக்கக்கூடாது

Published on

வினோத்

நெற்றியில் வீபூதி  எண்ணெய் வைத்து வகுடெடுத்து வாரிச்சீவப்படாத தலைமுடி, அமைதியான குழந்தைமுகம் – எளிமையான  உடை  பெருஞ்சாதனைகளுக்கும் பின்னரும்  மிகச்சிறிய புன்னகையை வெளிப்படுத்தும் சிறுவன் பிரக்ஞானந்தா.

தமிழ் நாட்டை, சென்னையைச் சேர்ந்த இந்த சிறுவன்தான் உலகிலேயே இரண்டாவது இளவயது கிராண்ட்மாஸ்டர் எனும் சிறப்பை பெற்றவர்.

ஏர்திங்ஸ் மாஸ்டர் எனப்படும் செஸ் தொடர் காணொலி காட்சி மூலம் நடைபெற்று வருகிறது. இதில் சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா மற்றும் உலகின் நம்.1 வீரரான கார்ல்சனும் மோதினர். கருப்பு நிற காய்களை வைத்து விளையாடிய பிரக்ஞானந்தா 39 நகர்வுகளில் வெற்றியை பெற்றார். அனைத்து வகையான செஸ் வடிவங்களிலும் கார்ல்சனை பிரக்ஞானந்தா வீழ்த்துவது இதுவே முதல்முறையாகும்.

16 வயதாகும் பிரக்ஞானந்தா சென்னையை சேர்ந்தவர். நடுத்தரக் குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ரமேஷ், சென்னையிலுள்ள கொரட்டூரில் கூட்டுறவு வங்கி கிளையொன்றின் மேலாளராக பணிபுரிகிறார். போலியோவால் பாதிக்கப்பட்டவர். அவரின் மருத்துவ செலவுகள், குடும்பச் செலவுகள் என இக்கட்டான சூழலில் இருந்த போதும் பிரக்ஞானந்தா தனது செஸ் விளையாட்டை கைவிடவில்லை.

செஸ் விளையாட்டுக்கும் ரமேஷ்பாபுவுக்கும் எந்த சம்பந்தமுமில்லை. பின் எப்படி  இவர்  மகன்  கிராண்ட் மாஸ்டர் ஆனார்?

"எனது மகள் வைஷாலியை செஸ் வகுப்பில் சேர்த்துவிட்டிருந்தேன். அவள் நன்றாக விளையாடினாள். தன் சகோதரி வைஷாலி செஸ் போட்டியில் கலக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்து  அக்காவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகதான் பிரக்ஞானந்தா முதன்முதலில் செஸ் விளையாட தொடங்கியுள்ளார்.

"செஸ் விளையாட்டு போட்டிகளில் பெரிய நிலைக்குச் செல்ல வேண்டுமென்றால் நெடுந்தூரம் பயணம் செய்ய வேண்டும். குடும்ப சூழ்நிலை பொருளாதார சூழ்நிலை எல்லாம் கருத்தில் கொண்டு எனது குழந்தைகளை அதிகமாக  செஸ் விளையாட்டில் ஈடுபடுத்தக்கூடாது" என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் நான்கு வயது இருக்கும்போதே அக்காவுடன் செஸ் போர்டில் நிறைய நேரத்தை செலவிட்டார் பிரக்ஞானந்தா. "தன் வயது சிறுவர்களுடன் நேரத்தை செலவிடாமல் 64 கட்டங்களின் மேல் என் மகன் கொண்டிருந்த காதல் எனது எண்ணத்தை மாற்றியது" என்கிறார் ரமேஷ் பாபு.

"போலியோவால் பாதிக்கப்பட்டதால் என்னால் பெரிய பயணங்கள் செல்ல முடியாது. எனது மனைவி நாகலட்சுமிதான் அயல்நாடுகளுக்கு எனது பிள்ளைகளை அழைத்துச் செல்வார். செஸ் விளையாட்டில் இருவரும் உள்ளூரில் நன்றாக விளையாடியதால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று அங்கேயும் வெற்றியை குவித்து இந்திய அரசின் உதவி மற்றும் செஸ் அகாடமியின் ஏற்பாடுகளில் ஆசிய அளவிலான செஸ் டோர்னமெண்ட் விளையாட்டில் பங்கேற்றனர். எனது மகன் தனது திறமையிலேயே நிதி உதவியோடு அயல்நாடுகளில் போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பு பெற்றாலும் மகனுடன் செல்லும் எனது மனைவியின் பயண செலவுகள் உள்ளிட்டவற்றை நான் பார்த்துக்கொண்டேன். தொடக்க காலகட்டங்களில் பொருளாதார ரீதியாக சிரமமாக இருந்தாலும் வருங்கால வைப்பு நிதி உள்ளிட்டவற்றில் கடன் பெற்று சமாளித்தோம். பிள்ளையின் கனவுகளுக்கு அவை ஓர் தடையாக இருக்கக்கூடாது என எண்ணினேன்" எனச் சொல்கிறார் ரமேஷ்.

விஸ்வநாதன் ஆனந்தைத் தொடர்ந்து  அடுத்த உலக செஸ் சாம்பியன் தமிழ் நாட்டிலிருந்து உருவாகிறார். கல்கி வாசகர்கள் சார்பில் அவருக்கு நமது வாழ்த்துகள்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com