இப்படியெல்லாம் கூட கவிதை செய்ய முடியுமா?

இப்படியெல்லாம் கூட கவிதை செய்ய முடியுமா?
Published on

உலகக் குடிமகன் – 11

– நா.கண்ணன்

துரை காமராசர் பல்கலைக் கழகம், நாகமலைஅடிவாரத்தில் அமைந்திருந்தது. அமெரிக்கன் கல்லூரி வளாகம் அழகு, தொன்மை நிரம்பியது என்றாலும், மதுரைப் பல்கலைக் கழகம் மிக விஸ்தாரமாக, பரந்து கிடந்தது. நாகமலை மிக அழகிய பின்னணியை அதற்குத் தந்தது. அப்போது நான் மதுரை ஆத்திகுளம் பகுதியில் அக்காவோடு வசித்து வந்தேன். அங்கிருந்து தினம் நாகமலை புதுக்கோட்டைக்கு ரயிலில் பயணிப்பேன்.

இந்த இரயில்தான் பாரதிராஜாவின் "கிழக்கே போகும் ரயில்".  இரயிலிருந்து பார்த்தாலே பல்கலைக் கழகமும், நாகமலையும் மிக அழகாகத் தோற்றமளிக்கும். அந்த ரயில் பயணம் மிகவும் இனிமையானது. வெறும் அரைமணி நேரப் பயணம்தான் என்றாலும் அது என் தமிழ் வளர்ச்சிக்கு உதவியது. நான் தமிழ் இலக்கிய இதழான 'கணையாழி'யில் எழுதத் தொடங்கியிருந்தேன். என் கவிதைகள் வெளிவரத் தொடங்கிய சமயம்! ஆனால், தீவிர இலக்கிய பரப்பைக் காட்டியது இந்த இரயில் பயணமே. அப்போதுதான் சு.வெங்கட்ராமன் தமிழ்த் துறையில் சேர்ந்திருந்தார் (பின் பேராசிரியராகி, இப்போது ஓய்வு பெற்றுவிட்டார்).

அவர் அழகிய மணவாள நாயனார் எழுதிய "ஆசார்ய ஹிருதயம்" பற்றிச் சொல்லுவார். அதுவொரு மணிப்பிரவாள நூல். மணியான தமிழும், பவளம் போன்ற செங்கிருதமும் (சமஸ்கிருதம்) கலந்த உரைநடை. அதுவொரு இலக்கிய வகை எனவும், அதன் அருமை பெருமை பற்றியும் சொல்லுவார். வைணவத்தின் இலக்கியப் பக்கம் முதன் முறையாக எனக்கு அறிமுகமாகும் தருணம்.

பிள்ளைத் தமிழின் பிதாமகர் பெரியாழ்வார் பற்றி அவர்தான் எனக்கு முதலில் சொல்லித்தந்தார். அப்போதுதான் அவருக்கு பிள்ளை பிறந்திருந்தான். எனவே பெரியாழ்வாரை அவர் மிகவும் சிலாகித்துப் பேசிக் கொண்டிருந்தார்.

வட்டு நடுவே வளர்கின்ற மாணிக்க
மொட்டு நுனையின் முளைக்கின்ற முத்தே போல்
சொட்டுச் சொட்டு என்னத் துளிக்கத் துளிக்க என்
குட்டன் வந்து என்னைப் புறம் புல்குவான்
கோவிந்தன் வந்து என்னைப் புறம் புல்குவான்

எனும் பாடலின் இலக்கிய அழகை எனக்கு விவரித்தார். பெரியாழ்வார் யசோதையாக உட்கார்ந்து இருக்கிறார். யசோதை எதிர்பாராத நேரத்தில் கண்ணன் பின்புறமாக வந்து அணைத்துக் கொள்கிறான். அப்போதுதான் சிறுநீர் கழித்து அதன் சொட்டு கீழே விழாமல் ஒட்டியிருக்கும் தருவாயில் புறம் புல்கும் போது அது அவள் முதுகில் பட்டு மெய்சிலிர்ப்பதாக பெரியாழ்வார் தன் பிள்ளைத் தமிழில் எழுதுகிறார். வெங்கட்ராமன் இக்காட்சியை மெய்சிலிர்த்து விவரித்துக் கொண்டிருந்தார். தமிழ் இலக்கியத்தின் அழகியல் பற்றி எனக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். எனக்கு அதிசயமாக இருந்தது, இப்படியெல்லாம் கூட கவிதை செய்ய முடியுமா? என்று.

உண்மையிலேயே 'யசோதா' என்ற பெயர் கொண்ட ஒரு பெண் எங்களோடு பயணிப்பார். அவர் பேராசிரியர் ஜெ.ஜெயராமனின் செயலாளர். அவர் என்னோடு நட்போடு பழகுவார். அவர்தான் எனக்கு தி.ஜானகிராமன் எனும் இலக்கிய சிகரத்தை அறிமுகப்படுத்தியது. அறிவியல் மாணவனான எனக்கு இப்படியொரு அழகிய இலக்கிய உலகம் இருப்பது அப்போதுதான் தெரிந்தது. அறிவியல் மாணவர்களுக்கு ஒரு திமிர் இருக்கும். உலகம் அறிவியலால் செயல்படுவதால் தாங்கள் மேன்மக்கள் எனும் திமிர். ஆனால் யசோதா காண்பித்த உலகம் மிகவும் மென்மையான உலகம். மாந்திரீக உலகம். லா.ச.ராவையும் அறிமுகப்படுத்தியது யசோதாவே. லா.ச.ரா தமிழ்த்துறையில் வந்து பேசினார். பல மாணவர்கள் அவரது நூல் தரும் நயம் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தனர்.

இப்படி மதுரை நாகமலை புதுக்கோட்டை இரயில் பயணம் மறக்க முடியாத ஒரு நினைவுப் பயணமாக அமைந்திருந்தது. இரயிலிருந்து இறங்கி உயிரியல் துறை சென்றால் அதுவொரு மேற்குலகமாக இருந்தது. எல்லோரும் ஆங்கிலத்தில் பேசிக்கொண்டு அமெரிக்கக் கனவுகளோடு உலாவிக் கொண்டிருந்தனர். கிராமப் பின்னணியில் வந்திருந்த எனக்கு குந்தளா ஜெயராமன் மிக வித்தியாசமான பெண்மணியாகக் காட்சியளித்தார். அவர் சேலை கட்டுவது என்றாவது அதிசயமாக நடக்கும். மற்ற நேரங்களில் எல்லாம் அவர் ஆண் மகன் போல் பேண்ட், ஷர்ட்டோடுதான் இருப்பார். அவர் பேசும் தோரணையிலும் ஆண்மை நிரம்பி இருக்கும்.

நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச்செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்

எனும் பாரதியின் புதுமைப் பெண்ணாக அவர் தோற்றமளித்தார். இன்று பேசும் பெண்ணியம் எழுபதுகளில் நடமாடிக்கொண்டிருந்தது. அவர் வந்தால் எல்லோருக்கும் ஓர் டெரரர். எப்போதும் அதட்டி, சத்தம் போட்டுத்தான் பேசுவார். "நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்" எனும் பாரதி சொல்லை நிஜமாக்கிக் கொண்டிருந்தார் கே.ஜே என அழைக்கப்பட்ட குந்தளா ஜெயராமன். அவரது நாணமற்ற இப்போக்கு அங்குள்ள ஆண்களுக்கு பெருத்த சவாலாக இருந்தது. ஒரு பெண் இப்படி ஆண் போல் நடந்து கொள்ளலாமா? என்பது இலை மறை காய் மறையாக உயிரியல் துறையில் உலாவிய கேள்வி. இது கே.ஜேக்கும் தெரியும். எனினும் அவர் இந்த ஆணுலுகிற்கு ஒரு சிம்ம சொப்பனமாக இருக்கவே விரும்பினார். நிர்வாகத் துறை என்பது முழுக்க முழுக்க ஆணாதிக்கமுள்ள பிரிவு. அங்கு இவர் சென்றால் பிரச்சனைதான். ஆனால், துறைக்கு வரும் நிதி, அதன் கணக்கு வழக்குகள், மாணவர்களின் பட்டப்படிப்பு சான்றிதழ் விவகாரங்களெல்லாம் நிர்வாகத்திடம் இருந்தது. எனவே எத்தனை பட்டம் பதவி என்றிருந்தாலும் நிர்வாகம் தன் பலத்தை விட்டுக் கொடுப்பதாக இல்லை. இதனால் எப்போதும் கல்வித் துறைக்கும், நிர்வாகத்திற்கும் ஓர் பனிப்போர் மறைவாக நடந்து கொண்டே இருந்தது. இதில் எவ்வகையிலும் வளைந்து கொடுக்காத போக்கு கே.ஜேயினுடையது.

இவரிடம்தான் நான் தஞ்சம் புகுந்தேன். என்ன தைர்யம் எனத் தெரியவில்லை. அமெரிக்கன் கல்லூரியில் ஆய்வுகள் செய்திருந்தாலும், அந்த ஆய்வு முடிவுகளை எங்கும் வெளியிடவில்லை. அந்தப் பழக்கமெல்லாம் அப்போது தெரியாது. நல்லாய்வுகள் உலகலளவில் அறியப்பட வேண்டும் எனும் பாடம் எனக்குப் பின்னால் உயிரியல் துறையிலிருந்துதான் கிடைக்கிறது. "வெளியிடு அல்லது வெந்து சாகு!" எனும் கடும் வசனம் தாரக மந்திரமாக எனக்கு அங்கிருந்துதான் கிடைக்கிறது. ஆனால் நான் கேஜேயைப் பார்க்கும் போது என்னிடமிருந்தது ஹிந்து நாளிதழில் சூழலியல் குறித்து, குறிப்பாக பூச்சிகொல்லி பயன்பாட்டைக் குறித்து நான் எழுதிய கடிதம் ஒன்றுதான். அவர் என் ஆய்வுப் புலம் பற்றிய அக்கறையை முதலில் அறிந்து கொண்டார். பின் அவர் செய்யும் ஆய்வோடு என் ஆர்வத்தின் ஒவ்வாமையை சுட்டிக் காட்டினார். ஆயினும், பால் வடியும் என் முகத்தைப் பார்த்து வெறுமே அனுப்ப அவருக்கு மனமில்லை. சரி வா! உயிர்வேதியியல் துறை பேராசிரியர் ஜெ.ஜெயிடம் பேசுவோம் எனக் கையோடு அழைத்துப் போய் ஜெ.ஜெ அறைக்குச் சென்றார். ஜெ.ஜெ எப்போதும் சிகரெட்டும் கையுமாக இருப்பவர். எப்போதும் ஒரு பதட்டம் தெரியும். கெ.ஜேயே அழைத்து வந்திருப்பதால் அவரால் வேண்டாம் எனச் சொல்ல முடியவில்லை.

பல பூச்சிகொல்லி கம்பெனிகள் அவரை சமீபத்தில் அணுகியதாகவும், அவர்கள் கோரும் ஆய்வை என்னால் செய்யமுடியுமா? எனக் கேட்டார். எனக்கு பூச்சி கொல்லிகளின் சூழலியல் தாக்கம் விருப்பமான ஆய்வு என்பதால் உடனே சரி என்று சொல்லிவிட்டேன். அன்றிலிருந்து தினம் நடையோ நடை என பல்கலைக் கழகம் செல்ல ஆரம்பித்தேன். இதில் என் துரதிர்ஷ்டம் என்னவென்றால் கெ.ஜேக்கோ, ஜெ.ஜேக்கோ இந்த ஆய்வில் எந்த நாட்டமோ, பின்புலமோ இல்லை என்பது. ஆரம்பத்திலிருந்து நானே எனக்கு ஆசானாக இருந்து என் ஆய்வைச் செய்ய வேண்டுமென்ற சூழல். சவாலே, சமாளி! எனும் மனோநிலையில் நானிருந்தேன். "பெரிதினும் பெரிது கேள்" என பாரதி வாக்குப்படி என் நோக்கு அமெரிக்கா எனத் தீர்மானமாகிவிட்டது. எனவே தமிழகத்தில் வேலை வாய்ப்பு வழங்கும் அலுவலகம் நோக்கியோ, ஹிந்து பேப்பரில் வேலைக்கான விளம்பரம் நோக்கியோ என் மனது செல்லவில்லை. அமெரிக்கன் கல்லூரிக்கும் திரும்ப முடியாது. எனவே 'வாக்கப்பட்ட' இடத்தில் என்ன கஷ்டம் இருந்தாலும் சமாளிக்கும் ஓர் தமிழ் மனைவியின் மனோ நிலையில் அன்று நான் இருந்தேன்!

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com