தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் செய்தல் ஆகிய மூன்றும் ஒன்றாகிவிடும்

தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் செய்தல் ஆகிய மூன்றும் ஒன்றாகிவிடும்
Published on

உத்தவ கீதை -11

டி.வி. ராதாகிருஷ்ணன்

தாமரை மலர் போன்ற கண்களையுடைய கிருஷ்ணனே! முக்தி அடைய விரும்புவோர், எப்படி… எந்த நிலையில் உன்னை மனதில் தியானம் செய்ய வேண்டும் என்று கூறுங்கள் என்று உத்தவர் கேட்க … கண்ணன் சொல்லலானார்.

அதிக உயரமும், அதிக பள்ளமும் இல்லாத சற்று உயர்ந்த ஆசனத்தில் அமர்ந்து, இரண்டு கைகளின் உட்பக்கம் வெளியே விரித்து, தொடைகளின் மீது வைத்திருந்து, கண்ணின் பார்வையை மூக்கின் நுனியில் நிறுத்தி, இந்திரியங்களின் செயல்களைக் கட்டுப்படுத்தி, மனத்தை ஒருமுகப்படுத்தி, மூச்சை சுத்தப்படுத்த வேண்டும். பூரகம் (மூச்சை உள்ளே இழுத்தல்), ரேசகம் (மூச்சை வெளியே விடுதல்), கும்பகம் (மூச்சை உள்ளே நிறுத்துதல்) மூலம் சுவாசித்தலை நேர்மைக்குக் கொண்டு வரவேண்டும். முதலில் இடது மூக்கின் வழியாகவும், பின்பு, வலது மூக்கின் வழியாகவும் மூச்சுப் பயிற்ச்சி  செய்ய வேண்டும்.

பின் "ஓம்" என்ற பிரணவ சப்தத்தை ஒலிக்க வேண்டும். அந்த சப்தம் மூலாதாரத்திலிருந்து உச்சிவரை தாமரைத் தண்டுபோல் தொடர்ந்திருக்க வேண்டும். அப்பொழுது மூக்கில் ஏற்படும் ஒலி, மணியின் ஓசைபோல தொடர்ந்து காணப்படும்.

இந்த பிராணாயாம முறையை மூன்று காலங்களிலும் (காலை, மதியம், மாலை) ஒவ்வொரு  தடவையும் பத்து முறை செய்ய வேண்டும். இந்த முறையால் ஒரு மாத காலத்திற்குள் மூச்சைக் கட்டுப்படுத்த முடியும்.

இருதயத்தை தனது உடலில் ஒரு தாமரை மொட்டாகக் கருதி,அது கீழ் நோக்கி இருப்பதாகவும், காம்பு மேல் நோக்கி இருப்பதாகவும் , அதன் எட்டு இதழ்கள் கீழ் நோக்கி விரிந்திருப்பதாகவும், பின்பு, தியானத்தின் போது அது மேல் நோக்கி திரும்புவதாகவும் நினைத்து, சூரியன், சந்திரன் , அக்னி ஆகியவற்றை நினைத்து… அதன் நடுவில் என்னை (என் உருவத்தை) தியானிக்க வேண்டும்.

அழகான வசீகரமான முகம், நான்கு கைகள், அழகிய கழுத்து, கன்னங்கள், மந்தகாச சிரிப்பு, ஆபரணங்கள், காதணிகள், தங்க மயமான ஆடை, கருமை நிறம், ஸ்ரீவத்சம், மார்பில் லக்ஷ்மி. சங்கு… சக்கரம்… கதை, தாமரை, காலில் கொலுசு, தலையில் கௌதுபா எனும் ரத்தினக்கல் ஆபரணங்கள் ஆகிய எனது உருவத்தை மனதில் தியானிக்க வேண்டும்.

வெளி உலகிலிருந்து எண்ணங்களை மீட்டு, என்னை நினைத்துத் தியானிக்க வேண்டும். என்னை தியானிப்பதால் நீ என்னையே அடைவாய். என்னிடம் கலந்து விடுவாய். தியானிப்பவன், தியானிக்கப்படும் பொருள், தியானம் செய்தல் ஆகிய மூன்றும் ஒன்றாகிவிடும்.

யோகத்தால் ஏற்படும் சித்திகள்

கிருஷ்ணன் மேலும் சொன்னார்…

இந்திரியங்களையும், பிராணனையும் கட்டுப்படுத்தி மனத்தை என்மீது செலுத்துபவர்களுக்குப் பல சித்திகள் கைகூடும்.

இப்போது உத்தவர் கேட்டார்… "கண்ணா… என்ன சித்திகள் கைகூடும்? அவைகள் எவ்வகைப் படும்? எல்லா சித்திகளையும் அளிக்க வல்லவரே! எனக்கு விவரித்துச் சொல்லுங்கள்

கிருஷ்ணன் சொல்லலானார்…

யோகத்தில் சிறந்தவர்களுக்குக் கிடைக்கும் சித்திகள் பதினெட்டாகும். அதில் எட்டு வகைகள் என்னைச் சார்ந்தவை. மற்ற பத்து வகைகள் சத்துவ குணமேலீட்டால் ஏற்பட்டவை.

  1. அணிமா – மிகச் சிறிதாதல்
  2. மகிமா – மிகப் பெரிதாதல்
  3. லகிமா-மிகவும் எளிதாதல்- இவைகள் உடல் சம்பந்தமானவை
  4. பிராப்தி- உலகை அறிதல்
  5. பிராகாமியம் – எல்லாவற்றிலும் கலந்திருத்தல்
  6. ஈசத்துவம்
  7. வசித்துவம்
  8. காம வாசயிடா

(பதஞ்சலியின் யோக சூத்திரத்தில் இவை நன்றாக விவரிக்கப்படுகின்றன.)

இவைகள் முக்கியமான அஷ்டமாசித்திகள் ஆகும்.

இனி உடல் சம்பந்தமான சித்திகள் விளக்கப்படுகின்றன.

பசியிலிருந்தும், தாகத்திலிருந்தும் விடுபடுதல்.

வயோதிகத்தைத் தவிர்த்தல்

எங்கேயிருப்பதையும் பார்க்கும் திறன்

எல்லாவற்றையும் கேட்டல்

எங்கும் செல்லும் திறன்

விரும்பிய உருவத்தை எடுக்கும் திறன்

தன் உடலை விட்டுப் பிற உடலில் புகும் திறன்

நினைத்தபோது உயிரை விடும் திறன்

கந்தர்வர்கள், அப்சரஸ் போன்றவர்களுடன் சேர்ந்து விளையாடுதல்

ஆசைப்பட்ட பொருள்களை அடைதல்

தனது ஆணைகளை நிறைவேற்றுதல்

பிறரை வசியப்படுத்துதல்…..

போன்றவையாகும்…

மேலும் சாதாரண சித்திகளான முக்காலம் அறிதல், விருப்பு, வெறுப்புகளிலிருந்து  விடுபடுதல், மற்றவர்களின் எண்ணங்களை அறிதல், நெருப்பு, சூரியன், நீர், விஷம் போன்றவற்றைக் கட்டுப்படுத்துதல், மற்றவர்களால் கட்டுப்படாமலிருத்தல் ஆகியவைகளாகும்.

என்னை, எந்த விதத்தில் தியானிக்கிறார்களோ, அந்த விதத்தில் அவர்களுக்கு நான் சித்திகளை அளிக்கிறேன்.

உதாரணமாக, என்னை விஷ்ணுவாக தியானிப்பவர் எல்லா உயிர்களையும் பரிபாலிக்கும் சித்தியினைப் பெறுவார்கள்.

என்னைப் பகவான் நாராயணனாகத் தியானிப்பவர், தன்னைக் கட்டுப் படுத்தும் சித்தியைப் பெறுவர்.

என்னை தியானித்து,என்னில் ஒன்றியவர், நெருப்பாலும்,நீராலும் அழிக்கப்படமாட்டார்கள்.

என்னுடைய ஆபரணங்களிலும் அயுதங்களிலும் தியானம் செய்பவர் தோல்வியைத் தழுவ மாட்டார்கள்.

மனதாலும், இந்திரியங்களாலும், உடல்,நரம்பு போன்றவற்றால் என்னை தியானிப்பவர்கள் அடைய வேண்டிய சித்திகளையும் அடைவர்.

ஆனால், முற்றிலுமாக என்னை அடைய விரும்புகிறவர்களுக்கு இந்தச் சித்திகள் தடையாய் இருக்கும்.

இந்தச் சித்திகளை, பிறப்பாலும், மருந்துகளாலும்,தவம் செய்வதாலும்,மந்திரங்களை ஜெபிப்பதாலும் அடைய முடியும்.ஆனால்..என்னை முழுமையாக அடைவது யோகத்தின் மூலமேயாகும்.

அந்தச் சித்திகளின் தலைவன் நான்.அதற்குக் காரணமாவதும், அதை அளிப்பவனும் நானே! பிரம்மத்தை உபதேசிப்பவனும் நானே!

எல்லா உயிர்களிலும் கலந்திருக்கும் ஆன்மா நானே.உலகில் உள்ளும்..புறமுமாகக் கலந்து நிற்பவன் நானே!.படைக்கப்பட்ட எல்லாவற்றுக்கும் காரணமான பஞ்சபூதம் நானே!…எல்லாம் நானே!

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com