0,00 INR

No products in the cart.

தேவ மனோகரி – 7

                                                       ஓவியம் : தெய்வா     

பாரதி

ணிகண்டனுக்கு பாண்டிச்சேரி வரை போகவேண்டுமாம். அவனுடைய ஆய்வுக்காக சில புத்தகங்களை தேடிக் கொண்டிருந்தான். பாண்டிச்சேரி பல்கலைக்கழக நூலகத்தில் அவை கிடைக்கக்கூடும் என்று அவனுடைய கைடு கணேசமூர்த்தி சார் சொன்னாராம்.

இனியாவையும் மாரிமுத்துவையும் உதவிக்கு அழைத்தான் மணிகண்டன். முக்கியமாக இனியாவின் உதவி அவனுக்கு அவசியமாக இருந்தது. அவளால் சுறுசுறுப்பாக எந்த நூலகத்திலும் புத்தகங்களை கண்டுபிடித்துவிட முடியும்.

காலை பத்து மணிக்கெல்லாம் பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்திற்கு வந்து சேர்ந்தார்கள்.

“நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? கல்லூரியின் அடையாள அட்டை இருக்கிறதா?” என்று பல கேள்விகள். தயாராகத்தான் வந்திருந்தார்கள். கணேசமூர்த்தி கடிதம் கொடுத்திருந்தார்.

“எதற்கும் நீங்கள் டாக்டர் சிவநேசனைப் பார்த்து விடுங்கள். அவர்தான் இங்கே லைப்ரரி இன்சார்ஜ். அவரைக் கேட்காமல் அனுமதிக்க முடியாது” என்றார் தலைமை நூலகர்.

டாக்டர் சிவநேசனைத் தேடிக்கொண்டு இவர்கள் போனபோது அவர் வகுப்பில் இருந்தார். வெளியில் வராந்தாவில் காத்திருந்தார்கள்.

பத்து நிமிடம் கேட்டுக் கொண்டிருந்ததில் இனியாவுக்கு சூழ்நிலையே மறந்து போனது. என்ன ஒரு ஆங்கிலப் புலமை! ஷேக்ஸ்பியரே மறுபிறவி எடுத்து தன் புலமையை வெளிப்படுத்துவது போல் அல்லவோ இருக்கிறது!

மேலைநாட்டில் படித்தவரோ! வார்த்தைகளின் ஏற்ற இறக்கம் இந்திய ஆங்கிலமாக இல்லையே! உள்ளே போய் உட்கார்ந்து கேட்க முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!

அடுத்த அரைமணிக்கெல்லாம் அந்த மந்திரக் குரல் நின்று போனது. அவர் வெளியில் வந்தபோது மூவரும் வணக்கம் சொன்னார்கள்.

மணிகண்டன் தாங்கள் வந்திருக்கும் நோக்கத்தை அவரிடம் சொல்லிக் கொண்டிருந்தபோது இனியா அவரையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர் நல்ல உயரம். தீர்க்கமான முகம். பரந்த நெற்றி. தலைமுடியை அவ்வப்போது வெட்டும் வழக்கம் இல்லை போலிருக்கிறது. வளர்ந்து காதோரமும் கழுத்திலும் கொஞ்சம் சுருண்டு நின்றது.

“எத்தனை நாள் இங்கே தங்கி புத்தகங்களை ரெஃபர் பண்ணப் போறீங்க?”

“இன்றைக்கு ஒருநாள் தான் சார். வேலை முடியலைனா நான் மட்டும் மறுபடியும் வருவேன்” என்றான் மணிகண்டன்.

“நீங்கள் சாப்பிடுகிற ஃபாஸ்ட் புட் மாதிரி ஆயிடுச்சில்ல உங்க ஆராய்ச்சி? ஒருநாள்ல புத்தகங்களைப் படிச்சு உருப்பட்ட மாதிரிதான்” என்று எரிச்சலுடன் சொன்னார் டாக்டர் சிவநேசன்.

“உங்கள் கைடு யாரு?”

“புரொபஸர் கணேசமூர்த்தி.  அவர் துறைத்தலைவரும் கூட” என்று பெருமையாகச் சொன்னான் மணிகண்டன்.

“என்னுடைய கைடு மனோகரி மேடம்” என்றாள் இனியா.

இவருக்கு தங்கள் துறையில் யாரைத் தெரிந்திருக்கப் போகிறது. எதற்காக இதையெல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறார் என்பது போல் அலட்சியமாக நின்று கொண்டிருந்தான் மாரிமுத்து.

ஒருவழியாக அவருடைய அனுமதியை வாங்கிக் கொண்டு லைப்ரரிக்கு வந்தார்கள். மணிகண்டன் எதிர்பார்த்ததுபோல் இனியா மளமளவென்று மூன்று புத்தகங்களை கண்டுபிடித்தாள். ஆளுக்கு ஒன்றாய் வாசித்து குறிப்பெடுத்தார்கள். மாலை வரை வேலை நீண்டது.

மாலையில் இவர்கள் நூலகத்திலிருந்து புறப்படும்போது எதிரில் வந்து கொண்டிருந்தார் சிவநேசன்.

“என்னப்பா,  உங்க ரிசர்ச்செல்லாம் முடிஞ்சு போச்சா? சென்னைக்குக் கிளம்பறீங்களா?” என்று எள்ளல் தொனிக்க கேட்டுவிட்டு இவர்களைக் கடந்து போனார்.

பத்தடி போன பிறகு சட்டென்று நின்று இவர்களைத் திரும்பிப் பார்த்தார்.

“ஒரு நிமிஷம். உங்க கைடு பேரு மனோகரின்னு தானேம்மா சொன்னே? அவங்க பேரு மனோகரியா இல்ல தேவமனோகரியா?”

“டாக்டர் தேவமனோகரி”

“ஹும்….. பேரைக் கேட்டால் ஒழுங்கா சொல்லணும். இப்படிச் செல்லப் பேரெல்லாம் சொல்லக்கூடாது” என்று உறுமிவிட்டு சிங்கம் போல் அகன்றார் சிவநேசன்.

“நல்ல காலம். இவரெல்லாம் நமக்கு கைடு இல்லை. தப்பிச்சோம்” என்றான் மாரிமுத்து.

“நம்ம காலேஜ் பேரைச் சொன்னதும் எவ்வளவு அலட்சியமாப் பார்த்தாரு.  கவனிச்சே இல்லே?”

உண்மைதான். இனியாவும் கவனித்தாள். ஆனாலும் அவளுக்கு அவரைப் பிடித்திருந்தது. அடுத்த முறை மணிகண்டன் வரும்போது நிச்சயமாக இங்கே வர வேண்டும். அவருடைய அனுமதியுடன் வகுப்பில் உட்கார்ந்து பாடம் கேட்க வேண்டும் என்று ஏனோ அவளுக்கு தோன்றியது.

றுநாள் டிபார்ட்மெண்டில் மனோகரி மேடத்தைப் பார்த்து தங்கள் பாண்டிச்சேரி அனுபவத்தைச் சொன்னாள் இனியா.

“யார் அந்த புரொபஸர்? பேர் என்ன சொன்னே? சிவசாமியா?”

“டாக்டர் சிவநேசன். அவருக்கு உங்களைத் தெரிந்திருக்கிறது மேடம்” என்றாள் இனியா.

மனோகரிக்கு ஆய்வுத் துறையில் அப்படி ஒருவரையும் நினைவில் இல்லை. யாராக இருக்கும்? என்னை எப்படி தெரிந்து வைத்திருக்கிறார்? கேள்விகளை வலிய உதறிவிட்டு வகுப்புக்குப் போனாள்.

தத்துவப் படிப்பு என்பது எல்லா படிப்புகளுக்கும் சிகரம் வைத்தது போல் என்று தீவிரமாக நம்பினாள் மனோகரி. இலக்கியம்,  பொருளாதாரம், வரலாறு என்று எந்தத் துறையில் படித்தாலும் அதிலே கோலோச்சும் தத்துவத்தை எவரும் தவிர்க்க முடியாது. அவ்வளவு ஏன்? வாழ்க்கையோடு இழைந்து வரக்கூடியதாகவும் தத்துவம்தானே இருக்கிறது?

ஒரு சமயம் ஆங்கிலத் துறை சிநேகிதி லீலாவதி இவளிடம் விவாதம் செய்தாள். இலக்கியத்தைப் போல் மனிதர்களை மேம்படுத்தக்கூடியது வேறெதுவும் கிடையாது என்று வாதிட்டாள்.

“உண்மைதான் லீலா. இலக்கியம் மனிதர்களை மேம்படுத்துகிறது. அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் தத்துவம் அதே மனிதர்களை எப்போதும் வழிநடத்துகிறது. அந்த வகையில் அதன் பங்கு ஒரு படி அதிகம்தான். நான் ஃபிலாஸஃபி டீச் பண்ணுவதால் இதைச் சொல்லவில்லை”

ஆனால் இன்றைக்கு இந்தப் படிப்பு யாருக்கும் வேண்டியிருக்கவில்லை. வேறு எந்தத் துறையிலும் இடம் கிடைக்காத மாணவர்கள்தான் கடைசிபட்சமாக இந்தத் துறைக்குத் தள்ளப்படுகிறார்கள். இதுதான் யதார்த்தம்.

இனியாகூட அடிக்கடி வருத்தப்படுவாள். “எவ்வளவு நல்ல சப்ஜெக்ட் மேடம். ஆனால் வெளியில சொன்னால் யாருமே மதிக்க மாட்டேங்கிறாங்க. பி.காம்.னு சொன்னாதான் இங்கே மரியாதை.”

ஒவ்வொரு வருஷமும் பி.காம். சீட்டுக்கு கூட்டம் முட்டி மோதுகிறது. கல்வி என்பதே பிழைப்புக்காக என்று ஆன பிறகு எதில் வேலைவாய்ப்பு இருக்கிறதோ,  அதை நோக்கிதானே மாணவர்கள் ஓட வேண்டியிருக்கிறது! அவர்களை குறை சொல்லி என்ன லாபம்?

வகுப்பிலிருந்து மனோகரி வெளியில் வந்தபோது வராந்தாவில் எம்.ஃபில் மாணவி நிர்மலா காத்திருந்தாள். அவள் முகத்தில் கலவரம் படர்ந்திருந்தது. அக்கம் பக்கம் பார்த்துவிட்டு மெல்ல இவளருகில் வந்தாள்.

“மேடம்,  உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.”

“என்னம்மா, ஏன் ஒரு மாதிரி இருக்கே?”

“நாளைக்கு எம்.ஃபில் தீஸிஸ் சப்மிட் பண்ணனும் மேடம். ரத்னசாமி சார் கையெழுத்துப் போடமாட்டேன்னு தகராறு பண்றாரு”

“ஏன்? சரியாதானே எழுதியிருக்கே?”

“அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லை மேடம். அவர் ஒய்ஃப் ஊருக்குப் போயிருக்காங்களாம். நீ வீட்டுக்கு வந்து எனக்கு கம்பெனி கொடு. அப்பதான் கையெழுத்து போடுவேன் என்கிறாரு”

தன் எதிரில் இருந்த நிர்மலாவை ஒரு கணம் நிதானமாகப் பார்த்தாள் மனோகரி. பதற்றத்தில் அவள் உடல் மெல்ல நடுங்கிக் கொண்டிருந்தது. ஒல்லியான தேகம். ஆனால் எடுப்பான உடல்வாகு. சாயம் போன ஒரு சல்வார் கமீஸ் அணிந்திருந்தாள். காதில் பிளாஸ்டிக் தோடுகள். கையில் ரப்பர் வளையல்.

இவளுடைய அப்பா ஒரு ஆட்டோ ஓட்டுனர் என்பதாக எப்போதோ சொல்லியிருக்கிறாள். இந்த ஏழைப் பெண்ணை குறிவைத்துத் தாக்கும் ரத்னசாமியை நினைத்து மனோகரிக்குப் பற்றிக் கொண்டு வந்தது.

“இங்கே எதையும் பேச வேண்டாம். நாளைக்குத்தானே நீ கையெழுத்து வாங்க வேண்டும்? பயப்படாமல் போ. நான் பார்த்துக் கொள்கிறேன்”

துறையில் ரத்னசாமி ரொம்ப சீனியர். அரசியல் வட்டாரத்தில் செல்வாக்கு இருப்பதாக இவள் கேள்விப்பட்டிருக்கிறாள். மனோகரியின் மனம் தீவிரமான யோசனையில் ஆழ்ந்தது.

அன்று மாலை இனியாவிடமிருந்து நிர்மலாவின் ஃபோன் நம்பரை வாங்கினாள்.

“நிர்மலா,  நாளைக்கு தீஸிஸை எடுத்துக் கொண்டு கையெழுத்து வாங்க நீ உன் கைடு வீட்டுக்குப் போ. ஆனா தனியா போகாதே. உன் கூட அமுல்ராஜ் வருவான். கூடவே மற்ற மாணவர்களும். எல்லோருமாக சேர்ந்து போங்க.”

“அவங்களெல்லாம் என்கூட எப்படி வருவாங்க மேடம்? எல்லோருமே நாளைக்கு அவங்க அவங்க கைடு கிட்ட கையெழுத்து வாங்கியாகணுமே?”

“உண்மைதான். அவங்க எல்லாரும் டிபார்ட்மெண்டுல கையெழுத்து வாங்கும்போது சேர்ந்துதான் வாங்கப்போறாங்க. நீயும் அவங்களோட இரு. ஒரே ஒரு கைடு வீட்டுலதான் கையெழுத்து போடுவேன்னு சொன்னா எல்லோருமா அவர் வீட்டுக்குப் போங்க. அதுதானே நியாயம்? நான் சொல்றது புரியுதா?”

“புரியுது மேடம்” நிர்மலாவின் குரல் தெளிந்திருந்தது.

றுநாள் ரத்னசாமி லீவு போட்டிருந்தார். எம்.ஃபில் மாணவர்கள் ஏழு பேரும் ஒரு குழுவாக வந்து அவரவர் தீஸிஸில் கையெழுத்து வாங்கிக் கொண்டிருந்தார்கள். டிபார்ட்மெண்ட்டில் கூட்டம் நிரம்பி வழிந்தது.

“என்ன எல்லோரும் இப்படி கூட்டமா வந்திருக்கீங்க?” என்று கேட்டுக் கொண்டிருந்தார் துறைத்தலைவர். நிர்மலா ஓரக்கண்ணால் மனோகரியைப் பார்த்துவிட்டு பார்க்காதது போல் தலை குனிந்து கொண்டாள்.

மதியத்திற்குப் பிறகு மாணவர்கள் ஒரு குழுவாக பஸ் ஏறி புறப்பட்டார்கள். மனோகரிக்கு மதிய உணவு சாப்பிடக் கூட பொருந்தவில்லை. கேன்டீன் வரை நடந்து போய் தேநீரும் பிஸ்கெட்டும் சாப்பிட்டு விட்டு வந்தாள்.

இனியா காலையிலிருந்தே கண்ணில் படவில்லை. ஒருவேளை லைப்ரரியில் இருக்கிறாளோ? இருக்கலாம். தீவிரமாக ஆராய்ச்சியில் மூழ்கி இருக்கிறாள். சீக்கிரம் பி.எச்.டி தீஸிஸை முடித்து விடும் எண்ணம் வந்திருக்கிறது.

அங்கே ரத்னசாமி வீட்டில் என்ன நடக்குமோ? மனோகரிக்கு மனசு படபடத்தது.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

“அட! பேராண்டி! அவரோட மாப்பிள்ளையா நீ?

0
  ஒரு நிருபரின் டைரி - 20 - எஸ். சந்திரமெளலி   ஏ. நடராஜன்   என்னும்  அனுபவப் பொக்கிஷம்  திருச்சி வானொலி நிலையத்தில் திரு. ஏ. நடராஜன் (நண்பர்கள் வட்டாரத்தில் ஏ.என். சார் அல்லது தூர்தர்ஷன்  நடராஜன்)  பணிபுரிந்துகொண்டிருந்த...

தேவ மனோகரி – 20

0
தொடர்கதை                                               ...

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

0
  ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  - 20 மம்முட்டி தமிழில் கே.வி.ஷைலஜா கம்ப்யூட்டர்   படப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு...