0,00 INR

No products in the cart.

மழையால் ஓர் உபயோகம் எனக்கு நடந்திருக்கிறது.

சுஜாதா தேசிகன்                                               

 

சென்ற வாரச் செய்திகள் பெரும்பாலும் ஈரமாகவே இருந்தது. என்னுடைய சென்னை வாசத்தின்போது மழையைக் குறித்த குறிப்புகள் எழுதத் தவறியதில்லை. சில குறிப்புகளை இந்த வாரம் கொடுக்கிறேன்.

பெங்களூரிலிருந்து சென்னை திரும்பியபோது சென்ட்ரல் ஸ்டேஷனில் ஓர் இடத்தில் நீர்வீழ்ச்சி போல ஜலம் கொட்டிக்கொண்டிருந்தது. இதைப் பற்றி எல்லாம் கவலைப்படாமல் மக்கள் நியூஸ்பேப்பரை கீழே விரித்துத் தூங்கிக்கொண்டு இருந்தார்கள்.

வெளியே “ஆட்டோ வேண்டுமா?” என்று கேட்டவரிடம் “தி.நகர்” என்று சொன்னவுடன் பதில் பேசாமல் நகர்ந்து சென்றார். அடுத்து வந்தவர் “800 ஆகும் சார். தி.நகர் முழுக்க ஒரே தண்ணி” என்று காரணம் கூறினார். சென்னையில் ஒரு சாதாரண மழைக்கே ராஜ்பவன் செல்லும் சாலை ’ஐ’ படத்தில் வரும் விக்ரம் மூஞ்சிபோல ஆகிவிட்டது. மற்ற இடங்களைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை.

தீபாவளிக்கும் கிறிஸ்துமஸுக்கும் இடைப்பட்ட காலத்தில் மழையும், ’மெட்ராஸ் ஐ’யும் வந்து, குடையுடன் சென்றவர்கள் கூலிங்கிளாஸ் போட்டுக்கொண்டு அலைந்ததை ஊர் முழுக்க பார்க்க முடிந்தது.

ஒரு நாள் காலை 4.30மணிக்கு எழுந்து போது லேசான மழை. குடையுடன் நடைப்பயிற்சி போனேன். ஹோட்டலில் காபி குடித்துவிட்டு வெளியே வந்தபோது ’அழகிய லைலா’ பாடலில் ரம்பா பாவாடை மாதிரி என் சின்னக் குடை பறந்து ஆட்டம் போட்டது. அந்த மழையை ஒரு பொருட்டாகவே கருதாமல் சிலர் கர்மயோகியாக இருந்தார்கள்.

டிவிஎஸ் 50ல் பெரிய பெட்டியில் செய்தித்தாள் வைத்துக்கொண்டு, தான் சொட்டச் சொட்ட நனைந்தாலும் காகிதம் நனையாமல் பார்த்துக்கொள்ளும் ஒரு சிறுவன்;

ஒரு குடையுடன் பெரிய அலுமினியப் பாத்திரத்தில் பால் பாக்கெட்டை சுமந்துகொண்டு தூக்க முடியாமல் தூக்கிக்கொண்டு போகும் கிழவி;

’அங்காடிதெரு’ துணிக்கடையில் வேலை செய்யும் ’பெண் பிள்ளைங்க’ தலையை ஒழுங்காக வாரிப் பின்னிக்கொண்டு, திருநீருடன் இறுக்கமாகச் சுடிதாருடன் கிட்டத்தட்ட ஓடினார்கள்.

சாக்கடையும், மழைத்தண்ணீரும் கலந்த ஜிகர்தண்டாவை சகித்துக்கொள்ளும் சென்னை மக்கள்; சாலையில் பச்சை சிக்னல் கிடைத்ததும் பொறுமை இல்லாமல் ஹார்ன் அடித்து முன்னாடி இருப்பவரைப் பூச்சாண்டி காட்டி பயமுறுத்துகின்ற மாதிரி செய்கிறார்கள். இப்படி ஹாரன் அடிப்பது ஒருவிதமான ’மனவியாதியோ’ என்றுகூட நினைக்கத் தோன்றுகிறது. இன்னும் கொஞ்ச நாளில் சென்னையில் வந்து இறங்கும் விமானமும் ஹார்ன் அடித்தால் ஆச்சரியப்படக்கூடாது.

எப்போதாவது நிகழும் பிரச்னையை  மென்பொருளில் ‘ரெய்னி டே சிண்ட்ரோம்’ (rainy day syndrome ) என்பார்கள். அது நிகழும் போது ’அடடா ஒழுங்காகச் செய்திருக்கலாமே!’ என்று தோன்றும். அப்போதைக்கு எம்சீல் மாதிரி ஒன்றைத் தடவி ஒழுகுவதை நிறுத்திவிட்டு, பிரச்னையை மறந்து மீண்டும் வரும்போது – இருக்கவே இருக்கு ‘அடடா!’.

சென்னை மழையைப் பார்க்கும்போது. ‘ரெய்னி டே சிண்ட்ரோம்’ கச்சிதமாகப் பொருந்துகிறது. முதல்வரும், அமைச்சர்களும் ஆலோசித்து  ”பிரதமர் நிதி ஒதுக்கினார்” என்று தினத்தந்தியில் முதல் பக்கம் செய்தி வந்தபிறகு சாலைகளில் இருக்கும் குண்டும் குழிகளையும் ’அப்லிக் டிசைன்’ ஒட்டுப் போட்டு,  அடுத்த மழை வரும் வரை ஒப்பேற்றலாம். அது பிரச்னையைத் தீர்க்காது. பிரச்னையின் மூலக் காரணத்தை சரி செய்ய வேண்டும்.

இந்த மழைக்கு சில விஷயங்களைச் செய்ய வேண்டும். சிலவற்றை அரசு செய்ய வேண்டும்; சிலவற்றை நாம் செய்ய வேண்டும்.

’பனியன் – ஜட்டி இந்த மழைக்குக் காயவில்லை’ என்று கவலைப்படுவதோடு சாக்கடையில் நாம் போடும் பிளாஸ்டிக் குப்பையை நினைத்துக் கவலைப்பட வேண்டும்.

ஒவ்வொரு தெருவாக அரசு பழுதுபார்க்க வேண்டும். ’தரமான சாலைகள் போட்டிருக்கிறார்களா’ என்று அந்தத் தெருவில் இருக்கும் ரிடையரான  பத்துத் தாத்தாக்கள் கையெழுத்துப் போட வேண்டும்.

‘உலக முதலீட்டாளர்கள் மாநாடு’ போன்றவற்றை இந்த மாதிரி மழைக்காலத்தில் நடத்த வேண்டும். போன மாநாட்டுக்குப் பல கோடியில் போட்ட சாலைகள் எல்லாம் 10mm மழையில் கரைந்துவிட்டது.

மழையால் ஓர் உபயோகம் எனக்கு நடந்திருக்கிறது. பாக்கியம் ராமசாமியை ஒரு முறை சந்தித்தபோது ’மயில் குயில் ஆச்சுதடி’  என்றால் என்ன பொருள் என்று கேட்க, அதை வைத்து,  சென்னை மழை சம்பந்தமாக ஒரு சிறுகதை எழுதினேன். கல்கியில் பிரசுரமானது. கவிஞர் நா.முத்துக்குமார் படித்துவிட்டு ‘கல்கியில் உங்க கதை பிரமாதம்’ என்று பாராட்டினார். இருவரும் இன்று இல்லை!

பி.கு.: முதல் பகுதியும், கடைசிப் பகுதியும் தவிர, மற்றவை எல்லாம் 6-7 வருடம் முன் எழுதிய குறிப்புகள். நம்புங்கள்!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் செய்தித்தாளில் தினமும் சாவைப் பற்றிய செய்திகள், நினைவு அஞ்சலி என்று சிரஞ்சீவியாக இருப்பது மரணம் என்று நினைக்கிறேன். எனக்கு யாரைக் கண்டாலும் பயமே இல்லை என்று சொல்லுபவர்கள் சாவிற்குப்...

“கில்லி விஜய் மாதிரி இந்த வேலை எல்லாம் எதற்கு உங்களுக்கு ?”

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு வார்த்தை ! சில நாட்கள் முன் இந்த செய்தி கண்ணில் பட்டது. “ராணிப்பேட்டை அருகே, தெரியாமல் பைக்கில் இடித்த கார்.. நண்பர்களை வரவழைத்து காரில் இருந்தவரை சரமாரியாக தாக்கிய நபர்’ இது...

சைடு பெட்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நான் பள்ளிச் சிறுவனாக  படித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை நேற்று படித்துக்கொண்டு இருந்தேன்.( நம்புங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது! )  சிறுவனாக அன்று படித்த அதே அனுபவம் நேற்றும்...

இன்னும் எத்தனை காலம் தான் ….

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் தலைப்பை படிக்கும் போது ‘ஏமாற்றுவார்’ என்ற வார்த்தை உங்கள் மனதில் இந்நேரம் உதித்திருந்தால் தொடர்ந்து படிக்கலாம். சென்ற ஆண்டு ‘ஹர்ஷிதா’ என்ற பெண் பழைய சோபாவை ஆன்லைன் மூலம் விற்பனை...