0,00 INR

No products in the cart.

அனைத்து பெருமையும், புகழும் ரஜினிக்கே!      

அண்ணாத்தே வந்த பாதை – 5

 

எஸ்.பி.முத்துராமன்                எழுத்து வடிவம் : எஸ்.சந்திரமெளலி

ஸ்ரீ ராகவேந்திரர் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு, முகத்தில் சாந்தம் ததும்ப ஸ்ரீ ராகவேந்திரர் மேக்-அப்பில்  செட்டுக்குள் ரஜினி நுழைந்தார். படப்பிடிப்பு ஆரம்பமானது. மகான் ஸ்ரீ ராகவேந்திரர் நடந்து வரும் காட்சி. ரஜினி முயற்சித்தாலும், நடையில் இருந்த வேகத்தை அவரால் கட்டுப் படுத்த முடியவில்லை. உடனே நான்  மிகத் தெளிவாக, ” ரஜினி, இந்தப் படத்தைப் பொறுத்த வரையில் நீங்கள்  சாந்த சொரூபியான மகான் ராகவேந்திரர். உங்களுடைய வழக்கமான வேகத்தையெல்லாம்   விட்டுவிட்டு, நடை, பாவனை, பேசுவது எல்லாவற்றிலும் அமைதியே உருவான மகானாக வாழவேண்டும்” என்று கூறினேன். நான் சொன்னதை, கண்களை மூடி, அமைதியாக உள் வாங்கிக் கொண்டார் ரஜினி. அதன் பிறகு ஒவ்வொரு காட்சியிலும், தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தை உணர்ந்து, அமைதியாக நடித்தார். சொல்லப்போனால், நடித்தார் என்பதை விட மகானாகவே வாழ்ந்தார்.

படத்தில் சிறு தவறு கூட வந்து விடக்கூடாது என்பதற்காக சென்னை திருவல்லிக்கேணியில் இருக்கும்
ஸ்ரீ ராகவேந்திரர் மடத்தைச் சேர்ந்தவர்கள் நான்கைந்து பேர்களைக்  படப்பிடிப்பின்போது கூடவே வைத்துக் கொண்டு அவர்களின் வழிகாட்டுதலின்படி, காட்சிகளை உணர்ச்சி பூர்வமாக எடுத்தோம். குறிப்பாக இறுதியில், மகான் ஸ்ரீ ராகவேந்திரர், ஜீவ சமாதி அடையும் காட்சியில், பூஜை எல்லாம் முடிந்து, அவரை பூமிக்குள்ளே அமைக்கப்பட்ட சமாதிக்குள் அமர்த்தி, மூடும் காட்சியை எடுத்தபோது, படப்பிடிப்பில் கூடி இருந்தவர்கள் நூற்றுக்கணக்கானவர்களும்  உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கி விட்டார்கள். “ஸ்ரீ ராகவேந்திரருக்கு கர்நாடக மாநிலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் இருக்கிறார்கள்.  அவரைப் பற்றி அறியாதவர்களும்,  அவருடைய அற்புதமான வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்ளும்படியாக நீங்கள் படம் எடுத்துவிட்டீர்கள்” என்று பலரும் என்னைப் பாராட்டினார்கள்.

இப்போது கூட, மந்திராலயத்தில் உள்ள  மடத்தில் முக்கிய விசேஷங்களின்போது, பக்தர்களுக்கு அந்தத் திரைப்படத்தை திரையிடுவது வழக்கமாக இருக்கிறது. உலகமெங்கும் வாழக்கூடிய ஸ்ரீ ராகவேந்திரரை வழிபடும் “மாத்வர்கள்” என்ற பிரிவினர், அந்தப் படத்தின் வி.சி.டி அல்லது சிடியையை வைத்துக்கொண்டு, அவ்வப்போது  அந்த மகானின் சரித்திரத்தைத் திரையில் பார்த்து மகிழ்கிறார்கள். அவ்வப்போது, என்னை சந்திக்கிறவர்கள் சொல்லுவதிலிருந்து எனக்குத் தெரிய வருகிறது. திருவல்லிக்கேணி மடத்திலிருந்து, ஆண்டுதோறும் எனக்கு பிரசாதம் அனுப்பி வைக்கிறார்கள். அதை நான் ஒரு பெரிய கௌரவமாகக் கருதுகிறேன்.

ரஜினி ரசிகர்கள் மத்தியில் ஒரு கலப்படமான வரவேற்பு இருந்தது. படத்தில், “ரஜினியின் வழக்கமான அதிரடி ஆக்‌ஷன் இல்லை” என்ற ஏமாற்றம் அவர்களுக்கு இருந்தது என்றாலும், தங்கள் ‘தலைவர்’ எப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தை ஏற்று மாறுபட்ட  நடிப்பை வழங்கி இருக்கிறார் என்று வியந்தார்கள்.

அந்தப் படத்தில், ஒரு முஸ்லிம் மன்னர் , ஸ்ரீ ராகவேந்திரரை சோதித்துப் பார்ப்பது போல ஒரு காட்சி இடம்பெற்றிருக்கும். அதில், அவர், ஒரு தட்டில் மாமிசத்தை வைத்து மூடி, பூ என்று ஸ்ரீ ராகவேந்திரரிடம் அளிக்க, அதனைத் திறந்து பார்க்கிறபோது, அது பூவாகவே மாறி இருக்கும், இந்தக் காட்சியை நீங்கள் திரையில் பார்த்திருப்பீர்கள். அதன் தொடர்ச்சியான ஒரு சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது.

“ஸ்ரீ ராகவேந்திரர் படம் வர்த்தக ரீதியில் வெற்றி பெறவேண்டும்” என்ற நோக்கத்தில், நான் ஒரு காரியம் செய்தேன். ஸ்ரீ ராகவேந்திரரை பரிசோதித்துப் பார்க்கும் முஸ்லிம் மன்னர் ஒரு பாடல் காட்சியின் மூலமாக அறிமுகமாவதாக காட்சியினை அமைத்திருந்தேன். படத்தில் கமர்ஷியலாக ஒரு டான்ஸ் இருந்தால் அது விநியோகஸ்தர்களை திருப்திப்படுத்தும்; ரசிகர்களுக்கும் ஒரு பொழுதுபோக்கு அம்சம் கிடைக்கும் என்று நான் கருதினேன். அதற்காக முஸ்லிம் மன்னராக நடித்த, டான்ஸ் ஆடிப் பழக்கமில்லாத சத்தியராஜுக்கு டான்ஸ் மாஸ்டர் புலியூர் சரோஜா மூலமாக கடுமையாக பயிற்சியளித்து, ஒரு மும்பை அழகியுடனான நடனக் காட்சியைப் படம் பிடித்து, படத்தில் இணைத்திருந்தேன்.  படத்தின் முதல் பிரதி ரெடியானதும், டைரக்டர் பாலச்சந்தர் சாரையும்,  மற்றும் குறிப்பிட்ட சிலரையும்  மட்டும் அழைத்து படத்தை திரையிட்டுக் காட்டினேன். படம் முடிந்தது. பாலசந்தர், என் கைகளைக் குலுக்கிப் பாராட்டினார். நான் ஏற்றுக்கொண்ட மிகப் பெரிய சவாலான பணியை, நல்ல படியாக முடித்துவிட்ட திருப்தி எனக்குள் ஏற்பட்டது.

அடுத்த நிமிடம் கே.பி.சார், “முத்துராமன், ஒரு முக்கியமான விஷயம்.
ஸ்ரீ ராகவேந்திரருடைய வாழ்க்கை சரித்திரத்தை அற்புதமாக எடுத்திருக்கிறீர்கள்; ரஜினி ஸ்ரீ ராகவேந்திரராகவே மாறிவிட்டார். ஆன்மீக மணம் கமழும் இந்த நல்ல படத்தில் எதற்காக அந்த கவர்ச்சிகரமான டான்ஸ்?  இனிமேல் படம் பார்க்கிற யார் கண்ணிலும்  அந்த பாடல்  காட்சி படக்கூடாது! உடனடியாக ஆபரேட்டர் அறைக்குச் சென்று, இப்போதே, இங்கேயே  அந்தப் பாடல் காட்சியை வெட்டி எடுத்துவிடுங்கள்!” என்றார். நானும் அப்படியே செய்தேன்.

சில நாட்களுக்குப் பிறகு, படம் பார்த்த சத்யாராஜுக்கு ஒரே அதிர்ச்சி! ” என்ன சார்! டான்ஸ் ஆடத் தெரியாத என்னை பெண்டு நிமிர்த்தி டான்ஸ் ஆட வெச்சிட்டு, இப்போ பார்த்தா அந்த டான்ஸ் சீனையே காணோமே!” என்று அவர் கேட்டபோது,  கவர்ச்சி நடனத்துக்கு கத்தரி போட்ட பின்னணியை விளக்கிச் சொல்லி, “இந்த ஒரு பாட்டு இல்லாது போனால் என்ன, எதிர்காலத்தில் உங்களுக்கு நிறைய பாடல் காட்சிகளில் டான்ஸ் ஆட வாய்ப்பு கிடைக்கும்” என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன். இன்று படங்களில் டான்ஸ் காட்சிகளில் கலக்குகிறார் சத்யராஜ்!

சிவன், பார்வதி, லட்சுமி, சரஸ்வதி போன்ற கடவுள்களெல்லாம் எப்படி இருப்பார்கள் என்று நமக்குத் தெரியாது. ஓவியர் ரவி வர்மாவின் ஓவியங்கள் மூலமாகத்தான் நாங்கள் அவர்களை உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறோம்; வீரபாண்டிய கட்ட பொம்மன், பாரதியார், வ.உ.சி, போன்றவர்களை எல்லாம் நாம் நேரில் பார்த்ததில்லை; இப்போது அவர்கள் எல்லாம் எப்படி இருப்பார்கள் என்று நினைத்தால், உடனே நம் கண் முன் தோன்றுவது, அந்தப் பாத்திரங்களில் நடித்த நடிகர் திலகம் சிவாஜியின் உருவம்தான். அதேபோல, ஸ்ரீ ராகவேந்திரராக தனது உள்ளார்ந்த பக்தியின் வெளிப்பாடாக திரையில் தோன்றி, நிரந்தரமாக நம் அனைவரது நெஞ்சிலும்  இடம் பிடித்து விட்டார் ரஜினி என்றால் அது முற்றிலும் உண்மை!
ஸ்ரீ ராகவேந்திரர் நமக்கு ரஜினி உருவில்தான் தெரிகிறார்.

ரஜினி போன்ற திறமைமிக்க ஒரு நடிகரைப் பொறுத்தவரை, விளக்கும் அவர்தான்; திரியும் அவர்தான்; எண்ணெயும் அவர்தான்; தீபமும் அவர்தான். நான் அந்த விளக்கின் ஒளியை சற்றே கூட்டவோ, குறைக்கவோ செய்யும் சிறு குச்சிதான். எனவே, அனைத்து பெருமையும், புகழும் ரஜினிக்கே!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சிவாஜி வீட்டுக்குப் பக்கத்தில்…

1
 ஒரு நிருபரின் டைரி - 26 - எஸ். சந்திரமெளலி   நான் கடந்த 1985ஆம் ஆண்டு முதல் 2021 வரை சென்னை தி. நகர் தெற்கு போக் ரோடில் வசித்து வந்தேன்.  சிவாஜிக்கு  ‘செவாலியே’ விருது...

நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கி கதி கலங்க வைத்த நகரம்

0
 உலகக் குடிமகன் -  25   - நா.கண்ணன் ஜப்பான் குறைந்த காலத்தில் மிக உயர்ந்த நாடாக மாறியதற்குக் காரணங்கள் உள்ளன. முதலில் அவர்கள் ஐரோப்பிய வாழ்வியலைக் கடைப்பிடித்தனர். ஐரோப்பிய தரம் வாழ்வில் இருக்க வேண்டும் எனப்பாடுபட்டனர்....

பெயிண்டர் துரை

0
மனதில் நின்ற மனிதர்கள் - 1 மகேஷ் குமார்   நல்ல நெடு நெடுவென ஒடிசலான தேகம். சுமார் 40 வயது இருக்கலாம். சுருள் சுருளாக தலைமுடி. ஏதேதோ பெயிண்ட் துளிகள் தெளித்து, சரியாக சுத்தம் செய்யாமல்...

   குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்    நவம்பர் 1990 கொட்டும் மழையில் ஆட்டோ பிடித்து மைதிலி பேருந்து நிலையத்தில் நுழைந்தபோது பேருந்து ஒன்று புறப்படத் தயாராக இருந்தது. தன் சேலையைப் பற்றிக் கொண்டிருந்த மூன்று வயது மகள் மாயாவை...

சாத்தானின் வக்கீல்

0
ஒரு நிருபரின் டைரி - 25 - எஸ். சந்திரமெளலி   ஆங்கில நியூஸ் சேனல்களில் மூத்த பத்திரிகையாளர்கள் பிரபலங்களுடன் உட்கார்ந்துகொண்டும், நின்றுகொண்டும், நடந்துகொண்டும் உரையாடும் நிகழ்ச்சிகள் பல இருந்தாலும், எனக்கு மிகவும் பிடித்தது கரன் தாபருடைய...