0,00 INR

No products in the cart.

இரண்டு பெண்கள் – 27 நாட்கள் –  8000 கிலோ மீட்டர்கள் –  ஸ்கூட்டர் பயணம்

சந்திப்பு :  சேலம் சுபா

 

ரு சக்கர வாகனங்களில் நீண்ட தூரம் சகாசப் பயணங்கள் செய்த இளைஞர்களைப் பற்றி அறிந்திருப்போம். அண்மையில் பெங்களூரிலிருந்து லடாக் லே பகுதி வரை சென்று அங்கிருந்து கன்னியாகுமரி வரை  ஸ்கூட்டரில் ஒரு பயணச் சாதனையை செய்திருப்பவர்கள்  இந்த இரண்டு பெண்கள். இதுவரை சுமார்  ஒரு இலட்சம் கிலோ மீட்டர்களுக்கும் மேல் இருசக்கர வாகனம் மூலம் வலம் வந்திருக்கிறார்கள் பெங்களூரைச் சேர்ந்த திருமதி  ஸ்ரீலேகாவையும் , ஷோபாவும்.

வீட்டின் அஸ்திவாரமாக விளங்கும் பெண்ணின் பாதுகாப்பு கருதி பெரும்பாலானோர்  நெடுந்தூர வாகன பயணத்தை பெண்கள் ஏற்றுக்கொள்ள சம்மதிப்பதில்லை.        ஆனால் இதை உடைத்து தங்கள் இருசக்கர வாகனத்தில் இந்தியா முழுவதும் பயணித்து சாதனை படைத்து வரும் இந்தப் பெண்களைச் சந்தித்தோம்.

ஒரு மாலைப்பொழுதில் அப்போதுதான் கொடைக்கானல் பயணத்தை முடித்து விட்டு வந்திருந்த திருமதி  ஸ்ரீ லேகாவை சந்தித்தோம். புத்துணர்ச்சியுடன் நமது கேள்விகளுக்கான பதில்களை பகிர்ந்தார் உடன் பயணிக்கும் அவரது  மகள் ஷோபாவும் இருந்தார்.

உங்களைப் பற்றி?

பிறந்த ஊர் கேரளா. தற்சமயம் பெங்களூரில். கட்டுப்பாடுகளுடன் வளர்ந்தப் பெண். அம்மா அப்பாவின் கண்டிப்பு. ‘பெண் என்றால் பெற்றோர் சொன்னபடி கேட்கணும்’ என்று இருந்தவள். அவர்கள் சொன்னபடி படிப்பு ஹோமியோபதி மருத்துவம்…  அவர்களின் விருப்பத்திற்கு திருமணம்… திருமணத்திற்கு பின் குழந்தைகள்… கணவர் என்று வேறுவித கட்டுப்பாடுகள். சுதந்திரமற்று  இருந்த வாழ்வு. இது எனக்கு மட்டுமல்ல; அன்றைய பெண்கள் பலரின் நிலைமை இதுதான். காரணம் ஊர் உலகம் என்ன சொல்லுமோ எனும் அச்சம். பிறருக்காகவே நம் சுயத்தை தொலைக்கும் அவலம். இவற்றை மீறி தற்சமயம் எனக்கான அடையாளத்தைத் தந்துள்ளது இந்த பைக் பயணங்கள்.

ஒரு மருத்துவராக இருந்து எப்படி ஒரு பயணக் காதலியானீர்கள்?

நான் விரும்பி தேர்தெடுத்ததல்ல மருத்துவம். ஆனாலும் குடும்பத்துக்காக பிராக்டீஸ் செய்து வந்தேன். இயற்கையாவே நான் இரக்க குணம் மிகுந்தவள். ‘என்னிடம் பத்து ரூபாய் இருந்தால் இரண்டு ரூபாயாவது வறியவ்ர்களுக்கு உதவவேண்டும்’ என்று நினைப்பேன். அதனாலேயே காசே இல்லாமல் வருபவர்களுக்கு இலவசமாகவே மருந்துகள் தந்தேன். பணத்தைப் பெற்று மருத்துவத்தை விற்க மனம் வரவில்லை. ஒரு கட்டத்தில் வாழ்க்கைப் பிரச்னைகளின் இடையில் கிளினிக்கை  நடத்த முடியாமல் போனது.  அதன் பிறகுதான் ‘போதும் இந்த மருத்துவத் தொழில்’ என்று நினைத்து ஒதுங்கினேன்.

அதன் பின் எந்த ஊருக்கு செல்வதானாலும் டூ வீலரில் செல்ல ஆரம்பித்தேன். 2009ல் என் வீட்டருகில் வசித்து எனக்கு கிளினிக்கில் உதவி செய்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ஷோபாவை அவளின் பெற்றோர் சம்மத்தோடு  என் மகளாகவே வளர்க்கிறேன்.  அவள் பெற்றோர் ஆந்திரா என்பதால் அடிக்கடி அங்கும் செல்ல நேர்ந்தது. பெங்களுரில் இருந்து அவள்  ஊருக்கு போக வர 280 கிலோமீட்டர்தான்.  காலையில் போயிட்டு சாயந்திரம் திரும்பிடுவோம். அவளின் துணை கிடைத்தவுடன் மேலும் எனக்கு பயணங்களில் ஆர்வம் வந்தது.

சொந்த வேலைக்காவும் அடிக்கடி கேரளா செல்லும் சூழல். பேருந்து நிலையத்தின் சந்தடிகளும் டிக்கெட் கிடைக்காமல் அலைந்ததையும் நீண்டநேர காத்திருத்தலையும் குடித்துவிட்டு பயணிக்கும் ஆண்களையும் விரும்பாமல் ஒரு முக்கியமான தருணத்தில் முடிவெடுத்து 2013ல் டூ வீலரிலேயே பெங்களுரில் இருந்து கொல்லம் சென்றேன்.  போக வர 680 கி.மீ …அந்த அனுபவம் எனக்குள் ஒரு உற்சாகத்தையும் தன்னம்பிக்கையையும் தந்தது.

மற்ற எதையும்விட டூ வீலர் பயணம் எனக்கு மனதின் இறுக்கத்தைப் போக்கி சொல்ல முடியாத ஆனந்தத்தையும் சுதந்திரமான உணர்வையும் தருகிறது. இப்படிதான் நான் பயணங்களின் காதலியானேன்.

இதில் இன்னொரு சிறப்பும் உள்ளது. எனக்கு கணேஷ் – விக்னேஷ் என்ற இரட்டையர்கள் மகன்கள். கணேஷ்  எம்.பி.ஏ.  படிக்கிறார். விக்னேஷ் இன்ஜினீயரிங் முடிச்சுட்டு வேலைக்கு செல்கிறார்.  இருவரும் தந்த தைரியம்தான் எனது நம்பிக்கை.  ‘அம்மா உங்களுக்கு எதில் மகிழ்ச்சி வருகிறதோ அதில் கவனம் வையுங்கள்’ என்று எனக்கு முழு ஆதரவு தந்தார்கள். கூண்டுப் பறவையாக இருந்த நான் இவ்வளவு தூரம் வெளியே சுற்றும் சுதந்திரப் பறவையாக மாறியிருக்கிறேன் என்றால் என் மகன்களும் ஒரு காரணம். எல்லாக் குழந்தைகளும் தங்கள் தாயின் தனித்தன்மையை போற்றி ஆதரவு அளித்தால் பெண்கள் மேலும் பலம் பெற்றவர்களாவார்கள்…அந்த வகையில் நான் கொடுத்து வைத்தவள்

 “பைக் ரைடர்ஸ்” என்றாலே  ‘என்பீல்ட்’ போன்ற மோட்டார் பைக்குகளே அதிகம் பயன்படுத்துவார்கள். ஆனால், நீங்கள் சாதாரண ஸ்கூட்டர் வண்டிகளையே பயன்படுத்துகிறீர்களே?

ஆம். எனக்கு எது வசதியோ அதையே பயன்படுத்துகிறேன். முதன்முதலில் ஹோண்டா ஆக்டிவாவில்தான் என் பயணம் துவங்கியது. பின் 2014ல் டிவிஎஸ் வேகாவை பயன்படுத்தினேன். அதன்பின் 2017ல் அப்ரில்லா எஸ்ஆர் 150யும், தற்போது அப்ரில்லா எஸ்எக்ஸ்ஆர் 160யையும் பயன்படுத்துகிறேன்.

வண்டிகளை நான் நேசிக்கிறேன். நான் செல்லும் வண்டி எனக்கு குழந்தைகள் போல… அதனுடன் பேசுவேன் .என்னை இதுவரை பாதுகாப்பாகவே கொண்டு சென்றுள்ளது. கடவுள் அருளை நம்புவேன்.  நம் உள்மனது வேண்டுவதை நிறைவேற்றும்  பிரபஞ்ச சக்தியிடம் நம்பிக்கை வைப்பேன். இதுவரை என் பயணங்களில் எவ்வித ஆபத்துகளையும் நாங்கள் சந்தித்ததில்லை. வேகத்தைவிட விவேகமும் நிதானமும்  கவனமும்  இருந்தால் எங்கேயும் பாதுகாப்புடன் பயணிக்க முடியும் என்பது எங்கள் நம்பிக்கை.

நீங்கள் சென்ற மறக்க முடியாத நீண்ட பயணங்கள் எவை?
ஒரு நாளைக்கு எத்தனை கிலோ மீட்டர் பயணிப்பீர்கள் ?

சென்ற வருடம் (2020) நவம்பர் மாதத்தில் பெங்களூரிலிருந்து நைனிடால் சென்று திரும்பினோம். (Aprilla SR 150) யில் 4600 கிலோமீட்டர்களை  12 நாட்கள் பயணித்தது மறக்க முடியாத அனுபவம். கொரோனா இருந்த நேரம் அது என்பதால் சற்றே பதட்டமும் கூட.

இந்த வருடம் (2021) ஆகஸ்ட் 7 ஆம் தேதி பெங்களூரில் இருந்து லே லடாக் சென்று, லே லடாக்கில் இருந்து   ‘கர்துங்க்லா பாஸ்’ எனும் உலகத்திலேயே மிக உயரமான மோட்டார் சாலையில் பயணித்து காஷ்மீர் சென்று, காஷ்மீரிலிருந்து கன்னியாகுமரி மற்றும் தனுஷ்கோடிக்கு சென்று,  செப்டம்பர் 2 மீண்டும் பெங்களூர் திரும்பினோம்.  மொத்தம் 27 நாட்களில் 9142 கிலோ மீட்டர் தூரம் பயணித்ததை சிறப்பானதாக நினைக்கிறோம்.  ஏனெனில் நாங்கள் நிர்ணயித்திருந்த பத்தாயிரம் கிலோமீட்டர் பயண இலக்கை அடைந்த மகிழ்ச்சி கிடைத்தது .

இதுவரை சுமார் ஒருலட்சம் கிலோமீட்டர் தூரத்தை மோட்டார் சைக்கிள் மூலமாக பயணித்துள்ளோம். ஒரு நாளைக்கு சுமார் 700 கிலோமீட்டர் வரை செல்வோம் .

உங்கள் இருவரில் யார் வண்டியை ஓட்டுவீர்கள்?

இதற்கு அதுவரை அமைதியாக இருந்த ஷோபா முந்திக்கொண்டு பதில் தந்தார்.

கண்டிப்பாக லேகாம்மாதான் வண்டியை ஓட்டுவார்கள். எனக்கும் வண்டி ஓட்டத் தெரியும். லோக்கல்ல ஓட்டத்தான் லாயக்கு. என்றாலும் இவங்க தைரியம் எனக்கு வராது. நான் அம்மா பின்னால் அமர்ந்தால் அவ்வளவு சந்தோசமா இருக்கும். அம்மாவுக்கு எவ்வளவு தூரம் வண்டியை ஓட்டினாலும் அலுப்பே வராது. காலையில ஐந்து மணிக்கு வண்டியை எடுத்தோம்னா இரவு எட்டு மணிக்கு எந்த எடத்துல இருக்கிறோமோ அங்கேயே தங்கிடுவோம். லேகாமா வண்டியை ஓட்டற ஸ்டைலே தனிதான். இத்தனைக்கும் கைகளில் கிளவுஸ்லாம் போடமாட்டாங்க. கேட்டா வண்டியைத் தொட்டு உணர்வுபூர்வமா ஓட்டுனாத்தான் சரியா வரும்னு சொல்வாங்க.

உங்கள் பயணங்களை முகநூல் பக்கத்தில் பதிவிட்டு வருகிறீர்கள்.  எப்படி இந்த  எண்ணம் எழுந்தது?

2018ல் எங்கள் கசின்ஸ் என்னிடம் நீங்கள் செய்யும் செயல் என்னவென்று தெரிந்துதான் செய்கிறீர்களா?  ‘உங்களுக்கு வேண்டுமானால் உங்கள் பயணங்கள் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் இது அசாதாரணமானது. உங்களுக்கென்று தனி பேஜ் ஆரம்பித்து அதில் பதிவிடுங்கள். பின்னாளில் நீங்கள் பேசப்படுவீர்கள்’ என்று சொன்னதால் அப்போதுதான் எங்கள் வீடியோக்களை எங்கள் முகநூல் பக்கத்தில் பதிவிடத் துவங்கினோம். முதலில் ஆர்வமின்றியே ஒன்றிரண்டு வீடியோக்களை பதிவிட்டோம். நாளடைவில் பார்வையாளர்களின் எண்ணிக்கை உயர நாங்களும் ஊக்கத்துடன் நாங்கள் செல்லுமிடங்களில் இருந்தே அந்த இடங்களின் சிறப்பு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்தோம்.

இப்போது I drive a travel with Dr.sreelekha என்ற பெயரில் முகநூல் பக்கமும்  Travel with Dr.Sreelakha  எனும் பெயரில் யூ ட்யூபும் , இன்ஸ்ட்டாகிராமும் உள்ளது. எங்களின் உழைப்பினால் தற்போது ஐந்து லட்சம் பேர் எங்களைப் பின் தொடர்கின்றனர் என்பதில் எங்களுக்குப் பெருமகிழ்ச்சி.

உங்கள் பயணங்களில் நீங்கள் எங்கு தங்குவீர்கள்? எங்கு சாப்பிடுவீர்கள்? 

நாங்கள் போகுமிடங்களில் உள்ள தங்கும் இடங்களை அங்குள்ளவர்கள் மூலமாகவோ அல்லது என் மகன்களின் வழிகாட்டுதலிலும் தெரிந்து அங்கு தங்கிக்கொள்வோம். அதிக வசதிகளை நாங்கள் தேடுவதில்லை என்பதால் கிடைத்த ஓட்டல்களில் தங்கிக்கொள்வோம். அதேபோல் சாப்பிடுவதிலும் இதுதான் வேண்டும் என்றெல்லாம் விரும்ப மாட்டோம். கிடைப்பதை சாப்பிட்டு எங்கள் பயணத்தை தொடர்வோம்.பழங்கள் இருந்தால் போதும். சாப்பாட்டை முக்கியமாக்கினால் நாங்கள் செல்லும் வேகம் குறையும். சிறிய சிறிய ரோட்டுக்கடைகளில் மட்டுமே சாப்பிடுவோம். அங்குதான் ருசியும் இருக்கும். ரசிக்கும் வகை நல்ல மனிதர்களும் இருப்பார்கள். பெரிய ஹோட்டல்களைத் தவிர்த்து விடுவோம்.

உங்களுக்குத் தெரிந்த மொழிகள்?

தாய்மொழி மலையாளம். பெங்களூரில் வசிப்பதால் கன்னடம் தெரியும். தெலுங்கும் தமிழும் கொஞ்சம் பேசத் தெரியும். நான் படித்தபோது செகண்ட் லாங்க்வேஜ் ஹிந்தி என்பதால்  ஹிந்தியும் நன்கு தெரியும். பொதுவானது பயணம் என்பதால் அதிகம் பேசப்படும். ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் எங்கள் காணொளிகள் பதிவிடுகிறோம். மொழிகளைக் கடந்தது எங்கள் இந்திய பயணங்கள்.

பயணத்துக்கான செலவுகளை எப்படிச் சமாளிக்கிறீர்கள்? உங்கள் செலவுகளுக்கு ஸ்பான்சர் தருகிறார்களா ?

எங்கள் சுய தேவைகளுக்காக நாங்கள் சென்றதால் எங்களுக்கான செலவுகளை நாங்களேதான் செய்தோம். நாங்கள் அதைப்பற்றி சிந்திக்கவும் இல்லை. ‘எனக்குப் பிடித்த விஷயத்தை நான் செய்கிறேன்’ என்ற நிறைவு மட்டுமே இருந்தது. இணையத்தளம் எங்கள் மீது வெளிச்சத்தைக் காட்டியது. அந்த சமயம் Aprilla SR 150 பைக்கை ஓட்டினோம். என் நண்பர்கள்  “நீங்கள் அந்த பைக்கிற்கு விளம்பரம் செய்வதுபோல் உள்ளது. அவர்களின் பார்வைக்கு உங்களை கொண்டு சென்றால் உங்கள் கனவுகள் மேலும் எளிதாகும்”  என்று சொன்னார்கள். அப்படியே அந்த கம்பெனியும் எங்களிடம் தொடர்பு கொண்டு “நாங்கள் வண்டியையும் பெட்ரோலையும் உங்களுக்கு ஸ்பான்சர் செய்கிறோம்” என்றார்கள். நாங்களும் ஒப்புக்கொண்டோம். அதன்படி கிடைத்ததுதான் தற்போதுள்ள  Aprilla SXR 160 வண்டி. ஆனால் ‘ஸ்பான்சர் என்பது அவ்வளவு எளிதல்ல’ என்பதை இந்த அனுபவம் புரிய வைத்தது. நீண்ட காத்திருப்பு, அலைக்கழிப்பு என அவதிப்பட்டாலும்  அதன்பின்னே தளராமல் திட்டமிட்டபடி  எங்கள் இலக்கான லடாக் பயணத்தை முடித்தேன்.

நங்கள் ஸ்பான்சரை ஏற்றதற்கு காரணம், இதன் மூலம் மீதமாகும் பணத்தைக் கொண்டு வறியவர்களின் பசி போக்கலாம். மேலும் பல உதவிகளை இந்த சமூகத்திற்கு செய்யும் ஆசையால்தான். இதோ தற்சமயம் எங்கள் உழைப்பிற்கு கிடைத்த பலனாக இணையதளம் மூலமாகவும் வருமானம் வருகிறது. தற்போது குறைவு என்றாலும் போகப்போக இதுவும் பெருகும் என்ற நம்பிக்கை உள்ளது .

எனது மகன்கள் அவர்கள் சேர்த்து வைத்த பணத்தைக்கொண்டு நாங்கள் எளிதாக படம்பிடிக்க கோ ப்ரோ (Go pro) கேமராக்களை வாங்கி பரிசளித்தது மகிழ்ச்சியாக இருக்கிறது.

பயணத்தின்போது ஏற்பட்ட நெகிழ்ச்சியான சம்பவம் ஏதாவது?

நிறைய இருக்கிறது. உலகம் நாம் அன்பாக நோக்கினால் அதுவும் அன்பை அள்ளித்தரும். அப்படித்தான் நாங்கள் எங்கு சென்றாலும் வியந்து பார்ப்பவர்களும் உண்டு. சிலர் மட்டுமே ஆச்சர்யமாக பெண்கள் எனும் நோக்கில் பார்ப்பார்கள். ஆனால் பெரும்பாலானவர்கள் எங்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து தருகின்றனர். இடம் குறித்து கேட்டால் வழிகாட்டியும், வண்டி எங்காவது மாட்டிக்கொண்டால் உதவிக்கு வருவதும், நல்ல தங்குமிடங்களைக் காட்டுவதும் என பல உதவிகள்.

ஒரு முறை ஓடிஸா சென்றிருந்தபோது காலை உணவுக்காக சாலையோரத்தில் இருந்த ஓட்டலில் காத்திருந்தபோது ஒரு சேட் எங்கள் அருகில் வந்தார். எங்களைப் பற்றிய விபரங்களைக் கேட்டதும் மனதார பாராட்டிவிட்டு “எங்கள் பெண்களும் உங்களைப் போன்று தைரியமாக இருக்க வேண்டும் என விரும்புகிறேன்” என்று கூறியது நெகிழ்ச்சியாக இருந்தது .

பனியோ… குளிரோ… வெயிலோ… நான் பயணத்தின்போது கிளவுஸ், லெதர் ஜாக்கெட், ஷூ போன்றவைகளை அணியமாட்டேன்.  வண்டி ஓட்டும்போது இயற்கையோடு ஒன்றிவிடுவேன். லடாக்கில் வேறு ஒரு பைக் ரைடர் இளைஞர் ஒருவர் என்னிடம் வந்து பாராட்டி அவர் பையிலிருந்த கிளவுஸைத் தர முன்வந்தது நெகிழ்ச்சியாக இருந்தது. இப்படி நிறைய சொல்லலாம். மேலும் எங்களைப் பற்றி அறிந்ததும் எங்களுடன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்வது, பாராட்டுவது போன்ற சகமனிதர்களின் அன்பு எல்லா இடங்களிலும் நிறைந்துள்ளது. சில சமயங்களில் என் கண்களில் ஆனந்தக் கண்ணீர் வரவைக்கும்.

உங்கள் மனம் கவர்ந்த ஊர் எது? ஏன்?

எல்லா ஊர்களுமே எங்கள் விருப்பத்துக்குரியதே. நம் நாடு அன்பு எனும் அஸ்திவாரம் உடையது. நீங்கள் குறிப்பிட்டுக் கேட்டதால் ஒரு உதாரணம் சொல்கிறேன்:

தமிழ்நாட்டில் சேலம் பிடிக்கும். காரணம் ஒருமுறை அங்கு சென்றிருந்த போது இரவு நேரம்  தங்குமிடம் எங்கும் கிடைக்காமல் அங்கிருந்த பெட்ரோல் பங்கில் தங்கினோம். அங்கிருந்தவர்கள் எங்களுக்கு உணவு, டீ போன்றவைகள் தந்து உபசரித்து பயமின்றி இங்கு தங்கிக் கொள்ளுங்கள் என்று பாதுகாப்புத் தந்து விடிந்ததும் அனுப்பினர். இம்மாதிரி அன்பான சம்பவங்களே எங்கள் பயணங்களுக்கு உற்சாகம் அளிக்கிறது.

அடுத்த இலக்கு ?

NP தான்… புரியலையா? நேபால் – பூட்டான் செல்ல பிளான் இருக்கு. கடவுள் அருளால் சீக்கிரம் நிறைவேறும்.

உங்கள் வயதை சொல்வீர்களா ?

வயதில் என்ன இருக்கிறது. அது வெறும் எண்தான். என் வயது 49. விரைவில் அரை சதம் அடிக்கப் போகிறேன். வயதாக வயதாக என் பலமும் அதிகரித்துக்கொண்டே போவதாகவே உணர்கிறேன் .

“லடாக்கில் எலி ஓடும் அறையில் கரண்ட் இல்லாமல் இரவைக் கழித்தது, மணல் குவியலில் ஸ்ட்ரக் ஆகி நின்ற வண்டியை மேலேற்ற உதவி இல்லாமல் தவித்தது” போன்ற பல சவால்களை சந்தித்தாலும் ‘பயணமே எங்கள் சுவாசம்’ என்று சொல்லும் ஸ்ரீ லேகாவும் ஷோபாவும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களது நேப்பாள் – பூட்டான் பயணத்துக்கு கல்கி வாசகர்கள் சார்பில் வாழ்த்துச் சொல்லி  விடைபெறுகிறோம்.

சேலம் சுபா
பெயர் சுபா தியாகராஜன். பிறந்த ஊர் சேலம் என்பதால் சேலம் சுபா எனும் பெயரில் முன்னணி பத்திரிக்கைகளில் எழுதி வருகிறார். கதை கவிதை கட்டுரைகள் எழுதினாலும் தன்னம்பிக்கையாளர்களின் நேர்காணல் இவரது சிறப்பு. கல்கி குழும இணையதளம், கல்கி ஆன்லைன்.காம் மற்றும் கல்கியின் வலையொலி, காணொளி வாயிலாகவும் பங்கேற்பதில் பெருமிதம் இவருக்கு.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஒரு ஒட்டகம் திடீரென்று என் குறுக்கே ஓடிவந்தது.  

3
பயணக் கட்டுரை - வினோத்   நெடுந்தூர பயணங்களை, அதுவும் மோட்டர் சைக்கிளில் செய்வதில் ஆர்வம் அதிகம் கொண்டபெண் நான். “பெண் என்றால் அலுவலகம் போக ஸ்கூட்டர் மட்டும் தான் ஓட்ட வேண்டுமா?” என்று எழுந்த எண்ணத்தில்...

இந்த மலை அக்காவுடையது… அந்த மலை மாமாவுடையது…

1
- வானதி சீனிவாசன் நாகலாந்து தரும் ஆச்சரியங்கள்....! இந்தியாவின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு விடுதலைப் போராட்ட வீரர்களை நினைவுகூரும் இடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தும் நிகழ்வை ஆண்டு முழுவதும் பா.ஜ.க. நடத்தி வருவதை ஏற்கெனவே...

சோஃபா திருடன் 

சுஜாதா தேசிகன்                                             ...

உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?

0
வாசகர் கேள்வியும் - வல்லுநர் பதிலும்   உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?       - சந்திர மோகன், வேலூர். வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர்  கு. கணேசன்   உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சரியான காரணங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை....

சின்னத்திரை தொடரை, பெரிய திரையில் பார்க்கும் உணர்வு

0
முகநூல் பக்கம்     பட விமர்சனம்    படத்தின் கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதைதான். ஆனால் திரைக்கதையும் மிகவும் பழசாக இருக்கிறது. ஓல்டு ஒயின் நியூ பாட்டில் என்பார்கள். ஆனால் கதைதான் பழையது என்றால்,...