0,00 INR

No products in the cart.

போதும் என்று கூறுவதற்கு இதுவே நேரம்

ஆஸ்திரேலியாவிலிருந்து கிறிஸ்டி நல்லரெத்தினம்

 

கிளாஸ்கோ நகரில் காலநிலை மாற்றம் தொடர்பான உச்சி மாநாடு நடந்துவருகிறது.  இந்த மாநாட்டின் பின்னணி, நோக்கங்கள், அதில் நம் பிரதமர் மோடி பங்கு கொண்டு  சில மிக முக்கிய அறிவிப்புக்களை அறிவித்திருக்கிறார்அந்த மாநாட்டின் அவசியம், அதன் பின்னணி குறித்து விவரிக்கிறது இந்தக் கட்டுரை.

2090ம்ஆண்டு.  கடும்குளிர்.

பசுபதி தாத்தா தன் கொள்ளுப் பேரனை மடியிலமர்த்தி தானும் மனைவியும் சுற்றுலாவில் சென்ற நாடுகளில் எடுத்த வண்ணப் புகைப்படங்களை தன் ‘நனோபாடில்’ தட்டி கதையளந்துக் கொண்டிருந்தார்.

“இது நாங்கள் இத்தாலிக்குப் போனபோது எடுத்தது கண்ணா. அங்கிருந்த சாய்ந்த கோபுரம் அப்போது சாய்ந்தே விட்டது. இடுபாட்டின் முன்னின்று எடுத்தப்படம் இது ”

“இதென்ன தாத்தா…… ஸ்தூபிபோல் இருக்கும் கரும் கட்டிடம்?”

“ஓ!  அதுதான் உலகத்தின் அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகால். பளிங்கினால் கட்டிய யானைத் தந்தத்தின் நிறத்தில் இருந்த காதல் சின்னம்…. இன்று இப்படி இரவின் நிறத்தில்….” தாத்தாவின் கண்கள் பனித்தன.

“இது… இது… பியூட்டிஃபுள் ஐலன்ட்ஸ்… இது எங்கு இருக்கிறது தாத்தா? ஐ லைக் டு கோதெயர்”.

ஒரு நீண்ட பெருமூச்சின் பின் பசுபதியின் வாயில் இருந்து வந்த அந்த வார்த்தைகள் அந்தக் குளிரிலும் வெப்பக் காற்றை கக்கிற்று. “இதுதான் கண்ணா மாலை தீவு. இந்த நாடே நீரில் மூழ்கி மாலை கதிரவனாய் மறைந்து போனது. எல்லாத் தீவுகளும் உயரும் கடல் மட்டத்திற்கு தீனியாய்ப் போனது. நாட்டிற்கு பொருத்தமாய் தான் பெயர் வைத்தார்கள் போ!”

‘நனோபாடை’  அணைத்து மூடிவைத்துவிட்டு “டைம் டு கோடு பெட்…. குட் நைட்” என்று சொல்லி பேரனின் நெற்றியில் ஒரு முத்தத்தை தொலைத்து மின்விளக்கை அணைத்தார்.

சரி… ஒரு குறுங்கதையை எழுதிவிட்டேன். ஆனால் “யாவும் கற்பனையே” என்று அடிக்குறிப்பிடத்தான் மனம் இடங்கொடுக்கவில்லை!

வேறென்னவாம்…… 21ம் நூற்றாண்டின் முடிவிற்குள் பூகோள பருவ நிலை மாற்றத்தினால் உலகின் கடல் மட்டம் 1990ல் இருந்ததைவிட 0.44 மீட்டர் வரை உயரும் எனவும், இதன் விளைவாக அனேக சிறு தீவு நாடுகளான மாலை தீவு, ஃபீஜி, மற்றும் பசிபிக் சமுத்திர நாடுகள் முற்றாக உலகப் படத்தில் இருந்து மறைந்தே போய்விடும் ஆபத்து உள்ளது என IPCC (Intergovernmental Program on Climate Change) எனும் சர்வதேச அமைப்பு எச்சரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை ஏற்கெனவே இந்நாடுகளில் இருந்து 2050களில் வெளியேற வேண்டி வரும் 200 மில்லியன்  ‘காலநிலை மாற்ற அகதிகளுக்கு’ (Climate change refugees) மற்ற உலக நாடுகள் உதவ வேண்டும் எனும் வேண்டுகோளை வேறுவிடுத்துள்ளது.

இக்கட்டுரையில் உலக வெப்பமயமாதல், பூகோள பசுமை இல்ல வாயுக்கள், காலநிலை மாற்றத்தின் காரணிகள் போன்ற சொற்றொடர்களைத் தூவி உங்களை புவியியல் வகுப்பில் உட்காரவைக்கும் உத்தேசமில்லை.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும் போது பிரதமர் மோடி கிளாஸ்கோவில் நடைபெறவிருக்கும் COP26 சர்வதேச பருவநிலை மகாநாட்டில் மற்ற உலகத் தலைவர்களுடன் கைக்குலுக்கி விட்டுத் திரும்பிக்கொண்டிருப்பார்.

பல சர்வதேச மகாநாடுகள் உலகத் தலைவர்கள் ஒன்றுகூடும் ஒரு ‘பிக்னிக்’ போல் NATOவாகவே (No Action Talk Only)  முடிந்துவிடுவதுண்டு. ஆனால், பருவநிலை மாற்றம் சம்மந்தமான மகாநாடுகள் ஒரு திடமான முடிவுகளை எடுக்கும் ஒன்றுகூடலாகவே இதுவரை  நடைபெற்று வந்திருக்கின்றன. காலத்தின் கட்டாயம் கொடுத்த அழுத்தத்தின் வெளிப்பாடே இது. மேலும், இங்கு எடுக்கப்படும் தீர்மானங்கள் மனிதவள மற்றும் சூழல் மேம்பாட்டை முன்நிறுத்தி எடுக்கப்படுபவை. எனவே, இந்த ஒன்றுகூடல்கள் என்றும் உலகநாடுகளின் அதிலும் விசேஷமாக இளம் சந்ததியரின் கவனத்தை ஈர்க்கத் தவறுவதில்லை.

இம்மகாநாடுகளின் ரிஷிமூலத்தை சிறிது பார்ப்போமா?

21ம் நூற்றாண்டின் முதல் சகாப்தத்தில்தான் அரசு சார்பற்ற சமூக சேவை அமைப்புக்கள் காலநிலை மாற்றத்தின் பாதிப்புக்களைப் பற்றி உரத்தக்குரல் எழுப்பத் தொடங்கின. இதற்கு முன்னரும் அங்கும் இங்குமாய் தீப்பொறியாய் தெறித்த குரல்கள் காட்டுத் தீயாய் பரவிய நாட்கள் இவை.

1979ல் நடைபெற்ற உலக முதல் காலநிலை மகாநாடுதான் (World Climate Conference)  உலக நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையை திரும்பிப் பார்க்கச் செய்தது மட்டுமல்லாமல், இந்த இயக்கத்திற்கு ஒரு அங்கீகாரத்தையும் வழங்கியது. பூகோள காலநிலை மாற்றத்திற்கும் கரியமில வாயுவிற்கும் (Co2) முடிச்சுப் போட்ட நாட்கள் அவை. இந்நாட்களில் உலக பருவநிலை மாற்றம் இறைவன் கொடுத்தது என கூறிக்கொண்டு கண்களை மூடி “என்னதான் நடக்கும் நடக்கட்டுமே”  என இருந்தவர்கள் அனேகம்.

’அஞ்ஞானத்தை வெல்ல விஞ்ஞானமே ஒரேவழி’ என உணர்ந்த ஐக்கிய நாடுகள் சபை விஞ்ஞான வழிபோகத் தலைப்பட்டது.

நாட்கள் நகர்ந்தாலும் நத்தை வேகத்தில்தான் காலநிலை மாற்றம் பற்றிய முன்னெடுப்புகள் நகர்ந்தன. 1997ம் ஆண்டு கியோட்டோ, ஜப்பானில் நடைபெற்ற பருவநிலை மகாநாட்டில் 37  தொழில்மயமான நாடுகளால் கைச்சாத்திட்ட “கியோட்டோ நெறிமுறை”  (Kyoto Protocol) தான் இப்பயணத்தின்ஒரு திருப்புமுனை எனலாம்.  அபிவிருத்தி அடைந்த நாடுகளின் தலையில் “சுற்றுச்சூழல் மாசடைவதற்கு நீங்களே முக்கியக் காரணம்”  எனும் பொறுப்பை தலையில் கட்டி அனுப்பி வைத்தது ஐ.நா. மூஞ்சை தொங்கவிட்டுக் கொண்டு இந்நாடுகள் 2005ல் இந்நெறிமுறை ஆவணத்தில் முனகிக்கொண்டே கைக்சாத்திட்டன. ‘பசுமைஇல்லவாயு’ அல்லது ‘பைங்குடில்வளி’ எனும் Greenhouse gas ஒரு பேசு பொருளாக்கப்பட்ட நாட்கள் அவை. நீராவி, கரியமிலவாயு, மீத்தேன், நைட்ரஸ் ஆக்சைடு, ஓசோன் வாயு போன்ற வாயுக்களே இக்கலவையில் அடங்கும். இவற்றுள் கரியமிலவாயு ’வேதாதா’ என வைத்துக் கொள்ளுங்களேன். இதன் செறிவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதே இந்நாடுகளின் முதல்பணி. ஆனால், அது ஒரு சுமுகமான பயணமாய் அமையவில்லை. 1998ல் அமெரிக்காவின் மிகப்பெரிய எண்ணெய்க் கம்பெனியான ’எக்சோன் மொபில்’ கியோட்டோ நெறிமுறைக்கு எதிராக போர்க்கொடியை உயர்த்தி அபிவிருத்தியடைந்த நாடுகள் மீது காலநிலை மாற்ற சுமையை திணிப்பது நீதியல்ல என வாதாடியது மட்டுமல்லாமல், விஞ்ஞானதரவுகளிலும் குறை கண்டது. ‘காலநிலை மாற்ற நாத்திகர்கள்’  இவர்கள் பின் அணி திரண்டனர். இவர்களின் முயற்சிகள் வீண்போகவில்லை. 2001ல் அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஸ், கியோட்டோ நெறிமுறையில் இருந்து விலகிக் கொண்டார். அதைத் தொடர்ந்து கனடாவும் விலகிக் கொண்டது.

எனினும் 2005ல் கியோட்டோ நெறிமுறை 141 நாடுகளின் ஆசீர்வாதத்துடன் நடைமுறைக்கு வந்தது. வெளியே நின்று வேடிக்கை பார்த்த நாடுகள் பட்டியலில் அமெரிக்காவும் ரஷ்யாவும் அடங்கும்.

2006ல் எக்சோன்மோபில் தன் நிலைப்பாட்டை மாற்றி ’காலநிலை மாற்றத்திற்கும் வளிமண்டல மாசுபடுதலுக்கும் தொடர்பு உண்டு’ என்பதை ஒப்புக்கொண்டு, பசுமை பல்லக்கில் ஏறிக்கொண்டது. ஒரு ஜனநாயக நாட்டில் ஒரு தொழில்துறையை சார்ந்த கம்பெனி சமூக மாற்றத்தை எதிர்த்து எவ்வாறு செல்வாக்குச் செலுத்தி முடிவை தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என்பதற்கு இது ஒரு சிறந்த சான்று.

இந்நாட்களில் முன்னாள் அமெரிக்க உதவி ஜனாதிபதியான அல்கோர் காலநிலை மாற்றத்தின் பிதாமகனாக உருவெடுத்து உலகெங்கும் சூறாவளிச் சுற்றுப் பயணங்கள் செய்து  ‘நமக்கு இருக்கும் ஒரே வசிப்பிடம் இந்த பூகோளம் மட்டும்தான். எனவே, அதைக் கண்மணிபோல் காப்போம். இது ஒரு அரசியல் பிரச்னை அல்ல; ஆனால், ஒரு தார்மீகப் பிரச்னை’  எனும் செய்தியைப் பரப்பினார். உலகும் இவரின் வேண்டுதலுக்கு செவி மடுத்தது.

2009ல் முதல் முறையாக நாடுகள் கரியமில மாசுப்படுத்தலுக்கான உச்ச வரம்பை நிர்ணயிக்க வேண்டும் எனும் ஒரு கருத்தை அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா முன்வைத்தார். அமெரிக்க கம்பெனிகள் ‘கரியமிலவரி ஒன்றை அறிமுகப்படுத்த வேண்டும்’ எனக் கூறி காலநிலைக்கும் கல்லாப் பெட்டிக்கும் முடிச்சுப் போட்டன.  மாசற்ற வளிமண்டலத்தை வேண்டி நின்ற புனிதர்கள் மத்தியில் பண முதலைகளும் புகுந்துக்கொண்டன.

2010ல் NASA  பூமியின் வெப்பநிலை மாற்றத்தை 1951 முதல் 1980 வரை துல்லியமாய் அட்டவணைப்படுத்தி காலநிலை மாற்றத்தை தூண்டும் முக்கிய காரணிகளாக ’மானிட – இயற்கை காரணிகள்’ என பட்டியல் போட்டுக் காண்பித்தது. மானிட காரணிகளில் முன்வரிசையில் அமர்ந்திருந்தது, தொழிலாக்கப்புரட்சி. 1800ல் ஆரம்பிக்கப்பட்ட உலகமய தொழிலாக்கம் மற்றும் காடழிப்பு, எரிபொருள் தகனம், அபரிமித கால்நடை வளர்ப்பு போன்ற காரணிகளை குற்றவாளிக் கூண்டில் ஏற்றியது NASA.

இயற்கை காரணிகளாக பூகோள ‘பசுமை இல்ல தாக்கம்’, சமுத்திர மேற்பரப்பு வெப்பநிலை அதிகரிப்பு, காட்டுத்தீ, எரிமலைக் குகை என பட்டியல் நீண்டது.

பல சர்வதேச அரசியல் மேடைகளிலும் தேர்தல் விவாதங்களிலும் ‘பருவநிலை மாற்றத் தலைப்பு’  நாற்காலி போட்டு உட்காந்து கொண்டது.

இதுபற்றிய விவாதங்கள் சூடுபிடிக்க, அண்டார்டிக், ஆட்டிக் துருவங்களில் இருந்த பனி உருகலும் வேகமெடுக்க சரியாக இருந்தது!

2015ல் பாரீசில் நடைப்பெற்ற COP21 மகாநாடு ஒரு திருப்புமுனை எனலாம். இம்மகா நாட்டில் காலநிலை மாற்றம் தொடர்பான சட்டபூர்வமான சர்வதேச ஒப்பந்தம் 196 பங்காளிகளினால் கைச்சாத்திடப்பட்டு நவம்பர் 2016ல் அமுலுக்கு வந்தது. சட்டம் எனும் சொல் முதல் முறையாக இந்த தலைப்புடன் இணைக்கப்பட்டது.

இத்தீர்மானத்தின் சாரம் இதுதான் : 1800களில் ஆரம்பித்த தொழில்துறை புரட்சிக்கு முன்னர் இருந்ததைவிட புவி வெப்பமடைதலை 2 டிகிரி செல்சியஸாகவோ இன்னும் சிறப்பாக 1.5 டிகிரி செல்சியஸுக்குள்ளாகவோ மட்டுப்படுத்துவதே பங்காளிகளின் கடமை.

இந்த இலக்கை 2050க்குள் அடைய நாடுகள் தன்னிச்சையாக முழு முயற்சி எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

பாரிஸ் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு சிறந்த அறிவியலின் அடிப்படையில் பொருளாதார மற்றும் சமூக மாற்றங்கள் தேவைப்பட்டன. இதற்கான உறுதியான திட்டங்களை 5 வருட இடைவெளிக்குள் நாடுகள் தன்னிச்சையாக சமர்ப்பிக்க வேண்டும். எனவே, ’இது உலகின் காதில் பூச்சொருகும் வேலையல்ல’ என பல நாடுகள் புரிந்துக்கொண்டன.

2020ல் திட்டங்களை மீனாய்வு செய்யும் சர்வதேச மாநாடு நடைபெற்றிருக்க வேண்டும். ஆனால், கொரோனா அனர்த்தத்தின் நிமித்தம் இது பின்தள்ளப்பட்டு இவ்வாரம் கிளாஸ்கோவில் ஒன்றுகூடி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இம்மாதம் 1ம் தேதி முதல் 12ம் தேதி வரை நடைபெறும் இம்மகா நாட்டில் பல உலகத் தலைவர்கள் உட்பட 25 ஆயிரம் பேர் கலந்துக்கொள்கின்றன. 1995 முதல் நடைபெற்று வரும் இந்த மகாநாட்டின் 26வது அமர்வு இது என்பதால் இதற்கு COP26 என செல்லப் பெயர் சூட்டியுள்ளனர். COP என்பது Conference of the Parties என்பதன் சுருக்கமே.

பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம் கையெழுத்திட்ட நாடுகளை அம்போ என்று விட்டுவிடாமல் வளர்ந்து வரும் நாடுகளுக்கு நிதி, தொழில்நுட்ப மற்றும் திறன் மேம்பாட்டு ஆதரவுக்கான கட்டமைப்பை பாரிஸ் மகாநாடு வழங்கும் என உறுதியளித்தது. பிரிட்டன் அரசு வளரும் நாடுகளுக்கு உதவும் நோக்கில் ஒரு பில்லியன் யூரோக்களை அடுத்த நான்கு ஆண்டுகளுக்குள் வழங்கும் என அண்மையில் அறிவித்தது. ஆனால் வளரும் நாடுகளுக்கு $100 பில்லியன்களை உலகநாடுகள் 2020ல் வழங்கும் என்று கொடுத்த வாக்குறுதி காற்றோடுப்போனது.

2050ல் பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை (Net Zero emissions target)  அடைய வேண்டும் என்ற முன்னெடுப்பில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்பட்டாலும் பல உலக நாடுகள் இந்தக் காலக்கெடு தமக்கு உகந்ததல்ல என முனகத் தொடங்கியுள்ளன.

அதிகப்படியான கரியமில வாயுவை வெளியேற்றும் முதல் ஐந்து நாடுகளில் முதல் ஸ்தானத்தை வகிக்கும் சீனாவின் ஜனாதிபதி இம்மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை 2060ல்தான் தம்மால் அடைய முடியும் எனவும் அடம்பிடிக்கிறது சீனா.  மற்ற நான்கு நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா, ரஷ்யாகூட இவ்விஷயத்தில் இழுபறி நிலையிலேயே உள்ளன.

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் ட்ரம்ப்  2017ல் பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது மட்டுமல்லாமல், அமெரிக்கா உறுதியளித்த பல பில்லியன் டாலர் உதவித் தொகைகளையும் ரத்து செய்தார். ஆனாலும் தற்போதைய ஜனாதிபதி பதவியேற்றதும் முதலில் கையெழுத்திட்ட ஆவணம் மீண்டும் ஒப்பந்தத்தில் இணைந்ததே!

இந்தியாவில் அண்மைக் காலங்களில் ஏற்பட்ட மும்பை, கோவா புயல்கள்,  சென்னை, கேரள வெள்ளம் போன்றவை இவற்றிற்குச் சான்று. இவ்வனர்த்தங்களின் தீவிரத் தன்மை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. வெப்பமண்டல நாடுகளில் டெங்கு போன்ற நோய்கள் தீவிரமாய் பரவும் ஆபத்தும் அதிகரித்துள்ளன.

இவ்வாறான அனர்த்தங்களை உலகு எதிர்நோக்க வேண்டி இருப்பினும் போக்குவரத்து,  உற்பத்தி, கட்டுமான, விண்வெளி பயணதுறை சார்ந்த நிறுவனங்கள் புதை படிவு எரிபொருள் பாவனையை எவ்வாறு தவிர்க்கலாம் என சிந்தித்து செயலாற்ற முனைவது ஒரு வரவேற்கத்தக்க மாற்றமே.

பருவநிலை  மாற்றம் சம்பந்தமாக ஆஸ்திரேலியாவின் நிலைப்பாடு சுவாரசியமானது. அந்நாட்டின் பிரதமர் ஸ்கோட் மொறிசன் ஒரு பருவநிலை மாற்ற மறுப்பாளியாகவே இருந்து வந்தார். அவர் போகுமிடமெல்லாம் எதிர்ப்பாளர்கள் கூடி கூக்குரலிடுவது  வழக்கம்.  ஆளும் கட்சியான லிபரல் கட்சி தன் பங்காளிக் கட்சியான  நேஷனல் கட்சியுடன் கூட்டணி அமைத்தே ஆட்சி பீடம் அமைத்தது. நேஷனல் கட்சியின் பெரும்பான்மை அங்கத்தினர்களும் வாக்காளர்களும்  விவசாயிகளே.  கால்நடை வளர்ப்பு இவர்களின் தொழில்களில் ஒன்று. இக்கால்நடைகள் வெளியேற்றும் மீதேன் வாயுவும் ‘பசுமை இல்ல’ வாயுக்களில் ஒன்று. எனவே,  பூஜ்ஜிய உமிழ்வு இலக்கை அடையும் வேட்கையில் கைகோர்த்தால் பல விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படலாம். எனவேதான் பிரதமர் மொறிசன் 2050 இன் உமிழ்வு இலக்கை அறிவிக்க தயக்கம் காட்டினார். ஆனால் COP26  மகாநாட்டிற்கு போவதற்கு பெட்டியடுக்கும் முன்னர்தான் பூஜ்ஜிய  இலக்கிற்கு சம்மதித்தார்.  நேசனல் கட்சிக்கு ஒரு மேலதிக பாராளுமன்ற  ‘கேபினட்’  ஆசனத்தை வழங்கியதன் மூலம் அவர்களும் உருவிய வாளை உறையில் போட்டனர்.  ஆம், எந்நாட்டு அரசியலிலும் “நாம ஆடுவதும் பாடுவதும் காசுக்கு” தான்!

பருவநிலை மாற்றத்தின் பாதிப்புகளை உலகிற்கு எடுத்துரைக்க பல பிரபலங்கள் முன் வந்திருந்தாலும் சுவீடனைச் சேர்ந்த இளம் சிறுத்தை கிரேட்டாதுன்பெர்க்கை பற்றிச் சொல்லித்தான் ஆகவேண்டும். 15 வயதே நிரம்பிய இச்சிறுமி 2018ல் அந்நாட்டு பாராளுமன்றத்திற்கு வெளியே பருவநிலை மாற்ற விழைவுகளை வலியுறுத்தும் கோஷங்களை எழுப்பி தன் நீண்ட போராட்டத்தை தொடங்கிவைத்தார்.

இன்று அனைத்துலகும் இளம் சமுதாயத்தின் பருவநிலை மாற்ற பிரதிநிதியாக இவரைப் பார்க்கின்றன. இவர் பல உலக மேடைகளில் நிகழ்த்திய அனல் பறக்கும் பேச்சுக்களை கேட்க புல்லரிக்கும்!

2019 ஐக்கிய நாடுகள் சபையின் ‘பருவநிலை நடவடிக்கை’  (Climate Action Summit)  மகாநாட்டில் இவர் உலக அரசியல் தலைவர்களை நோக்கி ” என்ன துணிவிருந்தால்…..” (How dare you?) என முழங்கியதை எப்படி மறக்க முடியும்?

அதேபோல், இந்த ஆண்டு தமிழ் நாட்டு மாணவி வினிஷா  உமா சங்கர்  மிக உணர்ச்சிகரமாக பேசியிருக்கிறார்.

தலைவர்களே செயலில் ஈடுபட தொடங்குங்கள்!

மாநாட்டில் நிகழ்வு ஒன்றில்  கலந்து கொண்டு பேசிய தமிழகத்தைச் சேர்ந்த சிறுமி வினிஷா உமாசங்கரின் உரை அனைவரையும் கவர்ந்தது.

தமிழகத்தின் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் வினிஷா உமாசங்கர்.  சுற்றுச் சூழலுக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க சூரிய மின்சக்தியில் இயங்கும் தெருவோர இஸ்திரி வண்டியை  உருவாக்கி கவனம் பெற்றவர் வினிஷா. இங்கிலாந்து இளவரசர் வில்லியம்ஸ்  தொடங்கிய எர்த்ஷாட் விருதுக்கான இறுதிப் போட்டிக்கு தேர்வானவர்களில் வினிஷாவும் ஒருவர்.

மாநாட்டில்  தூய்மை தொழில்நுட்பம் குறித்து  பேச வினிஷாவுக்கு இளவரசர் வில்லியம்ஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில் மாநாட்டில் கலந்துக் கொண்டு வினிஷா கூறியதாவது:-

“இன்று நான் உங்கள் அனைவரிடமும் மரியாதையுடன் கேட்டுக் கொள்கிறேன். பேசுவதை நிறுத்திவிட்டு செயலில் ஈடுபடத் தொடங்குங்கள்.  புதை படிவ எரிபொருள்கள், புகை மற்றும் மாசுபாடு ஆகியவற்றில் கட்டமைக்கப்பட்ட பொருளாதாரத்திற்கு பதிலாக எர்த்ஷாட் பரிசு வென்றவர்கள் மற்றும் இறுதிப் போட்டியாளர்களான  எங்களின் கண்டுபிடிப்புகள், திட்டங்கள் மற்றும் தீர்வுகளை நீங்கள் ஆதரிக்க வேண்டும்.

பழைய விவாதங்களைப் பற்றி சிந்திப்பதை நிறுத்த வேண்டும். ஏனென்றால் புதிய எதிர்காலத்திற்கான புதிய பார்வை நமக்குத் தேவை. எனவே, எங்களுடைய எதிர்காலத்தை வடிவமைக்க உங்கள் நேரத்தையும் பணத்தையும் முயற்சியையும் எங்களிடம் முதலீடு செய்ய வேண்டும். எங்களுடன் சேர உங்களை அழைக்கும் போது, ​​நீங்கள் இல்லாவிட்டாலும் நாங்களே வழிநடத்துவோம். தாமதித்தாலும் நடவடிக்கை எடுப்போம். நீங்கள் கடந்தகாலத்தில் சிக்கிக் கொண்டாலும், எதிர்காலத்தை நாங்கள் உருவாக்குவோம் என்று நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன். தயவுசெய்து எனது அழைப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும்.  நீங்கள் ஏற்றுக்கொள்ள மறுக்க மாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

எனது தலைமுறையில் பலர் வெற்று வாக்குறுதிகளை அளித்து நிறைவேற்றத் தவறிய தலைவர்கள் மீது கோபமும் விரக்தியும் அடைந்துள்ளனர். மேலும் நாங்கள் கோபப்படுவதற்கு எல்லா காரணங்களும் உள்ளன. ஆனால், எனக்கு கோபம் கொள்ள நேரமில்லை. எனக்கு செயல்பாடு முக்கியது. நான் இந்தியாவைச் சேர்ந்த பெண் மட்டுமல்ல; பூமியைச் சேர்ந்த பெண்ணும்தான்.  நான் அப்படி இருப்பதில் பெருமைப்படுகிறேன்” என்று பேசினார்.

இவ்வாரம் COP26 மகாநாட்டில் பிரதமர் மோடி பருவநிலை மாற்றத்துக்கு கூட்டு முயற்சி மூலமே தீர்வுகாண முடியும் என்றும் 2070இல் இந்தியா பூஜ்ய உமிழ்வு இலக்கை அடையும் என்றும் அறிவித்தார். இந்த இலக்கை அடைய 5 வாக்குறுதிகளையும் வழங்கினார். அதில் 2030 ஆம் ஆண்டளவில் ‘புதுப்பித்த எரிசக்தித் திறனை’ (Renewable energy) 500 கிகாவாட்டாக அதிகரிக்கவும், அது எரிபொருள் தேவையின் 50% ஐ பூர்த்தி செய்யும் என்றும் அறிவித்தார். மேலும் 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா தனது கரியமில உமிழ்வில் 1 பில்லியன் டன் அளவைக் குறைக்கும் எனவும் அது பொருளாதாரத்தின் 45% கரியமில சார்பை குறைக்கும் எனவும் கூறினார்.

மற்றய நாடுகளும் தம் இலக்குகளை இம்மகாநாட்டில் விரைவில் அறிவிக்கும் என்பது உறுதி. மேலும் இந்த மகாநாட்டின் முடிவில் எல்லா நாடுகளும் கூட்டாக ஒரு அறிக்கையை வெளியிடுவதுடன் ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் சாத்தியங்களும் உண்டு.

ஆனால், ஐ.நா. சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோகூட்டரெஷ் விடுத்துள்ள எச்சரிக்கை நம் எல்லோர் மனதிலும் உளி கொண்டு செதுக்கப்பட வேண்டிய ஒன்று!

இப்போது நாம் இதை நிறுத்தா விட்டால், அது நம்மை நிறுத்தி விடும். ’போதும்’ என்று கூறுவதற்கு இதுவே நேரம். கார்பன் மூலமாக நம்மை நாமே கொல்லும் காலம் முடிவுக்கு வந்து விட்டது. “எரிபொருளை ஆழமாக நாம் தோண்டிக் கொண்டே இருந்தால், நமது சவக்குழியைத் தோண்டுகிறோம் என்றே பொருள்!”, இதைவிட வேறு என்ன எச்சரிக்கை தேவை?

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

சோஃபா திருடன் 

சுஜாதா தேசிகன்                                             ...

உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?

0
வாசகர் கேள்வியும் - வல்லுநர் பதிலும்   உடற்பயிற்சியால் மாரடைப்பு ஏற்படுமா?       - சந்திர மோகன், வேலூர். வாசகர் கேள்விக்கு பதிலளிக்கிறார் பொதுநல மருத்துவர்  கு. கணேசன்   உடற்பயிற்சிகளால் மாரடைப்பு ஏற்படுவதற்குச் சரியான காரணங்கள் இதுவரை வரையறுக்கப்படவில்லை....

சின்னத்திரை தொடரை, பெரிய திரையில் பார்க்கும் உணர்வு

0
முகநூல் பக்கம்     பட விமர்சனம்    படத்தின் கதை ஏற்கெனவே தமிழ் சினிமாவில் அடித்து துவைத்த கதைதான். ஆனால் திரைக்கதையும் மிகவும் பழசாக இருக்கிறது. ஓல்டு ஒயின் நியூ பாட்டில் என்பார்கள். ஆனால் கதைதான் பழையது என்றால்,...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
வாசகர் ஜோக்ஸ் ஓவியம் : ரஜினி     “உன் மாமனார் உன்னோட பிறந்தநாள் பரிசாக கார் வாங்கித் தந்தும் ஏன் வெளியே எடுப்பதே இல்லை?” “அட, பெட்ரோல் வாங்கித் தந்தாலும் பரவாயில்லை... காரை நான் வாங்கியிருப்பனே?” - சி.ஆர். ஹரிஹரன்,...

ஃபேஸ்புக்கின் பெயர் மாற்றப்பட்டிருக்கிறதா?

0
 - ஹர்ஷா “முகநூல் இன்றி இல்லை உலகு” என்று சொல்லும் அளவிற்கு  இன்று அது பலகோடி மக்களின் வாழ்க்கையில் அவசியமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களில் முன்னணி நிறுவனமாக விளங்கும் ஃபேஸ்புக்கை, உலகம் முழுவதும் மொத்தம் 285...