0,00 INR

No products in the cart.

ரத்தம் கக்கும் மெட்ராஸ்…!

– ஜெயராமன் ரகுநாதன்               

 

டேடே!  பீதியெல்லாம் அடைய வேண்டாம். இது ஒண்ணும் ரத்தக் காட்டேரி, மோகினிப் பிசாசு போன்ற அமானுஷ்ய சமாசாரமெல்லாம் இல்லை. பேர் என்னவோ ரத்தம் கக்கும்தான், என்ன, இது ஒரு வகையான துணிக்குப் பேரு, ஆங்கிலத்தில் சொன்னால் “Bleeding Madras” என்று கௌரதையாகத் தொனிக்கிறதா இல்லையா!  மெட்ராசுக்குப் பேர் வாங்கித்தந்த துணி!

பொறுமையாச் சொல்லலாம்!

1600களில் கிழக்கிந்தியக் கும்பெனி முதலில் ‘ஆர்மகான்’ என்னும் இடத்தில் டேரா போட்டு தம் ஏற்றுமதித் தொழிலைத் தொடங்கினர். அவர்கள் ஏற்றுமதி செய்தது அங்கேயே தயாரிக்கப்படும் துணி வகைகளைத்தான். அதென்ன ‘ஆர்மகான்’ என்றால் அது சுவாரஸ்யம்.

ஆங்கிலேயர்கள் துர்க்கராஜப்பட்டினத்துக்கு வந்து அங்கே செயலாக இருந்த பெரிய மனுஷர்களாகிய ராஜகோபால நாயுடு மற்றும் பட்டினஸ்வாமுல ஆறுமுகம் முதலியாரைச் சந்தித்து கோட்டை கட்ட இடம் வேண்டி மிரட்டினர். அவர்களும் வெங்கடகிரி ராஜாவுக்குச் சொந்தமான இடத்தை அவர்களுக்கு வாங்கிக்கொடுக்க, அந்த ஆறுமுக முதலியாருக்கு கௌரவமாக ஆங்கிலேயர் அவ்விடத்தை ‘ஆர்மகான்’ என்று அழைத்தனர்.

அங்கிருந்து ஏற்றுமதியான துணி வகைகள் அவ்வளவு நன்றாக இல்லையென்பதால் வெளிநாட்டில் அவற்றை “அடாஸு” என்று ஒதுக்கிவிட, இங்கே கிழக்கிந்திய கும்பெனி ஆசாமிகளுக்கு எப்படியானும் நல்ல துணி வகைகளைக் கண்டு, வாங்கி, ஏற்றுமதி செய்ய வேண்டிய நிர்ப்பந்தம். மெதுவாக அவர்கள் இன்றைய மெட்ராசுக்கு வந்து கோட்டை கட்டி சுற்று வட்டாரத்தில் ‘கறுப்பர்கள் டவுன்’ என்று தொடங்கினதின் தாத்பர்யமே மெட்ராசுக்கு வெளியே அருமையான துணி நெய்துகொண்டிருந்த நெசவாளர்களைக் கவர்ந்து இங்கே குடிபுகச் செய்யும் முயற்சிதான்.

ஆரம்பத்தில் கும்பெனிக்காரர்கள் மலிவான பருத்தித் துணிகளையும் சாயமிடாத மெல்லிய மஸ்லின் துணிகளையும் வாங்கி இங்கிலாந்துக்கு அனுப்பினர். ஆனால் விரைவிலேயே நமது நெசவுத் தொழிலாளர்களில் அதீத திறமை அவர்களின் கண்ணிலிருந்து தப்பவில்லை. அருமையாக நெய்யப்பட்டு சீராக சாயமிடப்பட்ட உயர்தர தொழில் நேர்த்திகொண்ட துணி வகைகள் இருப்பதைக்கண்டு அவற்றை ஏகபோகமாகக் கொள்முதல் செய்து அனுப்பியதில் கும்பெனிக்கு லாபம் மட்டுமின்றி அவ்வகை துணிகளுக்கு ‘மெட்ராஸ் துணி’ என்ற பெயரே சூட்டப்பட்டு பிரபலமாகியது.

இந்த மெட்ராஸ் துணியானது முதலில் கைகளால் நெய்யப்பட்டு அழகழகான எம்பிராய்டரியில் விதவிதமான டிசைன்களாக செய்யப்பட்டன. கொஞ்ச காலத்திற்குப் பிறகு இன்னும் நேர்த்தியான பிரிண்ட்டுகளில் வண்ண வண்ண துணிகள் தயாரிக்கப்பட்டன. சிவப்பும் நீலமும் அதிகம் கொண்ட இவ்வகைத் துணிகளுக்கு இங்கிலாந்திலும் ஐரோப்பாவிலும் ஏக கிராக்கி கூடியது. சுத்தமான நிலத்தடி நீரை கொதிக்க வைத்து சாயங்கள் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு நிலத்துக்கும் ஏற்றார்போல சாயங்களும் தனித்தன்மை கொண்ட வண்ணமாக மிளிர்ந்தன. அரிசிக் கஞ்சியை வைத்து சாயங்களைத் துணிகளில் இழைத்து இழைத்து உருவாக்கப்பட்ட துணிமணிகளால் கும்பினியின் விற்பனை வானெட்டியது, லாபமும் கூடத்தான்!

ன்னதான் கும்பினிக்காரர்கள் இதை ஏற்றுமதி செய்தாலும் அதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் நெசவாளர்கள் இது மாதிரி துணிகளை நெய்து வெளிநாடுகளுக்கு அனுப்பிய சரித்திரம் உண்டு. முதலில் சாதாரணர்கள் உடுத்தும் துணியாக இருந்தாலும் இங்கிலாந்து மாமன்னர் ஐந்தாம் ஜார்ஜ் ஸ்காட்லாந்துக்குப் போனபோது இவ்வகைத் துணிகளைக் கண்டு மோகம் கொண்டுவிட்டார்.

பிறகென்ன, அடித்தது யோகம்!

பின்னாட்களில் எலியாஹு ஏல் கவர்னராக இருந்தபோது அவர் அடித்த கொள்ளையில் – அடிமை வியாபாரத்தில் அவர் கொழித்தார் என்னும் கிசுகிசு அப்போதே உண்டு. பெரும்பங்கை அமெரிக்காவின் பல்கலைக்கழகத்துக்கு நன்கொடையாக அளிக்கப்போய், ஏலின் பெயர் கொண்ட அந்தப் பல்கலைக்கழகம் இன்று ஐவி லீக் எனப்படும் பல்கலைக்கழகமாக இருப்பதை நாமறிவோம். அப்படி ஏல் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்த பல விஷயங்களில் இந்த மெட்ராஸ் துணி வகையும் உண்டு. அது அமெரிக்காவில் பித்துப் பிடித்தாற்போல பற்றிக்கொண்டுவிட்டது. அமெரிக்காவின் ஏகப்பட்ட டிமாண்டுக்கு மெட்ராஸ் துணி ஏற்றுமதியாகியது. 1897லேயே ஸியர்ஸ் (Sears)என்னும் பெரும் வியாபார நிறுவனம் அமெரிக்காவில் நம் மெட்ராஸ் துணியைத் தம் வியாபார அட்டவணையில் (catalogue) பிரசுரித்து விற்பனை செய்தது என்றால் பாருங்களேன்!

இதற்கெல்லாம் கிளைமாக்ஸ் 1958இல் நடந்தது.

தவிர்க்க முடியாமல் ஒரு தவறு ஏற்பட்டுவிட, இங்கிருந்து அமெரிக்காவுக்குப் போன 10,000 கஜம் துணி சாயம் போகப்போகிறது என்பதை அறிந்துக்கொண்ட மெட்ராஸ் வியாபாரி, அமெரிக்காவில் உள்ள தன்னுடைய கஸ்டமரான புரூக்ஸ் பிரதர்சுக்கு (Brooks Brothers)தெரிவித்து விட்டார். அதற்குள் பல அமெரிக்க வாடிக்கையாளர்கள் தம் கோட், பாண்ட், ஜாக்கெட் எல்லாம் மெதுவாக நிறமிழப்பதாக புகார் செய்ய ஆரம்பித்தனர். புரூக்ஸ் பிரதர்ஸ் உடனே தங்களின் அமெரிக்க ஏஜண்ட்டான ’நாயர்’ என்பவரை அழைத்து தண்டனை பற்றிப் பேச முயலுவதற்கு சில நாட்களுக்கு முன்பே நாயர் சாமர்த்தியமாக அன்றைய அமெரிக்காவின் சஞ்சிகை ஒன்றில் பேட்டி அளித்தார்.

”இந்த முறை தாம் வரவழைத்த மெட்ராஸ் துணி அபூர்வ சக்தி வாய்ந்தது என்றும், அது மெதுவாக தன் நிறமிழந்து துணியின் பார்வைக்கு அழகு சேர்க்கும் அற்புதம்” என்று சொல்லிவிட, இது அங்கே தீயாய்ப் பற்றிக்கொண்டது. பெரும்பாலான துணிகள் சிவப்பு நிறமானதால் அவர்கள் இதை “ரத்தம் கக்கும் மெட்ராஸ் துணி” (Bleeding Madras) என்று விளம்பரிக்கத் தொடங்கினர். அமெரிக்க வியாபாரிகள் எல்லாம் ”சுத்தமான காரண்ட்டிங்க! நிச்சயம் சாயம் போகும்” என்று விற்க வேண்டியதாயிற்று!

ஸ்திரமில்லாத சாயம் போகும் மெட்ராஸ் துணி ஏற்றுமதியைக் குலைக்கப் போகிறது என்று எல்லோரும் பயந்த சமாசாரமே பிரபுக்களின் ஃபாஷனாகி மிக அதிக விற்பனை வெற்றிக்கு கரணமாகிப்போன சுவாரஸ்யம் தான் நம் “ரத்தம் கக்கும் மெட்ராஸ் துணி!”

தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டு லாபமடையவேண்டும் என்பது தாண்டி, தவறையே லாபமாக்கிவிட்ட சுவாரஸ்யம்தான் ரத்தம் கக்கும் மெட்ராஸின் கதை!

ரகுநாதன்
எழுத்தாளர் ஜெ.ரகுநாதன் வெற்றிகரமான சார்ட்டட் அக்கவுண்டண்ட் CA - இந்திய கார்ப்பரேட் உலகில் பல உயர் பதவிகள் வகித்தவர். பல சிறுகதைகளும், கட்டுரைகளும் தமிழ் முன்னணி இதழ்களில் எழுதி இருக்கிறார். தகவல் தொழில்நுட்பம் குறித்து இரண்டு வருடங்கள் கல்கியில் கட்டுரைகளும், 108 திவ்ய தேசங்கள் குறித்தும், பொருளாதாரம் குறித்துப் பல கட்டுரைகளும், சுய முன்னேற்றக் கட்டுரைகளும் பல இதழ்களில் எழுதியுள்ளார். மூன்று மேடை நாடகங்களை ஜெ.ரகுநாதன் எழுதி அவை வெற்றிகரமான முறையில் தியேட்டர் மெரினாவால் பலமுறை அரங்கேற்றப்பட்டு இருக்கின்றன. சமூக நாவல், மாய யதார்த்த வகை நாவல் ஒன்றையும் எழுதியிருக்கிறார்.

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

அப்பா, அம்மாவைத் தேடியபோது கிடைத்த அக்கா

1
- மோகன்   கோவையில் 1970களில் ப்ளூ மௌண்டேன் என்கிற ஆதரவற்றோர் இல்லத்தை மேரி காத்தரீன் என்பவர் நடத்தி வந்துள்ளார். அங்கு விஜயா, ராஜ்குமார் என்கிற இரு குழந்தைகளை அவர்களின் பெற்றோர்கள் சேர்த்துள்ளனர். விஜயாவும் ராஜ்குமாரும்...

ஆழ்ந்த அஞ்சலி என்று எளிதில் விலகிவிட முடியாது …

3
அஞ்சலி  குமுதம் குழுமத்தில் 30 ஆண்டுகளாகத் தொடர்ந்து பணியாற்றி வந்த அதன் ஆசிரியர் பிரியா கல்யாணராமன் அண்மையில் காலமானார்.  அவரைக் குறித்து அவரது நண்பரும் எழுத்தாளாருமான பாரதிபாலன்...   பாரதி பாலன்  அது 1987 குமுதம் ஆசிரியர்...

இந்த  நாற்காலி மட்டும் ஏன் இவ்வளவு உயரம்?

0
  வினோத்   டென்மார்க் நாட்டில் கோபன்ஹேகன் நகரில் பார்க்குகளில், பெரிய  தெருக்களில் இப்படி உயரமான பெஞ்சுகளை  அமைத்திருக்கிறது  ஒரு டி.வி சானல் நிறுவனம். முதலில் ஏதோ டிவி  ஷூட்டிங் என்று பலர் நினைத்துக்கொண்டிருந்தனர். ஆனால், அருகில் சென்று...

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

1
நேர் காணல் ''எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்''   ஸ்வர்ண ரம்யா   ‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும்...

வட்டத்துக்குள் சதுரம்

- செல்லம் சேகர்   இப்படியும் சேமிக்கலாம்...! செலவை சுருக்காமல் வருமானத்தை பெருக்குவதன் மூலம் சேமிக்கலாம். நம் தந்தை காலத்தில் எதை அனாவசியம் என்று நினைத்தோமோ அதெல்லாம் இன்று அத்தியாவசியம் என்று நினைக்க தோன்றுகிறது ... அது நம்மை...