0,00 INR

No products in the cart.

சோஃபா திருடன் 

சுஜாதா தேசிகன்                                               

 

சூர்யா தயாரித்து, நடித்துள்ள ‘ஜெய் பீம்’ திரைப்படத்தை மொபைலை சீண்டாமல் ஒரே சிட்டிங்கில் பார்த்து முடித்தேன். உண்மைச் சம்பவத்தைத் தழுவிய படத்தில் வரும் காவல்துறை சித்திரவதைக் காட்சிகளை ‘பார்க்காதே பார்க்காதே’ என்று உள்மனம் எச்சரித்தாலும், இன்னொரு ஓரத்தில் ‘பார் பார்’ என்று உசுப்பேற்றிப் பார்க்க வைத்தது. படம் பார்த்த பின்பும் மனதைப் பிசைந்தது. ஆனால், அதே சூர்யா ‘காக்க காக்க’ படத்தில் துப்பாக்கியை வெளியே எடுக்கும் போதே அடுத்து  ‘என்கவுண்டர்’ என்று புரிந்துகொண்டு மக்கள் கைத்தட்டினார்கள்.

போலிஸ் அடிகளை (இதுவரை) வாங்காவிட்டாலும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.

இளம் பிராயத்தில் திருச்சியில் பல இல்லங்கள் அடங்கிய  காம்பவுண்டுக்குள் வசித்து வந்தோம். காவல் துறை உயர் அதிகாரி பக்கத்து வீட்டில் இருந்தார். சில வீடுகள் தள்ளி நீதிபதியின் இல்லம், அதற்கு அருகில் ’போலிஸ் கிளப்’ என்ற மாடி வீடு. அதில் பெரும்பாலும் காவல் துறை அதிகாரிகள் ’புகைசூழ’ ஓய்வு எடுத்துக்கொண்டு இருப்பார்கள்.

நாங்கள் அடிக்கும் சிக்ஸர் பந்துகள் இந்த போலிஸ் கிளப் மாடிக்குச் சென்றுவிடும்.
படி ஏறி மேலே சென்று ஆளுயர சாராயப் பானைகளுக்கு இடையே பந்துகளைத் தேடும்போது கைதிகளின் ஓலம் கேட்கும். கதவு இடுக்கு வழியாக பார்க்கும்போது சங்கிலியால் பிணைக்கப்பட்டு ‘ஐயா… அம்மா’ என்று வாயில் எச்சில் ஒழுக கதறும் கைதிகளை வேர்த்து ஊத்தும் முண்டா பனியன் காவல்துறை அதிகாரிகள் அடிப்பதைப் பார்த்திருக்கிறேன். அடிவாங்காத சமயம் கைதிகள் பருப்பும், சோறும் கலந்த பதார்த்தத்தை அலுமினியத் தட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் காட்சிகளை பார்க்கும்போது பரிதாபமாக இருக்கும்.

ஒருமுறை நாங்கள் அடித்த பந்து கிளப் எதிரே குப்பை நிறைந்த கிணற்றில் விழ, அதை வாளி உதவியுடன் எடுக்கும்போது குப்பைகளுக்கு இடையே குப்புறப்படுத்த பிணம் ஒன்று மேலே வர, நாங்கள் பயந்துகொண்டு ஓடினோம்.

தீயணைப்பு வீரர்கள் அந்த அழுகிய பிணத்தைக் கட்டில் கொண்டு வெளியே எடுத்தபோது முகம் சிதைந்த கண் இல்லாத அதை பார்த்திருக்கிறேன். அதற்குப் பிறகு பந்தைக் கிணற்றில் அடித்தால் அவுட் என்று எங்கள் கிரிக்கெட் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, இரவு கிணற்றுப் பக்கமாக கடைக்குப் போவதை தவிர்த்தோம்.

இதையெல்லாம் சொல்லுவதற்கு காரணம்,  இவ்வளவு பிரசித்திப் பெற்ற காம்பவுண்டுக்குள் அமைந்துள்ள எங்கள் வீட்டு வராந்தாவில் செட் தோசை போல ஒன்றாக இருந்த சோஃபா செட் காணாமல் போனது. எங்கள் தாத்தா இருந்த வரை காலையில் அதில் உட்கார்ந்து செய்திதாள் படிப்பார். அது சோழர் காலத்து சோஃபா என்பதற்கு இன்னொரு சான்று, அதை ஓர் இஞ்ச் நகர்த்த எடுபிடி ஆள் தேவை.

ஒரு நாள் காலை சோஃபாவைக்  காணவில்லை. இரவு யாரோ சிலர் களவாடிப் போனார்கள். பக்கத்து வீட்டுக் காவல் அதிகாரியிடம் விஷயத்தைச் சொன்னோம். காவல் நிலையத்தில் ஒரு புகார் கொடுக்கச் சொன்னார்.

100 அடி தூரத்தில் இருந்த காவல் நிலையத்தில் எஸ்.ஐ. ஆச்சரியப்பட்டு, “எப்படி சார்  இவ்வளவு பெரிய சோஃபா செட்டை எடுத்துக்கொண்டு போகும் வரை வீட்டில் தூங்கிட்டு இருந்தீங்க” என்றார்.

“இத்தனைக்கும் வீட்டுப்பக்கம் போலிஸ் ஸ்டேஷன் வேற இருக்கு” என்றார் என் அப்பா.

“காவல் அதிகாரியின் பக்கத்து வீட்டு சோஃபா” என்ற பிரஷர் காரணமாக இருக்கலாம்.  திருடனை ஒரு வாரத்தில் பிடித்தார்கள். சோஃபா செட்டில் ஒன்றை மட்டும் மீட்டெடுத்தார்கள். கான்ஸ்டபிள் ஒருவர் சோஃபா கிடைத்த விஷயத்தை என் அப்பாவுக்குச் சொல்லி ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.

காவல் நிலையத்தில் என் அப்பா லாக்கப்பில் அடைப்பட்டு, உதைப்பட்ட கைதியிடம்
“நீ ஒரு ஆளாக எப்படித் தூக்கினே? இன்னொரு சோஃபாவை என்ன செய்தாய்?  இனிமே இப்படித் திருடாதே”  என்று அவனிடம் குசலம் விசாரித்து அறிவுரை கூறி, அவனுக்கு இருபது ரூபாய் கொடுத்துவிட்டு போலிஸிடம் “அவன் மீது கேஸ் எதுவும் போட வேண்டாம். பாவம், அவனை விட்டுவிடுங்கள்!” என்று சொல்லிவிட்டு ஒத்தை சோபாவை வண்டியில் ஏற்றிக்கொண்டு வீடு திரும்பினார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஸ்ரீரங்கம் கதைகள், ஓவியங்கள், சன்மானம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு நாள் எழுத்தாளர் சுஜாதா ‘ஸ்ரீரங்கத்துத் தேவதைகள்’ மாதிரி இன்னொரு செட் எழுத உத்தேசம். அவ்வப்போது சில குறிப்புகளை எழுதி வைத்திருக்கிறேன் ஒரு பத்து, பன்னிரண்டு கதை தேறும்...

இதில் கூட பிரிபெய்ட் வந்துவிட்டது!

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் செய்தித்தாளில் தினமும் சாவைப் பற்றிய செய்திகள், நினைவு அஞ்சலி என்று சிரஞ்சீவியாக இருப்பது மரணம் என்று நினைக்கிறேன். எனக்கு யாரைக் கண்டாலும் பயமே இல்லை என்று சொல்லுபவர்கள் சாவிற்குப்...

“கில்லி விஜய் மாதிரி இந்த வேலை எல்லாம் எதற்கு உங்களுக்கு ?”

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் ஒரு வார்த்தை ! சில நாட்கள் முன் இந்த செய்தி கண்ணில் பட்டது. “ராணிப்பேட்டை அருகே, தெரியாமல் பைக்கில் இடித்த கார்.. நண்பர்களை வரவழைத்து காரில் இருந்தவரை சரமாரியாக தாக்கிய நபர்’ இது...

சைடு பெட்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் நான் பள்ளிச் சிறுவனாக  படித்த காமிக்ஸ் புத்தகம் ஒன்றை நேற்று படித்துக்கொண்டு இருந்தேன்.( நம்புங்கள் இன்னும் என்னிடம் இருக்கிறது! )  சிறுவனாக அன்று படித்த அதே அனுபவம் நேற்றும்...

இன்னும் எத்தனை காலம் தான் ….

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் தலைப்பை படிக்கும் போது ‘ஏமாற்றுவார்’ என்ற வார்த்தை உங்கள் மனதில் இந்நேரம் உதித்திருந்தால் தொடர்ந்து படிக்கலாம். சென்ற ஆண்டு ‘ஹர்ஷிதா’ என்ற பெண் பழைய சோபாவை ஆன்லைன் மூலம் விற்பனை...