கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்…

கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம்…
Published on
நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 ? பெட்ரோல் விலையைக் குறைத்திருக்கிறார்களே?
– சண்முகசுந்தரம், நெய்வேலி
! கண் கெட்டபின் சூரிய நமஸ்காரம். மாநில இடைத்தேர்தல்களுக்கு முன் செய்திருந்தாலாவது சில இடங்களைப் பெற்றிருக்க முடியம்.

? சென்னை பெருமழையில் ஸ்டாலின் செயல்பாடு?
– சரஸ்வதி நாகராஜன், கண்ணகி நகர்
! கடந்த 2015-ம் ஆண்டு டிசம்பர் முதல் நாளில் திடீரென முன்னறிவிப்பின்றி 30 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டதுதான் சென்னையின் பேரழிவுக்குக் காரணமானது. அப்போது சென்னையில் ஒரு மாத காலமாகத் தொடர் மழை பெய்தது. ஆனாலும் ஏரிகளின் கொள்ளளவு, நீர் வரத்தில் கவனம் செலுத்தாததால், சென்னையில் வெள்ள அசம்பாவிதம் நடந்தது. இந்த ஆண்டில், முதல்வர் ஸ்டாலின் நேரடியாகக் களமிறங்கி, வெள்ளச்சேதப் பகுதிகளை ஆய்வு நடத்துகிறார். அமைச்சர்கள், அதிகாரிகளை முடுக்கிவிடுகிறார்கள். சென்னைக்காக 15 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்துள்ளார். நம்பிக்கையளிக்கும் விதமாகச் செயல்பாடுகள் இருக்கின்றன என்றாலும், 2015 வெள்ளத்தில் அனுபவப்பட்டபின், வெள்ளச்சேதத்திலிருந்து சென்னையைக் காப்பாற்றுவது குறித்து நிறையப் பேசப்பட்டாலும், கடந்த 6 ஆண்டுகளில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இனியாவது இதற்கான நீண்டகாலத் தீர்வு குறித்து தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும்.

 ? எனக்காகக் 'கேக் வெட்டாதீர்கள்'… அந்தப் பணத்தில் 'கிணறு வெட்டுங்கள்' என்கிறாரே கமலஹாசன்?
– ஆர். மாதவராமன், கிருஷ்ணகிரி
! வழக்கம்போல் புரியாத பாஷையில் பேச ஆரம்பித்து விட்டார். கேக் வாங்கும் பணத்தில் கிணறு வெட்ட முடியுமா? அல்லது கேக் கிணறு சைஸில் இருக்குமா?

  ? 'என் பாதை வேறு; சசிகலா பாதை வேறு;  இலக்கு ஒன்றுதான்' என்று டி.டி.வி. தினகரன் கூறியுள்ளாரே?
– மகாலட்சுமி, திண்டுக்கல்
! பாதைகள் வேறு வேறாக இருப்பதில் தவறில்லை. ஆனால் பின்னால் தொண்டர்கள் வருகிறார்களா
என்று பார்க்காமல் பயணம் செய்வதுதான் தவறு.

  ? "இந்துக்கள் பண்டிகைக்குத் தி.மு.க. வாழ்த்து சொல்வதில்லை; அதனால் இந்துக்கள் தி.மு.க.வுக்கு வாக்களிக்கக் கூடாது" என்கிறார் காயத்ரி ரகுராம். "ஸ்டாலின் மன்னிப்பு கேட்க வேண்டும்" என்கிறார் ஒன்றிய அமைச்சர் முருகன்?
– கணேசன், வாணியம்பாடி
! அப்படியானால் இஸ்லாமியர்கள் பா.ஜ.க.விற்கு வாக்களிக்காததற்குக் காரணம், மோடி இஸ்லாமியர்களின் பண்டிகைகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்காததா காரணம்? 'ஏன் தங்களுக்கு ஓட்டுப்போட வேண்டும்' என்று சொல்ல முடியாத அரசியல் கட்சிகள்தான், ஏன் மற்ற கட்சிக்கு 'ஓட்டுப் போடக்கூடாது' என்று சொல்லும்.

 ? "அ.தி.மு.க.வை மீட்கும் நாள்தான் நமக்கெல்லாம் உண்மையான தீபாவளி" என்று சசிகலா கூறியுள்ளாரே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான்குளம்.
! 'யாரிடமிருந்து' என்று சொல்லவில்லை என்பதைக் கவனித்தீர்களா?

 'ஜெய் பீம்' படத்தில் லிஜோமோல் நடிப்பு எப்படி?
– ஆ. நெல்லைகுரலோன், நெல்லை
! மிகச் சிறந்த நடிப்பு என்பது நடித்தவர் வெளித் தெரியாமல் அந்த குணவார்ப்பே
முழுமையாய் வெளிப்படுவது. இவ்வாறு ஒரு நடிகர் நடித்துள்ளார் என்கின்ற நினைவுற்றுப்போய் ஆழ்ந்து நம்மைப் பார்க்க வைப்பது. 'இன்ன நடிகர் இன்னவராய் நடிக்கிறார்' என்ற அடையாளத்தோடு பார்ப்பதே நம்முடைய திரைப்படப் பார்வை. அந்த அடையாள மயக்கத்தை முழுமையாய்க் கலைத்து கதையாளாகவே மாறிப்போகின்ற நடிப்பை இந்தப் படத்தில் பார்க்கிறோம். இதற்காக அந்த மலைக் கிராமத்தில் அந்த மக்களின் நடை, உடை, பேசும் மொழியின் உச்சரிப்பு எல்லாவற்றையும் கவனிக்க அவர்களுடன் 2 மாதம் வாழ்ந்திருகிறார். அவர் மட்டுமில்லை; கதாநாயகன் மணிகண்டன் அந்தப் பெண் குழந்தையும் கூட மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்கள்.

 ? 'என் மகனுக்கு நான் போட்டது ஒரு சின்னச் சாலை… ஆனால், அவர் உழைப்பால் எட்டு வழிச் சாலை அமைத்துக்கொண்டிருக்கிறார்' என்கிறாரே எஸ்.ஏ சந்திரசேகர்?
– ஆ.ராஜா,நெய்வேலி
! அவராகவே எட்டு வழிச்சாலை போட்டுக்கொள்ளும் திறன் உள்ளவருக்கு இவர் ஏன் சின்னச் சாலையை அமைத்து அதையும் மூடிவிட்டாராம்?

 ? நடிகை நிவேதா தாமஸ் மலையேற்றத்தில் சாதனை செய்திருக்கிறாமே?
– செல்வா, சென்னை
! 'கிளிமாஞ்சாரோ' என்பது ஆப்பிரிக்காவிலுள்ள மிக உயர்ந்த மலைச்சிகரம். அதில் ஏறுவது என்பது மலையேறுபவர்களின் கனவு. ஆனால் இதற்காகப் பயிற்சிப் பெற்றவர்கள், வேறு சிகரங்களை ஏரி அனுபவம் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதைத்தான் நிவேதா செய்து இந்தியக் கொடியைப் பறக்கவிட்டிருக்கிறார். பெருமையான இந்தச் செயலுக்காக அவரை வாழ்த்துவோம்.

குழந்தை நட்சத்திரமாகத் திரையுலகிற்கு வந்த நிவேதா தாமஸ், வளர்ந்த பிறகு ஹீரோயினாகிவிட்டார். தமிழில் 'பாபநாசம்' படத்தில் உலக நாயகன் கமலஹாசனின் மகளாகவும், 'தர்பார்' படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளாகவும் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவர்.  நிவேதா தாமஸுக்கு நன்றாக நடிக்கத் தெரியும் என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு 'மலையேறவும் தெரியும்' என்பது தற்போதுதான் தெரிய வந்திருக்கிறது.

 ? ஜெயலலிதாவின் உண்மையான வாரிசு யார்?
– மன்னை செளந்திர ராஜன், மன்னை
! அரசியல் வாரிசை கேட்கிறீர்களா அல்லது குடும்ப வாரிசைக் கேட்கிறீர்களா எனத் தெரியவில்லை. ஜெயலலிதாவின் தனிப்பட்ட வாழ்க்கையின் வெளித் தெரியாத ரகசியங்களோடு அவரது மரணமும் மர்மமாகவே முடிந்துபோனது. ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு யார் என்பதிலும், உண்மையான வாரிசு யார் என்பதிலும் குழப்பம் நீடிக்கிறது. ஜெயலலிதா மறைந்த பின்னர், அவரைப் போலவே கெட்டப்புக்கு மாறி, தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்தவர் சசிகலா! அதன்பின், ஜெ.வின் அண்ணன் மகள் தீபாவும் ஜெயலலிதாவைப் போலவே கெட்டப் போட்டு அசத்தினார்! அடுத்து, ஜெயலலிதாவின் ஒரிஜினல் வாரிசு யார் என்பது குறித்த பிரச்னை. 1990-களிலேயே ஜெயலலிதாவுக்கு 'ஷோபனா வேதவல்லி' என்ற பெயரில் மகள் இருப்பதாகச் செய்தி வெளியானது. அதன் பின்னர், 'மஞ்சு, அம்ருதா, பிரிய மகாலட்சுமி' என்று பலர் அவரது மகள் என சொல்லிக்கொண்டனர். ஆனால் எவராலும் நிரூபிக்க முடியவில்லை. தற்போது பிரேமா (எ) ஜெயலட்சுமி (எ) பேபி என்பவர், தன்னை 'ஜெயலலிதாவின் வாரிசு' என்று கூறிக்கொண்டு, ஜெயலலிதா சமாதிக்குச் சென்றார்! ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்தித்துப் பேசியதாகவும் பேட்டியில் அவர் கூறியுள்ளார்! சில நாட்களில் இந்த சாயமும் வெளுக்கக்கூடும்… தமிழ் நாட்டில் 'வாரிசு' என்றால் 'அரசியல் வாரிசு' மட்டும்தான். அந்த வகையில் ஜெயலலிதாவுக்கு எவரும் இல்லை.

 ? முகேஷ் அம்பானி லண்டனில் பெரிய அரண்மனை வாங்கியிருப்பதால் அங்குக் குடியேறிவிடப்போகிறாமே?
– இன்பா, வேலூர்
! செய்தியை அவரது ரிலையன்ஸ் நிறுவனம் மறுத்திருக்கிறது. உலகின் மிகப்பெரிய பணக்கார்களுக்கு இங்கிலாந்தில் பெரிய மாளிகைகள் இருக்கின்றன. அந்த வரிசையில் இப்போது இவரும் சேருகிறார்.

? அண்மையில் ரசித்தது?
– ராதிகா, சென்னை
! "இறைவன் நம்மைவிடப் பெரியவர்" என்ற தலைப்பில் வலைத்தளங்களில் சுற்றிய இந்தப் படம்தான்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com