சட்டத்தை தாண்டிய சமூகப்பார்வை

சட்டத்தை தாண்டிய சமூகப்பார்வை
Published on

தலையங்கம்

சாமானியனின் கடைசிப்புகலிடம் என்ற  சொற்றொடரை  நிருப்பிக்கும் வகையில் பலமுறை நல்ல தீர்ப்புகளை வழங்கியிருக்கிறது நமது நீதிமன்றங்கள். ஆனால், சில சமயங்களில் சாமானியனின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக ஆச்சரியப்படுத்துவதும் உண்டு. அப்படியொரு தீர்ப்பு அண்மையில் வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக உலகம் முழுவதுமே உலுக்கிய கொரோனா, இப்போது குறைந்திருந்தாலும் முற்றிலுமாக இல்லாமல் போய்விடவில்லை. இந்தியாவில் 2020-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் உள்ளே நுழைந்த கொரோனா, மார்ச் மாதத்தில் தமிழ்நாட்டில் தன் கால் தடத்தைப் பதித்தது. ஆரம்ப காலங்களில் பாதிப்பு மிக வேகமாகவே இருந்தது. இத்தகைய சூழ்நிலையில், மருத்துவ நிபுணர்கள், "முககவசம் அணிவது கட்டாயம். தடுப்பூசி என்பது காக்கும் கேடயம்" என்று தெரிவித்தனர்.

இந்தியாவில், முதலில் 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும், முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கின. பின்னர், ஒவ்வொரு கட்டமாக வயது வரம்பு நீக்கப்பட்டு, இப்போது 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடும் வேலை தீவிரமாக நடந்துவருகிறது.

இந்த நிலையில் இவ்வாறு தடுப்பூசி போடுவதைக் கட்டாயப்படுத்தக்கூடாது. பொது இடங்களில் தடுப்பூசி போட்டவர்களுக்குத்தான் அனுமதி என்ற நிலை இருக்கக்கூடாது" என்பதை வலியுறுத்தி, உச்ச நீதிமன்றத்தில்  தொடரப்பட்ட வழக்கை நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ் மற்றும் பி.ஆர்.கவாய் ஆகியோர் கொண்ட அமர்வு விசாரித்து, "தடுப்பூசி போடவேண்டும் என்று யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது. பொது இடங்களில் தடுப்பூசி போடாதவர்களுக்கு அனுமதி இல்லை. வணிக வளாகங்களில் அனுமதி இல்லை. அலுவலகங்களில் அனுமதி இல்லை என்று கூறி, தடுப்பூசி போட்டவர்களுக்கும், தடுப்பூசி போடாதவர்களுக்கும் இடையே பாகுபாடு இருக்கக்கூடாது. இவ்வாறு பொதுமக்களை கட்டாயப்படுத்துவது, அரசியல் சட்டம் 21-வது பிரிவின்கீழ் சட்டவிரோதமானது" என்று தீர்ப்பளித்திருக்கிறது.

மாண்புமிகு நீதியரசர்களே ! இந்த விஷயத்தில் "சட்டம்  சொல்வது என்ன" என்பதைவிட, "மக்களைப் பெருந்துயரிலிருந்து காக்க அரசுகள் என்ன செய்துகொண்டிருக்கிறது" என்பதை  நீங்கள்  கவனித்திருக்க வேண்டும்.

யாரையும், எதற்கும் கட்டாயப்படுத்தக்கூடாது, அது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. குடும்பக்கட்டுப்பாடு நல்லதுதான். என்றாலும், அது மக்களின் முடிவுக்கே விட்டுவிடப்படுகிறது. இதுபோல, போலியோ தடுப்பூசி, காசநோய் தடுப்பூசி போன்ற பல தடுப்பூசிகளும் போடுவதற்குக் கட்டாயப்படுத்தப்படு வதில்லை. காரணம் சிலர் அதை ஏற்காமலிருப்பதால் சமூகத்துக்குப் பாதிப்பில்லை.  ஆனால் கொரோனா பெருந்தொற்றால், பாதிக்கப்படும் பொது சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு, கொள்கை முடிவுகளை எடுக்கவும், தகுந்த காரணத்துடன் கூடிய கட்டுப்பாடுகளை விதிக்கவும், மாநில அரசுகளுக்கு  அதிகாரம் இருக்கிறது. அதன் அடிப்படையில் அறிவிக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அம்சங்களைத்  தனிமனித உரிமையில் தலையிடுவதாக நீதி மன்றம்  எடுத்துக்கொண்டிருக்கக்கூடாது.

தனி மனித சுதந்திரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கும் பல நாடுகளில், "2 டோஸ் தடுப்பூசி போடாதவர்கள், தங்கள் நாட்டுக்கு வரமுடியாது" என்ற கட்டுப்பாடு இருக்கிறது. ரயில், விமானங்களில் இரண்டாம்  தவணை தடுப்பூசி போட்டவர்கள்தான் பயணம் செய்ய முடியும். இதுபோல, அரசு அலுவலகங்கள் உட்பட பல இடங்களில் 2வது டோஸ் தடுப்பூசி கட்டாயம் என்று வலியுறுத்தப்படுகிறது.

தமிழ்நாட்டில் முதல் டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 92.77 சதவீதம்,
2-வது டோஸ் தடுப்பூசி போட்டவர்கள் 79.21 சதவீதம்தான். இதற்கு
முக்கியமான காரணம் மக்களிடையே போதிய விழிப்புணர்வு இன்னும் ஏற்படாதது தான்.  கொரோனாவில் இருந்து முழுவதும் மீள்வதற்காக, தமிழக அரசு ஒரு லட்சம் இடங்களில்  மாபெரும் தடுப்பூசி முகாம்களை நடத்தியிருக்கிறது. இந்த நிலையில் "தடுப்பூசி கட்டாயம் இல்லை" போன்ற தீர்ப்புகள்  அரசின் முன்னெடுப்புகளை முடக்கும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com