0,00 INR

No products in the cart.

ஒரு சந்திப்பு

நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக.

எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..”

உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்… உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே…”

பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே எடை போட்டு அளந்தார். ஆறடி உயரம். பழுப்பு நிறக் கண்கள். சாம்பல் ஆடை. மீசையைக் காணோம். கண்களுக்கு பின்னால் ஒளிமயமான எதிர்காலம் தெரிந்தது.

மணி பார்த்தார். ”குட். ஒரு நிமிடம் முன்னதாக வந்திருக்கிறாய்.” படக்கென்று எழுந்தார். ”இதற்கு முன் இங்கு வந்திருக்கமட்டாய். வா ஒரு சுற்று சுற்றுவோம்…”

பதில் பேசாமல் ஒத்துழைத்தான்.

வேண்டுமென்றே வேகமாக நடந்தார். தன் அறுபத்துநான்கு கிலோவை இழுத்துக் கொண்டு அவனும்.

“சார் நான்..”

“பேசாதே. அரசு தெரியாமல் செய்த நல்ல விசயங்களில் இந்த பூங்காவும் ஒன்று. உயர்தரம். மாசுதொடாத பரிசுத்தக் காற்று சுற்றிக் கொண்டிருக்கிறது. உள்ளிழுத்து அனுபவி. தொந்தரவு தராத மக்கள் சுற்றிலும். சூழலை ரசி. அப்புறம் பேசலாம். நேரமிருக்கிறது அல்லவா, முடிவெடுக்க. பிறகென்ன அவசரம்…”

ஒரு முழுமையான வட்டத்துக்கு பின்னால் அவரே ஆரம்பித்தார். ”உன்னைப் பற்றி நீயே சொல். யார் சொன்னதையும் காது கொடுத்து கேட்கவில்லை நான்.”

புன்னகைத்தான். “நன்றி சார். நான்.. என் முழுப் பெயர்…”

“ப்ச்… இரு…” கை உயர்த்தி உடனே அதை வெட்டினார். “அப்படியெல்லாம் எதுவும் வேண்டாம், நாம் இருவரும் சும்மா பேசிக் கொண்டிருக்கலாம். பேச்சு திருப்திகரமாக இருந்தால் நானே விவரம் கேட்டுக் கொள்கிறேன். சரியா..”

அந்த வயசுக்கு கண்ணடித்து சிரித்தார்.

“புதுமையான அணுகுமுறையாக இருக்கிறதே. சரிங்க சார்.” சுவாரசியமானான்.

“சரி நானே ஆரம்பிக்கிறேன். கடைசியாய் என்னப் படம் பார்த்தாய்.? தமிழ் மொழி தாண்டி..”

பத்து வினாடி யோசித்து பெயர் நினைவில்லை. ”இங்கிலீசில் ஒரு பேய்ப் படம். நண்பன் ஒருவன் சிபாரிசு செய்தான் என்று பார்த்தேன். வசனம் அநியாயத்திற்கு இருந்தது. போனில் குதித்து குதித்துப் பார்த்தேன். கடைசி பதினைந்து நிமிடம்தான் அசல் படம்.”

“எனக்கும் இது மாதிரி மோசங்கள் நடந்திருக்கின்றன.” சிரித்தார்.

”காந்தியைப் பற்றி என்ன நினைக்கிறாய்.?”

”சார்..”

“மகாத்மா அய்யா. அண்ணல். நம் தேசப்பிதா.”

“ம்… மதிக்கிறேன். ஆனால், கொண்டாடவெல்லாம் முடியாது. அவர் மேல் சில சமயங்களில் மிகவும் கோபம் வருவதுண்டு. சில விஷயங்களை அப்படியே விட்டிருக்கலாம். புரட்சி செய்வதாக எண்ணிக் கொண்டு…”

“புரிகிறது…” பெருமூச்சுவிட்டார். “ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை, அதில் ஆயிரம் கோணம்.” மெல்லத் தலையாட்டினார். “சமீபத்தில் என்ன படித்தாய்?”

“உங்கள் காலத்துக்காரர் ஒருவரின் படைப்புதான். கு.ப.ராஜகோபாலன் சிறுகதைத் தொகுப்பு. நூலகத்திலிருந்து எடுத்துவந்தது வாசித்து வருகிறேன். ஒரு கதையை இரண்டு, மூன்று தடவை படித்தால் தான் புரிகிறது. ஆற்றாமை என ஒரு கதை.. திகைப்பாக இருந்தது…”

“அவர் அப்படித்தான்.” சிரித்தார். ”எச்சரிக்கையாக வாசிக்கவில்லையெனில் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் அபாயம் இருக்கிறது! நிறைய எதிர்ப்பு பார்த்தவர்!” விரல்களை நெட்டி முரித்து ‘ட்டு.. ட்டு’ செய்து கொண்டார்.

”விளையாடுவாயா? கிரிக்கெட் தானே.”

“இல்லை. ரசிப்பதோடு சரி. சதுரங்கம் தான் என் சாய்ஸ். யானை, குதிரை, சேவகன். சாய்ப்பது, தலைவெட்டுவது. தெரியாமல், எதிர்பாராத நேரத்தில் அதிரடியாக மோதி வீழ்த்துவது. அதில் தான் அதிரடி அதிகம்.”

“என்ன தெரியும். கொஞ்சமா. நன்றாகவா.” நெற்றி சுருக்கிக் கேட்டார். “நான் சுமாரானவர்களுடன் மட்டும் தான் விளையாடுவேன்…” சிரித்தார்.

“எண்பது மார்க் போடலாம்.! உள்ளங்கை அளவு கோப்பை இரண்டும், ஒரு பரீட்ச்சை பேப்பர் அகல சர்டிபிகேட்டும் கைவசம் இருக்கிறது.”

“அடேயப்பா. பெரிய ஆட்டக்காரன் தான்…” சிரித்தார்.

நடை முடிந்து சிமெண்ட் பெஞ்சியில் அமர்ந்து நன்றாக மூச்சுவிட்டுக் கொண்டார்கள்.

“தினம் எத்தனை சிகரெட் பிடிப்பாய்..” உதடுகளை உற்றுப் பார்த்தார்.

“கல்லூரி நாட்களில் தவறான நண்பனின் தூண்டுதலில் முயற்சி செய்து பார்த்தேன். கடவுள் அருளினால் கைகூடவில்லை. மதுவும் தொட்டதில்லை.”

”கடவுள் இருக்கிறாரா, என்ன? நம்பிக்கை உண்டா”

“அவரிடம் ரொம்ப நெருங்குவது இல்லை. அன்பு காட்டினால் நிறைய தொல்லை தருகிறார். பக்கத்து வீட்டுக்காரர் போல, பார்த்தால் ஒரு புன்னகையுடன் கடந்து விடுகிறேன். தவிர, உடலில் அலகு குத்திக் கொள்வது, தீ மிதிப்பதெல்லாம் என்னால் சகித்துக் கொள்ள முடியாது. ஒருத்தரை கஸ்டப்படுத்தி இம்சை செய்யும் அளவுக்கு அவர் ஒன்றும் கொடூர மனம் படைத்தவர் இல்லை.”

“நானும் உன் கட்சி.” கை உயர்த்தி சிரித்தார். “சரி, உயிர் வாழ என்ன செய்கிறாய்..”

“சிரமமான கேள்வி..” பெருமூச்சு விட்டு தொடர்ந்தான். ”கவிதைகள் எழுதுவது, கனவுகளோடு போராடுவது., தோல்விகளைப் பார்த்து புன்னகைப்பது..”

“ம்.. எதிர்காலத் திட்டம் என ஏதாவது இருக்கிறதா…”

“சாத்தியமெனில் சந்திரன் போக வேண்டும், அரை மைல் அளவில் ஒரு சிறு தீவு, மூன்று பெண் குழந்தைகள், கைக்கு அடக்கமாக ஒரு கவிதைப் புத்தகம்…”

ஒரு கண் மூடிப் பார்த்தார். ”பாக்கெட்டில் என்ன வைத்திருக்கிறாய்.”

“நிஜமாக்கத் துடிக்கும் திட்டங்கள், பொருத்தமான வாய்ப்புக்காகக் காத்திருக்கும் பொறுமை, நிறைய உழைப்புடன் துளி அளவு அதிர்ஸ்டம்..”

”கனவுகளில் வாழ்கிறாய்… ப்ச்.”

“ஒரு திருத்தம். கனவை நிஜமாக்க வாழ்கிறேன்…”

வெளுத்திருந்த தலைமுடிகளை தடவி விட்டுக் கொண்டார். கண் மூடி தியானம் செய்தார்.

அவன் பொறுமையாகக் காத்திருந்தான்.

”சரி உன்னை நம்பி ரிஸ்க் எடுக்கிறேன். வைத்துக் கொள்..”

”நன்றி சார். என் மேல் வைத்திருக்கும் நம்பிகையை உயிரைக் கொடுத்தாவது..”

“அருகம்புல் ஜுஸ் குடித்திருக்கிறாயா. வா, இந்த நாளைக் கொண்டாடலாம்!’

••• •••

லோ. ம். வைதேகி நான்தான். பார்த்துவிட்டேன் உன்னவனை!” வீட்டிற்கு போன் செய்து மகளுடன் உற்சாகமாகப் பேசினார்.

“அப்பா…”

“ஆசாமி பரவாயில்லை. ஸாரி. அதென்ன ஹாங்.. மருமகன்.. மருமகன்! சும்மா பொதுவாக பேசிக் கொண்டிருந்தோம். சில இடங்களில் கருத்து மோதலில் பிரிந்தோம். உனக்குப் பொருத்தமானவனாகத் தான் தெரிகிறது. பொதுவாய் காதல் எனக்கு பிடிக்காது. ஆனாலும் இவன் உனக்கு சரி என்பது மாதிரித் தான் படுகிறது. அதனால்..”

”சும்மா, பொய் சொல்லாதீர்கள்.” மூச்சைப் பிடித்துக் கொண்டு கத்தினாள் வைதேகி. “அவர் அங்கே வரவே இல்லை. உறவில் ஒருவர் இறந்துவிட்டார் என அதிகாலையிலேயே ஊருக்குக் கிளம்பி போய் விட்டார். நீங்கள் வேறு யாரையோ! ஹலோ அப்பா..”

••• •••

லோ… சார் நான் விஸ்வா.”

“நீயா சொல். என்ன, அவரை சந்தித்துவிட்டாயா.”

“ஆமாம். சுவாரசியமான மனிதர். எளிமையாகப் பழகினார்.”

“வேறென்ன சொன்னார்.. உன்னைப் பிடித்துவிட்டதா அவருக்கு?”

“ம், அப்படித்தான் அவர் கண்ணில் தெரிகிறது, நாளை போனில் அழைக்கச் சொல்லி இருக்கிறார். கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் சார்! உங்களுக்குத்தான் நன்றி…”

“முட்டாள். இன்னும் எத்தனை பொய்கள் சொல்வாய்.? இப்போதுதான் அவர் என்னை அழைத்துப் பேசினார். உனக்காக எத்தனை நேரம் காத்திருந்து பார்த்துவிட்டு சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன்…”

பதறினான். “இல்லை இல்லை சார், நீங்கள் சொன்னபடி. தான். சிக்னல் தாண்டியதும் வருமே, பாரதியார் பூங்கா அங்கே வைத்துத்தான்…”

“பாரதிதாசன் பூங்கா போகச் சொன்னால் பாரதியார் பூங்காவுக்கு போய் பொழுது போகாத ஏதோ ஒரு கிழவனிடம் வெட்டி அரட்டை அடித்துவிட்டு.. முட்டாள்! வை போனை.”

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...