0,00 INR

No products in the cart.

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

உலகக் குடிமகன் –  20

– நா.கண்ணன்

யலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள், மன அழுத்தங்கள், போராட்டங்கள். இவையெல்லாம் இல்லாமல் நிம்மதியாக நாமுண்டு நம் ஆய்வுண்டு என இருக்க எனக்கு ஆசை. எனது பிரச்னைகள் என்னவெனில், என் ஆய்வுக்கனவிற்கான ஆய்வகமற்ற சூழல். எல்லோரும் ஓர் திசையை நோக்கி நகரும் போது நான் எதிர்திசையில் நீந்திக் கொண்டிருந்தேன். அது மட்டுமல்ல, என் ஆய்வு உயிர் வேதியல் துறைக்கு பெருத்த உபரி வருமானத்தைத் தந்தது. எனவே, நான் தங்க முட்டை போடும் வாத்தாகிப் போனேன். என்னை வெளியே அனுப்பும் எண்ணம் துறைத் தலைமைக்குத் தோன்றவே இல்லை. எப்படியாவது என்னைத் தாமதப்படுத்தவே முயன்றது.

அதில் கொடூரமான ஓர் நிகழ்வு நடந்தது. அதை நான் பின்னால்தான் உணர்ந்தேன். அது என்னவெனில், அமெரிக்கப் பல்கலைக் கழகங்களுக்கு நாங்கள் தொடர்ந்து விண்ணப்பம் செய்த வண்ணம் இருப்போம். ஒரு நூறு விண்ணப்பம் அனுப்பினால் ஒரு பத்து இடத்திலிருந்து பதில் வரும். அதுவும், “உங்கள் ஆய்வு சுவாரசியமாக இருக்கிறது. ஆனால் உங்களை எங்களோடு இணைக்கும் நிதி எங்களிடம் தற்போது இல்லை. நீங்கள் சுயமாக நிதி பெற்று வந்தால் இணைத்துக்கொள்ள தயாராக இருக்கிறோம், மன்னிக்க!” என்பது போன்ற பதில்கள். பலரிடமிருந்து “மன்னிக்க, இடமில்லை” என்று பதில் வந்துவிடும். எங்களை யாரென்று அறியாததால் பல ஆய்வகங்கள் முதலில் எங்கள் ஆய்வாசானிடம் எங்களைப் பற்றிய மதிப்புரை கேட்டு எழுதுவார்கள். நமக்கு அதிர்ஷ்டமிருந்தால் நம்மைப் பற்றி நாலு நல்ல வார்த்தை சொல்லி பதில் அனுப்புவர். பல நேரங்களில் அம்மாதிரிக் கடிதங்களுக்கு பதிலே போடுவதில்லை. எதற்கு வெட்டிச் செலவு என்று! இந்த நிலைமையில்தான் எங்கள் தேடல் நடந்து கொண்டு இருந்தது.

எனவே, நாங்கள் வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பிற துறைத் தலைவர்களுக்கு உதவி செய்து, நன் மதிப்பு பெற்று சான்றிதலோ, ஒரு சிபாரிசுக் கடிதமோ வாங்கி வைத்துக் கொள்வோம். அதையும் இணைத்து அனுப்புவோம். அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி (முதுமுனைவர் நிதி) கிடைத்துவிடும். ஆனால், அது அரிது! நான் எனது ஆய்வேட்டை சமர்ப்பித்து அதில் கேட்டிருந்த கேள்வியைத் தவறாக நிர்வாகம் புரிந்துகொண்டு மீண்டும் சமர்பிக்கக் கோரியிருந்தது. பெருத்த மன உளைச்சலில் இருந்தேன். அப்போதெல்லாம் எங்கள் ஆய்வின் தரத்தைத் தீர்மானிக்க ஒரு அயலக விஞ்ஞானியை பரிசோதகராக நியமிப்பர். அந்த அமெரிக்கருக்கு நம் நாட்டு நிலைமை தெரியாது, எனவே விளங்கிக்கொள்ள பல கேள்விகள் கேட்பர். முனைவர் பட்ட ஆய்வேட்டுக் கமிட்டிக்கு இது புரிவதில்லை. அவர்கள் கேள்விகளை ஆட்சேபணை எனக் கணக்கிட்டு நம் ஆய்வேட்டை ரிஜெக்ட் செய்து விடுவர். மேலும் எனது ஆய்வின் நுணுக்கங்களறிந்த அறிஞரைத் தேர்ந்தெடுக்கும் திறன் ஜே.ஜேயிடமில்லை. ஏனெனில் அது அவர் துறை அல்ல. எனவே, புரியாதோர் கைகளில் மாட்டிக்கொண்டு என் முனைவர் ஆய்வேடு அல்லாடிக் கொண்டிருந்தது. மீண்டும் சமர்பித்து விரைவில் பட்டம் பெற்று அயலகம் போய்விடலாம் என துரித கதியில் இயங்கிக் கொண்டிருந்தபோது ஜே.ஜே ‘அமெரிக்கா போகிறேன்’எனக் கிளம்பிவிட்டார். எனக்கு பெரிய அதிர்ச்சியாக அது இருந்தது. அவர் போவதை என்னால் தடுக்க முடியுமா? என்ன!

அவர் சென்ற பிறகு வெறிச்சோடிப்போயிருந்த அவரது அலுவலகத்தை நானும், எங்கள் காரியதரசி இராமலிங்கமும் சுத்தம் செய்யும் போதுதான் அந்த அதிர்ச்சி என்னைத் தாக்கியது. அவர் சென்றிருக்கும் பெர்க்கிலி பல்கலைக் கழகத்திற்கு நான் விண்ணப்பம் செய்திருந்தேன். பெர்க்கிலி இத்தகைய ஆய்வை முன்னெடுத்துச் சென்று கொண்டிருந்த காலம். எனவே, அவர்களுக்கு என் ஆய்வு பிடித்திருந்தது. எனவே, என்னை அழைத்துக் கொள்ளும் முன் என் ஆசானிடம் என்னைப் பற்றி அபிப்பிராயம் கேட்டிருக்கிறார்கள். இவரோ அதைப் பயன்படுத்தி நான் வருகிறேன் என்று போய்விட்டார். நான் போயிருந்தால் எனக்குக் குறைந்தது மூன்று ஆண்டுகளுக்காவது உதவிப் பணம் தர வேண்டியிருக்கும். ஆனால் இவரோ ஆய்வு விருந்தாளி எனும் தகுதியில் ஓராண்டு போதும் என்று சொல்லியிருக்கிறார். அவர்களுக்கு பணம் மிச்சம். எனவே, இவரை அழைத்துவிட்டனர். இது எனக்கு துரோகமாகப்பட்டது. என் வாய்ப்பை அவர் எடுத்துக் கொள்வது என்ன நியாயம்? [பெர்க்கிலி விஞ்ஞானிகளை நான் பின்னால் ஜப்பானில் சந்திக்கிறேன். ஏன் பெர்க்கிலி பல்கலைக்கழகம் சென்று இரண்டு நாள் தங்குகிறேன். ஆதி தொடர்பு விட்டுப் போகாது போலும்]

இது போல் என் ஆர்வத்தை திசை திருப்பும் இன்னொரு செயலையும் அவர் செய்திருக்கிறார். மதுரை காமராசர் பல்கலைக் கழகம் அப்போது அறிவியல் காட்சியகம் ஒன்றை உருவாக்கத் திட்டமிட்டு அப்பொறுப்பை ஜே.ஜேயிடம் கொடுத்தது. அவரது ஆய்வு மாணவர்கள் ஒருவரும் அவருக்கு இதில் உதவ முன் வராத நிலையில் நான் உதவப் போனேன். காரணம், எனக்கு “அறிவியலைப் பொது மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்” என்ற ஆர்வம் மிகுதி. எழுபதுகளில் விஞ்ஞானிகளின் சமூகப் பொறுப்பு பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவில் எழுந்தது, அது என்னை பாதித்தது. அதன் விளைவாகத்தான் நான் அகில இந்திய வானொலிக்கு அறிவியல் நிகழ்ச்சிகள் வழங்கத் தொடங்கினேன். அதே ஆர்வத்தில் அறிவியல் காட்சியகம் ஒன்று அமையப் போவது அறிந்து நான் அவருக்கு தீவிரமாக உதவினேன். அவருக்கும் அதைப் பரிமாறிக்க ஆள் இல்லாததால் என்னை அங்கே ஒரு டெக்னீசியனாக ஆக்க முயன்றார். அதன் நிர்வாக இயக்குநர் எனும் உயர் பதவி அளித்திருந்தால் ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், வெறும் உதவி ஆளாக என்னை நியமிக்க அவர் துணிந்தது எனது கௌரவத்தை மிகவும் பாதித்தது. “நான் உலக அளவில் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானியாக வர வேண்டும் என ஆசைப்படும் போது இப்படி என்னை ஏதோ ஓர் மூலையில் முடக்கப் பார்க்கிறாரே” என்று மனமுடைந்தேன். என்னைப் பற்றிய மதிப்பு அவருக்கு அவ்வளவுதானா? எனும் வருத்தம் வேறு. என் கனவுகளை மெய்ப்பிக்கும் ஆசானாக அல்லவோ அவரை நான் வரிந்திருக்கிறேன்!

இந்த இரண்டு நிகழ்வுகளும் என் ஆசைக்கு மண்ணைப் போடும் நிகழ்வுகள். இதன் பின், இனிமேல் யார் தடுத்தாலும் நிற்கப் போவதில்லை என முடிவெடுத்தேன். அதேபோல் முனைவர் பட்டம் பெறும் காரணத்தைக் காட்டி என்னை நிறுத்த முயன்றாலும் நான் முனைவர் பட்டத்தைத் துறக்கவும் துணிந்தேன்!

பட்ட காலிலே படும், கெட்ட குடியே கெடும் என்பார்கள். அதே போல் கஷ்டம் வரும் போது கூடவே ஒரு கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு வரும் போலும். நான் வேலை பார்த்து வீட்டைக் கவனிக்கவில்லை எனும் வருத்தம் வீட்டிலுண்டு. இக்காலக்கட்டத்தில், தாய் தந்தையர் அற்ற நிலையில், என் மூன்று சகோதரிக்களுக்கு கல்யாணம் செய்து வைக்க வேண்டிய நிலை. வீட்டைக் கட்டிப்பார்! கல்யாணம் செய்து பார்! என்பார்கள். “வேலைக்குப் போய்தான் வீட்டிற்கு உதவவில்லை, கல்யாணமாவது செய்து வைக்கலாமே” என்பதே பொது எதிர்பார்ப்பு. நான் இனிமேலும் ஓர் மேட்டுக்குடி மனப்பான்மையில் ஆய்வுப்போர்வைக்குள் முடங்க முடியாது எனும் நிலை. நிதர்சனத்தை சந்தித்தே தீர வேண்டிய நிலை. ‘சவாலே சமாளி’ என நான் இறங்கிவிட்டேன். அதன்பின், மாப்பிள்ளை வேட்டையே என் வேலையாகிப் போனது. ‘இவனோ திருமணம் ஆகாத இளைஞன். இவன் மாப்பிள்ளை கேட்டு வருகிறானே’ என எல்லோரும் என்னை அதிசயமாய் பார்த்தனர். சிலர் இளக்காரமாக பதில் சொல்லி தட்டிக் கழித்தனர். சிலர் இரக்கப்பட்டு சரி என்றனர். ஆனால் வரதட்சணை வேண்டும் என்றனர். ‘சகோதரிகள் வேலை பார்க்கிறார்கள், எனவே, அதுதான் பொருளாதாரக் காப்பீடு’ எனச் சொல்லும் என் பேச்சு அதிகம் எடுபடவில்லை. எப்படியோ கஷ்டப்பட்டு, சேமித்து வைத்த சிறு தொகைகளைக் கூட்டிக் கழித்து அக்காமார்களுக்கு திருமணத்தை முடித்தோம். தாலிக்கு ஆர்டர் பண்ணுவதிலிருந்து, கல்யாணச் சமையல்காரர் தேர்வுவரை எத்தனை சமாசாரங்கள்? ஆய்வு மாணவனான எனக்கு சமூகப்பாடம் நடந்து கொண்டிருந்தது! அலைந்த அலைச்சலில் பித்தம் தலைக்கேறி, முடியெல்லாம் வெளுத்துவிட்டது. கல்யாணமெல்லாம் முடிந்து கண்ணாடியில் பார்த்த போது, “எப்படி இருந்த உடம்பு, இப்படி ஆயிடுச்சு”ன்னு இருந்தது. இக்காலக்கட்டத்தில் எனக்கு உறுதுணையாக இருந்து உதவியவர்கள் பாயர் பூச்சி கொல்லி அலுவலர் சுந்தர்ராஜனும் சுந்தரேஸ்வரனும்.

மீண்டும் ஆய்வகம் வந்தபோது என் கனவு அழுது கொண்டிருந்தது. இச்சூழலில் என் காப்பாக வந்து சேர்ந்தான் என் அறிவியல் இளங்கலை சகா, பி.ஆர்.சுப்ரமணியன். எங்களோடு மதுரை அமெரிக்கன் கல்லூரியில் படித்து, பிறகு அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கடலியலில் அறிவியல் முதுகலை கற்கச் சென்று விட்டான். நான் மீண்டும் அவனை சந்திப்பேன் என எதிர்ப்பார்க்கவில்லை. அவன் இறைத்தூதர் போல் என் எதிரில் நின்றான்! அவன் என் கனவை நினைவேற்றுவான், என் கனவின் திசை திருப்புவான் என சற்றும் நான் நினைத்துப் பார்க்கவில்லை. துன்பம் நேர்கையில் யாழ் எடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா? எனப் பாரதிதாசன் பாடுவது போல், நொந்து நூலாகிப் போயிருந்த நிலையில் என் நம்பிக்கை நட்சத்திரமாக வந்து சேர்ந்தான் அவன். காலை விடியலில் கிழக்கை இனம் காட்டும் விடிவெள்ளியாக என் முன் நின்றான் சுப்ரமணியன்!

(தொடரும்)

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...