0,00 INR

No products in the cart.

பிரதமர் பாதுகாப்பில் குளறுபடி சறுக்கலா?  சதியா?

 

கவர் ஸ்டோரி

 

– ஹர்ஷா

 

ஞ்சாப் மாநிலத்தில்  சட்டசபை பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இதற்கான தேர்தல் பிரசாரத்துக்காகப் பிரதமர் மோடி பஞ்சாப் செல்வதாகப் பயணத் திட்டம். பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் நடக்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று, ரூ.42,750 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவிருந்தார்.

மோசமான வானிலை காரணமாகப் பிரதமர் மோடி பதிண்டா விமான நிலையத்திலிருந்து  ஹெலிகாப்டர் பயணத்தைத் தவிர்த்த நிலையில், சாலை மார்க்கமாக பெரோஸ்பூர்  செல்லவிருந்தார். விமான நிலையத்திலிருந்து பிரதமரின் வாகன தொடர் அணி (கான்வாய்) சாலை வழியாக ஹுசைனிவாலாவில் உள்ள தேசிய தியாகிகள் நினைவிடத்திற்குப் புறப்பட்டது. பிரதமர் மோதியின் வாகனம் தியாகிகள் நினைவிடத்திலிருந்து 30 கி.மீ தொலைவில் உள்ள மேம்பாலத்திற்கு வந்தபோது,  “ஒரு கி.மீ. தொலைவில் ஒரு விவசாய சங்கத்தினர் சாலையில் மறியல் செய்கின்றனர்” என்ற செய்தி கிடைத்ததும், அவரது பாதுகாப்புப் படையினர் பயணத்தை நிறுத்தி விட்டனர்.

பிரதமர், பாதுகாப்புப் படையினர் அவரது  காரை சூழந்து பாதுகாக்க காரிலேயே 20 நிமிடங்கள்  அமர்ந்திருந்தார், பின்னர் விமான நிலையத்துக்குத் திரும்பிச் சென்று அங்கிருந்து டெல்லி திரும்பிவிட்டார். பிரதமரின் பஞ்சாப் பயணம்  ரத்து செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. “இது பிரதமர் மோதியின் பாதுகாப்பில் பெரும் குளறுபடியாகும்” என்றது உடனே வெளியான  இந்திய உள்துறையின்  செய்திக்குறிப்பு.

என்ன குளறுபடி?

இந்தியப் பிரதமரின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வகுக்கப்பட்ட ’ப்ளூ புக்’ விதிகள் பற்றி விரிவாக பேசுகிறது.  அந்த விதிகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை என்பது குளறுபடியின் முதல் கட்டம்.  இந்த ப்ளூ புக் எனப்படும் ஆவணம், சிறப்புப் பாதுகாப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் அவரது பாதுகாப்பிற்கென பிரத்தியேகமான வழிகாட்டுதல்களைக் கொண்டுள்ளது. மிகத் தெளிவாக, நுணுக்கமாக அத்துணை பாதுகாப்பு அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொண்டு தயாரிக்கப்பட்டிருக்கும் விதிகள் இவை. தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாகும் இது மாநிலத்தின் உயர் மட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு மட்டும் அனுப்பப்படும் ஒரு ரகசிய ஆவணம்.

ப்ளூ புக் விதிகளின்படி, “பிரதமரின் வருகையின் போது பஞ்சாபில் நடந்ததைப் போன்ற ஏதேனும் பாதகமான சூழ்நிலை ஏற்பட்டால், பாதுகாப்பிற்கான மாற்றுப்  பாதையை மாநில காவல்துறை தயார் செய்யதிருக்க  வேண்டும்” என்கிறார் உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள இந்திய உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றுப்படி, பிரதமரின் பாதுகாப்பு ஏற்பாடுகள், மாற்று ஏற்பாடுகள் தொடர்பாகப் பஞ்சாப் மாநில காவல்துறையுடன் அவர்கள் இடைவிடாது தொடர்பிலிருந்ததாகவும் போராட்டக்காரர்களின் நடமாட்டம் குறித்து அவர்களை எச்சரித்தபோது, பிரதமருக்கு முழு பாதுகாப்பு தருவதாக மாநில காவல் உயரதிகாரிகள் உறுதியளித்ததாகவும் அதனால் தான் சாலைப் பயணத்தின் மூலம் பிரதமர் அழைத்துச் செல்லப்பட்டார் என்கிறார்கள் பிரதமரின் பாதுகாப்பைக் கவனிக்கும் அதிகாரிகள். .

எழும் சில ஏன்?கள்…

பிரதமரின்  பாதுகாப்புக் குழு  மாநில அரசுடன் இணைந்து செயல்பட ஏதுவாக குறைந்தது மூன்று முதல் ஒரு வாரத்துக்குச் சம்பந்தப்பட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிடும், பாதுகாப்பு ஏற்பாட்டுக்கான கூட்டங்களை நடத்தும். இந்த கூட்டங்களில் மாநில உள்துறை செயலாளர், மாநில காவல்துறை தலைமை இயக்குநர், மாநில காவல்துறையின் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பு அதிகாரி, மத்திய, மாநில உளவுத்துறைகளின் தலைமை அதிகாரிகள், மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் பிற அரசுத்துறை உயரதிகாரிகள் பங்கேற்பர். அந்த கூட்டத்தில்தான் பிரதமரின் பயண நிகழ்ச்சி நிரல் ஆலோசிக்கப்படும். மாற்று திட்டங்களும் இந்த கூட்டத்திலேயே விவாதிக்கப்பட்டு அதன் அடிப்படையில் சோதனை ஒத்திகையும் நடத்தப்படும். இவை எப்படி இருக்க வேண்டும் என்ற விவரங்களையும் நடைமுறைகளையும்கூட  ப்ளூ புக் விதிகள் சொல்லுகின்றன. அவசியமானால் செல்ல வேண்டிய மாற்றுப்பாதைகளும் தீர்மானிக்கப்பட்டு ரகசியமாக வைக்கப்படும். இந்தப் பயணத்தில் அப்படிப்பட்ட ஒத்திகைகள், கூட்டங்கள் நடந்ததா? இது ஒரு ஏன்?

சாலை வழியாகப் பிரதமரின் தொடரணி புறப்படும் முன் ஒரு பைலட் வாகனம் சென்று “ஆல் கிளியர்” என்ற மெசேஜை தொடரணித் தலைவருக்கு அனுப்புவார்கள். அதன்பின்தான் தொடரணி கிளம்பும். இந்தப் பயணத்தில் அது கடைப்பிடிக்கவில்லை என்பது போராட்டகாரர்கள் சாலையில் அமர்ந்திருக்கும் செய்தி பிரதமர் அந்த இடம் அருகில் வந்தபின் தான் தெரிவிக்கப்பட்டிருப்பதிலிருந்து புரிகிறது இது ஒரு ஏன்?

“சாலையில் போராட்டக்காரர்கள்  அமர்ந்திருக்கிறார்கள்” என்ற செய்தி கிடைத்தவுடனே பிரதமரின் காரும் அணியும் திருப்பப்பட்டு  அருகிலுள்ள ஒரு பாதுகாப்பான இடத்துக்கோ அல்லது  விமான நிலையத்துக்கோ சென்றிருக்க வேண்டும். பிரதமரின் கார்  20 நிமிடம் நிறுத்தப்பட்டது ஏன்?

பிரமரின் தொடரணி கிளம்பிய செய்தி கிடைத்தவுடனேயே சாலையிலிருக்கும் போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தியிருக்க வேண்டும். விமான நிலையத்திலிருந்து பிரதமர்  வரும் ஒருமணி நேரப் பயணத்திற்குள் இதை எளிதாக பஞ்சாப் மாநில போலீஸ் செய்திருக்க முடியும். எப்படிச் செய்யத் தவறினார்கள் இது அடுத்த ஏன்?

பஞ்சாப் போலீஸின் சொதப்பல்

“பஞ்சாப் போலீஸ் இந்த விஷயத்தைச் சரியாகக் கையாளவில்லை” என்றாலும் “பிரதமரின் பாதுகாப்புக்கான எஸ்பிஜி,  ஐபி ரா எல்லாம் ஏன்  இதை சரியாக கையாளவில்லை” என்ற கேள்விகள் எழுகின்றன.  ஆனால்,  “இது சந்தேகமில்லாமல் பஞ்சாப் போலீஸின் சொதப்பல்” என்கிறார்  தமிழகத்தை சேர்ந்த ஒரு  முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. இவர் பிரதமரின் பாதுகாப்புப் படையில் அவரிடம் ரிப்போர்ட் செய்யும் அதிகாரியாக இருந்தவர்.

பிரதமர் வாகன அணிவகுப்பு

“எல்லையோர மாநிலத்தில் பிரதமரின் வாகன அணிவகுப்பு ஒரு மேம்பாலத்தில் 15-20 நிமிடங்கள் தடைப்பட்டு நின்றால், பாதுகாப்புக் கண்ணோட்டத்தில் இது ஒரு தீவிரமான விஷயம். இது ஒரு பெரிய தவறு. ஏனென்றால், பிரதமர் எங்கு சென்றாலும், அவரது நெருக்கமான பாதுகாப்பை மட்டுமே எஸ்பிஜி மேற்கொள்கிறது. மற்றபடி பிரதமர் எங்கு செல்கிறாரோ அந்த இடத்துக்கு முன்பே ஒரு குழு சென்று பாதுகாப்பை உறுதிப்படுத்தும். மற்றபடி அவரது பயணத்துக்கான பிற வசதிகள் மற்றும் பாதுகாப்பின் ஒட்டுமொத்த பொறுப்பும் மாநில அரசிடமே உள்ளது” என்கிறார். இவர் “பிரதமரின் சாலை வழியாகச் செல்வதற்கான பாதைக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தால், ​​​​அந்த வழியை தடையற்றதாக்கியிருக்க வேண்டியது மாநில காவல் துறையின் பொறுப்பு,” என்பதையும் சுட்டிக்காட்டுகிறார்.

எஸ்.பி.ஜி. என்பது என்ன?

பிரதமர், முன்னாள் பிரதமர் மற்றும் அவரது நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் நோக்கத்துடன் சிறப்புப் பாதுகாப்புக் குழு 1985ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

1984இல் இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்ட சில ஆண்டுகளுக்குப் பிறகு 1985இல் எஸ்.பி.ஜி. உருவாக்கப்பட்டது.

இந்தப் படையின் ஆண்டு பட்ஜெட் 375 கோடி ரூபாய்க்கும் அதிகமாகும். மேலும் இது நாட்டின் மிகவும் விலையுயர்ந்த மற்றும் வலுவான மிக, முக்கிய பிரமுகர்களுக்கான பாதுகாப்பு அமைப்பாகக் கருதப்படுகிறது.

இந்த நிகழ்ச்சி குறித்து  தமிழக காவல்துறையில் டி.ஜி.பி.ஆக பணியாற்றிய மூத்த ஐ.பி.எஸ். அதிகாரியிடம் பேசியபோது  வான்வழி திட்டமிடப்பட்ட பயணங்கள் வானிலை காரணமாக மேற்கொள்ளப்படாமல் போனால் சம்பந்தப்பட்ட விமானம் அல்லது ஹெலிகாப்டரின் பைலட் எடுக்கும் முடிவே இறுதியானது. அதுவும் சமீபத்தில் தமிழகத்தின் சூலூரில் பாதுகாப்புப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான சம்பவத்துக்குப் பிறகு இந்த விஷயத்தில் பாதுகாப்புப் படையினர் மிகத் தீவிரமாகவே உள்ளனர்,” என்கிறார்.

“பஞ்சாப் சம்பவத்தைப் பொறுத்தவரை, 2 மணி நேர பயண தூரத்தில் வழி நெடுகிலும் எந்த பிரச்னையும் இல்லாமல் பிரதமரால் செல்ல முடிந்துள்ளது. ஆனால், நிகழ்ச்சி பகுதிக்கு 30 நிமிட பயண தூரத்தில்தான் அவர் சென்ற பாதை குறுக்கே சிலர் சாலை மறியல் செய்துள்ளனர். அங்கு போராட்டக்காரர்கள் திரண்டபோதும், அவர்களை அப்புறப்படுத்த வேண்டியது மாநில காவல்துறையின் பொறுப்பே,” என்கிறார் அவர்.

இது ஒரு தவறல்ல, ஒரு பெரிய அலட்சியம். திடீரென பயணப் பாதை மாற்றியதாக கூறினாலும், அதற்கும் முன்கூட்டியே தயாராகவே திட்டம் இருந்திருக்க வேண்டும். போராட்டக்காரர்கள் திடீரென்று திரண்டிருக்கவில்லை, அவர்கள் ஏற்பாடுகளைச் செய்திருக்க வேண்டும். உளவு அமைப்புகள் மூலம் தகவலறிந்து அவர்கள் சாலை மறியலில் ஈடுபடுவது தடுக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தடுக்கப்படவில்லை. அதுதான் தவறு” என்கிறார் ஒரு முன்னாள் உள்துறை செயலர்.

ஆக இது பஞ்சாப் மாநிலப் போலீசின் சூப்பர் சொதப்பல் என்பது தெளிவாகிறது.  ஆனால் இதைத் தவித்திருக்க வேண்டிய  ஒரு மிகப்பெரிய தவறு என்று பார்க்காமல் அரசியல்வாதிகள் தங்கள் முதல் பணியாக இதை அரசியல் செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.

அரசியல்

“பஞ்சாபில்  காங்கிரஸ் ஆட்சியில் இருப்பதால் இது அவர்கள் திட்டமிட்டுச் செய்த சதி. பிரதமரின் உயிருக்கு ஊறு விளைவிக்க திட்டமிட்டிருக் கிறார்கள். ஆட்சியாளர்களின் ஆசியுடன்தான் போராட்டம் நடந்திருக்கிறது” என்று பா.ஜ.க. தலைவர்களும் அவர்கள் கட்சி ஆளும் மாநில முதல்வர்களும் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் மோடி.பதிண்டா விமான நிலையத்துக்குத் திரும்பியவுடன் அங்கு தமது பாதுகாப்புக்காக வந்திருந்த மாநில காவல்துறை அதிகாரிகளிடம் பேசிய நரேந்திர மோடி “என்னால் உயிருடன் விமான நிலையத்தை அடைய முடிந்தது, இதற்கு உங்கள் முதல்வருக்கு நன்றி சொல்லுங்கள்” என்று கூறியிருக்கிறார்.

‘பிரதமரின் பாதுகாப்பிற்குக் காங்கிரஸ் உலை வைக்கிறது’ என்றும்,  இதை ‘காங்கிரஸ் நாளை செய்யப்போவதற்கு இது ஒரு ட்ரெய்லர்’ என்று அமித்ஷா டிவிட் செய்தார். இது போதாதா கட்சியினருக்கும் அபிமானிகளுக்கும். “இதன் பின்னே சர்வதேச சதி இருக்கலாம் எனச் சந்தேகிக்கிறேன்”  என்கிறார் ஒன்றிய அரசின் சொலிஸ்டர் ஜெனரல் துஷார் மேத்தா. “பாகிஸ்தானுக்குப்  பங்கு இருக்கிறது” என்கிறார்  தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. தமிழக பா.ஜ.க. பஞ்சாப் மாநில அரசை எதிர்த்துச் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தியிருக்கிறது.  நாட்டின் பல கோவில்களின் வழிபாடுகளும் ஹோமங்களும் யாகங்களையும் செய்கிறது ஆர்.எஸ்.எஸ். அமைப்பு.

மோடியின் பஞ்சாப் பயணம் அறிவிக்கப்பட்டதும் அவர்கள் ‘மோடியே திரும்பிச்செல்’ GO BACK MODI  என்று மாவட்ட தலைநகரங்களிலெல்லாம் மறியல் செய்து வந்தனர் . (தமிழ்நாட்டில் 2018ல் காவிரி பிரச்னை உச்சத்திலிருந்த பொழுது எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கறுப்புக் கொடி காட்டி மோடியின் தமிழக வருகையை எதிர்த்து குரல் எழுப்பியதைப் போன்று)  அதில் ஒரு  விவசாயிகளின் அமைப்பு இந்த சாலையில்  மறியல் செய்தனர். “போலீஸ்  அதிகாரிகள்  பிரதமர்  வருகிறார்  என்று கலைந்து போகச்சொன்னபோது அவர் ஹெலிகாப்டரில்தான் போகிறார், எங்களைக் கலைக்கவேண்டும் என்பதற்காகப்  போலீஸ்கார்கள்  பொய் சொல்லுகிறார்கள் என்று நினைத்தோம்”  என்கிறார் அந்த போராட்டக்குழு தலைவர்.

“பா.ஜ.க.வின் பேரணியில் 7000பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நேரத்தில்  வெறும் 700 பேர் மட்டுமே வந்ததால் காலி நாற்காலிகளைச் சந்திக்காமல் திரும்ப பிரதமர் முடிவு செய்திருக்கலாம். அதற்காகப் பாதுகாப்பு குறைபாடு என்று சொல்லி எங்களுக்கு அவப்பெயரை  உருவாக்க முயல்கிறார்” என்கிறார் நிகழ்ந்ததற்கு வருத்தம் தெரிவித்த  பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி.

இவர்களே வேண்டுமென்றே ஒரு பிரச்னையைக் கிளப்பி ‘பிரதமர் உயிருக்கு ஆபத்து’ என்ற மாயையை உருவாக்க நினைக்கின்றனர், இப்படித்தான் குஜராத்தில் ‘மோடியை கொல்ல தீவிரவாதிகள் வருகை, மோடியின் உயிருக்கு ஆபத்து’ என்ற பூச்சாண்டி காட்டி ஏராளமான போலி என்கவுண்டர்கள் நடந்தன என்பதை மறப்பதற்கில்லை. இது குஜராத் மாடல்  என்கிறார் தமிழக முன்னாள் காங்கிரஸ் எம்.பி. ஒருவர்.

எது எப்படியோ  இந்த சம்பவத்தால் பஞ்சாபிலும் பிரதமரின் பாதுகாப்பு படையிலும் சில தலைகள் உருளப்போவது நிச்சியம். பஞ்சாபில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு இது ஒரு கறுப்பு புள்ளி. பா.ஜ.க.வின் பிரசாரத்துக்கு ஒரு போனஸ் பாயின்ட்.

பிரதமரின்  பயண ஏற்பாடு குளறுபடி விவகாரத்தில் மாநில அரசு ஏற்கெனவே உயர்நிலைக் குழு விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. அதே சமயம், மத்திய உள்துறையும் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து “எங்கு பிரச்னை நடந்தது” என்பதைக் கண்டறிந்து அறிக்கை தர உத்தரவிட்டிருக்கிறது. அந்தக் குழுக்களின் அறிக்கைகள் வெளியாகாத நிலையில் அரசியல் தலைவர்கள்  தங்கள் விருப்பம்போல  யூகங்களையும்  கருத்துக்களையும் சொல்வதைத் தவிர்க்க வேண்டும். அது அவர்களின் பதவிக்கும் சார்ந்துள்ள கட்சிக்கும் பெருமை சேர்க்கும் விஷயமாகயிருக்காது.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

கொடி பிறக்கிறது

2
கவர் ஸ்டோரி - ரமணன்   ஆயுதமேந்தாத ஒரு அஹிம்சைப் புரட்சிக்குப் பின்னர் கிடைத்த இந்திய சுதந்திரத்தின் முதல் அடையாளச் சின்னம் நமது தேசியக் கொடி. இந்தக் கொடியின் பாரம்பரியத்தையும் கௌரவத்தையும் பாதுகாக்கத் தனிச் சட்டமும் கையாளும்...

காட்சிகளும் கனவுகளும்

0
கவர் ஸ்டோரி - ஆதித்யா   சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோதியை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைத்தது முதலே சமூக ஊடகங்களில் அது லேசாக அரசியல்...

அ.தி.மு.க.வில் அடுத்தது என்ன?

0
கவர் ஸ்டோரி ஆதித்யா   “இரட்டைத் தலைமை வேண்டாம், ஒற்றைத் தலைமைதான் தேவை”   என்ற கோஷத்தில் ஆரம்பித்து  இரண்டு தனித்தனி தலைமையில் இயங்க ஆரம்பித்திருக்கிறது அ.தி.மு.க. அறிக்கைப் போராக  ஆரம்பித்து அடிதடியில் தொடர்ந்து கட்சியின் தலைமை அலுவலகம்...

ஆஸ்கார் இந்திய சினிமாவை கெளரவிக்கிறது.

0
 கவர் ஸ்டோரி - ஆதித்யா   “ஆஸ்கார் விருது” என்பது உலகெங்கும் இருக்கும் திரைத்துறையினரின் கனவு. அந்த விருதுக்கு தேர்வுக்காக பரிந்துரை செய்யப்படுவதே ஒரு கெளவரம் என்றளவுக்கு  பெருமைபெற்ற இந்த விருதுக்கு பரிந்துரை செய்யப்படும் குழுவில்  உறுப்பினராக...

இந்த நிழல் யுத்தம் எப்போது, எப்படி  முடியும்?

0
கவர் ஸ்டோரி   - ஆதித்யா   அரசியலில் கட்சித் தலைவர்கள் உயரங்களைத் தொடுவதும் பள்ளங்களில் சாய்வதும் புதிய விஷயமில்லை. பெரும்பாலும் இப்படி நிகழ்வதற்குத் தேர்தல்கள்தான் காரணமாயிருக்கும். அறுதிப்பெரும்பான்மையுடன்  ஆட்சியிலிருந்த ஒரு கட்சி எதிர் கட்சியாகக்கூட அமரமுடியாமல் வாக்காளர்கள்...