தமிழகத்திற்குத் தலைக்குனிவு

தமிழகத்திற்குத் தலைக்குனிவு
Published on

தலையங்கம்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கப்படும் எனத் தி.மு.க.த் தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. சட்டசபை கூட்டத் தொடரில் நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அந்த மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது தற்போது பரிசீலனையில் உள்ளது.

ஒரு மாநில அரசு தனது சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதா ஆளுநர் மூலம் ஒன்றிய அரசுக்கு அனுப்பப்பட்டு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெறப்பட வேண்டும். இப்போதைய மோடி அரசு நள்ளிரவில் நிறைவேற்றும் சட்டங்களுக்குக் கூட அதிகாலையில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கிறார். ஆனால் கடந்த ஆண்டுச் செப்டம்பர் 19ஆம் தேதி நிறைவேற்றி அனுப்பப்பட்ட சட்டம் பற்றித் தமிழக ஆளுநர் மாளிகை இன்னும் விளக்கம் அளிக்கவில்லை. இப்படித்தான் கடந்த அ.தி.மு.க. அரசில் நிறைவேற்றப்பட்ட நீட் எதிர்ப்புச் சட்டம் என்ன ஆனது என்றே தெரியவில்லை. அப்போது அதுகுறித்து அ.தி.மு.க. அரசு கேள்வியே எழுப்பவில்லை என்று விமர்சனங்கள் வெடித்தன.

இதனிடையே அ.தி.மு.க., தி.மு.க., கம்யூனிஸ்ட் மற்றும் இதர கட்சிகளின் தமிழகத்தைச் சேர்ந்த எம்.பி.க்கள் கட்சி பேதமின்றி ஒற்றுமையாகக் குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்க முயன்றனர். கொரோனா விதிமுறைகளை காரணம் காட்டி அவரைச் சந்தித்து மனு அளிப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் அவரது செயலாளரிடம் மனுவை தமிழக எம்.பி.க்கள் கொடுத்துவிட்டுத் திரும்பினர்.

மனு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுவிட்டதாகக் குடியரசுத் தலைவரின் அலுவலகத்திலிருந்து அன்றிரவே அவர்களுக்குச் செய்தி அனுப்பப்பட்டது.

உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தி.மு.க. நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, அ.தி.மு.க. எம்.பி. நவநீத கிருஷ்ணன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி., சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் உள்துறை அமைச்சரைச் சந்திக்க நேரம் கேட்டுப் பெறப்பட்டது. இதனடிப்படையில் தமிழக எம்.பி.க்கள் கூட்டாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் அலுவலகத்திற்குச் சென்றனர்.

ஆனால், உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களைச் சந்திக்க மறுத்துவிட்டார். தமிழக எம்.பி.க்களை மத்திய அமைச்சர் அமித்ஷா சந்திக்க எந்தவித முறையான காரணமும் கூறவில்லை என்று சொல்லப்படுகிறது. மீண்டும் இரு முறை சந்திக்க அனுமதி கேட்டபோதும் மறுக்கப்பட்டிருக்கிறது.

மக்களின் பிரச்னைக்காகச் சென்ற தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நேரம் கொடுக்காமல் இப்படி அலைக்கழித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

அமித்ஷா இந்த நாட்டின் உள்துறை அமைச்சர். அவரைச் சந்திக்க விரும்பியவர்கள் தமிழக மக்களால் நாடாளுமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள். அவர்கள் விடுக்கும் கோரிக்கை ஏற்க முடியாததாக இருந்தாலும் கூட அவர்களைச் சந்திக்க மறுத்திருப்பது கண்ணியமற்ற செயல்.

இந்தச் செய்கை மூலம் அவர் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளை, அதுவும் கட்சி பேதமின்றி இணைந்து வந்திருந்த தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களைமட்டும் அவமதிக்கவில்லை, தமிழ் நாட்டையும் ஒட்டுமொத்த தமிழக மக்களை அவமதித்திருக்கிறார். இதுதான் அவர் ஜனநாயக, நாடாளுமன்ற அரசியலுக்கு அவர் அளிக்கும் மரியாதை.

எதிர்க்கட்சிகளின் ஆலோசனைகளையும் ஆட்சியிலிருப்பவர்கள் ஏற்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் தங்களது செயல்பாடு குறித்து மாற்றுகட்சியினர் வைக்கும் குறைகளைக் காது கொடுத்துக் கேட்கக் கடமைப்பட்டிருக்கிறார்கள். என்பது தான் ஜனநாயகத்தின் சிறப்பு அம்சம்.

எந்த விவாதமும் இல்லாமல், அவசர கதியில் சட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது, பிரதமர் நாடாளுமன்ற கூட்டங்களில் பங்கேறாமலிருப்பது, உச்ச நீதிமன்ற ஆணைகளைக்கூட அலட்சியப்படுத்துவது போன்றவற்றைத் தொடர்ந்து செய்யும் இந்த அரசின் அடுத்தகட்டமான இந்தச் செயல்பாட்டினால் நாட்டில் ஜனநாயகம் மெல்ல அழிந்து சர்வாதிகாரம் நுழைகிறதோ என்ற அச்சம் தலைதூக்குகிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com