0,00 INR

No products in the cart.

டீ ஏன் இந்தியாவின் தேசிய பானமாக இருக்கிறது?

நீங்கள் கேட்டவை – தராசு பதில்கள்

 

? தமிழர்கள் அவர்களின் புத்தாண்டை விட்டுவிட்டு ஏன் ஆங்கிலப் புத்தாண்டை விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள்?
– நந்தினி, பெங்களூரு.
ஆண்டுக்கு ஏது மொழி?
ஆங்கிலப் புத்தாண்டு, தமிழ்ப் புத்தாண்டு, சீனப் புத்தாண்டு என்பதெல்லாம் நாமே கற்பித்துக் கொள்வன. உலகின் வெவ்வேறு பகுதியில் வாழ்ந்த மக்கள் அவரவர்க்காக வெவ்வேறு நாட்களைத் தங்கள் ஆண்டு தொடக்க நாளாக அமைத்துக் கொண்டார்கள். அவற்றுக்கு வானியல் ரீதியாகவும், காலமாற்றங்களின் அடிப்படையிலும், விளைச்சல், அறுவடை போன்றவற்றைக் கருத்தில் கொண்டும் காரணங்கள் சொல்லப்படுகின்றன.”

மகிழ்ச்சியாக இருப்பதற்கும், கொண்டாடுவதற்கும், வாழ்த்துவதற்கும் காரணமே தேவையில்லை. இயல்புநிலைச் செயல்கள் அவை. உலகின் பெரும்பான்மையான நாடுகளில் பின்பற்றும் காலண்டர் அடிப்படையில் கொண்டாடப்படும் நாளை நாமும் கொண்டாடுவதில் தவறில்லையே. மகிழ்ச்சியாக இருக்காதே, கொண்டாடாதே, வாழ்த்தாதே என்று இன்னொருவரைத் தடுக்க, அல்லது, அறிவுறத்த யாருக்கும் உரிமை இல்லை.

? குதிரை, ஒட்டகம், யானை மீது சவாரி செய்த அனுபவம்..!
– வாசுதேவன், பெங்களூரு
! ஒவ்வொன்றும் தனித்துவமானது. அருமையாக, ஆச்சரியமாக, அச்சமாக உணர்ந்த தருணங்கள்.

? ஒரு வழியாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைப் பிடித்து விட்டார்களே?
– மாடக்கண்ணு, பாப்பன்குளம்
! அவரைக் கைது செய்யப்பட்டதைவிட எப்படிப் பிடித்தார்கள் என்று சொல்லப்படும் கதைகள் சுவாரஸ்யமாகவிருக்கிறது.

? மதுக்கடைகள், ரேஷன் கடைகள் என்ன வித்தியாசம்?
– கண்ணன், நெல்லை
! இரண்டிலும் சரக்கு கிடைக்கும். முன்னதில் எப்போதும் எல்லா வகைகளும் கிடைக்கும். பின்னதில் எப்போது என்ன கிடைக்கும் எனச்சொல்ல முடியாது.

? பிரதமரை முறையாகப் பாதுகாக்கத் தவறிய , பஞ்சாப் காங்கிரஸ் அரசைக் கண்டித்துத் தமிழகப் பா.ஜ.வி.னர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளார்களே?
– சீதா லட்சுமி, திருச்சி
! தமிழகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்த விஷயமா இல்லை?

? ‘தி.மு.க.வினர் தவறு செய்தாலும் நடவடிக்கை பாயும்’ என முதல்வர் கூறியுள்ளாரே?
– நெல்லை, குரலோன்
! தி.மு.க.விலும் தவறு செய்பவர்கள் இருக்கிறார்கள் என்பதின் ஒப்புதல் வாக்குமூலம்.

? ‘பஞ்சாபில் ஜனாதிபதி ஆட்சி வேண்டும் ‘ என அமர்ந்தர் சிங் கூறியுள்ளாரே?
– மகிழன், நெய்வேலி
! “இழந்த முதல்வர் பதவியை 6 மாதத்திற்கு பின்னர் பா.ஜ.க. ஆசியுடன் பெற்றுவிடலாம்” என்ற ஆசைதான்.

? “அம்மா மினி கிளினிக் திட்டம் தற்காலிகமாகத் தொடங்கப்பட்டதுதான் -அந்தத் திட்டம் முடிந்து விட்டது” என்கிறாரே அமைச்சர் மா. சுப்ரமணியன்?
– ஜோஷ், அயன்புரம்
! திட்டம் ஆரம்பிக்கப்பட்டது தேர்தலுக்காக. அப்போதே அது ஓராண்டு திட்டம் என்றுதான் சொல்லப்பட்டிருக்கிறது. போதுமான நிதி, கட்டமைப்பு மருத்துவர்கள் இல்லாமல் இம் மாதிரி திட்டங்கள் வெற்றிபெறாது என்பதை உணர்ந்த புத்திசாலித்தனமான முடிவு.

? “தேர்தலில் எத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் பா.ஜ.க.வை தோற்கடிக்க முடியாது” என்கிறாரே அண்ணாமலை?
– ஆர்.மாதவராமன்,
கிருஷ்ணகிரி – 63500
! முதலில் எந்த ஒரு கட்சி, அல்லது  அணியில் சேராமல் நகராட்சி தேர்தல்களில் கணிசமான  இடங்களை அவர் கட்சி பெறட்டும்.

? ’டீ’ ஏன் இந்தியாவின் தேசிய பானமாக இருக்கிறது?
– சம்பத்குமாரி,  புதுக்கோட்டை
! சட்டென மூளையைச் சுறுசுறுப்பாக்கி உற்சாகமூட்டி நமக்கு புத்துணர்ச்சி கொடுக்கும் பானங்களில் பிரதான இடம் தேநீருக்குத்தான். இந்தியாவின் அனைத்துப் பாஷைகளிலும் வாஞ்சையுடன் ‘டீ’ எனச் சொல்லுகிறார்கள். டீக்கடை என்பது இப்போதும் நம் எல்லோருடைய வாழ்வில் ஒரு அங்கம். காசில்லா ஏழைகளின் பசி போக்கும் துரித உணவு டீ தான். டீ கடைகளில்
டீ போடுவதை கவனித்திருக்கிறீர்களா? ஒரு தேர்ந்த நாட்டியக்காரரின் அசைவுகள் அவை. கூரை வரை உயர்த்திய வலது கை ஆற்றும் வானவில் போன்ற டீயை இடது கையில் வாங்கி ஆற்றி முதல் கிளாசில் இறக்கி, அடுத்தடுத்த கிளாஸ்களில் விடும்போது டீ ஆற்றும் உயரம் குறைந்து கொண்டே வரும். ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் அரை மணி நேரம் எடுத்துக்கொள்ளும் டீ வகைகளை வினாடி நேரத்தில் தயாரித்துத் தருவார்கள் லைட் டீ, ஸ்ட்ராங் டீ, மீடியம் டீ எல்லாமே அந்தச் சில நொடிகளில் டீ வடிகட்டுவதில் அந்த மாஸ்டர் செய்யும் ஜாலம் தான். ஸ்ட்ராங் டீக்கு மட்டும் வடிகட்டியை லேசாகக் குலுக்குவார்.

? புத்தாண்டு வாழ்த்துகளில் சிறந்த வாசகம் ?
– ஞானசேகரன்,  அறந்தாங்கி
முடிவல்ல, தொடக்கம்…
இன்றெமை வருத்தும்
இன்னல்கள் மாய்க!
நன்மைவந் தெய்துக!
தீதெலாம் நலிக!
இந்த வாழ்த்து வாசகங்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னதாகச் சொல்லியிருப்பவர் மஹா கவி பாரதியார்.

? பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த சட்டம் வருகிறதே?
– மஹாலட்சமி, திண்டுக்கல்
! திருமணம் முடிந்தால் படிக்கமாட்டார்கள் என்பதும் திருமணத்தைத் தள்ளிப்போட்டால் படிப்பே கதியாகக் கிடப்பார்கள் என்பதும் பெண்கள் குறித்த நமது அறியாமையே. இது ஆண்கள் பெண்கள் மீது மேற்கொள்ளும் கருத்துத் திணிப்பு. 18 வயது நிரம்பிய ஒரு ஆணோ அல்லது பெண்ணோ, Minor என்ற நிலையிலிருந்து Major ஆகக் குறிப்பிடுகிறது சட்டம்! அந்தச் சட்டமே அவர்களை Independent Individual ஆக வரையறுத்து, அவர்களுக்கு வாக்குரிமை சொத்துரிமை சுதந்திரமான முடிவெடுக்கும் அதிகாரத்தைத் தருகிறது!

இந்த அடிப்படையான சட்ட உரிமையை மறுக்கும் வகையில் அரசால் இயற்றப்படும் திருமணச் சட்டங்கள் கண்டிப்பாக நீதிமன்றங்களில் சவால்களைச் சந்திக்கும்.

?  எத்தனையோ திரைப்பாடலாசிரியர்கள் இருந்தாலும் ஏன் கண்ணதாசன் மட்டும் அதிகம் போற்றப்படுகிறார்?
– நரசிம்மன், ஶ்ரீ ரங்கம்
! திரைப்பாடல்களில் கண்ணதாசன் சொல்லாத கருத்துகளைத் தேடுவது மிகமிக கடினம். பிறப்பு முதல் இறப்பு வரை, நாத்திகம் தொட்டு ஆத்திகம் வரை, வாழ்வியல் முதல் ஆன்மீகம் வரை கவிஞர் சொல்லாத பொருளில்லை. அவன் உண்மையை எழுதினான், தன் அனுபவத்தை எழுதினான், தான் அனுபவித்ததையும் எழுதினான். அவன் பாடல்கள் நம்மைக் கவர்ந்ததற்கு மற்றொரு முக்கியக் காரணம் எளிமையிலும் இலக்கியம். 

3 COMMENTS

 1. டீ போடுவதை, ‘ ஒரு தேர்ந்த நாட்டியக் காரரின் அசைவுகள் அவை …’ என்று குறிப்பிட்டு அற்புதமாய் வர்ணித்த தராசாரின் பார்வையில், நவரசம் நாட்டியம் ஆடியதுங்கோ!

 2. நான் முன்பே ஏன் இந்த அவசரம் கல்கி தலையங்கத்தில் இந்த 21 வயது வரம்பு பெண் திருமண சட்டம் 18 வயதினிலேயே மேஜரான பெண்களின் உரிமைகளை பறிக்க முடியாது என்று சொல்லி சட்டத்தின் முன் இது செல்லாது என்று கருத்து தெரிவித்திருந்தேன். தராசாரும் அதை ஊர்ஜிதம் செய்துள்ளார். மகிழ்ச்சி
  திருவரங்க வெங்கடேசன் பெங்களூரு

 3. எந்தவொரு பண்டிகை நாட்களையும் கொண்டாடுவதும்,மகிழ்ச்சியாக இருப்பதும், பிறரை வாழ்த்துவதும் நம் வாழ்க்கையை
  மேன்மை அடைய நாமே எடுத்து கொள்ளும்
  முயற்சி ஆகும்
  வி.கலைமதிசிவகுரு,
  நாகர்கோவில்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“ஆளுநருடன் அரசியல் பேசினேன்” – ரஜினிகாந்த்

1
? “உணவுப்பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி.யில் வரிச்சலுகை இருப்பதை மக்கள் புரிந்துகொள்ளாமல்  எதிர்க்கிறார்கள்” என்கின்றனரே பா.ஜ.க.வினர்? - ஜோஷ், அயன்புரம் ! அப்படியா. நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ளுங்கள்... அரிசி 25 கிலோ பாக்கிங் மூட்டைக்கு ஜிஎஸ்டி சேர்த்து ரூபாய் 1312-5.. அதே அரிசி...

‘பொன்னியின் செல்வன்’ படத்தின் முதல் பாடல் எப்படி?  

2
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? செஸ் ஒலிம்பியாட் துவக்க விழா எப்படி? - எம்.சண்முகம், எடப்பாடி ! ஒரு விளையாட்டுப் போட்டியின் உள்ளடக்கத்தை உள்வாங்கிப் பெரும் நிகழ்வாக்கிக் காட்டுவது எப்படி என்பதை  தொடக்க நிகழ்வுகள்...

ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும் ?

1
? ஓர் எழுத்தாளன்  எப்படியிருக்க வேண்டும்? - மதி மாறன், சேலம் ! ஓர் எழுத்தாளன் தம் வாசகர்களுக்கு நெருக்கமான, தம்மைப் போன்ற ஒரு மனிதனாக, தாம் எளிதில் அணுகி உரையாடக்கூடிய ஒருவனாக,  தமக்குப் பிடிக்கக்கூடிய...

கண்ணியத்தை காக்காததற்கு கட்சி அவர் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1
நீங்கள் கேட்டவை - தராசு பதில்கள்   ? சென்னை செஸ் ஒலிம்பியாட்  பற்றி... -நெல்லை குரலோன், பொட்டல்புதூர் முன்னேற்பாடுகள் கச்சிதமாக செய்யப்பட்டுக்கொண்டிருப்பதில் மகிழ்ச்சி. ஆனால், வெளியான விளம்பர படத்தில்  உலகம் அறிந்த விஸ்வநாத் ஆனந்தோ, அல்லது பிரஞ்யாவோ...

இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம் என்கிறாரே கமல்?

0
  “இளையராஜாவை ஜனாதிபதியாகவே ஆக்கலாம்” என்கிறாரே கமல்? - மாடக்கண்ணு, நெல்லை ! அவர் ஏற்றுகொள்ள மாட்டார். இந்திய ஜனாதிபதி பணம் ஈட்டும் எந்தப் பணியையும் செய்ய முடியாது.  ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர் செய்யலாம். அவர் இசைஞானிதானே...