0,00 INR

No products in the cart.

வறுமையின் நிறம் சிவப்பு படம் கமல் போல இருந்தேன்

உலகக் குடிமகன் –  3

 

– நா.கண்ணன்

 

மெரிக்கன் கல்லூரியில் படித்த ஐந்து வருடங்களில் மதுரை மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து படித்து டாக்டராகும் வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இளங்கலை மட்டும் படித்தால் அதிக வேலை வாய்ப்பு இருக்காது என்று முதுகலையும் படிக்க வேண்டிய சூழ்நிலை. மதுத்துவக் கல்லூரி ஆசையில் விலங்கியல் எடுத்துவிட்டேன். அதற்கான வேலை வாய்ப்பு மிக, மிக குறைவே. எனவே கல்வியின் உச்சத்திற்குப் போனால்தான் பிழைக்க முடியும் எனுமோர் உந்துதல். பள்ளிப் பருவத்திலேயே கல்வியில் அதிக ஆர்வம் கொண்டவன் நான். ஒவ்வொரு வகுப்பிலும் முதலாவதாகத்தான் தேர்வுறுவேன். பள்ளி திறக்கும் ஒரு வாரம் முன் எங்களது தேர்வு பற்றிய விவரங்கள் ஒரு கரும்பலகையில் ஒட்டப்பட்டு ஏதாவதொரு வகுப்பின் ஜன்னல்கள் வழியே மாணவர்களுக்கு அறியத் தரப்படும். இச்சேதி தெரிந்தவுடன் அடித்துப் பிடித்துக் கொண்டு நாங்கள் பள்ளிக்கு ஓடுவோம். ஜன்னல் உயரம், அதன் மீது சாய்வான கரும்பலகை. அதில் டைப் அடித்த தாளில் தேர்வு விவரம். என்னைப் போன்ற குள்ளமான மாணவர்களுக்கு பாஸா, பெயிலான்னு பார்ப்பதற்குள் பெரும் பாடாகிவிடும். நான் படும் அவதியைப் பார்த்து பள்ளியில் இருந்து படிக்கும் பெரிய மாணவர்களுக்கு சிரிப்பாய் வரும். அதில் கல்யாணமான ஜாஃபர் அலியும் இருப்பார். அவரது ’ஜாவலின் எறி அம்பு’ விளையாட்டிற்காகவே அவரை தேர்வுறச் செய்யாமல் பள்ளி வைத்திருந்தது. அவர் என்னை இடுப்பில் கைவைத்து தூக்கிக் காட்டுவர். “நல்லா பாத்துக்கோ! உன்னை எவன் பெயில் ஆக்குவான்? நீங்களெல்லாம் எப்போதும் பர்ஸ்டு கிளாஸ். நாங்கதான் முட்டை போட்டு, முட்டை போட்டு முன்னேறணும். ஒரு நாள் ஹெட்மாஸ்டர் கழுத்திலே கத்தி வச்சு பாஸாகிக்காட்டறேன் பாரு” எனும் அறைகூவலுடன் நான் பாஸாகிவிட்டேன் எனும் சேதி எனக்குக் கிடைக்கும். நான் ஒரு முறை கூட முதல்வனாகத் தேறாமல் போனதில்லை.

இதே ஆர்வம் கல்லூரிப் படிப்பிலும் இருந்தது. இளங்கலை பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேறினேன். ஆங்கிலத்தில் A, தமிழில் A+. மதுரைப் பல்கலைக்கழக இளங்கலை எழுதிய அனைத்து மாணவர்களுள் முதல் நான்கு ரேங்கிற்குள் இருந்தேன். படித்த பாடங்களுள் எங்கள் துறைத் தலைவர் எடுத்த கூர்தலறம் (பரிணாமவியல்) பாடம் அவ்வளவு சுவாரசியமாக இருக்கும். அவருக்குப் பிடித்த மாணவர்களுள் நானும் ஒருவன். இளங்கலை தேர்வு முடிவுகள் வந்தவுடன் ஏதாவது வேலை பார்த்து, தாய் தந்தையற்ற குடும்பத்தைக் காப்பாற்றலாம் என நினைத்திருந்த போது, துறைத் தலைவரிடமிருந்து எனக்கு தனிப்பட்ட கடிதம் வந்திருந்தது. அதில் நன்றாகப் படிக்கும் நான் இளங்கலையோடு நிறுத்திவிடக் கூடாது முதுகலை படிக்க வேண்டும், அதுவும் அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் பாடமே எடுக்க வேண்டுமென்பது அவரது அறிவுரை. என்னுடன் படித்த பல மாணவர்கள் வெவ்வேறு திசையில் சென்றுவிட்டனர். பலர் ஆசிரியர் பயிற்சிக்கு, சிலர் காவல் துறைக்கு, சிலர் மேற்படிப்பிற்கு மற்ற கல்லூரி, பல்கலைக் கழகமென போய்விட்டனர். இருவர் இளங்கலை முடிக்காமலே மருத்துவக் கல்லூரி தேர்வுற்று மருத்துவராகப் போய்விட்டனர். எனக்கு இப்படியொரு ஸ்பெஷல் அழைப்பு வந்ததால் வீட்டிலும் எல்லோரும் மகிழ்வுற்று என்னை மேலே படிக்கச் சொன்னார்கள். நான் மீண்டும் அமெரிக்கன் கல்லூரியில் தொடர்ந்தேன்.

அமெரிக்கப் பாதிரிகள் ஆரம்பித்த கல்லூரி அமெரிக்கன் கல்லூரி. அமெரிக்கா பற்றிய சேதிகள் அவ்வப்போது வந்தும் போயும் இருக்கும். எனக்குப் பாடமெடுத்த சிலர் அமெரிக்கா போய்விட்டனர். அமெரிக்கா மெல்ல, மெல்ல என் இதயத்துள் புகுந்தது. ஆனால்,என்னைப் போன்ற கிராமத்து, நடுத்தர குடும்பத்து மாணவர்கள் அமெரிக்கா செல்ல வேண்டுமெனில் முதலீடு படிப்பில் செய்ய வேண்டுமென உணர்ந்தேன். அங்கு போய் சேர்த்துவிட எந்த பணக்கார மாமாவோ, சித்தப்பாவோ கிடையாது என்பது என் நிதர்சனம். இப்போது போன்று இணைய வசதிகள் கிடையாது. விவரங்கள் அறிய தொடர்புகள் இருக்க வேண்டும். அமெரிக்கா சென்று படிக்குமளவு ஆங்கிலப் புலமையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும். எனக்கு ஆங்கிலத்தை விட தமிழில் கூடுதல் மதிப்பெண். புதுக் கவிதை இயக்கம் என்னை ஈர்த்தது. அறிவியல் துறையில் இருந்து கொண்டு தமிழ்க் கவிதை செய்து கொண்டிருந்தேன். வானம்பாடிக் கவிஞர்களும், ஆசிரியர் நெடுமாறனும் சமூகத்தின் மீது விமர்சனம் வைக்கக் கற்றுத்தந்தனர். மீசைக்கார பாரதி “ரௌத்திரம் பழகு” என்று சொன்னது பிடித்தது. ஏற்றத்தாழ்வுகள் மிகுந்த சமுதாயம் கேள்வி கேள்! கேள்! என்று சொன்னது. எனவே என் அமெரிக்கக் கனவுகளோடு மொட்டைமாடியில் உட்கார்ந்து கவிதையும் செய்து கொண்டிருந்தேன். ஏறக்குறைய கே.பாலச்சந்தர் உருவாக்கிய  ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படம் கமல் போல  என்னைச் சூழந்து சவால்களே இருந்தன. இதிலிருந்து மீண்டு நான் எப்படி அமெரிக்கா போவேன்? எனும் பெருத்த யோசனை என்னைச் சூழந்திருந்த நேரமிது!

ஆறுதலான சில விஷயங்கள், மத்திய அரசின் ஊக்கத்தொகை என் படிப்பிற்குக் கிடைத்தது. அது வட்டியில்லாத கடனாகக் கிடைத்தது. “என்றாவது ஒரு நாள் வேலைக்குப் போகும் போது கட்ட வேண்டும்” என்பது பொதுப் புரிதல். டி.வி.எஸ். நிறுவனம் ஏழை மாணவர்களுக்கென்று அவ்வப்போது நிதி வழங்குவதுண்டு. அது ஒருமுறை கிடைத்தது. எல்லாவற்றையும்விட முதுகலை ஈர்ப்பிற்கு முக்கிய காரணமாக அது இருபால் வகுப்பாக மாறிப் போனதுதான். நான் திருப்பூவணத்தில் படிக்கும் போதே அது இருபால் பள்ளியாகத்தான் இருந்தது. அது எனக்கு பிடித்து பழக்கமாகியிருந்தது. இப்போது பதின்ம வயது. ஹார்மோன்கள் கன்னாபின்னா என சுரக்கும் பருவம். பெண்கள் படிக்கிறார்கள் எனும்போது இனமறியா கிளுகிளுப்பு. இம்மாதிரி சூழ்நிலை பொதுவாக வீட்டில் புளியைக் கரைக்கும், ஆனால் அது என் துறைத்தலைவர் ஜெ.சி.பி.ஆப்ரஹாம் வயிற்றில் புளியைக் கரைக்குமென்று எண்ணவில்லை. அவரது கவலை, முதல் நிலை மாணவனான நான் அத்தகுதியை தக்க வைப்பேனா? இல்லை பெண்கள் பின்னால் போய் விடுவேனா? என்ற கவலை. மேலும், முதுகலைத் துறை தலைவர் டாக்டர் பெர்லின். அவர் அமெரிக்காவிலிருந்து அப்போதுதான் வந்திருந்தார். அவரிடம் அமெரிக்க வாடை தூக்கலாக இருந்தது. அதுவொரு லாகிரி. என்னை வசப்படுத்தியது. டாக்டர் பெர்லினை, ஆப்ரஹாம் சாருக்குப் பிடிக்கவில்லை.

அமெரிக்க மாணவர்களுக்கு இருக்கும் பாலியல் சுதந்திரம் இந்திய மாணவர்களுக்குக் கிடையாது. ஆணோ, பெண்ணோ எல்லா மாணவர்களுமே பெற்றோரின் தத்துப் பிள்ளையாக, அவர்கள் பேச்சுக் கேட்டு படிக்கும் பிள்ளைகளாகவே இருந்தனர். உண்மையில் முதுகலை படிக்க வந்த மாணவிகள், மாணவர்களைவிட பழகுவதில் இயல்பாக, கூச்சமின்றி இருந்தது ஒரு புதிய பார்வையை எனக்குத் தந்தது. பெண் என்றாலே சகோதரி என்றுதான் பார்க்க வேண்டுமென்று கற்றுத் தந்த பழைய கணக்கு செலாவணியற்றுப் போனது. ஆண் பெண் நட்பாக பழகிக் கொள்ளலாம் என்பது ஆரோக்கியமாக இருந்தது. உள்ளே இருந்த கவிஞனுக்கு புதிய தீனி கிடைத்தது. என் சகிகளுக்கு என் கவிதை பிடித்திருந்தது. ஆப்ரஹாம் சார் எப்படியாவது தன் பழைய மாணவர்களை தன் பிடிக்குள் தக்க வைத்துக்கொள்ள மனித பரிணாம வரலாறு எனும் பாடத்தை முதுகலை பாடத்திட்டத்தில் நுழைத்து எங்களோடு பழகிக் கொண்டிருந்தார். கண்காணித்துக் கொண்டிருந்தார் என்பதே சரியான பதம். அவர் அழைத்து நான் முதுகலை படிக்க வந்ததால் நான் அவர் பொறுப்பானேன். இதெல்லாம் எனக்குப் பின்னால்தான் தெரிந்தது. நான் “கனவுகள்+கவிதைகள்=காகிதங்கள்” என்று இருந்தேன்.

டாக்டர் பெர்லின் ஏறக்குறைய ஒரு அமெரிக்கப் பேராசிரியர். எப்படிப் பாடம் எடுப்பாரோ அதே ஸ்டைலில் எடுத்தது ஆர்வமாக இருந்தது. அவரது முனைவர் பட்ட ஆய்வு கொசு என்பது பற்றி இருந்ததால், நாங்கள் சிறப்புப் பாடமாக பூச்சிவியல் படிக்க வேண்டுமென ஆசைப்பட்டார். மதுரை விவசாயக் கல்லூரியுடன் ஓர் புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டு எங்களை அங்கு சென்று படிக்க வைத்தார். காரணம் பூச்சிவியல் துறையின் விற்பன்னர் டாக்டர் எஸ்.ஜெயராஜ் அங்கிருந்ததே! அதுபோல், மதுரை தியாகராஜர் கல்லூரியில் புழுவியல் துறைசார் விற்பன்னர் டாக்டர் கண்ணன் இருந்ததால் அங்கும் படிக்கச் சென்றோம். ஒரு கல்லூரி வளாகத்திலிருந்து இன்னொரு கல்லூரி செல்வது, அதன் சூழல், அவர்கள் பாடமெடுக்கும் விதம் இவையெல்லாம் புதிய சாளரங்களைத் திறந்துவிட்டன. குறிப்பாக, விவசாயக் கல்லூரியின் தரம் என்னை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. அவர்கள் பாடத்திட்டம் என்னை பயமுறுத்தியது. தியாகராஜர் கல்லூரி பயமுறுத்தவில்லை. ஆனால் இங்கெல்லாம் போனது மெல்ல, மெல்ல வெறும் புத்தகப் புழுவாக இருந்த என்னை விஞ்ஞானியாக மாற்றிக் கொண்டிருந்ததை அப்போது உணரவில்லை. வாய்மைத் தேடலுக்கு புத்தகம் மட்டும் போதாது, பரிசோதனை, களப்பயிற்சி, ஆய்வு, தரவு, தரவிலிருந்து உண்மையை அறிதல் போன்ற பரிமாணங்கள் மெல்ல, மெல்ல புரியத் தொடங்கின. அப்போதைய கல்விச் சூழல் என்பது புத்தகத்தை மட்டுமே நம்பி இருந்தது. சுயமாக ஆராயும் ஆர்வத்தைத் தூண்டுவதாக இல்லை. அது வெறும் தகவல் பரிமாற்று ஊடகமாகவே இருந்தது. இன்றைய கூகுள், அன்றைய ஆசிரியர்கள்.

எது எப்படி இருந்தாலும் சக தோழிகளுடன் இங்கும், அங்கும் ஊர் சுற்றுவது பிடித்திருந்தது. கெக்கே பிக்கே என்று எதற்கெடுத்தாலும் சிரித்துக் கொண்டு, பஸ்ஸில் அருகருகே அமர்ந்து கொண்டு பயணிப்பது ஹார்மோன்களுக்கு தீனி போட்டது!

(தொடரும்)

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...

தமிழனுக்கு ஓர் இயல்பான வாழ்வியல் அமைதியைத் தருகிறது…

1
 உலகக் குடிமகன் - 32  நா.கண்ணன்   நான் கொரியா செல்வேன் எனக் கனவில் கூட நினைத்ததில்லை. ஆனால், என் ஜப்பானிய ஆய்வை அமெரிக்கர்களும், கனடாக்காரர்களும், ஜெர்மானியரும், ஆங்கிலேயரும் கவனித்தது போல் கொரியர்களும் கவனித்து வருகிறார்கள் என...

சலூன் கிரி மாமா

0
மகேஷ் குமார்   கிரி மாமாவின் நிஜப்பெயர் அதுதானா என்பது எனக்குத் தெரியாது. அவரை முதல் முதலாகப் பார்த்த சலூனின் பெயர் ‘கிரி சலூன்’. அதிலிருந்து அவர் பெயர் கிரி மாமா. நல்ல உயரமும் உடலுமாக,...

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்   அன்று நள்ளிரவில் அவன் வீடு திரும்பியதும் அவனுக்கு சாப்பாடு போட டேபிளில் தட்டு வைத்தாள். “எனக்கு வேண்டாம்” “ஏன்?” “வெளிய சாப்பிட்டேன்” “ஹோட்டல் உணவு உடம்புக்கு நல்லதில்லை” “நாம தனியா போன பிறகு உன் கையால் சாப்பிடுகிறேன். அதுவரை...

அப்ரைசர் முத்துசாமி

0
மகேஷ் குமார்   திங்கள் மற்றும் வியாழக் கிழமைகளில் மெயின் ரோட்டில் இருக்கும் அந்த வங்கியின் வாசலில் காலை 9 மணிக்கே கூட்டம் நெரியும். அந்த இரண்டு தினங்களில்தான் நகைக்கடன் கொடுக்கப்படும். பெரும்பாலானோரின் கையில் ஒரு...