0,00 INR

No products in the cart.

அகமும் புறமும்

அருளுரை

காஞ்சி மகாப்பெரியவர்

 

னுஷ்யனாகப் பிறந்த ஒவ்வொருத்தனும் ஓயாமல் அலைச்சலான அலைச்சல் அலைந்து கொண்டிருக்கிறானே, எதற்காக? ஆசைகளைப் பூர்த்தி செய்துகொள்வதற்குத்தான். வெளியிலிருக்கிற வஸ்துக்களிடம் இவனுக்கு ஆசை. அவற்றைப் பெறவே அலைகிறான். ஒன்று கிடைத்துவிட்டாலும் போதவில்லை. அதனால் வருகிற சுகம் தீர்ந்து போகிறது. இன்னொன்றுக்கு ஆசைப்படுகிறான். அதைத் தேடி ஓடுகிறான். இவனுக்கு சாந்தி என்பதே ஒரு நாளும் இல்லாமலிருக்கிறது.

வெளியில் இருக்கிற வஸ்து வந்தால்தான் சந்தோஷம், ஆனந்தம் என்று துரத்திக் கொண்டே இருப்பவனுக்கு சாந்தி எப்படி வரும்? வெளியில் இருப்பது நம் வசத்தில் இருப்பதல்ல. அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக்கூடும். நமக்கு அன்னியமான வெளி விஷயங்களிலிருந்து ஆனந்தத்தைச் சாசுவதமாகச் சம்பாதித்துக் கொள்வது நடக்காத காரியம். அது சாந்தியைக் கெடுக்கிற பிரயத்தனம்தான்.

மனுஷ்யன் புறத்தில் ஆனந்தத்தைத் தேடிக்கொண்டு போவதற்குக் காரணம், அவன் உள்ளுக்குள் தானே ஆனந்த ஸ்வரூபமாக இருப்பதுதான். இவன் உள்ளூற ஆனந்த ஸ்வரூபமாய் இருப்பதாலேயே ஆனந்தத்தை எப்போது பார்த்தாலும் தேடிக்கொண்டு இருக்கிறான். மாயையால், தானே ஆனந்த ஸ்வரூபம் என்பதை மறந்துவிட்டிருக்கிறான். இருந்தாலும் இவனுடைய ஸ்வபாவமே ஆனந்தமானபடியால் இவனுக்கு “ஆனந்தம் அடைய வேண்டும்” என்ற எண்ணம் மட்டும் இருக்கிறது. மனுஷ்யர்களில் எவராவது ஆனந்தத்தைத் தேடாமல் துக்கத்தைத் தேடிப் போகிறவர்கள் உண்டா? ஆனாலும், அந்த ஆனந்தம் உள்ளே இருப்பதை அறிந்து சாந்தத்தில் அதை அனுபவிக்காமல், வெளியே ஆனந்தத்தைத் தேடித் துரத்திக்கொண்டே போய் சாந்தியை ஓயாமல் கெடுத்துக் கொள்கிறார்கள். “தன் நிஜ ஸ்வரூபம் என்ன?” என்று ஒருவன் அம்பாளின் கிருபையால் பிரார்த்தித்து ஆத்ம விசாரம், தியானம் செய்து பார்த்தால், “தானே பூரண ஆனந்த வஸ்து” என்று தெரிந்து கொள்வான்.

இவனுடைய இயல்பான உள் ஆனந்தம் மகா சமுத்திரம் மாதிரி இருக்கிறதென்றால், இவன் இப்போது புறத்தில் தேடி ஓடுகிற வஸ்துக்களிடமிருந்து கிடைக்கிற ஆனந்தமெல்லாம் ஒரு திவலை மாதிரிதான். இதை ஒருத்தன் உணர்ந்துவிட்டால் அப்புறம் வெளி இன்பத்தைத் தேடவே மாட்டான். தன்னைத்தானே அநுபவித்துக் கொண்டு ஆனந்த சமுத்திரமாக இருப்பான். சமுத்திரம் இருக்கிற இடத்திலேயே கரையைவிட்டு வராமல் இருந்தாலும் அதனிடம் நதிகள் போய் விழுகின்றன அல்லவா? அப்படியே ஆசைகள் இவனிடம் வந்து விழுந்து சமுத்திரத்தில் நதிகள் விழுந்து மறைவதுபோல் மறைந்தே போய்விடும். ‘ஆபூர்ய மாணம் அசலப்ரதிஷ்டம் சமுத்ரம்’ என்று கீதை சொன்ன மாதிரி, பேரின்பக் கடலாக நிறைந்து, அசைவதற்கு இடமே இல்லாத அளவுக்கு எங்கும் நிறைந்து, அசையாமல் பரம சாந்தமாக நிற்பான். தேவேந்திர பதவியின் ஆனந்தம்கூட இந்த ஆத்மானந்தக் கடலில் ஒரு துளிதான் என்கிறார் ஸ்ரீ பகவத் பாதர்கள்.

‘பதவி, பணம், ஸ்திரீ புருஷாள், கௌரவம், பப்ளிஸிட்டி—என்றிப்படி வெளியிலிருந்து நமக்கு ஆனந்தம் கிடைப்பதாக எண்ணிக்கொண்டு ஓயாமல் யத்தனம் செய்வது அத்தனையும் சமுத்திரமாக இருக்கிற நாம் அதையறியாமல் ஒரு சொட்டு ஜலத்துக்காக தவிக்கிற மாதிரிதான். வெளிப்பொருள் எதுவோ கிடைக்காததால் நமக்குக் குறை வந்துவிட்டதாகத் துக்கப்படுவது சுத்தத் தப்பு. நமக்குக் குறையே இல்லை. நமக்குள் நாமே பூரண வஸ்து. நமக்கு அன்னியமாக வெளி என்ற ஒன்று இல்லை. வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம். ‘வெளி மாதிரி இருப்பதிலிருந்து தானாக எது வந்தாலும் வரட்டும். சமுத்திரம் நதிகளை அடக்கிக் கொள்வதுபோல் அவற்றையும் உள்ளே இருப்பதோடு சேர்த்துக் கொள்வோம். எதுவும் வரவில்லையா? அதனால் பாதகமில்லை. எதும் வராததால் நமக்கு என்ன குறை? நமக்கு உள்ளேயே இருக்கிற பரமாத்ம வஸ்துவின் லேசந்தானே வெளியில் இருப்பதெல்லாம்?’ என்கிற தெளிவோடு எப்போதும் இருக்க முயல வேண்டும்.

 

3 COMMENTS

  1. மகா பெரியவரின் அருளுரை அற்புதம். ஆசைகளை பூர்த்தி செய்து கொள்ள அலையும் மனிதன் முழுமை பெறுவதில்லை. வெளியே தேடும் ஆனந்தம் நம் வசத்தில் இருப்பதல்ல. ‘அது வந்தாலும் வரும், போனாலும் போகும். அதை நம் வசப்படுத்திக் கொண்டதாக நினைத்தபோதே கைவிட்டுப் போகக்கூடும் ‘ என்ற வரிகள் நமக்கு புரிதலை உணர்த்துகிறது. ‘வெளிப்பொருள் எதுவும் கிடைக்காவிட்டால் நமக்குக் குறை வந்துவிட்டதாக கருதுவது தவறு ‘ என்பதை மகா பெரியவர் விளக்குவது, நமக்குள் நாமே பூரண வஸ்து என்பதை உணர்த்தி, வெளியிலே இருக்கிற அத்தனை ஆனந்தமும் நமக்குள்ளேயே அடக்கம் என்பதை புரியும் போது தித்திக்கிறது. பரமாத்மா நமக்குள்ளேயே இருப்பதை மகாபெரியவர் விளக்கி நம்மை பக்குவப்படுத்துகிறார்.

    ஆ. மாடக்கண்ணு,
    பாப்பான்குளம்.

  2. மகாபெரியவர் அருளிய ‘அகமும் புறமும் ‘ படித்ததும் கிடைத்த பேரானந்த அனுபவத்தை சொல்ல வார்த்தை இல்லை!

  3. புறத்தில் இருந்து வருபவை இன்பம் தருவது
    போல் தந்து துன்பத்திற்குள்ளாக்கும் ஒரு மாயைதான்.அகத்தை ஆராய்ந்து அறியும்
    இன்பம் கிடைத்தால் அதுவே பேரின்பம்.
    மகாபெரியவர் அருளிய அகமும், புறமும்
    அற்புதம்.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...