பீஸ்ட் சினிமா விமர்சனம்

பீஸ்ட் சினிமா விமர்சனம்

Published on

சினிமா விமர்சனம்

– லதானந்த்

சென்னையில் இருக்கும் 'ஈஸ்ட் கோஸ்ட் மால்' என்ற பெரிய வணிக வளாகத்தைத் தீவிரவாதிகள் ஹைஜாக் செய்து இருநூற்றுச் சொச்சம் நபர்களைப் பயணக் கைதிகளாகப் பிடித்து வைத்திருப்பதும், அவர்களை ஒற்றையாளாக விஜய் காப்பாற்றுவதும்தான் கதையின் ஒன்லைன். உபரியாகப் பாகிஸ்தானுக்கே (மறுபடியும் தனியாளாகத்தான்!) சென்று, தப்பித்துப்போன பயங்கரவாதி உமார் ஃபாரூக்கைச் சிறைப்பிடித்து இந்தியாவுக்கு விமானத்தை ஓட்டிக்கொண்டு (இப்போதும் ஒற்றையாளாய்த்தான்!) விஜய் வருகிறார்.

படத்தில் காண்பிக்கப்படும் வணிக வளாகம்  'செட்' எனச் சொல்கிறார்கள். ஆனால் அச்சு அசலாக ஒரு ஷாப்பிங் மாலுக்குள்ளே நாம் இருப்பதுபோல அரங்க நிர்மாணம் செய்திருக்கிறார்கள். அதற்கு முதலில் ஒரு சபாஷ்!

பெரிய திட்டமெல்லாம்போட்டு மாலை ஹைஜாக் செய்த தீவிரவாதிகளுக்கு விஜய்யும் அவரது கூட்டாளிகளும் அதே மாலில் பதுங்கியிருக்கும் இடம் தெரியாமல் போயிருப்பது ஆச்சரியம்தான்.

பிரகாஷ் ராஜின் சாயலில் இருக்கும் மனநல மருத்துவர் கொஞ்ச நேரமே வந்தாலும் சிரிக்க வைக்கிறார். விஜய்யைப் பார்த்து அவர் ஒரு காட்சியில், "உனக்கு டேன்ஸ் ஆடத் தெரியுமா?" என்பார். விஜய் அப்பாவியாக, 'என்னது?' என்பார் பாருங்கள்… தியேட்டரில் பொருள் பொதிந்த விசில்கள் பறக்கின்றன.

யோகிபாபுவும் ரெடின் கிங்ஸ்லியும் ஒப்புக்குச் சப்பாணியாக வந்துபோகிறார்கள். குறிப்பாக வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகரான ரெடின் கிங்ஸ்லியை இன்னும் பயன்படுத்திக்கொண்டிருக்கலாம்.

கல்யாண வீடுகளிலேயே விஜய் ஒரு மாதிரி சோகமாக முகத்தை வைத்துக்கொள்வார். படு சீரியஸான இந்தப் படத்தில் கேட்கவா வேண்டும்?

பூஜா ஹெக்டே சற்று முற்றலான தோற்றத்தில் வந்துபோகிறார்.  அவர் ஒரு காட்சியில், தனக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளை உயரக் குறைவானவர் என நையாண்டி செய்கிறார். உருவக் கேலியையும் தாண்டி வேறு யாருக்காவது உள்குத்து இருக்கிறதா இயக்குநர் சார்?

படத்தின் ஆரம்பத்தில் வரும் சண்டைக் காட்சியும், நடனமும் அதிரி புதிரி ரகம். பாடல் வரிகளின் அர்த்தம் சொல்பவர்களுக்குப் பரிசு ஏதேனும் அறிவிக்கலாம்.

குழந்தைக்கு பலூனைக் கொடுக்கும்போது அது உடைந்துவிடுவதாக வைக்கப்பட்டிருக்கும் காட்சி, அடுத்து நேரப்போகும் அசம்பாவிதத்தைக் குறிப்பால் உணர்த்தும்  'டைரக்டோரியல் டச்' ஆக இருக்கிறது.

தன் கையைப் பிடித்துக்கொள்ளுமாறு பூஜா கேட்க, "இடுப்பைப் பிடிக்கட்டுமா?" என்பார் விஜய். விஜய்க்கு மாணவர்கள் மற்றும் குழந்தை ரசிகர்கள் மிக அதிகம். இதைக் கருத்தில் கொண்டாவது அந்த வசனத்தை நீக்கியிருக்கலாம்.

ராணுவப் பணியின் அரிச்சுவடியே, 'கீழ்ப்படிதல்' என்பதுதான். ஆனால் பல இடங்களில் ராணுவக் கட்டளைகளை சர்வசாதாரணமாக மீறும் லாஜிக் துளைகள் மலிந்திருக்கின்றன. சரி. அதை விடுங்கள்…அவ்வளவு பெரிய சம்பவம் நடக்கும்போது தமிழக அதிகாரிகள் எல்லோரும் விடுமுறையில் போய்விட்டார்களா? ஒருத்தரைக்கூடக் காணோமே!

பல நூறு தோட்டாக்கள் விஜய்யை நோக்கிப் பாய்ந்தாலும் அவருக்கு எதுவுமே ஆவதில்லை என்பதும் ஆச்சரியம்தான். ஆனால் ஸ்கேட்டிங் காலணிகளுடன் விஜய் செய்யும் சண்டைக் காட்சிகள் விறுவிறுப்புக்கு உதாரணம்.

"Is the southern perimeter clear?" என விஜய் கேட்கும்போது நமக்கே நெஞ்சு படபடக்கிறது.

விடிவி கணேஷின் டைமிங் வசனங்கள் நச்!

பாகிஸ்தான் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்படும் காட்சிகள் வீடியோ கேம் விளையாட்டுகள் போலத் தெரிகின்றன.

மொத்தத்தில்: Beast =  விஜய் ரசிகர்களுக்கு Feast;

சாதா ரசிர்களுக்கு Not Waste!

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com