0,00 INR

No products in the cart.

“எல்லாமே இலவசம்”

 

ன்னா! நேத்துதான் வேலையிலேருந்து ரிடையர் ஆனேள்! ஒரு நாள்கூட ஆத்துல சும்மா இருக்க முடியாதா? எங்கே புறப்பட்டுட்டேள்?” வெளியே புறப்பட்ட சுப்ரமணியனை நோக்கி கேள்விக்கணைகளை வீசினாள் சாவித்திரி.

“இரும்புப் புடிச்சவன் கையும், சொரி புடிச்சவன் கையும் சும்மா இருக்காதுன்னு சொல்லுவாளோ இல்லியோ? நான் இரும்புப் புடிச்சவன். என்னால சும்மா இருக்க முடியாதுடி.”

“அதுக்காக என்ன செய்யப்போறேள்? வேலை இல்லா பட்டதாரிங்க கம்பெனி, கம்பெனியா ஏறி இறங்கி வேலை தேடுறது மாதிரி, நீங்களும் டிரைவர் வேலை இருக்குதான்னு கேட்கப்போறேளா?”

“என் மனசுக்குள்ள ஓர் ஐடியா கொஞ்ச நாளாவே ஓடிக்கிட்டு இருக்கு. அதை எப்படிச் செயல்படுத்துறதுன்னு யோசிச்சுக்கிட்டே இருக்கேன்.”

“நேத்து வரைக்கும் பஸ் ஓடித்து. இன்னிக்கி ஐடியா ஓடுதா?”

“நான் இதுவரை வாழ்ந்த வாழ்க்கை, சராசரி மனுசன் வாழக்கூடியதுதான். இனிமேலாவது  அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழணும்னு ஆசைப்படுறேன்.”

“வாழ்க்கையில என்னண்ணா அர்த்தமுள்ள வாழ்க்கை, அர்த்தமில்லாத வாழ்க்கை? கர்ணன் கவசகுண்டலத்தோட பிறந்த மாதிரி, நீங்கள் என்னமோ டிக்சனரியோடவே பிறந்தவர் மாதிரி பேசுறீங்க.”

நம்மளோட சஷ்டியப்தபூர்த்தி அன்னிக்கி திருக்கடையூர் கோயில்ல, எல்லாரும் சந்தோஷமா கொண்டாடிட்டு இருக்கிறச்ச, எனக்கென்னமோ மனசுக்குள்ள ஓர் உறுத்தல் உண்டாயிடுச்சி.  நான் அதை வெளியில காட்டிக்கலை. வயசுதான் அறுவது பூர்த்தியாயிருக்கே தவிர, இத்தனை வருசத்துல நான் எதுவுமே  சாதிக்கலையோன்னு தோணித்து. நாம வாழுற வாழ்க்கைக்கு அர்த்தம் வேணுமின்னா, நாம் எதையாவது சாதிக்கணும்னு தோன்றது. சதாசர்வகாலமும் வேலை, வேலைன்னு அறுவது வயசு வரைக்கும் அலைஞ்சுட்டேன். இனிமேலாவது அர்த்தமுள்ள ஒரு வாழ்க்கையை வாழணும்னு நெனைக்கிறேன்” தீர்க்கமாகப் பேசினார் சுப்ரமணியன்.

“திரும்பத் திரும்ப அதையே சொல்றேள்! புதுசா என்னத்த சாதிக்கப்போறேள்? பல பேரு அல்பாயுசுல போயிடறாள். நீங்க அறுவது வயசு வரைக்கும் வாழ்ந்திருக்கேள். அதுவே பெரிய சாதனைதான். தெனம் தெனம் ஒங்கள பஸ்ஸுக்கு அனுப்பிட்டு, நான் அக்னிகுண்டத்தை வயித்துல கட்டிக்கிட்டுத்தான் இருப்பேன். அடிக்கடி நடக்கிற ஆக்ஸிடெண்ட் பற்றிய செய்திகளை டீ.வி.யில பாக்கிறச்ச, நல்லபடியா நீங்க வீட்டுக்கு வரணுமேன்னு பகவானை வேண்டிக்கிட்டே இருப்பேன்.ஆனால், பஸ்ஸுல டிரைவரா அறுவது வயசு வரைக்கும் வேலை பார்த்தாலும், ஒரு விபத்து கூட நடக்காம, ஒருத்தர அடிச்சிப் போட்டுட்டோமுன்னு இல்லாம, ஒரு மாட்டையோ, ஆட்டையோ ஊனமாக்கிட்டோமுன்னு இல்லாம திறமையா பஸ் ஓட்டி சாதனை பண்ணியிருக்கேள். அதுக்காக எம்.டி.யே ஒங்களப் பாராட்டி, பொன்னாடைப் போத்தினாரு. மோதிரமெல்லாம் போட்டாரு. அதெல்லாம் ஒங்களுக்குச் சாதனையா தெரியலையா? ரெண்டு பொண்ணுங்களுக்கும் நல்ல வரனாப் பார்த்து விவாகம் பண்ணி வச்சிட்டேள். ஒங்க தோப்பனாரையும் தொண்ணூறு வயசு வரைக்கும் வச்சு சம்ரட்சனைப் பண்ணி, நல்லபடியா காரியமெல்லாம் செஞ்சுட்டேள். இன்னும் என்னதான் ஒங்களுக்கு குறை?  இன்னும் என்ன செய்யணும்னு தோண்றது? அறுவது வயசாயிட்டுதா, ரிட்டயராயிட்டமா, எதோ ‘அரஹரா சிவ சிவா’ன்னு சொல்லிக்கிட்டு, கோவில் கோவிலா போயி சுவாமி தரிசனம் பண்ணிட்டு வர்றதை வுட்டுட்டு, எதுக்காகப் புதுசா சாதிக்கணும்னு கிளம்பறேள்?”

“ நீ சொல்லுற இந்த செக்குமாட்டு வாழ்க்கையிலிருந்து கொஞ்சம் விலகி,  இனிமேலாவது அடுத்தவாளுக்குப் பிரயோசனப்படுற மாதிரி ஒரு வாழ்க்கையை வாழலாம்னு முடிவெடுத்திருக்கேன். ஏன்னா, ‘மக்கள் சேவையே மகேசன் சேவை’ன்னு பெரியவா சொல்லியிருக்கா இல்லையா?” இதுவரை நம்மளோட குடும்பம், நம்ம குழந்தைகள்னுதான் வாழ்ந்திருக்கோமே தவிர, ஆதரவில்லாத முதியவர்கள், குழந்தைகள்னு எத்தனை பேருக்கு நாம என்ன உதவி செய்திருக்கோம்? உதவி தேவைப்படுபவர்களுக்கு இனிமேல் சாதி, மதம், இனம், மொழின்னு எதையுமே பார்க்காமல் உதவி செய்யப்போறேன். அந்த உதவியை ஓர் ஆத்மாவுக்குச் செய்யும் சேவையாத்தான் பார்க்கணும். அதுல கீழ்சாதி, மேல்சாதின்னெல்லாம் பார்க்கக் கூடாது. அவா இந்துவா, முஸ்லீமா, கிருத்துவரான்னெல்லாம் பார்க்கக்கூடாது. அந்த மனப்பக்குவம் முதல்ல வரணும்.”

“என்னண்ணா சொல்றேள்! சாதி, மதம்னு பார்க்காமல், எல்லா ஆத்துலயும் போயி நிப்பேளா? அபச்சாரம்…. அபச்சாரம்…. வயசான காலத்துல ஏந்தான் ஒங்க புத்தி இப்படிப் போகுதோ?” தன்னுடைய வலதுகையால் தலையிலடித்துக் கொண்டாள். இருங்க, இப்பவே உங்க பொண்ணுங்களுக்கு போன் போடுறேன்.அவளுங்ககிட்ட பேசிட்டு, அப்புறமா நீங்க புறப்படுங்க”

“ஒன்னோட பொண்ணுங்ககிட்டப் பேசணும்னு ஆசைப்பட்டா, நீ மணிக்கணக்குல வேணுமின்னாலும் பேசிக்கிட்டு இரு. நான் உன்னோட பேச்சு சுதந்திரத்துல தலையிடல. அதேபோல நான் விருப்பப்படுறதைச் செய்யுறதுக்கு நீ தடைபோடாதே! நீ சொன்னாலும், ஒன்னோட பொண்ணுங்க சொன்னாலும் நான் கேட்க மாட்டேன். என்னோட மனசு திருப்திக்கு நான் செய்யப்போறேன்.” தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எடுத்துக்கொண்டு விருட்டென்று வெளியேறினார் சுப்ரமணியன்.

“என்ன இது? இவருக்கு இப்படி ஒரு கோபம் வந்துடுத்து?! சொல்லிக்காம விருட்டுன்னு கெளம்பிப் போயிட்டாரே! நில்லுங்கன்னு கூப்பிடலாமா? போறவாள கூப்பிடக்கூடாதுன்னு சொல்லுவாளே! அபசகுனமாயிடும்னு சொல்லுவாளே! சரி….. சரி….. போயிட்டு வரட்டும். எங்கே சுற்றினாலும் இங்கதானே வரணும். அப்புறமா கச்சேரியை வச்சிக்கிறேன்” மனசுக்குள் கறுவியபடி அடுக்களைக்குள் நுழைந்தாள். ஸ்டவ்வில் இருந்த இட்லி பானை நீரின்றி காந்தல் வாடையுடன் வரவேற்றது. “அட பகவானே! இட்லி ஊத்தி வச்சதையே மறந்துட்டு, அவரோட மல்லுக்கு நின்னுட்டேனா? எல்லாம் இவரால வந்தது” கணவன் மீது கோபம் மேலும் அதிகமானது.

மீனலோசனி, சீனியர் மேனேஜர் (பணி ஓய்வு),வங்கியின் பெயருடன் கூடிய பெயர்ப் பலகை காம்பவுண்ட் கேட்டின் இடதுபுற பில்லரில் பதிக்கப்பட்டிருந்தது. கேட் மூடி உள்தாழ்ப்பாள் போடப்பட்டிருந்தது. ஆனால், வெளியிலிருந்தவாறே திறக்கும்படி சுற்றும் கைப்பிடி பொருத்தப்பட்டிருந்தது. “நிச்சயமாகக் காவலாளி இருப்பதற்கு வாய்ப்பில்லை” என்று எண்ணினார் சுப்ரமணியன்.

காம்பவுண்ட் வாசலில் தன்னுடைய வாகனத்தை நிறுத்திவிட்டு, கேட்டைத் திறந்தார். பின்னர் வண்டியை உள்ளே தள்ளி நிறுத்திவிட்டு, கேட்டை மூடினார். விடுவிடுவென்று நடந்து வீட்டு வாசலை அடைந்தார். வாசல் கதவு திறந்தே இருந்தது. இருந்தாலும் திறந்த வீட்டுக்குள் எதுவோ நுழைந்த மாதிரி நுழைய மனசு இடம் தரவில்லை. அதனால், வீட்டின் அழைப்பு மணியை அழுத்தினார். சற்று நேரத்தில், பார்த்தாலே கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் லட்சுமிகரமானத் தோற்றத்துடன் பிரசன்னமானார் அப்பெண்மணி. “அவர்தான் மீனலோசனியாக இருக்கணும்” மனசுக்குள் எண்ணியபடி, ‘வணக்கம்மா!’ என்று கைகூப்பினார் சுப்ரமணியன்.

“வாங்கோ! உள்ள வாங்கோ! இப்படி நாற்காலியில உட்காருங்கோ! எங்கிருந்து வர்றேள்! என்ன விஷயமா என்னைப் பார்க்க வந்தேள்?” அன்போடு வினவினார் மீனலோசனி.

அவர் கண்களில் தெரிந்த காந்தசக்தி சுப்ரமணியனைத் திக்குமுக்காட வைத்தது. அவருடைய கண்களையே சிறிது நேரம் கூர்ந்து நோக்கினார். அவருடைய முகத்தோற்றத்தையும் கவனித்தார். ‘எப்படியும்  அறுவத்தஞ்சு வயசு இருக்கும்’ என்று தோன்றியது.

ஒரு கண்ணாடி தம்ளரில் குடிநீரை நிரப்பி, அதைச் சிறிய எவர்சில்வர் தட்டு ஒன்றினால் மூடி, சுப்ரமணியன் முன்னே வைத்தார் மீனலோசனி.

“நன்றிம்மா”

“ ம்…இப்பச் சொல்லுங்கோ”.

“உங்களுடைய நேர வங்கியில் ஒரு கணக்குத் தொடங்கணும்னு வந்திருக்கேன்மா”

“அப்படியா! நல்லது. உங்களப் பத்தின விவரங்களைச் சொல்லுங்க”

“பெயர், வயசு, விலாசம் ,வேலை பார்த்த விவரம் போன்றவற்றைத் தெரிவித்தார்.”

“ஓ… நீங்க பணி ஓய்வுபெற்ற ஓட்டுநர். இது மிகவும் நல்ல விஷயம். எங்களுக்கு அதிகம் தேவைப்படுகிற ஒரு தொழிலில் நீங்கள் திறமைசாலியாக இருப்பது எங்கள் பாக்கியம். உங்கள் சேவை எங்களுக்கு அடிக்கடி தேவைப்படும். எப்போது கூப்பிட்டாலும் வருவீர்களா?”

“மன்னிக்கணும் அம்மா! இரவு நேரத்தில் என்னால் வர இயலாது. நானும் என் மனைவியும் மட்டுமே இந்த ஊரில் வசிப்பதால், அவளை இரவில் தனியாக விட்டுவிட்டு வர முடியாது. பகலில் ஓட்டுநர் பணி மட்டுமல்ல, வேறு எந்த வேலையாக இருந்தாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்.”

“நேர வங்கியினைப் பற்றி எப்படி அறிந்துகொண்டீர்கள்? அது இங்கே செயல்படுவது பற்றி உங்களுக்கு யார் சொன்னார்கள்?”

“இணையதளம் வாயிலாகவும், பத்திரிகைச் செய்திகள் மூலமாகவும் நேர வங்கியினைப் பற்றி அறிந்துகொண்டேன், ஸ்விட்சர்லாந்து நாட்டில் மிகச் சிறப்பாகச் செயல்படுவதாகவும் அறிந்துகொண்டேன். இங்கே கணக்கு வைத்துள்ள என்னுடைய நண்பர் சாம்பசிவம், உங்களைப் பற்றியும், இங்கே செயல்படும் நேர வங்கிப் பற்றியும் தெரிவித்தார். நீண்ட நாட்களாக என் அடி மனத்தில் போட்டுப் பூட்டி வைத்திருந்த ஒரு விஷயத்திற்குத் தீர்வு கண்டதுபோல் மகிழ்ந்தேன். தாய்ப் பசுவைக்   கண்ட கன்றுக்குட்டி துள்ளி ஓடுவது போல் எனது மனம் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தது. நேற்றுதான் பணி ஓய்வு பெற்றேன்.  இன்றே இங்கு வந்துவிட்டேன்”.

“மிகவும் மகிழ்ச்சி சுப்ரமணியன் சார்! முதலில் இதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுங்கள். கணினியில் உங்களுடைய கணக்கைத் தொடங்கி, அக்கவுண்ட் எண் வந்த பிறகே நீங்கள் பணி செய்ய இயலும்.”

விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கொடுத்துவிட்டு, அந்த வீட்டை நோட்டமிட்டார் சுப்ரமணியன். தரைதளம் எப்படியும் பதினைந்து சதுரம் இருக்கும். வீடு  தரை தளமும், முதல் தளமுமாக இருந்தது. தரை தளத்தை நேர வங்கிக்காக மட்டுமே பயன்படுத்தி வருவதாக  சாம்பசிவம் தெரிவித்திருந்தார். முதல் தளத்தில் மீனலோசனி குடியிருப்பதாகவும் சொல்லியிருந்தார். அவருக்கு உதவிட ஒரு பெண் பணியாள் கூடவே இருப்பதாகச் சொல்லியிருந்தார்.

சிறிது நேரத்தில், வேலைக்காரப் பெண்மணி இரண்டு காப்பி கோப்பைகளுடன் பிரசன்னமானார். ஒன்றை மீனலோசனி முன்பும், மற்றதை சுப்பிரமணியன் முன்பும் வைத்துவிட்டு நகர்ந்தார். எஜமானியின் குறிப்பறிந்து செயல்படும் அப்பெண்மணியின் செய்கை அவருக்கு மிகவும் பிடித்திருந்தது. ‘நன்றிம்மா’ என்றார்.

“மிஸ்டர் சுப்ரமணியன்! காப்பி சாப்பிடுவேளோன்னோ! என்னால காப்பி இல்லாம இருக்கவே முடியாது”

“நான் காப்பி, டீ எதுவாக இருந்தாலும் சாப்பிடுவேன்மா”

“தீர்த்தம் சாப்பிட மாட்டேளோன்னோ!”

“அபச்சாரம்…..அபச்சாரம்….” கன்னத்தில் போட்டுக்கொண்டார்.

“நீங்க ஒண்ணும் தப்பா நெனக்காதேள்! கேட்க வேண்டியது என்னோட கடமை. அப்படிப்பட்டவாளெல்லாம் நாங்க சேர்த்துக்கிறதில்ல”.

“பகவான்மேல சத்தியமா, அந்த கெட்ட பழக்கமெல்லாம் இல்லம்மா”

“இப்ப நேரவங்கி பற்றிச் சொல்லிடறேன்.  இது முழுக்க முழுக்க சேவை அடிப்படையிலானது. பணத்துக்காக யாரும் இங்கே பணி செய்யுறதில்லை. ஒவ்வொரு மனுசாளுக்கும் ஒரு திறமை இருக்கும். அவரவர்களிடம் உள்ள திறமைக்கேற்ப, வாய்ப்புகள் கிடைக்கும். பெரும்பாலும் நம்மை விட வயதில் முதியவர்களுக்கு சேவை செய்வதைத்தான் இலக்காக வைத்திருக்கிறோம். ஆபத்தில் உள்ளவர்கள் எந்த வயதினராயிருந்தாலும் உதவிக்கரம் நீட்ட வேண்டியதும் நம்முடைய தார்மீகக்கடமை. அதையும் நாம் செய்து வருகிறோம்.”

“புரியுதும்மா”

“இந்த வங்கிக்கணக்கில் அன்றாடம் நீங்கள் பணி செய்யும் நேரம் வரவு வைக்கப்படும். ஒவ்வொரு மாத முடிவிலும் எத்தனை மணி நேரங்கள் உங்கள் இருப்பில் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம். உங்களுக்கோ, உங்கள் குடும்பத்தினருக்கோ நேர வங்கியில் கணக்கு வைத்திருப்பவர் யாராவது பணி செய்தால், அந்த நேரம் உங்கள் கணக்கிலிருந்து கழித்துக் கொள்ளப்படும். உங்களால் முடியும் வரை இந்தப் பணியைத் தொடரலாம். உங்களுக்கு  வயதாகி முடியாத சூழ்நிலை வரும்போது,  நீங்கள் சேமித்து வைத்திருக்கும் நேரத்தை, வேறு உறுப்பினர்கள் மூலம்  சேவையாகப் பெறலாம்.”

“என்னென்ன சேவைகள் செய்கிறீர்கள்?”

எல்லாமேதான். ஏ டூ இசட் என்று விளம்பரம் செய்கிறார்களே, அதுமாதிரிதான். காய்கறி வாங்கிக் கொடுப்பது முதல் கதைகள் சொல்லி உற்சாகப்படுத்துவது வரை அனைத்தும் செய்கிறோம். உங்களுக்கு நல்லா கதை சொல்ல வரும்னா, கதை கேட்க விரும்புவோரிடம் உங்களை அனுப்புவோம். நல்லா சமைக்கத் தெரியுமுன்னா அதற்கேற்றபடி அனுப்புவோம். வியாதியில் துன்பப் படுபவர்களுக்கு, நர்ஸிங் தெரிஞ்சவாள பணிவிடை செய்யச் சொல்வோம். நேர வங்கியில் ஓர் ஆம்புலன்ஸ் உள்ளது. அதனால், உங்களுக்கு ஓட்டுநர் பணி அடிக்கடி கிடைக்கும்.

இன்று புதிதாகச் சேர்ந்துள்ளதால், அடுத்தத் தெருவில் இருக்கும் அன்னை முதியோர் இல்லத்துக்குச் சென்று வாருங்கள். அதன் நிர்வாகிக்கு உங்களைப் பற்றி தகவல் தந்து விடுகிறேன். மாலை வரை அங்கிருந்து முதியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து வாருங்கள். வந்து உங்கள் அனுபவங்களைச் சொல்லுங்கள். வரமுடியாவிட்டால், அங்கிருந்து புறப்படும் நேரத்தை எனக்குத் தெரிவியுங்கள். உங்களின் இன்றைய பணி நேரத்தை கணக்கில் ஏற்றிக்கொள்கிறேன். நீங்கள் ஒவ்வொரு நாளும் இங்கு வந்துதான் ஆகவேண்டும் என்பதில்லை. நாங்கள் சொல்லும்போது, உங்கள் பணியைச் செய்ய  பணியிடத்திற்கு நேராகவே சென்றுவிடலாம்.

“சரிம்மா! சென்று வருகிறேன்” புறப்பட்டார் சுப்ரமணியன்.

மாலை ஏழு மணியளவில் அவர் வீடு திரும்பியபோது, முகத்தைத் திருப்பிக்கொண்டாள் சாவித்திரி.

சாவித்திரியின் புறக்கணிப்பை அவர் எதிர்பார்த்திருந்தார் என்றாலும், அவளுக்குத் தன்னுடைய புதிய வேலையைப் பற்றி விளக்கி சொல்லிவிட எண்ணினார்.

புத்துணர்ச்சி பெற ஒரு குளியல் போட்டார். பூஜையறைக்குச் சென்று ஐந்து நிமிடங்கள் தியானித்துவிட்டு வந்து சோபாவில் அமர்ந்தார்.

சூடான காப்பியை  எதிரில் வைத்தாள் சாவித்திரி.

காப்பியை உடனே பருகாமல், “இதோ பாரு சாவித்திரி! ஒவ்வொருத்தருக்கு ஒவ்வொரு விஷயத்துல இன்ட்ரஸ்ட் இருக்கும். என்னுடைய ஓய்வுகால வாழ்க்கையை எனக்குப் பிடித்த மாதிரி, மற்றவர்களுக்காகப் பயன்படுத்தி, வாழணும்னு நான் ஆசைப்படுறேன். எனக்கு இன்னும் எத்தனை வருசம் பகவான் ஆயுள் விதிச்சிருக்கானோ, அதுவரையில ஒரு பயனுள்ள வாழ்க்கை வாழ விரும்பறேன். அதுல நீ குறுக்கே நிக்காதே!  நான் இன்னிக்கி ஒரு முதியோர் இல்லத்துக்கு சென்று வந்தேன். என்னைவிட பத்து வயசு, இருவது வயசு, முப்பது வயசு  முதிர்ந்தவர்கள் அங்கே இருக்கிறார்கள். அவர்களுடைய சின்னச் சின்ன தேவைகளுக்கே அடுத்தவர்களின் உதவியை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். அவர்களுக்கு நான் உதவி செய்தபோது, அந்தக் கண்களில் தெரிகிறதே நன்றிப்பெருக்கு அதற்கு விலையே கிடையாது. பெண்களுக்குப் பெண்களும், ஆண்களுக்கு ஆண்களும் சேவை செய்கிறார்கள். பாத்ரூம் போவதற்கு க் கூட அடுத்தவர்களின் உதவி தேவைப்படும் வயதானவர்களுக்கு, ஒரு நர்ஸைப் போல பார்த்துப் பார்த்து  உதவி செய்ய வேண்டியுள்ளது. சிலருக்கு மாத்திரைகள் போட உதவ வேண்டியுள்ளது. இன்னும் சிலருக்குச் செய்தித்தாள் படித்து நாட்டுநடப்புகளை விளக்கிச் சொல்ல வேண்டியுள்ளது. எனக்கு ஒருநாள் பொழுது போனதே தெரியவில்லை. அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. உனக்கு இதுபோன்ற சேவைகளில் ஈடுபாடு இருந்தால், நீயும் என்னோடு வரலாம். இல்லேன்னா, எப்போதும் போல்,தொலைக்காட்சி, கோவில், குளமென்று சென்று வரலாம்.  அது உன் இஷ்டம். நான் தடையேதும் சொல்லமாட்டேன். அதேபோல நீயும் என்னை தடுக்காதே!

“சரிண்ணா! இத்தினி வருசந்தான் வேலை வேலைன்னு அலஞ்சேள்! இப்பவாவது காசி, ராமேஸ்வரம்னு போயிட்டு வரணும்னு எனக்கு ஆசையா இருக்கு.என் ஆசையை எப்போ நிறைவேத்தி வைப்பேள்?”

“அதுக்கென்ன, பகவான் அழைச்சான்னா கண்டிப்பா போயிட்டு வந்துடலாம். சபரிமலைக்கு எல்லாராலயும் போக முடியாதாம். அந்த ஐயப்பன் அழைச்சாத்தான் போக முடியுமாம். போகணும்னு மனசுக்குள்ள ஆசையே உண்டாகுமாம். அதேபோல காசி விஸ்வநாதரும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமியும் எப்போ அழைக்கிறாளோ, அப்போ போயிட்டு வந்துடலாம்.”

“சரிண்ணா! அந்த இல்லத்துல இருக்கிறவாள்ளாம் நம்மவாளா?”

“எல்லாரும் மனுசா: அவ்வளவுதான் என்னால சொல்ல முடியும்”

“அப்படின்னா, கண்டவாளையும் தொட்டு சேவகம் பண்ணிட்டு வர்றேளா?”

ஆமாண்டி!. கண்ணப்பநாயனார் வேடர் குலத்தைச் சேர்ந்தவர்தான். பகவானின் கண்களில் ரத்தம் வந்தபோது தன்னுடைய கண்ணையே தோண்டி பகவானின் கண் இருந்த இடத்தில் பொருத்தினார்.  அப்போ அவரு, எனக்கு கண் இல்லாமல் நான் என்ன செய்வேன்னு நெனைக்கலையே? மாசற்ற அன்பு,  பகவான் மீது அளவற்ற பக்தி இருந்ததனால்தான் அவரால அப்படிச் செய்ய முடிஞ்சிது.அதேபோல நம்மளவிட மூத்தவாள தெய்வமா நெனச்சி சேவகம் பண்ணினா, சாதி மதமெல்லாம் எங்கிருந்து வரும்?

“என்னமோண்ணா, நீங்க செய்யுறது எனக்குக் கொஞ்சங்கூட பிடிக்கலை. இருந்தாலும் நீங்க தெளிவா முடிவெடுத்துட்டேள்! உங்க சேவகத்தை உங்களோட வச்சுக்கங்க. என்னை எதுக்கும் கூப்பிடாதேள்! நான் பாட்டுக்கு பகவான சேவிச்சுண்டு, காலத்தை ஓட்டிடறேன்!”

இரண்டு வருடங்கள் மின்னலாய் மறைந்து விட்டன. நேர வங்கி சேவையில், ஒரு இல்லத்தில் இருந்தபோது, சுப்ரமணியனுக்கு பக்கத்து வீட்டுப் பெண்மணி போன் செய்தார். “மாமா! மாமி  மயக்கம் போட்டு விழுந்து கெடக்கா.என்னன்னு தெரியல, உடனே வாங்கோ”

பதறிக்கொண்டு, நேர வங்கியின் ஆம்புலன்ஸில் விரைந்தார் சுப்ரமணியன். உடனடியாக மருத்துவமனையில் அட்மிட் செய்தார்.   ஸ்ட்ரோக் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர். நல்லவேளையாக ‘கோல்டன் ஹவர்’ல வந்ததனால்,  பாதிப்பு அதிகமில்லை என்று தெரிவித்தனர். சில நாட்களில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வந்தாள் சாவித்திரி. இருப்பினும் “ஒருமாத காலத்திற்குப் பூரண ஓய்வில் இருக்க வேண்டும்” என்று தெரிவித்தனர் மருத்துவர்கள்.

ஏண்ணா! என்னைப் படுக்கவச்சிக்கிட்டு எப்படி எல்லாஞ்செய்வேள்? கண்கலங்கினாள் சாவித்திரி.

“நான் எதுக்குடி கவலைப்படணும்? நேர வங்கியில் சொன்னாப்போதும், உனக்கு எல்லாமே இலவசந்தான். பணிவிடை செய்ய, ஒரு நர்ஸை அனுப்புவாங்க. வாய்க்கு ருசியா சமைச்சிப் போட ஒரு அம்மாவ அனுப்புவாங்க. இன்னும் ஏதாவது சின்னச்சின்ன உதவிகள் தேவைன்னாலும் அதுக்கும் ஆள் அனுப்புவாங்க.   ஒரு ரூவா கூட சம்பளம் குடுக்க வேணாம். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்னு சொல்லுவாங்க. அது நல்ல விசயத்துக்கும்தானே!” பெருமையுடன் சொன்னார் சுப்ரமணியன்.

2 COMMENTS

  1. எல்லாம் இலவசம்’ சிறுகதை படித்தேன். சுப்பிரமணியன் எனது மனதில் அழுத்தமாக பதிந்து விட்டார். குடும்பத்திற்காக ஓய்வு பெறும் வரை உழைத்தவர், வாழ்வின் நோக்கம் என்ன என்பதை உணர்ந்து, ஊதியம் எதுவும் எதிர்பாராமல் தனது மனதுக்கு பிடித்தபடி சமூக சேவையில் தன்னை ஆத்மார்த்தமாக அர்பணித்துக்கொண்டது, கதையாக இருந்தாலும் வாழ்க்கை பாடம் ஆகும்.
    இறைவன் மீது அளவற்ற பக்தி இருந்தால் எதையும் சாதிக்கலாம், நம்மை விட மூத்தவர்களை தெய்வமாக கருதினால் சாதி மதமெல்லாம் காணாமல் போகும் என்பதை எழுத்தாளர் விளக்குவது மனிதநேயத்தின் உச்சம். மனைவி சாவித்திரியும் கணவன் வழியில் பயணிப்பார் என்று கதை நிறைவு பெறுவது, திருப்தி.

    ஆ. மாடக்கண்ணு,
    பாப்பான்குளம்.

  2. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பதை எல்லாம் இலவசம் ‘ கதையின் மூலம் கதாசிரியர் விளக்கிச் சொன்னவிதம் அருமை !

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...