கோணங்கள்

கோணங்கள்
Published on

ம்மா…."பக்கத்து ப்ளாட்காரங்களையும் அழைச்சி வெத்திலை பாக்கு குடேன் " என்றார் சேகர்.

இன்றுதான் இந்த ப்ளாட்டுக்கு புதிதாக பால்காய்ச்சி குடிவந்திருந்தனர்.

காய்ச்சிய பாலில் காபி தயாரித்து கொண்டே  'சரிங்க' என்றபடி வெளியே வந்தாள் பூரணி.

குழந்தை ஷம்யா தன் பொம்மைகளை ஆர்வமாக புது வீட்டில் அடுக்கி கொண்டிருந்தாள்.

எதிர்வீட்டு காலிங்பெல்லை அழுத்தினாள் பூரணி, குயில் கூவும் சத்தம் கேட்டது.

"யார் வேணும்" என்று கேட்டபடி கதவை திறந்தார் ஒரு சிவந்த பெண்மணி.

நாங்க எதிர்த்த வீட்டுக்கு புதுசா வந்திருக்கோம்… இப்பதான் பால் காய்ச்சினோம்…  ஃப்ரியா இருந்தா வெத்திலை பாக்கு வாங்க வர்றீங்களா? என்று அழைத்தாள் பூரணி.

"உள்ளே வாங்க!"… என்ற பார்வதிக்கு நடுத்தர வயது.

"இருக்கட்டுங்க… அப்புறம் சாவகாசமாக வரேன்" நிறைய வேலை போட்டது போட்டபடியே கிடக்கு என்றாள் பூரணி.

சரிங்க நீங்க வேலையை பாருங்க…ஒரு பத்து நிமிடத்தில் வரேன் என்றாள் பார்வதி.

வீடு திரும்பிய பூரணி காய்ச்சிய பாலில் காபி கலந்து கணவருக்கும் வந்திருந்த இரு குடும்ப நண்பர்களுக்கும் கொடுத்தாள்.

அவர்களுக்கு வெற்றிலை பாக்கு தந்து அனுப்பிய பிறகு கொண்டு வந்திருந்த  மளிகை பொருட்களை அடுக்கிக் கொண்டிருந்தாள்.

ஏங்க மொத்த சாமானும் எப்ப வரும்ங்க… லாரிக்கு சொல்லிட்டீங்களா?

த்தோ!..நான் டிபன் சாப்ட்டு கெளம்பணும்…லாரி வர்ற நேரம்…மத்தியத்துக்குள்ளாற இறக்கிடலாம்..என்றார் சேகர்.

காலிங்பெல் அடித்தது. கதவிற்கு வெளியே பார்வதி நின்றிருந்தாள்.

"வாங்க" என்று வரவேற்று  சேரில் உட்காருங்க என்றார்.

"பூரணி …."என்று குரல்கொடுத்தபடியே உள்ளே சென்று நான் கிளம்பறேன். அவங்களுக்கு பாலோ, காபியோ கொடு… என்றார் சேகர்.

பாலில் சர்க்கரை சேர்த்து ஆற்றி பார்வதியிடம் தந்து விட்டு எதிரில் அமர்ந்தாள் பூரணி.

"வாடகை எவ்வளவு பேசியிருக்கீங்க " என்று வீட்டை நோட்டமிட்டாள் பார்வதி.

"இருபதாயிரம் ப்ளஸ் மெயின்டனென்ஸ் "

ஐயோ! "இதுக்கு முன்ன இருந்தவங்க 15000 தான் தந்தாங்க…"

ஓஓஓ….என்றாள் பூரணி முகம்வாடியபடி…

"நீங்க மொத்தம் மூணு பேர் தானே …" மூன்று பேருக்கு இவ்ளோ பெரிய வீடு எதுக்கு…அதுவும் இருபதாயிரம் வாடகை கட்டுபடியாகுமா ? என்றாள் பார்வதி.

மனம் சுருங்கினாலும் காட்டி கொள்ளாமல் "அது அவருக்கு தான் தெரியும்" என்று பேச்சை மாற்றினாள் பூரணி.

புது வீட்டுக்கு வந்து ஒரு வாரம் ஆகிவிட்டது… ஓரளவு செட் ஆகிவிட்டது.

விளக்கேற்றி வைப்பதற்காக வாச கதவை திறந்து வைத்திருந்தாள் பூரணி. படியில் எறி வந்த பார்வதியை பார்த்து புன்னகைத்தாள்.

"வாசகதவை திறந்து வைக்காத பூரணி"…பூனை வரும் என்றாள் பார்வதி…

"சரி" என்றபடி சிரித்து வைத்தாள் பூரணி.

'குப்பையை வாசலில் வைக்க வேண்டாம்' என்று ஒருநாள்… 'துணியை இங்கே காயபோடவேண்டாம்' என ஒருநாள்…என நச்சு நச்சென ஏதாவது சொல்லி கொண்டிருந்தாள் பார்வதி.

வருந்தி அழைத்ததால் ஒரு நாள் பார்வதியின் பிளாட்டிற்கு ஒரு மரியாதைக்காக சென்றாள் பூரணி.

டிபன் , காபி என தந்து உபசரித்தாள் பார்வதி. ஆனாலும் பூரணியின் வீட்டு ஹவுஸ் ஓனரை பற்றி தப்பும் தவறுமாக சொல்லிக் கொண்டேயிருந்தாள்… பேராசை…வாடகை அதிகம் என தூபம் போடுவதை நிறுத்தவில்லை..

பார்வதியின் ப்ளாட் சிங்கிள் பெட்ரூம்… அதில் கணவரோடும் மூன்று பெண்களோடும் வசித்து வருகிறாள் பத்து வருடமாக. என பேச்சினுடே தெரிந்துகொண்டாள் பூரணி.

கணவரிடம் சொல்லியபோது… பாவம் பூரணி! "ஏழை பட்டவங்களா இருப்பாங்க போல"…அதான் நாம வசதியாக இருப்பதை பார்த்து பொறாமைப்படுறாங்க…நீ அதை பெரிசா எடுத்துக்காதேம்மா! என்றார் சேகர்

மற்றொரு நாள் தட்டு நிறைய இனிப்புகளை எடுத்து வந்து தந்தாள் பார்வதி.

"என்ன விஷேசம்ங்க" என்றாள்.

"சொந்த ஊரில் வீடு கிரகப்பிரவேசம் பண்ணினோம். போன வாரம்…ரொம்ப தூரம்கிறதால யாரையும் அழைக்கமுடியலை பூரணி… "என்றாள்.

"ரொம்ப சந்தோஷம்ங்க. உங்க கணவர் எங்க வேலைபார்க்கிறார்" என்றாள் பூரணி.

"எக்ஸ்போர்ட் பிஸினஸ்ங்க!..பொண்ணுங்க இரண்டும் சாஃப்ட்வேர் கம்பெனில வேலை பாக்குறாங்க!… வருமானத்துக்கு ஒண்ணும் குறைவில்லை! எல்லாத்தையும் போட்டு ஊர்ல சொத்து வாங்கி போட்டுட்டோம்"…

அப்படியா…!!..என்று ஆச்சரியபட்டாள் பூரணி.

"ஆமாம்!..உங்களை மாதிரி வாடகையை கொட்டி கொடுத்து வீணாக்க விரும்பலை. பொழைக்க தெரியாதவங்க நீங்க. எதுக்கு இவ்ளோ வாடகை. உங்க ஹவுஸ் ஓனருக்கு பேராசை… எவ்ளோ வாடகை வாங்கறார் " என மறுபடியும் வேதாளம் முருங்கை மரம் ஏறியது…

பேச்சை மாற்றிய பூரணி …"நீங்க சொந்த ஊர்லயே செட்டிலாக போறீங்களா" என்றாள்…

"சான்ஸே இல்லை… அங்கே போய் என்ன பண்றது. சிட்டியிலதான் பொண்ணுங்களுக்கும் வேலை. அவரும் இங்கேதான் பிஸினஸ் செய்து சம்பாதிக்க முடியும். அங்கே போய் உக்காந்துட்டு என்னத்தை பண்றது. சொத்து இருந்தா பின்னாடி உதவும்னு தான் வாங்கி போட்ருக்கோம்" என்றாள் பார்வதி.

யோசித்தபடியே வீடு வந்தவள் வழக்கம் போல பார்வதியுடனான உரையாடலை கணவர் சேகரிடம் சொன்னாள் பூரணி…

த்தோ , பாரு பூரணி! அவங்க வாழ்நாள் பூரா ஒத்தை பெட்ரூம் ப்ளாட்டில் காலத்தை ஒட்டி … வயத்தை வாயை கட்டி ஊர்ல சொத்தை வாங்கி வைச்சுட்டு .. யாருக்கோ பின்னாடி தந்துட்டு போக போறாங்க…அவங்க தன் நிகழ்கால  வாழ்நாளில் பெரிசா எதையும் அனுபவிக்க போறதில்லை…

எனிவே… அது அவங்க சொந்த விஷயம்… நமக்கு அந்த மாதிரி அவசியமில்லை. நாம இரண்டு பேரும் நல்லாவே சம்பாதிக்கிறோம். இப்ப வாழாம எப்ப வாழுறது… அந்தம்மா "அவரவர் கோணம் அவருக்கு" என்பதை சரியாக புரிஞ்சிக்கலை. "நீ அதிகமா மனசை போட்டுக் குழப்பிக்காத. அவங்களோடு அதிகமாக பேசுறதை தவிர்த்து வேற ஏதாவது வேலையில் கவனம் செலுத்து, அப்பத்தான் நிம்மதியாக இருப்பே"ன்னு பொறிந்து தள்ளினார் சேகர்.

ஒரு வாரம் கழித்து துணி காயப்போட போனபோது எதிர்பட்டாள் பார்வதி. சிரித்தபடி கடந்து செல்ல முயன்ற பூரணியை அழைத்தாள் பார்வதி… அப்போது தான் கவனித்தாள் முகத்தை. வாடி வதங்கி துரும்பாய் இளைத்திருந்தாள் பார்வதி.

அவருக்கு திடீரென நெஞ்சுவலி வந்து விட்டது. ஆஸ்பிட்டலில் சேர்த்து நேத்து தான் ஓபன்ஹார்ட் சர்ஜரி செய்திருக்காங்க… என்றாள் பார்வதி.

ஐய்யைய்யோ… இப்ப எப்படியிருக்கார்… என்று பதறினாள் பூரணி.

"டிஸ்சார்ஜ் ஆக பத்து நாள் ஆகும்" என்றாள்.

அப்போதும் கணவர் உயிர் பிழைத்ததற்கு  சந்தோஷமடையாமல்…" ஒரே நாளில் பத்து இலட்சம் ஓடி போச்சு"… என்று கவலைபட்ட பார்வதியை ஆச்சரியமாகப் பார்த்தாள் பூரணி.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com