0,00 INR

No products in the cart.

தமிழ்த் தாயும்,  தந்தையும்

கடைசிப் பக்கம்

சுஜாதா தேசிகன்

ருடா வருடம் கோடை விடுமுறைக்கு  ஹைதராபாத்தில் ஆவக்காய் மணம் வீசும் எங்கள் தாத்தா வீட்டுக்குச் செல்வது வழக்கம்.

அந்த வருடம் விடுமுறை முடிந்து, என்னுடன் அம்மா வரவில்லை. நான் மட்டும் அப்பாவுடன் ரயிலில் அழுதுகொண்டே திருச்சிக்கு வந்தது நினைவிருக்கிறது. “அம்மா தம்பி பாப்பாவுடன் கொஞ்சம் நாளில் வருவாள்” என்ற காரணம் புரியவில்லை.

மூன்றாம் வகுப்பு புதுப் புத்தகங்கள் வாங்கும்போது அந்த சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சம்பவம் நிகழ்ந்தது.

புத்தகம் வாங்கும்போது ‘இரண்டாம் மொழி’ என்ன வேண்டும் என்று ஓர் ஆப்ஷன் இருந்தது. மத்தியச் சர்க்காரில் அப்பா வேலை செய்ததால் விண்ணப்பப் படிவத்தில் யோசிக்காமல் ‘ஹிந்தி’ என்று  டிக் செய்து புத்தகங்களுக்கு  அட்டை போட்டு பள்ளிக்கு அனுப்பினார்.

மூன்று மாதம் கழித்து அம்மா ஊறுகாயுடன் தம்பியையும் அழைத்து வந்தாள்.  அம்மா என்னென்ன புத்தகம் பார்த்துக்கொண்டு இருந்தபோது,  ஓர் அதிர்ச்சி காத்துக் கொண்டிருந்தது…

“எங்கே உன் தமிழ்ப் புத்தகம்?” என்றார். நான் (வழக்கம்போல்) திரு திரு என்று முழித்தேன்.

சாயந்திரம் என் அப்பா வந்தவுடன், “ஏன் தமிழ்ப் பாடமாக எடுக்கவில்லை? நாளைக்குப் பிள்ளை எப்படிக் குமுதம், விகடன் கல்கி எல்லாம் படிப்பான் என்று கோபப்பட்டார். “அடிக்கடி வேலை மாற்றம் வரலாம். ஹிந்தி எடுத்தால் சுலபமாக இருக்கும். தமிழை வீட்டில் சொல்லிக் கொடுத்தால் போச்சு” என்று அப்பா சொன்ன காரணத்தை அம்மா ஏற்றுக்கொள்ளவில்லை.

என்ன நடக்கிறது என்று தெரியாமல் நான் விளையாடிக் கொண்டிருந்தேன்.

என் அம்மா விடவில்லை. மறுநாள் காலை பள்ளிக்கு வந்து, பள்ளி முதல்வரிடம்  “இரண்டாம் மொழியை ஹிந்தியிலிருந்து தமிழுக்கு மாற்ற வேண்டும்” என்றார். முதல்வர், “மூன்று மாதம் ஆகிவிட்டது, இனி மாற்ற முடியாது” என்று மறுக்க, என் அம்மா விடுவதாக இல்லை. தமிழுக்கு மாற்றாவிட்டால் ரயில் முன் படுக்கப் போவதாக மிரட்ட, கடைசியில் முதல்வர் பணிந்தார்.

அன்றே நான் தமிழ் வகுப்புக்கு மாற்றப்பட்டேன். ‘ஏக், தோ, தீன்’ என்று படித்துக் கொண்டிருந்த நான் ‘அ- அம்மா, ஆ-ஆடு, இ-இலை’ என்று படிக்க ஆரம்பித்தேன்.

இக் கதை இத்துடன் முடியவில்லை. மூன்றாவதிலிருந்து பத்தாம் வகுப்பு வரை படித்து,  +1ல் மீண்டும் மொழியை தேர்ந்தெடுக்கும் படலம் ஆரம்பமாகியது.  தமிழில் புலியாக இருந்த என் நண்பர்கள் பலர் நிறைய மதிப்பெண் வாங்க ஹிந்திக்குத் தாவினார்கள். பலர் பிரெஞ்சு மொழி. “குரங்கு போல நானும்  தாவலாம்” என்று இருந்த சமயம் என் அப்பா “ஆழ்வார் பாசுரங்கள் போன்றவற்றைப் படிக்க தமிழையே எடுத்துக்கொள். மதிப்பெண் முக்கியமில்லை என்றார்.

பிளஸ்-டூ வில் மலச்சிக்கலால் அவதிப்பட்ட குழந்தை போல முக்கிமுனகி தமிழில் 40 மதிப்பெண் வாங்கிய போது, என் நண்பர்கள் சர்வ சாதாரணமாக ஹிந்தியிலும்,  பிரெஞ்சிலும் என்பது தொண்ணூறு டி-20ல் விளையாடுவது போல அடித்துக்கொண்டு இருந்தார்கள். என் குறைந்த தமிழ் அறிவு கல்லூரியிலும் தொடர்ந்து… அதற்குப் பிறகு பல தமிழ்க் கதைகள் இருக்கிறது. நிற்க.

பல முறை “தமிழ் படிக்காமல் ஹிந்தி படித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்” என்று யோசித்திருக்கிறேன். நான் பெங்களூரில் உள்ளவர்களைப் பார்க்கிறேன். இங்குப் பெரும்பாலானோருக்குக் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி தெரிந்திருக்கிறது. பக்கத்து வீட்டில் தமிழர்கள் இருப்பதால் தமிழும் பேசுகிறார்கள். தமிழ்நாடு எல்லையைத் தாண்டினால் தவித்த வாய்க்குத் தண்ணீர் கேட்க, வழி கேட்க, அறிவிப்புப் பலகைகள் படிக்க என்று ஹிந்தி தெரிந்தால் நன்றாக இருக்கும் என்று பல முறை தோன்றியிருக்கிறது. ஹிந்தி தெரியாதது எனக்கு முட்டுக்கட்டையாகவே இருக்கிறது என்பது நிதர்சனம்.

”I dont know Hindi” என்று பலரிடம் சப் டைட்டில் போட வேண்டியிருக்கிறது.

அன்று அம்மா கஷ்டப்பட்டு தமிழ் வகுப்பில் சேர்த்து,  தமிழில் மதிப்பெண் முக்கியமில்லை என்று அப்பா பேச்சைத் தட்டாமல்,  தேமா, புளிமாவை சாய்ஸில் விட்டு, தமிழில் கடைசி மாணவனாக, இன்று கல்கியில் கடைசிப் பக்கம் எழுதிக் கொண்டிருக்கிறேன்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கவனிக்கப்படாத இயற்கை

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் எங்கள் அலுவலகத்தில் பெங்களூரு மைசூர் சுற்றுலாத் தலங்களின் படங்கள் பெரிய அளவில் அலங்கரித்திருக்கும். அதில் சினிமா குரூப் டான்ஸில் ஹீரோயின் மட்டும் தனியாகத் தெரிவது போல ஒரு கோயில்...

அதிர்ஷ்டசாலிகளுக்கு அதை வைத்தே அயலகப் பணி கிடைத்துவிடும்.

0
உலகக் குடிமகன் -  20 - நா.கண்ணன் அயலகம் என்பதோர் பெரிய ஈர்ப்பு. காசு, சௌகர்யம் என்பது ஒருபுறம் இருக்க, எனக்கு என் ஆய்வைத் திறம்படச் செய்ய வேண்டுமென்ற பேராசை இருந்தது. இந்தியாவில் ஏகப்பட்ட தடங்கல்கள்,...

அந்தப் பக்தன், பிரம்மனுக்கு இணையாக மூன்று உலகங்களையும் ஆளும் தகுதியினைப்  பெறுகிறான்

உத்தவ கீதை - 20 - டி.வி. ராதாகிருஷ்ணன் இறைவனை வழிபடும் முறை கிருஷ்ணா… உன்னை எப்படி வழிபடுவது? எப்படி ஆராதிப்பது என்றும்… என்னென்ன வழிகளில் வழிபடுவது என்றும் விளக்கிக் கூறுங்கள். வேத வியாசர், நாரத முனி, ஆச்சார்ய...

ஜோக்ஸ்

0
“தேர்தல் மீட்டிங்கில்  எங்கள் கட்சியை ஜெயிக்க வச்சா ஊழல் இல்லாத ஆட்சி அமைப்பேன்னு பேசினீங்களா தலைவரே?” “ஆமாம், அதுக்கென்னய்யா இப்ப?” “நம்ம கட்சியில் இருந்தவங்களெல்லாம் வேறு கட்சிக்குத் தாவிட்டாங்க!” - சி.ஆர்.ஹரிஹரன், ஆலுவா, கேரளா “டாக்டர் பட்டம் கொடுத்தவர்களிடம்...

விஜய் சேதுபதி அனுப்பும் பதிலையாவது  மறக்காமல் போடுங்கள்

0
உங்கள் குரல்   ஒரு சில பள்ளிகளில் நடந்த மோசமான விஷயங்களை, ஊடகங்கள் ஊதி பெரிதுப்படுத்தி , ஒரு விதமான மாய பிம்பத்தை இங்கே பரவலாக உருவாக்கியிருக்கும் சூழலை, மிகச் சரியாக புரிந்துக்கொண்டு, மாணவர், பெற்றோர்,...