இந்த நோய்க்கு மருந்தே கிடையாதா?

இந்த நோய்க்கு மருந்தே கிடையாதா?
Published on

தலையங்கம்

தினசரி உயரும் பெட்ரோல், டீசல் விலைகளை குறித்து ஊடகங்களும் அரசியல் கட்சிகளும் தொடர்ந்து  குரல் எழுப்பிக்கொண்டிருக்கின்றன.

பெட்ரோல் போலவே – அல்லது, அதைவிட அதிகமாக – மக்களைப் பாதிக்கக்கூடிய ஒரு விலை உயர்வைப் பெரும்பாலானோர் அறியவில்லை.

அது – அவசியமான மருந்துகளின் விலையேற்றம்! இந்தியாவின் மருந்து விலை நிர்ணய ஆணையம் அண்மையில்  இது குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதில், பாராசிட்டமால் உட்பட 800 அத்தியாவசிய மருந்துகளின் விலை 10.7% வரை உயர்த்தப்பட்டிருப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, பெரும்பாலும், பொதுவான நோய்களில் இருந்து நிவாரணம் அளிக்கும் – அத்தியாவசிய – 800 மருந்துகளின் விலை ஏப்ரல் 1 முதல் உயர்ந்திருக்கிறது. இது 10.7 சதவிகிதம் வரை இருக்கும்.

2020ஆம் ஆண்டு, பழைய விலையிலிருந்து 10.7 சதவிகிதம் உயர்த்தப்பட்டது. இப்போது இரண்டாவது முறை. அதாவது இரு வருடங்களில் 13.4 சதவிகிதம்!

இந்த விலை உயர்வு எளிய மக்களையே அதிகம் பாதிக்கும். ஏற்கெனவே கொரோனா ஊரடங்கினால் ஏற்பட்ட பொருளாதார பின்னடைவில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. காய்ச்சல், தொற்று, இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், தோல் நோய்கள், ரத்த சோகை போன்றவற்றால் அதிகம் பாதிகப்படுவது பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள்தான். இந்த நோய்களிலிருந்து தங்களைப் பாதுகாக்க கிட்டத்தட்ட தினமும் மருந்துகளை உட்கொண்டு வருபவர்கள் பலர்.

2015ஆம் ஆண்டிலேயே சில முக்கிய மருந்துகளின் விலைகள் உயர்த்தப்பட்டன. மலேரியா, மூட்டுவாதம், கல்லீரல் அழற்சி உள்ளிட்ட நோய்களுக்கான அத்தியாவசிய மருந்துகளின் விலை கடுமையாக உயர்ந்தது.

2019ஆம் வருடம், பிப்ரவரி மாதம், போலியோ மருந்தின் விலை உயர்ந்தது. அதுவரை ரூ.95.20 என இருந்த இந்த மருந்தின் விலை கிட்டத்தட்ட இரு மடங்கு உயர்த்தப்பட்டு ரூ.172.59 என அதிகரித்தது.

2021 ஏப்ரல் மாதம், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை இரண்டு மடங்காக உயர்த்தியது, இதை உற்பத்தி செய்யும் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம்.

ஆச்சரியகரமாக, மாநில அரசுகளுக்கு ஒரு விலையும், தனியார் மருத்துவமனைகளுக்கு வேறு விலையும் (அதாவது இன்னும் அதிகவிலை) வைத்தது சீரம் நிறுவனம். இதற்குக் காரணமாக, ' அமெரிக்கா, ரஷ்யா, சீனாவில் எல்லாம் அதிக விலைக்கு விற்கிறார்கள்' என்றது. மேலும் ஒன்றிய அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே, விலை உயர்வு அறிவிக்கப்பட்டதாக சீரம் தெரிவித்தது

அதாவது, எளிய மக்களுக்கு அவசியமான மருந்துகளின் விலையேற்றத்தை அரசு அனுமதித்துக் கொண்டிருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களின் விலையேற்றம் என்பது இப்போது ஒரு தொற்றுநோய் போல அத்தியாவசிய மருந்துகளையும் தாக்கிக் கொண்டிருக்கிறது.  இந்த நோய்க்கான  மருந்துதான் என்ன?  என்பதை உடனடியாக ஆலோசித்து திட்டமிட்டு ஆவன செய்ய வேண்டிய அரசு  செய்திருக்கும் காரியம், மருந்து விலை கட்டுபாட்டுக்கான தேசிய ஆணையத்தின் விலை நிர்ணயிக்கும் உரிமையை ஒன்றிய அரசு பறித்திருப்பது.

உடனடியாக உயிர் காக்கும் மருந்தைச் செலுத்த வேண்டிய  நிலையிலிருக்கும் நோயாளியை காப்பாற்றுவதைப் போன்ற முக்கியமான இந்த விஷயத்தை உடனடியாக நாட்டிலுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com