0,00 INR

No products in the cart.

வேகத்தின் விலை

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 16

 

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

கோழிக்கோட்டிலிருந்து மஞ்ஞேரிக்குக் கார் பறந்து கொண்டிருந்தது. கணிசமான நேரங்களில் ஸ்பீடாமீட்டரின் முள் தொண்ணூறுக்கு வெளியேதான் இருக்கும் பின்னிரவானதால் சாலை வெறிச்சோடிக் கிடந்தது. திருப்பங்களில் பிரேக்கில் கால் அழுத்தும்போது டயர்கள் சாலையில் உரசி ஏற்படுத்தும் சப்பத்தில் புதிய கார் வாங்கிய பெருமிதத்தை உணர முடிந்தது. கடைகளெல்லாம் அடைக்கப்பட்டிருந்தன. கவலையோடு காத்திருக்கும் நிலப்பரப்புகளுக்கிடையே  நீண்டிருக்கும் பாதை இன்னும் கடக்க வேண்டிய தூரத்தைச் சொல்லிக் கொண்டிருந்தது. நகக் கீறலையொத்த நிலா பின்னால் துரத்திக் கொண்டுவர, திருப்பங்களில் விரைந்து நீண்டு தொடரும் சாலைகளில்  மேலும் வேகத்தை அதிகப்படுத்தி, சின்னச்சின்னக் கடைகளின் வெளிச்சத்தை மின்னல்போலக் கடந்து போய்க் கொண்டிருந்தேன்.

கடைசியாக மின்மினிப் பூச்சியைப் போல மங்கிய வெளிச்சமுள்ள ஒரு கடையையும் கடந்தபோது, சாலையின் இருபுறத்திலும் வாகை மரங்களுடைய அடர்த்தி மட்டுமே கண்ணுக்குத் தெரிந்தது. நல்ல ட்ரைவிங்க்கு வாகான இடமது. வேகத்தை மீண்டும் கூட்டுவதற்கு முன்னால் ஒருமுறை அசைந்து நேராக உட்கார்ந்த நொடியில் வண்டியின் முன்னால் முதியவர் ஒருவர் கை அசைத்தபடி சாலையின் மறுபக்கத்திலிருந்து மின்னல் கீற்றாய் வந்ததைப் பார்த்தேன். இடது பக்கம் ஒடித்து மீண்டும் வலப்பக்கம் சாய்ப்பதற்கிடையில் வண்டி நிலைக்குலைந்தது. இரவின் நிசப்தத்தில் பிரேக் அடித்தவுடன் ஏற்பட்ட அலறலின் ஒலி எங்கோ இருளில் மோதி மீண்டும் என்னையே வந்தடைந்தது. இருக்கையின் முன்னால் வந்த நான் வண்டியைக் கட்டுக்குள் கொண்டு வந்து ரிவர்ஸ் எடுத்தேன். முதியவர் ஏதுமறியாதது போல என்னருகில் வந்தார். ஒரு கல்லின்மேல் கந்தல் சுருண்டிருப்பதைப் போல ஒரு பெண் படுத்திருப்பதை அப்போதுதான் பார்த்தேன். கை கூப்பியபடி முதியவர் பேச ஆரம்பித்தார்.

“பாப்பாவுக்கு பிரசவநேரம் வலி அதிகமாயிடிச்சு, ஆஸ்பத்திரிக்குப் போக நீங்க தான் உதவணும். கடவுள் உங்களை நல்ல எடத்துக்குக் கொண்டுபோய்ச் சேர்ப்பான்.”

கிழவன் வண்டியின் முன்னால் குறுக்கிட்டபோது ஏற்பட்ட கோபமெல்லாம் சட்டெனக் குறைந்து போனது. இரவு இரண்டு மணிக்கு எந்த வாகனத்தையும் தேடிப் பிடிக்க முடியாதென்பதால் நான் அவர்களை என் வண்டியில் ஏற்றிக் கொண்டேன். முதியவருக்கு  எழுபது வயதிருக்கும். அந்தப் பெண் மிகவும் சிறியவளாக இருந்தாள். பதினெட்டு வயதுதானிருக்கும். அவருடைய பேத்தி அவள் என்பதை தொடர்  உரையாடலில் புரிந்துக்கொண்டேன். வலி பொறுக்க முடியாமல் அவள் அழுவதும், அலறுவதுமாக இருந்தாள். நான் மீண்டும் வேகமெடுத்தேன். மஞ்ஞேரி அரசு மருத்துவமனை வராந்தாவில் வண்டியை  நிறுத்திய சத்தம் கேட்டு அவசரப் பிரிவிலிருந்து நான்கு ஊழியர்கள் ஓடி வந்தார்கள். அவசரத்திலும் இருட்டிலும் அவர்கள் என்னை யாரென்று அடையாளம் தெரிந்துகொள்ளவில்லை. முதியவர் மருத்துவமனை ஊழியர்களிடம் ஏதோ சொல்வதையும் அவர்கள் அந்தப் பெண்ணை கைத்தாங்கலாக வண்டியிலிருந்து இறக்குவதையும் பார்த்தேன். சமாதானமும் நிம்மதியும் என் முகத்தில் மெல்லிய புன்னகைக் கோடிட நான் வண்டியைத் திருப்பினேன். பெரியவர் மீண்டும் வண்டிக்கருகில் ஓடிவந்தார்.

“ரொம்ப பெரிய உதவி பண்ணீங்க. கடவுள்தான் உங்களை எங்ககிட்ட கொண்டுவந்து சேத்திருக்காரு. உங்க பேரென்னா?”

“மம்முட்டி”

பேரைக் கேட்ட போதும் கூட என்னை அவருக்குத் தெரியவில்லை. அவர் முகச்சுருக்கங்களில்கூட என் பெயர் பதிந்திருக்கவில்லை.

“என்ன செய்யறீங்க?” நான் கேட்டேன்.

அவர் வேட்டியின் மடிப்பிலிருந்து கசங்கிய ஒரு தாளை எடுத்து என்னிடம் தந்தார்.

“என் மனதிருப்திக்காகன்னு மட்டும் நெனச்சுக்கோ. வேற ஒண்ணும் இல்ல. வரேன்…..”

என் கேள்விக்குப் பதில் சொல்லாமல் பேசிவிட்டு விறுவிறுவென நடந்து மருத்துவமனைக்குள் சென்று மறைந்தார். அவர் கொடுத்த கசங்கி மடித்து வைக்கப்பட்ட இரண்டுரூபாய்த் தாள் என் கையில் பிசுபிசுத்தது. அதை எதற்காக தந்தார் என்று இன்றுவரை எனக்குப் புரியவில்லை. ஒரு வேளை இரண்டு பேருக்குமான கட்டணமாக இருக்குமோ?

டிரைவிங்கின் வேகத்தால் ஒரு ஜீவனைக் காப்பாற்றவும், புதியதொரு ஜீவனை இந்த பூவுலகிற்குக் கொண்டு வரவும் செய்த சிறிய உதவிக்காக அதிக சந்தோஷப்பட்டேன். என்னுடைய வேகம் நல்ல விதமாய் பயன்பட்ட நிமிடங்களாய் இருந்தன.

வேகமாக வண்டி ஓட்டுவதில் எனக்கு எப்போதுமே  ஒரு போதையிருக்கிறது. என் வண்டியை யாராவது ஓட்டுவதென்பது அபூர்வம்தான். சென்னையிலிருந்து கேரளத்திற்கான எட்டுமணி நேரப் பயணம் வண்டியை நானே ஓட்டுவதால் எனக்கு எப்போதுமே பிடித்தமானது. எதனால் இந்த வேகத்தை நான் விரும்புகிறேன் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

வண்டி ஓட்டும்போது ஐந்து விஷயங்கள் ஒன்றாய் சங்கமிக்கிறதென்று நான் நினைக்கிறேன். முதலாவதாக கட்டுப்படுத்தும் அதிகாரம் நம்மிடம் இருக்கிறதென்ற உணர்வு, இரண்டாவதாக எனக்குப் பிடித்தமான வேகம், மூன்றாவதாக ஜாக்கிரதை உணர்வு, நான்காவதாகக் கட்டுப்பாடு, ஐந்தாவதாக சுற்றுச்சூழலையும், வயல்வெளியையும், நிலக்காட்சிகளையும் ரசித்தபடியே ஓட்டுவது.

வண்டி ஓட்டும்போது இவை அத்தனையும் நம் காட்டுபாட்டிலேயே இருக்கும். வண்டியில் வருபவர்கள் எவ்வளவு பெரிய பிரபலமாக இருந்தாலும் அதெல்லாம் ஒரு விஷயமேயில்லை. “எல்லாமே நம் விரல்நுனியில்தான்” என்று பெருமிதப்படும் சந்தர்ப்பமது.

ஒவ்வொரு அங்குலமும் முன்னால் பார்த்து, எதிர்வரும் ஆபத்துகளிலிருந்து திரும்பியும் வளைந்தும் மிகவும் ஜாக்கிரதையாய் முன்னோக்கிப் போகிறோம். “அதிகாரத்தின், சக்தியின் கட்டுப்பாட்டு சக்கரம் நம்மிடம்தான் இருக்கிறது” என்கிற மனநிலை. இந்த ஐந்து விஷயங்களையும் மனதில் நிறுத்திக் கொண்டு ‘வாகனம்’  என்ற பதத்தை எடுத்துவிடலாம். நாம் ஒரு ஸ்தாபனம் நடத்தும்போதோ, ஏதாவது ஒரு பதவியில் இருக்கும்போதோ, பணியிலிருக்கும் போதோ இந்த ஐந்து விஷயங்களும் இருக்கிறது என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். அப்படியானல் அந்த இடத்தின் வெற்றியடைந்த மனிதர் நீங்களாகத்தான் இருப்பீர்கள். ஓட்டுநராவதற்கு வண்டி
வேண்டுமென்பதில்லை. வாழ்க்கையே போதும்.

“வேலையில் என்றும் கவனமுடையவனாக இருக்க வேண்டும்” என்ற ஆசைதான் என்னை மேலும் மேலும் வேகமாக ஓட்டத் தூண்டிக் கொண்டேயிருக்கிறது. வாழ்க்கையும் இதைப் போன்றதுதான். மிகச் சரியாக டிரைவ் செய்துகொண்டு போகவேண்டும் என்பதே என் எதிர்பார்ப்பு. அது சாத்தியப்பட வேண்டும்.

ஆக்ஸிலேட்டரில் கால் அழுந்தும்போது என் வேகத்தின் விலையை நிர்ணயித்த அந்தப் பெரியவரை நினைக்கத் தவறியதில்லை. கூலியின் மதிப்பு, ரூபாய் நோட்டில் மட்டுமல்ல, அதைக் கொடுக்கும்போதுள்ள மனதின் உள் அறைகளிலிருந்தும் கூடுகிறது என்பதைப் புரியவைத்த நிமிடம் அது. எத்தனையோ பரபரப்புகளுக்கிடையிலும் வேகம் பெற்றுத் தந்த அந்த இரண்டு ரூபாயை நான் இப்போதும் நினைத்துப் பார்க்கத் தவறியதில்லை.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...