0,00 INR

No products in the cart.

இசை – கடவுள் எனக்களித்த பெரும் பாக்கியம்

 

நேர்காணல்

தனுஜா ஜெயராமன்

 

உங்களைப் பற்றி சொல்லுங்கள் ஐஸ்வர்யா ….

“நான் பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னைதான். என் அப்பா CG ராகவன், அம்மா நிர்மலா ராகவன். இருவருமே சங்கீதத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். எனவே, வீட்டில் சிறு வயது முதலே நல்ல சங்கீதத்தை கேட்டு வளரும் சூழல் இருந்தது. எப்போதுமே எங்கள் வீட்டில்  கர்நாடக சங்கீத வித்வான்கள் , மேதைகளின் பாடல்கள் ஒலித்துக்கொண்டே இருக்கும்.”

எப்போது பாட ஆரம்பித்தீர்கள்?

“என் பெற்றோருக்கு இருக்கும் இசை ஆர்வத்தால் குழந்தை முதலே கர்நாடக சங்கீத பாடல்களைக் கேட்டே வளர்ந்ததால் மூன்று வயது முதலே கர்நாடகா சங்கீதம் பாட ஆரம்பித்துவிட்டேன். நான் மூன்று வயதாக இருக்கும்போது எனது அம்மா ஒரு புகழ்பெற்ற பாடகர் ஒருவரின் வீட்டுக்கு அழைத்துக் கொண்டு போனார்கள். அவர் பாடிய பாடலை உடனே திரும்ப பாடிகாட்ட வியந்து போன என் அம்மா இந்த குழந்தைக்கு பாடும் ஞானம் இருக்கிறது என உணர்ந்து முறைபடி கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள பாட்டு கிளாஸில்  சேர்த்து விட்டார்கள். அன்றிலிருந்து எப்போதுமே புதுபுது பாடல்களைக் கற்றுகொள்வது, கச்சேரிகளுக்கு செல்வது, ராகங்கள் கண்டுபிடிப்பது என்று நாள் முழுவதும் கர்நாடக சங்கீதத்திலே செலவழிப்பேன். அப்படி சிறுவயதில் எழுந்த ஆர்வமே இன்று கர்நாடக இசைத்துறையில் நான் தனியிடத்தை பிடிக்க முக்கியக் காரணமாக அமைந்தது.”

கர்நாடக சங்கீதத்தில் நீங்கள் இந்த அளவுக்கு வளர  காரணமாகயிருந்த உங்கள்  குரு யார்?

“ஒரு நல்ல பாடகிக்கு நல்ல குரு அமைவது என்பது வரம். எனக்கு அது வாய்த்திருக்கிறது. ஒன்றிற்கும் மேற்பட்ட இசை மேதைகளிடம் பயிலும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

என் முதல் குரு வைக்கல் ஞானஸ்கந்தன் மற்றும் ஆலத்தூர் பஞ்சாபகேச ஐயர் அவர்களிடம் சாஸ்திரிய சங்கீதம் கற்றுக்கொண்டு , எனது பண்ணிரெண்டாவது வயதில் நாரத கான சபாவில் எனது அரங்கேற்றம் நடைபெற்றது. எனது பெற்றோர் அரங்கேற்றத்திற்கு கர்நாடக சங்கீத கலாநிதி திருமதி. டி.கே பட்டம்மாள் அவர்களை சிறப்பு அழைப்பாளராக அழைக்க விரும்பினார்கள். ஆனால் அவர்களால் எதிர்பாராத வேலை காரணமாக  அரங்கேற்ற விழாவிற்கு வர இயலவில்லை . அதற்கு வருத்தம் தெரிவித்து “குழந்தையை ஒருநாள் வீட்டிற்கு அழைத்து வாங்களேன்” என்றார்.  அவரது வீட்டிற்கு சென்று அவரது ஆசிகளைப் பெற்று  “யோஜனா கமல லோசனா” என்ற தியாகராஜ கீர்த்தனையை தர்பார் ராகத்தில்  பாடிக்காட்டினேன்…வியந்து போன அவர் என்னிடம் பாட்டு கற்க விருப்பமா? எனக்கேட்டார். என் சிறுவயதிலேயே அவர்கள் பாடலை கேட்டு  வியந்த எனது பெற்றோர் எங்களது பாக்யம் என கருதி உடனே ஒப்புக்கொண்டனர். அன்று முதல் டி.கே. பட்டம்மாள் அவர்களை சங்கீத குருவாக பெறும் பாக்கியம் பெற்றேன். முதன் முதலில் “கருணை செய்வாய் கஜராஜ முகா” என்ற அம்ஸத்துவனி ராகத்தில் அமைந்த பாடலை கற்றுக்கொடுத்தார்.  அவர்களின் ஆசிர்வாதத்தாலும், பெரும் கிருபையாலுமே நான் இன்றுவரை கர்நாடக சங்கீத உலகத்தில் பெயரோடும் புகழோடும் இருக்க முடிகிறது என்பது எனக்குமே பெருமை தரும் விஷயம். இதைத்தவிர சங்கீத கலா ஆச்சார்ய திருமதி. சுலோசனா பட்டாபிராமன் ,
பத்மவிபூஷன் திரு . R.K. ஶ்ரீகண்டன் மற்றும் பத்மபூஷன் திரு P.S .நாராயண ஸ்வாமி ஆகியோரிடமும் சாஸ்திரிய சங்கீத கீர்த்தனைகளை முறைப்படி கற்றுக்கொண்டேன்.”

மிகவும் பிரபலமான உங்களது மார்கழி மாத கச்சேரிகள் குறித்து?….

“நான் சங்கீத கலாநிதி திருமதி. டி.கே பட்டம்மாள் அவர்களிடம் சாஸ்திரிய சங்கீதம் பயின்ற காலக்கட்டத்திலேயே மார்கழி மாத கச்சேரிகளில் பங்கேற்க ஆரம்பித்தேன். முதலில் குழந்தைகளுக்கான ஸ்லாட்களில் பாடி பல்வேறு பரிசுகளையும் பாராட்டையும் பெற்றேன். பிறகு பெரியவர்களுக்கான ஸ்லாட்டுகளில் பாட ஆரம்பித்து பல சங்கீத உலக மேதைகளிடம் ஆசிர்வாதங்களையும் பல்வேறு பாராட்டுதல்களையும் பெற்றேன். இதற்கெல்லாம் காரணம் எனது  குரு.திருமதி பட்டம்மாளின் அன்பும் ஆசிர்வாதமும் , கடவுளின் அனுக்கிரகமும்தான் என்பதை பெறும் பேறாக கருதுகிறேன்.”

மேடைக் கச்சேரிகள் செய்துக் கொண்டிருந்த நீங்கள் எப்படி இன்று சமூக வலைத்தளங்களில் பிரபலமாக இருக்கிறீர்கள்?

“தற்போதைய கோவிட்   காலக்கட்டத்தில் எனது கச்சேரி மற்றும் பாடல்கள் பதிவு செய்த வீடியோக்களை  சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்திருந்தேன். அதற்கு உலகெங்கும் இருக்கும் கர்நாடக சங்கீத இசையார்வலர்களிடமிருந்து மிகப்பெரியதான வரவேற்பு கிடைத்திருந்தது. எனக்கு உலகெங்கும் ரசிகர்கள், ரசிகைகள் கிடைத்தனர். அதில் குழந்தைகளும் இளம் தலைமுறையினரும் அதிகம். இதில் உடனுக்குடன் பாராட்டுதல்களும், கருத்துக்களும் கிடைப்பது மனதிற்கு மிகப்பெரிய உற்சாகத்தையும் ஊக்கத்தையும் தருகிறது என்றால் மிகையில்லை. தற்போது சோஷியல் மீடியாவில்  அரைமில்லியன் பார்வையாளர்கள் என்னை பின்தொடர்கிறார்கள் என்பது பெருமிதமாக இருக்கிறது. இதனை நமது பாரம்பரிய இசைக்கு கிடைத்த பெருமையும், சிறப்புமாகவே நான் கருதுகிறேன். தற்போது இந்துஸ்தானி இசை கொலாப்ரேஷன் ,  வெஸ்டர்ன் மியூசிக் கொலாப்ரேஷன் மற்றும் வேர்ல்ட் மியூசிக் கொலாப்ரேஷன் என உலகளவிலிருந்தும் மிகப்பெரிய எதிர்பாராத வாய்ப்புகள்  நவீன இணையதள தொழில்நுட்பங்கள் காரணமாகவே சாத்தியமாகியுள்ளது. மேலும்  நிறைய வெளிநாட்டு வாழ் இசை பிரபலங்களோடு இணைந்து பணிபுரியும் வாய்ப்புகளும் கிடைத்துள்ளது. பல்வேறு மியூசிக் ஆல்பங்களில் பாடும் வாய்ப்பு கிடைத்ததும் இந்த சோஷியல் மீடியாவில் கிடைத்த புகழே காரணம்.”

இசைத்துறையில் நீங்கள் பெற்ற விருதுகளில்  மிகப் பெரிய கெளரவமாக நினைப்பது எது?

“யுவகலாபாரதி பாரத் கலாச்சார் நிறுவன விருது திருமதி ஓய்.ஜி. பார்த்தசாரதி அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டேன். யுவபுரந்தர் விருது , ட்ரினிட்டி மியூசிக் பெஸ்டிவல் அளித்த இசைசெம்மல் விருது கிடைத்தது. யங் அச்சீவர் அவார்ட், ராம சேவா மண்டலி கொடுத்த பவுண்டர்ஸ் விருது, எக்ஸலென்ஸ் ஆப் மியூசிக் போன்ற விருதுகளையும் பெற்றுள்ளேன். மேலும்  பல்வேறு  போட்டிகளில் முதல் பரிசுகளையும் பெற்றிருக்கிறேன். தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற விருது பெற்றுள்ளேன். இப்படியான  பல்வேறு விருதுகளை பெற்றிருந்தாலும் மக்கள் மனதில் இடம்பிடித்ததையே மிகப் பெரிய விருதாக நினைக்கிறேன். இசையின் மூலம் பலருக்கு மனமகிழ்வையும் மனசாந்தியையும் அளிக்கிறேன் என்பதே கடவுள் எனக்களித்த பெரும் பாக்யமாக கருதுகிறேன்.”

இசைத்துறையில் உங்களது லட்சியம் என்ன?

“நான் சமூக வலைத்தளங்களில் பதிவேற்றிய எனது பல்வேறு பாடல்களை கேட்ட இந்துஸ்தானி இசை வல்லுநர்கள், கிராமி விருது பெற்றவர்கள் மற்றும் சினிமா துறையில் புகழ்பெற்ற இசையமைப்பாளர்கள் என்னை தொடர்பு கொண்டு பாராட்டி, மேலும் அவர்களோடு சேர்ந்து பணிபுரியும் வாய்ப்பையும் வழங்கினார்கள். தற்போது சில புதிய புராஜெக்ட்டுகளை ஒப்புக்கொண்டுள்ளேன்.  கூடிய விரைவில் பல்வேறு நற்செய்திகளை என்னிடம் எதிர்பார்க்கலாம்… நம்முடைய பாரம்பரிய சங்கீதம், பக்தி பாடல்கள் போன்ற விலைமதிக்க முடியாத விஷயங்களை உலகெங்கிலும் ஒலிக்க செய்வதில் எனது பங்கும் உண்டு என்பதில் சற்றே பெருமிதம் கொள்கிறேன். அதனை மேலும் மேலும் மூலை முடுக்குகளில் எல்லாம் ஒலிக்க செய்யவேண்டும் என்பதே எனது வாழ்நாள் லட்சியம்…”

நீங்கள் சமூக நோக்குடன் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்காக கச்சேரிகள் செய்வதாக அறிகிறோம். அது பற்றிச் சொல்லுங்களேன்?

“கர்நாடக சங்கீதமென்பது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமல்ல, அதனை ஆக்கபூர்வமான வழிகளுக்கும் பயன்படுத்தலாம் என்பதை எனது குரு அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மிகச்சிறந்த விஷயம். அதனால் தற்போது பல்வேறு சங்கீத கச்சேரிகள் நடத்தி அதன் மூலம் திரளும் நிதிகளை தொண்டு நிறுவனங்களுக்காகவும் , பல்வேறு சமூக சேவைகளுக்காகவும் அளித்து வருகிறேன்.”

நீங்கள் கல்லூரியில் இசையை பாடமாக எடுத்து படித்தீர்களா?

“நான் சிறுவயது முதலே சங்கீதத்தையும் கல்வியையும் எனது இரு கண்களாகவே நினைத்திருந்தேன். நான் மியூஸிக்கில்  சென்னை பல்கலைக்கழகத்தில் B. Music முடித்திருக்கிறேன். நான் தொழில்முறை கல்வியாக CA வில் ரேங்க் ஹோல்டராக வந்திருக்கிறேன். CISA என்ற சர்டிபிகேட் கோர்ஸையும் அமெரிக்காவில் படித்திருக்கிறேன்.

ஆனால் நாள் முழுவதும் கர்நாடக சங்கீதம் சார்ந்த பணிகள் , கச்சேரிகள் , கர்நாடக சங்கீத வகுப்புகளை எடுப்பது என பொழுதுகள் கழிவதால் என்னால் தொழில்முறை (Charted Accountant) பட்டைய கணக்காளராக செயல்பட முடியவில்லை.  இன்று உலகெங்கும்  இசையில் ஆர்வமுள்ள பலர்  எனது மாணவ மாணவிகளாக உள்ளனர். எனது குருமார்கள் எனக்கு கற்றுக்கொடுத்த கலையையும் நல்ல விஷயங்களையும் இந்த தலைமுறைக்கு கற்றுத் தருகிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். அதனால் முழுநேர கர்நாடக சங்கீத பாடகியாக இருப்பது எனக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துவருகிறது.”

உங்கள் குடும்பம் குறித்து…

“எனது கணவர் ஶ்ரீநிவாஸ் கம்ப்யூட்டர் துறையில் Phd. அந்தத் துறை சார்ந்த ஆராய்ச்சி பிரிவில்  பணிபுரிந்து வருகிறார். தற்போது கணவரின் பணி காரணமாக கடந்த ஒரு வருடமாக  நாங்கள் அமெரிக்காவில் வசித்து வருகிறோம். அங்கிருந்தபடியே எனது கச்சேரிகளையும், இணையதள வகுப்புகளையும் தொடர்ந்து வருகிறேன்” என்றார்.

இந்த இளம் வயதிலேயே கர்நாடக சங்கீதத்தில் மாபெரும் திறமைகளை பெற்று  கச்சேரிகளையும், இசையில் பல்வேறு  புதுப்புது முயற்சிகளையும் செய்துவரும் திருமதி.ஐஸ்வர்யா ஶ்ரீநிவாஸ் அவர்களின் கனவுகள், லட்சியங்கள் அனைத்தும் நிறைவேறி,  இந்த தமிழ் புத்தாண்டில் அவரது துறையில் மென்மேலும் வளர்ச்சியடைய கல்கி குழுமம்  சார்பாக வாழ்த்தி விடைபெறுகிறோம்.

(அட்டையில் :  ஐஸ்வர்யா ஶ்ரீநிவாஸ்)

3 COMMENTS

  1. தனது குருமார்கள் தனக்கு கற்றுக்கொடுத்த கலையையும் நல்ல விஷயங்களையும் இந்த தலைமுறைக்கு கற்றுத் தர வேண்டும் என்பதில் உறுதியாய் உள்ள முழுநேர கர்நாடக சங்கீத பாடகியான திருமதி.ஐஸ்வர்யா ஶ்ரீநிவாஸ் அவர்களின் கனவுகள், லட்சியங்கள் அனைத்தும் நிறைவேற வேண்டும்.

    ஆ. மாடக்கண்ணு,
    பாப்பான்குளம்.

  2. இறையாசியுடன்,குருவின் ஆசியும் கிடைத்ததால்தான் ‘கர்நாடக சங்கீதத்தை
    பொழுது போக்காக கருதாமல் ஆக்கபூர்வமான வழிகளில் பல்வேறு சமூக
    சேவைகளை செய்ய முடிகிறது. வாழ்க வளமுடன்.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,614FansLike
1,915FollowersFollow
7,420SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...