உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு

உடலுக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பு
Published on

உத்தவ கீதை – 16

டி.வி. ராதாகிருஷ்ணன்

த்தவர் கிருஷ்ணனிடம் கேட்டார்…

"கண்ணா… பிரகிருதி, புருஷ தத்துவத்தை தயவு செய்து எனக்கு விளக்குங்கள்"

கிருஷ்ணன் கூறலானார்…

உடலிலுள்ள 'ஆன்மா' அஞ்ஞானத்தால் சூழப்பட்டுள்ளது. அது தன்னால் மட்டும் அந்த அறியாமையிலிருந்து விடுபட முடியாது.

'பிரகிருதி' மூலப்பொருளாகும். அது முக்குணங்களால் (சத்வ, ரஜோ, தமோ குணங்கள்) கட்டுப்பட்டுள்ளது. படைத்தல், காத்தல், அழித்தல் என்ற மூன்று செயல்களும் இந்த முக்குணங்களால் ஏற்படுகிறது.

'புருஷன்' என்ற ஆன்மா இதில் கட்டுப்படுவதில்லை.

'ஞானம்' என்பது சத்துவத்தின் குணம்

'செயல்' என்பது ரஜோ குணத்தின் குணம்

'அறியாமை' என்பது 'தமோ' குணத்தின் வெளிப்பாடு.

இவையாவையும் பிரகிருதியில் கலந்துள்ளன.

'புருஷன்' என்பது தனிப்பட்ட ஆன்மா

உதாரணமாக களிமண்ணிலிருந்து செய்யப்பட்ட மண் பானை, 'பானை' எனப்படுகிறது. அது உடைந்தால் பின் மண்ணுடன் கலந்து மறுபடியும் களிமண்ணாகிறது.

அதுபோல 'ஆன்மா' நம் உடலில் உள்ளவரை 'புருஷன்' எனப்படுகிறது. உடல் மரித்தவுடன் "ஆன்மா" இறைவனிடம் சேரும்.

உடன் உத்தவர் கேட்டார்…"எப்படி தனிப்பட்ட 'ஆன்மா' ஒவ்வொரு உடலையும் எடுத்துக் கொள்கிறது?"

பிறப்பு, இறப்பு என்பவை எப்படி நேர்கிறது? இவைகளைச் சாதாரண மனிதர்களால் புரிந்துகொள்ள முடிவதில்லை. உலகில் இவைபற்றி கூறுபவர்களும் கிடையாது. அதற்கு முக்கிய காரணம் உன்னுடைய மாயையேயாகும். ஆகையால், இவற்றைப் பற்றி விளக்கிக் கூறவும்…"

கிருஷ்ணன் சொல்லலானார்….

ஐந்து ஞானேந்திரியங்களுடனும் ஐந்து கர்மேந்திரியங்களுடனும் கூடிய மனதும், முற்பிறவியில் செய்த கர்மத்தின் பலனும், அந்த பலனுக்கு தகுந்தவாறு அந்த ஆன்மாவும் ஒவ்வொரு உடலாக பிறப்பு, இறப்பு என மாறி மாறி உருப்பெறுகிறது.

கர்ம வினையும், மரணம் அடையும் தருவாயில் அந்த உயிர் ஆசைப்பட்டவாறு புதிய பிறவியை எடுக்கும். புதிய பிறவியின்போது பழைய நினைவுகள் மறந்து போகும்.

தூங்கும்போது கனவு ஏற்படுவது போல், புதிய வாழ்க்கையும் ஜீவனுக்குத் தொடர்கிறது.

காலத்தின் கட்டாயத்தால் உடல்கள் தோன்றி, வளர்ந்து இருந்து அழிகிறது.

உண்மையில் ஜீவன் பிறப்பதுமில்லை… இறப்பதுமில்லை. செய்த கர்மத்தின் பலனால், உடல்,மனது மற்றும் இந்திரியங்களின் சேர்க்கையால், பிறப்பு ஏற்படுவது போலத் தோன்றி பின்பு இறப்பு ஏற்படுவது போல காணப்படுகிறது.

இவையாவையும் மாயையின் செயல்

தாயின் கர்ப்பத்தில் நுழைந்து கர்ப்ப காலம் வரை காத்திருந்து, பிறந்து.. குழந்தையாய், சிறுவனாய், இளைஞனாய், முதிய வயதினாய், பிறப்பு இறப்பு  என்று ஒன்பது நிலைகளைக் கடக்கிறது.

ஆசையின் காரணமாகவும், அறியாமையாலும் உயர்வு நிலை, தாழ்வு நிலை வாழ்வில் ஏற்படுகிறது.

இதனை ஒரு சிலரே..இறைவனின் அருளால் புரிந்து கொள்பவர்கள்… மறுபிறவி எடுப்பதில்லை.

எப்படி…விதையிலிருந்து செடிகள் உண்டாகி,பூக்கள் உண்டாகி..மீண்டும் விதைகளைக் கொடுத்துவிட்டுச் செடி அழிந்து போகிறதோ அதுபோல ஞானியானவன் தன்னுடலும் தோன்றி வளர்ந்து அழிவதைக் காண்பான். கவலைப்பட மாட்டான். உடலின் மீதுள்ள பந்தத்திலிருந்து விடுபட்டவனாவான்.

உடலுக்கும் அதிலுள்ள ஜீவனுக்கும் உள்ள தொடர்பு அறியாதவர்கள், மீண்டும்… மீண்டும் உலகில் பிறப்பார்கள்.

சத்துவ குணத்தால் ஞானமேற்பட்டுப் பிறவியில் இருந்து விடுபடமுடியும்.

ரஜோ குணத்தால் தேவர்கள், சித்தர்கள் வாழும் உலகங்களை அடைய முடியும்.

தமோ குணமுடையவர்கள், காமத்தால் கீழான பிறவியை அடைந்து துன்பத்தை அடைவார்கள்.

இந்திரியங்களின் சேர்க்கையால் ஏற்படும் இன்பமும்… துன்பமும் உடலிலுள்ள ஆன்மாவைச் சேராது.

ஆகையால் உத்தவரே, இன்பமும், துன்பமும் மனத்தின் மாயை. உறக்கத்தில் ஏற்படும் கனவு போன்றவை. தூக்கம் கலைந்தால் கனவு காணாமல் போய்விடும் என்பதை உணர்ந்து கொள்வீராக.

இவை எல்லாவற்றிற்கும் மூல காரணம் ஜீவனின் அறியாமையே ஆகும்.

ஆகையால், வாழ்க்கையில் பிறப்பில் வாழ்த்தப்பட்டாலும், இகழப்பட்டாலும், இன்பப்பட்டாலும், துன்பப்பட்டாலும், உண்மையை உணர்ந்து , உங்களது முயற்சியால் இந்த மாயையிலிருந்தும், அறியாமையில் இருந்தும் விடுவித்துக் கொள்வீராக!

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com