0,00 INR

No products in the cart.

தேசிய உணர்வும்  பண்பாட்டு கலாசார உணர்வும் கொண்ட ஒரே காங்கிரஸ் தலைவர் திலகர்.

 மறக்கக் கூடாத தலைவர்
‘லோகமான்ய’ பால கங்காதர திலகர்  (23-7-1856 – 1-8-1920)

– ராஜி ரகுநாதன்

 

1856 ஜூலை 23ம் தேதி ரத்தினகிரியில் சூரிய பகவானின் அருளால் ஒரு சூரியக்கிரணம் உதயமானது. சூரியனே அஸ்தமிக்காத சாம்ராஜ்ஜியமாக புகழ்பெற்ற பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியத்தை அஸ்தமிக்கச் செய்வதற்காக உதித்த சூரியக் கிரணம் அது. சுமார் அரை நூற்றாண்டு காலம் பிரிட்டிஷாரை நடுநடுங்கச் செய்தது.

பாரத தேசத்திற்கு பாரம்பரியமாக வரும் மூதாதையரின் வரலாற்றையும்  தேசத்தின் தர்ம கலாசாரப் பரம்பரையையும் குரலெடுத்துக் கூறி தாய்நாட்டை அடிமைத்தளையில் இருந்து விடுவித்து பாரத தேசத்தைச் சூழ்ந்த இருளை விலக்குவதற்கு இறைவன் அனுப்பிய சூரிய கிரணம் அவர்.

1908ல் செக்ரெடரி ஆப் ஸ்டேட்டுக்கு மும்பை கவர்னர் எழுதிய கடிதத்தில் முக்கிய குற்றவாளியாக இவர் பெயரை குறிப்பிட்டார். “பாரத தேசத்தில் ஆங்கிலேயர்களை ஒழித்துக் கட்டுவதற்கு இவர் ‘கணேஷ உற்சவங்கள்’, ‘சிவாஜி ஜெயந்தி’ கொண்டாடுகிறார். உள்ளூர் பாடசாலைகளைத் திறக்கிறார்” என்று குற்றம் சாட்டினர்.

இவர் எளிமையின் மறுவடிவம். வேட்டி சட்டை, தோளில் ஒரு துண்டு, தலையில் சிவந்த தலைப்பாகை என்று மிக சாமானிய உடையில் உண்மையான இந்தியனாக வளைய வந்தார். “சுதந்திரம் என் பிறப்புரிமை” என்று சிங்கநாதம் எழுப்பி அதனை தேசமெங்கும் எதிரொலிக்கும்படிச் செய்து, ஒவ்வொரு இந்திய குடிமகனிலும் சுதந்திர உணர்வைத் தூண்டி விடுதலைக்காக உயிரையும் பணயம் வைத்து மக்களைத் துயிலெழுப்பினார். வரலாறு கூறும் உண்மை இது. அவரே லோகமான்ய பாலகங்காதர திலகர்.

திலகரின் தந்தை சிறந்த சமஸ்கிருத அறிஞர், ஆசிரியர். குழந்தைகள் இல்லாத காரணமாக திலகரின் தாய் பதினெட்டு மாதங்கள் சூரிய பகவானை உபாசனை செய்தார். சூரியனின் வரப்பிரசாதமாகப் பிறந்தவரே பால கங்காதர திலகர். திலகர்  சிறுவயதில் தன்  தாத்தாவிடம் வளர்ந்தார். அவரிடம் நானாசாஹெப், தாந்தியாதோபே, ஜான்சி ராணி, சிவாஜி போன்றவர்களின் வரலாற்றோடு ராமாயணம், மகாபாரதம் போன்ற கதைகளையும் கேட்டு எழுச்சி பெற்று “அவர்களைப் போலவே நானும் தாய்நாட்டுக்கு உயிரைக் கொடுத்தாவது சேவை செய்வேன் என்றும், பாரத மாதாவை அடிமைத் தளையில் இருந்து விடுதலை பெறச் செய்வேன்” என்றும் உறுதி பூண்டார்.

திலகர் சிறுவயது முதல் உண்மைக்குக் கட்டுப்பட்டு விளங்கினார். சுதந்திர உணர்வை அச்சமின்றி வெளிப்படுத்தினார். இரட்டை பட்டப்படிப்பு படித்த திலகர் ஆங்கிலேயர் அளிக்க முன்வந்த வேலையை உதறித் தள்ளி மக்களிடையே சுதந்திர உணர்வைத் தூண்டுவதற்கும் தேச பக்தியை நாட்டுவதற்கும் இந்திய கலாசாரத்தை நிலைநாட்டுவதற்கும் ஆதரிசங்களை போதிப்பதற்கும் கல்வி நிலையங்களே வழி என்று எண்ணி, தன் தோழர்களான அகர்கர்ஜி, பிப்லூண்கர்ஜி உதவியோடு ‘நியூ இங்க்லீஷ் ஹை ஸ்கூல்’ தொடங்கினார்.

அது மிகச் சிறிது காலத்திலேயே மிகப் பெரும் விருட்சமாகி, “டக்கன் எஜுகேஷன் சொசைடி”யாக வடிவு பெற்றது. அந்த அமைப்பில் தற்போது பூனாவில் பெர்கூனஸ் காலேஜ், கிரேடர் மகாராஷ்டிரா காமெர்ஸ் அண்ட் எகனாமிக்ஸ் காலேஜ், பம்பாயில் பாம்பே காலேஜ், சாங்க்லியில் வில்லிங்டன் காலேஜ், மேலும் பல நடுத்தர பள்ளிகள் நிலைபெற்றுள்ளன. அந்த அமைப்பு பல ஆதரிச மாணவர்களைத் தோற்றுவித்தது.

மக்களிடம் கடமை உணர்வைத் தூண்ட வேண்டுமென்றாலும் ஒற்றுமையை ஏற்படுத்த வேண்டுமென்றாலும் தீவிரவாதமே வழி என்று எண்ணி, அடுத்த ஆண்டே மராட்டி பத்திரிக்கை ‘கேசரி’யையும் ஆங்கில பத்திரிக்கை ‘மராட்டா’வையும் தொடங்கினார். தன் சிம்ம கர்ஜனை போன்ற மொழியில், “ஒவ்வொன்றுக்கும் கர்ம சித்தாந்தத்தை பொருள்படுத்திக்கொண்டு ஆங்கிலேய ஆட்சியைக் கூட இறைவனின் விருப்பம்” என்று எண்ணும் பயங்கொள்ளிகளிடம் கூட சுதந்திரக் கனலை மூட்டினர். இரண்டு ஆண்டுகளிலேயே பத்திரிகை முதல் இடத்தைப் பிடித்தது.

அதே சமயத்தில் எள்ளளவும் செல்வத்தின் மீது விருப்பம் இன்றி திலகர் நடத்திய  கல்வி நிலையத்தில் சிலரிடம் பணத்தாசை ஏற்பட்டதால் அபிப்பிராய பேதம் ஏற்பட்டது. அதனால் திலகர் சுயமாக ஸ்தாபித்த அமைப்புகளை தியாகம் செய்து விலக வேண்டி வந்தது.

கல்வி நிலையங்களில் இருந்து வெளிவந்து 1890ல் திலகர் அரசியல் பிரவேசம் செய்தார். சமுதாய முன்னேற்றத்திற்காக அரசாங்கத்தோடு போராடினார். “நாம் அனைவரும் ஒன்று” என்ற எண்ணம் மக்களிடம் நிலைபெறவேண்டுமேன்றால் “மக்கள் அனைவரும் அடிக்கடி சந்திப்பது தேவை” என்றும், “அவர்களிடம் ஒரே எடுத்துக்காட்டு தென்பட்டால் அவர்கள் அபிப்பிராய பேதங்களை விட்டு விட்டு மகிழ்ச்சியோடு இருப்பார்கள்” என்றும், “அதனை மதம் ஒன்றுதான் சாதிக்க இயலும்” என்றும் எண்ணிய திலகர் ‘பிள்ளையார் சதுர்த்தி உற்சவம்’,  ‘சிவாஜி பிறந்த நாள்’ போன்றவற்றை தேசம் முழுவதும் கொண்டாடச் செய்து, மக்களை ஒன்று திரட்டினார். பிரிட்டிஷ் அரசாங்கம் இந்தியர்களுக்கு அநியாயம் செய்யும் ஒவ்வொரு முறையும் தமது பத்திரிகையில் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தார்.

பூனா நகர ஆளும் உறுப்பினராகவும், மும்பை சட்டப்பேரவை அங்கத்தினராகவும், மும்பை கல்வி அமைப்பின் பெலோ பதவிக்கும் திலகர் தேர்ந்தெடுக்கப்பட்டார். காங்கிரசில் முக்கிய பங்கு வகித்தார்.

1896 ல் இந்தியாவில் வறட்சி தாண்டவமாடியது. பிரிட்டிஷ் அரசு வரட்சிக்கான உதவிகளை செய்யாமல் நிராகரித்தபோது அரசைச் சாடினார். அதோடு ‘பிளேக்’ நோய் பரவி மக்கள் அவதியுற்றபோது எந்த உதவிக்கும் முன்வராமல் அரசு விக்டோரியா மகாராணியின் வைர விழா கொண்டாட்டத்தில் ஈடுபட்டது. கொதித்தெழுந்த திலகர் அரசின் பொறுப்பற்ற தன்மையை மக்கள் முன் கொண்டுவந்து, “மரணம் எதிர்நோக்கி இருக்கையில் ஏன் அஞ்சுகிறீர்கள்?” என்று கேட்டு பத்திரிக்கை மூலம் தேச பக்தர்களைத் தட்டி எழுப்பினார். உதவி நடவடிக்கை தொடர்பான சட்டம் பற்றியும் உதவி பெரும் உரிமை பற்றியும் அடித்துப் பேசினார். தானே சுயமாக மருத்துவமனைகள் தொடங்கி தன்னார்வத்  தொண்டர்களின் உதவியோடு நோயாளிகளிக்கு சேவை புரிந்தார்.

அரசு இறங்கி வந்து ‘ராண்ட்’ என்ற அதிகாரியை நியமித்தது. அவன் ஒரு கொடூரன். அவனுடைய அநியாயங்களைக் கண்டு கொதித்தெழுந்த ஒரு இளைஞன் ராண்டை சுட்டுக் கொன்றான். அதனால் போலீசாரின் அடக்குமுறை அதிகமானது. திலகர் ஆத்திரமடைந்து, “அரசுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதா?” என்ற தலைப்பில் அரசாங்கத்தைச் சாடி எழுதினார். திலகரை எவ்விதமாகிலும் சிறையில் அடைக்க எண்ணிய அரசாங்கம், ‘ராண்ட் கொலையில் திலகருக்கு தொடர்பு உள்ளது’ என்று குற்றம் சாட்டி சிவாஜி பற்றி பிரசுரித்த ஒரு கவிதைக்கு மறுப்பு தெரிவித்து திலகரை ஒன்றரை ஆண்டுகள் கடுங்காவல் சிறையில் அடைத்தனர். திலகர் சொல்ல முடியாத அளவு சிறையில் நரக வேதனை அனுபவித்தார்.

சிறையில் இருந்தபோது அவர் ‘ஆர்கிடிக் ஹோம் இன் தி வேதாஸ்’ என்ற நூலை எழுதினார். திலகருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் கண்டித்து  மக்கள் போராட்டம் நடத்தினர். இதைப் பார்த்து அரசாங்கம் பயந்து இரு ஷரத்துகளோடு திலகரின் விடுதலைக்கு ஒப்புதல் அளித்தது. முதலாவது “எப்படிப்பட்ட சன்மான சபைகளிலும் திலகர் பங்குகொள்ளக் கூடாது.” எளிமையானவரான திலகர் அதற்கு அங்கீகரித்தார். இரண்டாவது ஷரத்து, “அரசாங்கத்தின் மீது எப்படிப்பட்ட விமரிசனமும் செய்யக் கூடாது” என்பது. இதற்கு திலகர் ஒப்புக் கொள்ள மறுத்துவிட்டார். இறுதியில் அரசாங்கம் இறங்கி வந்து திலகரின் தண்டனையை ஓராண்டாக குறைத்து விடுதலை செய்தது.

திலகரின் உடல்நிலை குன்றியது. ஆனாலும் அதை பொருட்படுத்தாமல் சுதேசி போராட்டத்தை தீவிரவாத நிலைக்கு எடுத்துச் சென்றார். பத்திரிக்கைகளில் தீப்பறக்கும் கட்டுரைகள் எழுதினார். தன் வீட்டின் முன் ‘சுதேசி பஜார்’ தொடங்கினார். சுதேசி, சுயராஜ்யம், பகிஷ்கரிப்பு, தேசிய கல்வி என்ற நான்கு புனித சொற்களை மக்களிடம் பரப்பி சுயராஜ்யம் பற்றி மக்களிடம் விழிப்புணர்வை  அதிகரிக்கும் செயலில் வெற்றிபெற்றார்.

ஆங்கிலேயர்கள் வங்காளத்தைத் துண்டாக்கினர். அதனை எதிர்த்து தேசமெங்கும் புரட்சி மூண்டது. கொடூரமான மாஜிஸ்ரேட்டை பதினெட்டு வயது ‘குதிராம்போஸ்’ என்ற புரட்சி வீரர் வெடிகுண்டு வீசிக் கொன்றார். அரவிந்த கோஷ் கையிலும் கழுத்திலும் விலங்கு மாட்டி வீதிகளில் இழுத்துச் சென்றனர் பிரிட்டிஷார். அப்போது திலகர் அதனை கண்டித்து ‘தேச துர்பாக்கியம்’ என்ற கட்டுரையை தமது ‘கேசரி’ பத்திரிகையில் எழுதினார். மக்கள் கொதித்தெழுந்தனர். அதனால் அரசாகம் திலகரை ‘தேசதுரோகி’ என்று முத்திரை இட்டு ஆறாண்டுகளுக்கு நாடு கடத்தும் தண்டனை விதித்து, பர்மாவில் உள்ள ‘மாண்டலே’ சிறையில் அடைத்தது. மரக் கட்டைகளால் செய்த அந்த சிறையில் தனியொருவராக திலகர் குளிரில் நடுநடுங்கினார்.

ஓராண்டு காலத்திற்குப் பின் சில ஷரத்துகளோடு அரசாங்கம் திலகரை விடுதலை செய்ய தீர்மானித்தது. ஆனால் திலகர் ஷரத்துகளை ஒப்புக்கொள்ளவில்லை. வேறு வழியின்றி கொடுங்காவல் தண்டனையை சாதாரண தண்டனையாக மாற்றி படிப்பதற்கும் எழுதுவதற்கும் அனுமதி அளித்தது. சிறையில் திலகர் கீதா ரகசியத்தை எழுதினார். நிறைய நூல்களைப் படித்து பல்வேறு இந்திய மொழிகளை கற்றுக் கொண்டார். ஆன்மீக சிந்தனையில் காலம் கழித்தார்.

‘மாண்டலே’ சிறையில் இருந்து திலகர் விடுதலை ஆகி வந்தபோது காங்கிரசில் இரு பிரிவுகள் இடையே மாறுபட்ட கருத்துகள் தோன்றி இரண்டாகப் பிரிந்தது. திலகர் அவர்களை ஒன்றிணைப்பதற்கு பெரு முயற்சி செய்தார். ஆனால், தோல்வியடைந்தார். திலகர் ‘ஹோம் ரூலிங்’ என்ற அமைப்பைத் தொடங்கினார். மக்களை ஒன்றிணைப்பதற்கு  பாடுபட்டு நூற்றுக்கணக்கான கூட்டங்களில் ‘ஹோம் ரூல்’ பற்றி உரையாற்றினார். உடல்நிலை சரியில்லாத போதும் பிரிந்த காங்கிரசை ஒன்றிணைக்கும் முயற்சிகளைத் தொடர்ந்து செய்து இறுதியில் வெற்றி பெற்றார்.

உலகப் போரில் வெற்றி பெற்ற பிரிடிஷார் இந்தியாவில் அடக்குமுறையை அதிகமாக்கினர். ‘ரௌலட்’ சட்டத்தை எதிர்த்ததன் காரணமாக ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. ஜாலியன் வாலாபாக் ரத்தப் பெருக்கெடுத்து ஓடியது. அந்த நேரத்தில் மக்களை விழிப்புடன் இருக்கச் செய்வதற்கு திலகர் செய்த முயற்சி போற்றுதலுக்குரியது.

1920 அகஸ்ட் 1 அன்று அந்த விளக்கு அணைந்தது. தேசத்திற்கு ஒளியூட்டிய ஜோதி சூரியனில் கலந்து போனது. பாரத தேசம் ஊமையானது. மக்கள் கடல் அலை போல் திரண்டு வந்து திலகரின் அந்திம தரிசனத்திற்கு குவிந்தார்கள். காந்திஜியோடு கூட இரண்டு லட்சம் பேருக்கு மேலாக இறுதிப் பயணத்தில் பங்கு கொண்டார்கள். மகாத்மா காந்தி, லாலா லஜபதி ராய், சௌகத் அலி மற்றும் பல தலைவர்கள் தாமே திலகரின் பூத உடலை சுமந்தார்கள். திலகரின் உடல் தகனம் ஆவதைப் பார்த்து காந்திஜி கூறிய சொற்கள் இவை… “திடமான நிச்சயத்தோடு தன் வாழ்க்கையை நாட்டு சேவைக்கே அற்பணித்தார். இவருடைய வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். நாட்டு மக்களுக்காகவே வாழ்ந்த திலகரை வருங்கால சமுதாயம் எப்போதும் கௌரவித்துப் போற்றும்.”

பல சிறந்த தலைவர்களை மறந்து போனது போலவே திலகரையும் அவர் தன்னலமற்ற தலைவர் என்பதால் இந்தியா மறந்து ஒதுக்கியது. தேசிய உணர்வும்  பண்பாட்டு கலாசார உணர்வும் கொண்ட ஒரே காங்கிரஸ் தலைவர் திலகர். புனித வாழ்க்கை வாழ்ந்த திலகர் மக்கள் அனைவரின் அன்பையும் பெற்றார். அவர் மிகச் சாதாரண வாழ்க்கை வாழ்ந்தார். புனிதமான பாரத தேசத்தின் மீது அபாரமான அன்போடு மனப்பூர்வமாக தேச சேவை செய்தார். அவரிடம் செல்வம் இல்லை. அவருடைய உடை அவருடைய எளிமைக்கு எடுத்துக்காட்டு. கணபதியை நினைத்தாலும் சிவாஜியை நினைத்தாலும் திலகரே நம் கண் முன் தோன்றுவார்.

ஒவ்வொரு இந்தியனும் திலகரின் பிறந்தநாளன்று நம் சுதந்திர நிலைக்குக் காரணமான உலக நலன் கோரிய ‘லோகமான்ய’ பால கங்காரதரத் திலகரை கட்டாயம் நினைக்க வேண்டும். ‘ஆஜாதீ கா அம்ருத் மகோத்சவ்’ நடத்திவரும் இன்னாளில் இதைவிட அந்த மகநீயரின் ஆன்மாவுக்கு நாம் செலுத்தக் கூடிய நன்றி வேறு என்ன?

ஜெய் ஹிந்த்!

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன் தமிழ் தெலுங்கு இரு மொழி இலக்கிய உலகிலும் தொடர்ந்து இயங்கி வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருதும் தினசரி டாட்காம் வழங்கிய தெய்வத் தமிழர் விருதும் பெற்றுள்ளார். இது நம் சனாதனதர்மம் என்ற நூலும் மேடம் கதைகள், பால்டம்ளர் என்ற சிறுகதைத் தொகுப்புகளும் இவருடைய மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளன. தெலுங்கில் இவருடைய திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி விரிவுரை நூலை ருஷிபீடம் பதிப்பகம் சிறப்பாக வெளியீட்டது. தாய்மண்ணே வணக்கம் என்ற சிறுகதை மங்கையர்மலர் போட்டியில் பரிசு பெற்றதை பெருமையாக நினைக்கிறார்.

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...