தேர்தலும்… மரணமும்

தேர்தலும்… மரணமும்
Published on

– வினோத்

லகிலேயே மிகவும் பாதுகாப்பான நாடாக கருதப்படும் ஜப்பானில், பட்டப்பகலில் நடுரோட்டில், முன்னாள் பிரதமர், துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.  இம்மாதிரியான  அரசியல் படுகொலை ஜப்பானில் நடந்திருப்பது இதுவே முதல் முறை.

ஜப்பான் வரலாற்றில் "நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்தவர்" என்ற பெருமையை பெற்றவர் ஷின்சோ அபே. கடந்த 2006ம் ஆண்டில் இருந்து 2020ம் ஆண்டு வரை 4 முறை ஜப்பான் பிரதமராக பதவி வகித்துள்ளார்.

ஜப்பானில் நாடாளுமன்ற மேல்சபையின் தேர்தல்  நடைபெற உள்ள நிலையில், அங்குள்ள அரசியல் கட்சித் தலைவர்கள் இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மேற்கு ஜப்பானின் நாரா நகரில், முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே (67) தனது லிபரல் ஜனநாயக கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்து கொண்டிருந்தார். நாரா ரயில் நிலையத்திற்கு அருகே சாலையில் நின்றபடி அவர் பிரசாரம் செய்து கொண்டிருந்தார்.  அப்போது, அபேக்கு சில அடி தூர இடைவெளியில் அவருக்கு பின்னால் நின்றிருந்த ஒரு நபர், திடீரென நாட்டு துப்பாக்கியால் அபேயை நோக்கி சுட்டு கொலை செய்துவிட்டான். இந்த துப்பாக்கிசூடு ஜப்பானில் நடந்திருப்பது தான் அதிர்ச்சியை அதிகமாக்கியிருக்கிறது. காரணம் துப்பாக்கி சூடு என்பது ஜப்பானில் அபூர்வம்.

ஒவ்வொரு ஆண்டும் மிக மிக சொற்பமான அளவிலேயே துப்பாக்கிச்சூடு தொடர்பான வழக்குகள் பதிவாகும் நாடு ஜப்பான். 12.5 கோடி மக்கள் வாழும் அந்நாட்டில், கடந்த ஆண்டில் துப்பாக்கி தொடர்பான குற்ற வழக்குகள் வெறும் 10 மட்டுமே! பெரும்பாலும் இது ஒற்றை இலக்க எண்ணிக்கையிலேயே இருக்கும். கடந்த ஆண்டு நடந்த 10 சம்பவத்தில் ஒருவர் மட்டுமே இறந்துள்ளார். 4 பேர் காயமடைந்துள்ளனர். அதில் 8 வழக்குகள் தாதா கும்பல்கள் தொடர்பானவை.   ஜப்பானில் சாதாரணமாக யாரும் துப்பாக்கி வாங்கிவிட முடியாது.

ஒருவர் சொந்தமாக  துப்பாக்கி வாங்க வேண்டுமெனில், அவரது பின்புலம் குறித்து போலீஸ் கடுமையான விசாரணைகளை நடத்துவார்கள். சட்ட விரோதமாக துப்பாக்கி வைத்திருந்தால், அதற்கு மிக மிக அதிக அபராதம் விதிக்கப்படும். இதனாலேயே யாரும் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருக்க மாட்டார்கள். இப்படிப்பட்ட கட்டுப்பாடுகள் இருந்தும், ஜப்பானில் இந்த அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது.

இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ஆதிக்கத்தை தடுக்க குவாட்(ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இந்தியா) கூட்டமைப்பு உருவாக்குவதில் முக்கிய காரணமாக இருந்தவர் ஷின்சோ அபே. இதன் மூலம் இந்தியாவின் சீன எதிர்ப்புக்கு ஆதரவு தந்தவர் அபே. இந்தியாவின் உற்ற நண்பராக இருந்தவர். மெட்ரோ, புல்லட் ரயில் திட்டங்களுக்கு உதவியவர் ஷின்சோ.  அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஜப்பானின் கடன் உதவியுடன் டெல்லி மெட்ரோ ரயில் திட்டம் சாத்தியமானது. அதேபோல், மும்பை – அகமதாபாத் இடையே புல்லட் ரயில் திட்டத்திற்கும் அபே ஆட்சியில்தான் ஒப்பந்தம் கையெழுத்தானது. இத்திட்டத்தின்படி, ஜப்பான் தனது புல்லட் ரயிலுக்கான தொழில்நுட்பங்களை வழங்குவதோடு கடன் உதவியும் வழங்கும். கடந்த 2017ல் அபேயின் தலையீட்டுக்குப் பிறகுதான் இந்தியா, ஜப்பான் இடையே ஆக்கப்பூர்வமான பணிகளுக்கான அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்தானது. கடந்த 2020ம் ஆண்டில் இந்தியாவில் 4வது பெரிய முதலீட்டாளராக ஜப்பான் இருந்துள்ளது. மேலும், 1,455 ஜப்பான் தனியார் நிறுவனங்களில் கிளைகள் இந்தியாவில் உள்ளன.

ஷின்சோ அபேவின் மரணத்தையடுத்து இந்திய அரசு  ஒரு நாள்  துக்கம் அனுசரித்து  அஞ்சலியைச் செலுத்தியிருக்கிறது.

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com