0,00 INR

No products in the cart.

குன்றென நிமிர்ந்து…

வித்யா சுப்ரமணியம்

 

வெள்ளி சொம்புல பால் வெச்சிருக்கு. குங்குமப்பூ எல்லாம் போட்டு காய்ச்சினது. வீணடிக்காம ரெண்டு பேரும் குடிச்சுடுங்க. மாற்றுப் புடைவை, ரவிக்கை எல்லாம் அலமாரியில் இருக்கு. ஹாப்பி ஃபஸ்ட் நைட். சின்ன அண்ணி புன்னகையோடு அவளை அனுப்பி வைத்தாள்.

அவள் அறைக்குள் போன அரைமணிநேரம் கழித்துதான் ஆனந்தன் வந்தான். “சாரி மைதிலி. ஒரு கதை டிஸ்கஷனில் இருந்தேன்” என்றபடி வந்தவன் அறைக்கதவைத் தாளிட்டுவிட்டு அவளருகில் வந்தான்.

முதலிரவில் என்ன சம்பிராதாயம் நடக்கும்னு எனக்குத் தெரியும். எத்தனை சினிமா பார்த்திருப்பேன். ஒரு மாறுதலுக்கு நான் உனக்கு பால் எடுத்துத் தரேன் என்றபடி டீபாய்  மீதிருந்த வெள்ளி தம்ளரில் பாலை ஊற்றிக் கொடுத்தவாறு புன்னகைத்தான். அவள் வெட்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.

உட்கார் என்றவன், தானும் கொஞ்சம் பால் எடுத்து குடித்தான். “உண்மையைச் சொல்லணும்னா இப்போ கல்யாணம் செய்துக்க எனக்கு விருப்பமே இல்லை. தாத்தா பேரைக் காப்பாற்றுகிறாற்போல் ஒரு வெற்றிப்படமாவது எடுத்து திரையுலகில் காலை அழுத்தமாக ஊன்றிய பிறகுதான் கல்யாணம்னு பிடிவாதமா இருந்தேன். ஆனா யார் கேக்கறாங்க? சொந்தக்காரங்க யாரோ உன் போட்டோவும் ஜாதகமும் கொடுத்திருக்காங்க. ஜாதகம் பொருந்தியிருந்துச்சு. உன் போட்டோ பார்த்ததும் எனக்கும் பிடிச்சிருந்துது. ஓகேன்னு சொல்லிட்டேன்”

“உங்க அந்தஸ்துக்கு நல்ல கோடீஸ்வர வரன்களே கிடைக்குமே. எப்டி என்னை மாதிரி ஒரு மிடில் கிளாஸ் பெண்ணிற்கு ஓகே சொன்னீர்கள்?”

“ஏன்னா கடவுள் “எனக்கு நீ உனக்கு நான்”னு எழுதி வெச்சிருக்கான். அதான் ஓகே சொன்னேன்” அவன் சிரித்தான். பிறகு, “உண்மையைச் சொல்லணும்னா நீ மிடில் கிளாஸ் பெண் என்பதே இப்போ நீ சொல்லித்தான் தெரியும். எங்கிட்ட இதுபாத்தி யாரும் சொல்லலை.”

அவள் திகைப்போடு அவனைப் பார்த்தாள்.

“அவங்க சொல்லலை  என்றாலும் எங்கள் குடும்பத்தைப் பற்றி நீங்களும் எதுவும் கேட்டுத் தெரிஞ்சுக்கலையா? அல்லது அந்தஸ்து தேவையில்லை என்று நினைத்தீர்களா?”

“ஒருவேளை என்னிடம் அவர்கள், “நீ ஒரு மிடில் கிளாஸ் பெண்” என்பதைச் சொல்லியிருந்தால், நிச்சயம் வேண்டாம் என்றிருப்பேன். “அண்ணன்களுக்கெல்லாம் வசதியான பெண்களைக் கல்யாணம் செய்து வைத்திருக்கும்போது எனக்கு மட்டும் எதுக்கு மிடில் கிளாஸ் பெண்” என்று கேட்டிருப்பேன். ஆனா அவங்க எதுவுமே சொல்லலை. போட்டோ மட்டுமே காட்டினாங்க. பிடிச்சுருந்துது. சரின்னு சொல்லிட்டேன்.”

அவனது பளிச்சென்ற பதிலில் அவள் அயர்ந்து போனாள். “இது உங்களுக்கு ஏமாற்றமா இல்லையா?”

“கல்யாணம் முடிந்துவிட்டது. நாம் முதலிரவு அறையில் இருக்கோம். இப்போ போய் அந்தஸ்து கிந்தஸ்துன்னு நேரத்தை வீணடிக்குமளவுக்கு நான் முட்டாள் இல்லை. எனக்கு எந்தவிதமான ஏமாற்றமும் இல்லை. இன்னும் ரெண்டே வருஷத்தில் எனக்குன்னு ஒரு அந்தஸ்து தேடிக்குவேன். திரையுலகமே என் வீட்டு வாசலில் வந்து காத்திருக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை” ஆனந்தன் விளக்கை அணைத்துவிட்டு அவளை நெருங்கினான்.

*** *** ***

வம்பர் 1990

டேபிளின் மீதிருந்த தொலைபேசி அடித்தது. நிர்வாகி சாரதா எடுத்துப் பேசினாள்.

“ஐயா கலெக்டர் ஆபீஸில் பதினொரு மணிக்கு கிரான்ட்ஸ் மீட்டிங் இருக்குன்னு நினைவுபடுத்தறாங்க. இந்தப் பெண்ணை நான் இங்க தங்க வைத்துக் கொள்கிறேன். நீங்க கவலைப்படாமல் கிளம்புங்கள்.”

பெரியவர் எழுந்தார். “சரிம்மா. நீ விரும்பும்வரை இங்க பாதுகாப்பா இருக்கலாம். நடுவில் நேரம் கிடைத்தால் என் வீட்டிற்கும் வரலாம்”

அவர் கிளம்பிச் சென்றார்.

சாரதாவின் உதவியாள பெண் ஒருத்தி மைதிலியையும் குழந்தைகளையும் அழைத்துச்சென்றாள்.

நீண்ட ஹாலில் இருபுறமும் வரிசையாகக் கட்டில்கள். அவற்றில் படுத்திருந்த முதியவர்கள். அதை ஒட்டி மற்றொரு ஹாலில் தையல் இயந்திரங்களில் தைத்துக் கொண்டிருந்த நடுத்தர வயது பெண்கள். ஒரு அறையில் குழந்தைகள் சிலர் உறங்கிக் கொண்டிருந்தனர்.

அடுத்தாற்போல் ஒரு அறை சற்று வசதியான பெரிய அறை. “இது சாரதாம்மா அறைதான். இப்போதைக்கு உங்களை இங்க இருக்கச் சொன்னாங்க. அவங்க மீட்டிங் முடிஞ்சதும் வந்து உங்களுக்கு வேற இடம் தருவதா சொன்னாங்க” என்றபடி அவளது சூட்கேசை உள்ளே வைத்தாள் .

“அவங்க வரும்வரை ஓய்வெடுங்க. இன்னும் முக்கால் மணியில்  சாப்பாட்டு மணி அடிச்சதும், பின்பக்கம் இருக்கும் உணவுக் கூடத்திற்கு வாங்க. சரியா?” என்று சொல்லிவிட்டு அந்தப் பெண் வெளியேறினாள்.

குழந்தைகள் இருவரையும் கட்டிலில் படுக்க வைத்துவிட்டு அவள் தரையில் படுத்து இடக்கை மடக்கி அதில் தலை வைத்துக்கொண்டு கண் மூடினாள்.

தூக்கம் வரவில்லை. மனசு ஆனந்தனை நோக்கிச் சென்றது. எந்தவொரு போதையுமே மனிதனை எளிதில் விடாது. விழுங்கத்தான் பார்க்கும். ஆனந்தனுக்கு இருந்தது சினிமா போதை. அவனுக்குள் சிறு பொறியாக இருந்ததை ஊதி ஊதி எரியவிடுவதற்கு அவனைச்சுற்றி நிறைய பேர் இருந்தார்கள்.

அந்தக்காலத்தில் பல வெற்றிப் படங்கள் எடுத்த பிரபலமான சினிமா குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால் இத்தகைய ஆர்வம் இருப்பது இயல்புதான். இன்றைய சூழலும் யதார்த்தமும் அவனுக்குப் புரிந்துவிட்டால் இந்த போதை நீங்கிவிடும் என்று நினைத்தாள் அவள். பழைய திரைப்படங்களின் முதலிரவுப் பாடல்களைப் பாடி முதலிரவில் அவளை மகிழவித்தான் அவன்.

“நல்லா பாடறீங்களே. குரல் ரொம்ப நல்லார்க்கு. சங்கீதம் கற்றுக் கொண்டீர்களா?”

“ஆமா. ஒரு குட்டி கச்சேரி பண்ணுகிற அளவுக்கு கர்நாடக சங்கீதம் தெரியும்”

“உங்க குரலுக்கு நீங்க சினிமால பின்னணி பாடகரா ஆகியிருக்கலாமே?”

“ஏழெட்டு பாட்டு பாடியிருக்கேன். எனக்கு கர்நாட்டிக் பேஸில் அமைந்த மெலடி பாடல்கள்தான் பிடிக்கும். ஆனால் எல்லாம் டப்பாங்குத்து பாடல்களாவே வந்துது. எனக்குப் பிடிக்கலை. தவிர நான் ஆசைப்பட்டது நல்ல படங்கள் தயாரிக்கத்தான்”

“நா ஒண்ணு சொன்னா கேப்பிங்களா?”

“என்ன?”

“அந்தக் காலத்துப் பாடல்கள் மாதிரி இப்போ சினிமாவில் பாடல் காட்சிகள் வைப்பதில்லை. அதேபோல இன்னிக்கு சினிமா படங்கள் எடுப்பதும் அவ்வளவு சுலபமில்லை. உங்க தாத்தா காலத்தில் குறைந்த செலவு நிறைந்த லாபம்னு நல்ல படங்கள் எடுத்தார். ஆனா இப்போ ஹீரோவோட சம்பளமே பல கோடிகள். கதையிருக்கோ இல்லையோ வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தணும், நிறைய சண்டைக் காட்சிகள், கார்கள் பறக்கணும், விமானத்திலிருந்து குதிக்கணும், லாஜிக்லாம் பார்க்கக்கூடாது. யதார்த்தம்னா என்னன்னு கேக்கணும். உங்களுக்குப் பிடிச்சா மாதிரியெல்லாம் படம் எடுக்க விடமாட்டாங்க. இன்றைய சூழலில் வெற்றிக்கான ஃபார்முலாவும் மாறியாச்சு. நமக்கெதுக்கு அதெல்லாம்? இருப்பதை வெச்சு நாம அமைதியா சந்தோஷமா இருப்போமே”

“பரவால்லயே சினிமாவோட டிரெண்ட் மாறியிருப்பதைப் பற்றியெல்லாம் அழகா பேசறயே. சினிமா என்றில்லை. எந்த ஒரு துறையிலுமே மாற்றங்கள் வந்து கொண்டுதானிருக்கும். வெற்றி வேணும்னா மாற்றங்களை ஏற்றுக் கொண்டாகணும். நீ வேணா பாரு. காலத்திற்கேற்றார் போல ஒரு நல்ல படம் எடுத்து சூப்பர் டூப்பர் ஹிட் ஆக்குவேன். கூடிய சீக்கிரமே என் வெற்றியை நீயும் கொண்டாடுவ. ஆனந்தனின் மனைவி என்று சொல்லிக் கொண்டு பந்தாவா சுற்றி வருவ.”

மைதிலி புன்னகைத்தாள். அந்த புன்னகைக்குப் பின்னே கவலையுமிருந்தது.

“நீங்க வெற்றி பெற்றால் என்னைவிட யார் அதிகமா சந்தோஷப்படப் போகிறார்கள்? ஆனா இதுக்கெல்லாம் கோடிக்கணக்கில் பணம் வேணுமே? எப்படி சமாளிப்பீர்கள்?

“முதல் படம் சின்ன பட்ஜெட்லதான் இருக்கும். ஜஸ்ட் நாலு கோடி ரூபாய். அதுல ரெண்டு கோடி ரூபாய் வங்கியில் கடன் வாங்கியிருக்கேன். அடுத்த வாரம் படத்துக்கு பூஜை போட்டு ஷூட்டிங் ஆரம்பிச்சுருவேன்.

“மிச்ச பணத்திற்கு என்ன பண்ணுவீர்கள்?

“பார்க்கணும். அண்ணன்கள் மூணு பேரும் கையை விரிச்சுட்டாங்க. அப்பாவாலதான் இந்த வங்கிக்கடன் கிடைத்ததால் இதுக்குமேல அவரிடம் உதவி கேட்க முடியாது. வேற ஏதாச்சும் வழியிருக்கான்னு பார்க்கணும்.” பேசிக்கொண்டே இருந்தவன் முகத்தில் திடீர் பிரகாசம் பரவ அவளையே பார்த்தான்.

*** *** ***

சாப்பாட்டு மணி அடிக்கும் ஓசை கேட்டதும் சட்டென எழுந்தாள். அசந்து உறங்கிக் கொண்டிருந்த குழந்தைகளை எழுப்பக்கூட மனசு வரவில்லை. அவர்களுக்கு கொஞ்சம் ரசம் சாதமும் பொரியலும் போதும். அவள் சாப்பிட்டுவிட்டு அவர்களுக்கு ஒரு தட்டில் பிசைந்து எடுத்து வரலாமா என்று யோசித்தாள். அப்படி எடுத்துவர அவர்கள் அனுமதிப்பார்களா தெரியவில்லை.

யோசித்தபடியே உணவுக் கூடத்திற்குச் சென்றாள். மிகப்பெரிய கூடம். அதனை ஒட்டியே பெரிய சமையலறையும் இருந்தது. நான்கைந்து வரிசையில் கடப்பா கல் பொருத்திய சாப்பிடும் மேடையும், சிமெண்ட் ஸ்லாப்கள் பொருத்திய உட்காருமிடங்களும் அமைக்கப்பட்டிருந்தன. குழந்தைகளும் மத்திய வயதினரும், முதியவர்களும் தங்கள் தட்டு தம்பளர்களோடு அமர்ந்திருக்க பணியாள் ஒருவர் ஒவ்வொரு தம்ளரிலும் குடிக்க நீர் விட்டுக் கொண்டிருந்தார். சாரதாம்மா வந்திருந்தாள். மைதிலியைப் பார்த்ததும் புன்னகையோடு தலையசைத்து அவளையும் அமரச்சொன்னாள்.

குழந்தைகள் எங்கே?

தூங்கறாங்க. என்றவள் தயங்கியவாறு, “நான் தட்டு எதுவும்…”

“தெரியும். நாளைக்கு தட்டு வந்துரும். இன்னிக்கு இலை போடச்சொல்றேன்.”

“குழந்தைகளுக்குக் கொஞ்சம் ரசம் சாதமும் பொரியலும் போதும். எழுந்த உடனே கொடுத்துடறேன்”

“ஒரு பாத்திரத்தில் எடுத்து வைக்கச் சொல்றேன்”

அவள் சாப்பிட அமர்ந்தாள். கதம்ப சாம்பார், கேரட் கோஸ் பொரியல், ரசம், மோர், ஊறுகாய் என்று எளிய உணவானாலும் மிகவும் சுவையாக இருந்தது. ‘இன்னும் கொஞ்சம் வைக்கவா’ என்று கேட்டுக் கேட்டு பரிமாறினார்கள். உண்மையில் நன்றாக சாப்பிட்டு நான்கைந்து நாட்கள் ஆகியிருந்தது. வீட்டை விட்டுக் கிளம்பவேண்டுமென்று எப்போது முடிவெடுத்தாளோ அந்த நிமிடத்திலிருந்தே ஏதோவொரு பயமும், படபடப்பும் ஏற்பட, சாப்பிடக்கூடத் தோன்றவில்லை. எப்போது? எப்படி..? எங்கு செல்வது? இந்த சிந்தனையே மனதில் நிறைந்திருந்ததால் வயிற்றில் பசி உணர்வு ஏற்பட மறுத்தது. சோற்றைப் பிசைந்து வீணாக்கினாள். திட்டமிடுதலிலேயே புத்தி சென்றது. புருஷனை உதறித் தள்ளிவிட்டு இரண்டு குழந்தைகளோடு வாழ்க்கையை தனித்து எதிர்கொள்வதென்பது அத்தனை எளிதல்ல என்று தெரிந்தேதான் அவள் அம்முடிவை எடுத்திருந்தாள். கையில் வேலை எதுவுமில்லை. எழுதியிருந்த வங்கித் தேர்வின் முடிவு எப்போது வருமோ தெரியாது. அப்படியே வந்தாலும் அவள் தேர்ச்சி பெறுவாளா? வேலை கிடைக்குமா? என்று நிச்சயமாகத் தெரியாது. அவள் நன்றாகவே எழுதியிருந்தாலும், எல்லாவற்றிற்கும் கொஞ்சம் அதிர்ஷ்டமும் வேண்டும். அவளுக்கு அது இருக்கிறதா என்று தெரியவில்லை. பார்ப்போம். “வாழ நினைத்தால் ஆயிரம் வாசல் திறக்கும்” என்று அப்பா அடிக்கடி சொல்லும் வார்த்தையை வேதமாக எண்ணி ஒரு முடிவெடுத்துதான் கிளம்பினாள். இதோ பாதுகாப்பான ஒரு பெரியவரிடம் ஆண்டவன் அவளை சேர்த்திருக்கிறான். இதனால் ஏற்பட்ட மன நிம்மதியில் பசியுணர்வு மேலெழும்ப, நான்கைந்து நாட்கள் கழித்து நன்றாக சாப்பிட்டாள்.

தங்குவதற்கு இடம் கிடைத்துவிட்டது. இனி அடுத்து என்ன செய்வதென்று யோசிக்க வேண்டும்.

(தொடரும்)

 

 

Stay Connected

261,056FansLike
1,932FollowersFollow
11,700SubscribersSubscribe

Other Articles

தேடாதே !

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன்   தேடாதே ! தேடினால் காணாமல் போவாய் ! வழிகள் மாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன... சுஜாதாவின் ‘தேடாதே’ என்ற நாவலின் ஆரம்பிக்கும் வரிகள் இவை. மிளகு போன்ற சின்ன வஸ்துவைத் தேடிக்கொண்டு நம் நாட்டுக்கு வந்தவர்களால் நாம்...

உலகெங்கும் தமிழோசை

0
  - ஸ்ருதி   சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ்...

இந்த ஆட்டத்தின் ஊடாக காதல் மலர்ந்திருக்கிறது. கவிதைகள் மலர்ந்திருக்கின்றன.

0
 நூல் அறிமுகம்   புதியமாதவி    வாசிப்போம் தமிழ் வளர்ப்போம் குழு   விளையாட்டுகள் வெறும் விளையாட்டுகள் மட்டுமல்ல, அவை  கடந்து வந்திருக்கும் பாதை மனித வரலாற்றை அப்படியே பிரதிபலிக்கின்றன. திறந்தவெளியில் விளையாடும் விளையாட்டுகளைவிட ஓரிடத்தில் அமர்ந்து விளையாடும் விளையாட்டுகள் மனித எண்ணங்களைக் கட்டமைத்தத்தில்...

உன்னதமான இசைக்கலைஞர்கள் இவற்றை செய்ய மாட்டார்கள்.

0
முகநூல் பக்கம் சுரேஷ் கண்ணன் முகநூல் பக்கத்திலிருந்து...   இசை ஞானத்தில் நான் ஒரு பாமரன் என்றாலும் இந்த லிடியன் நாதஸ்வரம் என்கிற இளைஞன் ஒரு சாதனையாளன் என்பதை ஒரு மாதிரி 'குன்சாக' உணர முடிகிறது. பியானோவில்...