0,00 INR

No products in the cart.

சைக்கிள் கடை நாட்ராயன்

 

மகேஷ் குமார்

 

“இதையும் ஒரு சைக்கிள்னு ஓட்டுவாங்க… இது கெட்ட கேட்டுக்கு ஓவராயிலிங் வேற. சீமாருக்கெல்லாம் சிலுக்குக் குஞ்சலம் கேக்குது…. ஹ்ம்ம்” என்று நாளைக்கு இரண்டுமுறையாவது புலம்பாவிட்டால் நாட்ராயன் (எ) நடராசுவுக்கு தூக்கம் வராது.

பஸ் ஸ்டாண்டிலிருந்து கூப்பிடு தூரத்தில் இருக்கும் “ரமேஷ் சைக்கிள் ஒர்க்ஸ்” கொஞ்சம் பெரிய கடைதான். ஊருக்குள் ஓடுகிற பல பிராண்டு சைக்கிள்களின் சகல பாகங்களும் ஒன்று விடாமல் கிடைக்கும். காலை எட்டரை மணிக்கு ட்டாணென்று கடைவாசலுக்கு வந்து நின்றுவிடுவான். அடுத்த ஐந்து அல்லது பத்து நிமிடங்களில் முதலாளி சேகரும் அவரது கம்பீரமான ராலே சைக்கிளில் வந்து இறங்குவார். வெள்ளை வெளேரென்று கதர்வேட்டியும் கதர்ச்சட்டையும். அந்தக்காலத்து காந்தியவாதி. கிழக்கே பார்த்து நின்று “முருகா” என்று கும்பிடு போட்டுவிட்டு  இடுப்பில் இருந்து சாவிக்கொத்தை எடுத்து நாட்ராயனிடம் கொடுப்பார்.

1 முதல் 10 வரை நம்பர் போட்டிருக்கும் பலகைகளுக்குக் குறுக்கே இரண்டு இரும்புப் பட்டைகளில் 4 பூட்டுகள் இருக்கும். ஒவ்வொன்றாகத் திறந்து இரும்புப்பட்டைகள், பலகைகளை கடைக்கு வெளியே வரிசையாக சார்த்திவைத்துவிட்டு ஒரு சங்கிலியால் இணைத்துப் பூட்டிவிடுவான். சாவிக்கொத்தை மறுபடி முதலாளியிடம் கொடுத்துவிட்டு உள்ளே ஓடுவான். முதலாளி பக்கத்தில் இருக்கும் டீக்கடைக்குப் போய் உட்கார்ந்து ஒரு டீ சாப்பிட ஆரம்பிப்பார்.

நாட்ராயன் கடைக்கு உள்ளிருந்து ஒரு வாளியும் சீமாரும் எடுத்துவந்து, பக்கத்தில் இருக்கும் காம்ப்ளெக்ஸ் உள்ளே போய் தண்ணீர் பிடித்துவந்து,  வாசல் தெளித்து மண் அடங்க பரபரவெனப் பெருக்கித் தள்ளுவான். முதலாளியின் சைக்கிளை ஒரு ஓரமாக நிறுத்தி உள்ளிருந்து ஒரு அட்டையைக்கொண்டு வந்து அதை மூடிவைப்பான்.

அதற்குப் பிறகு பதினைந்து நிமிடங்கள் பம்பரமாகச் சுற்றுவான். சைக்கிள் ரிப்பேர் செய்ய ஸ்டாண்டு, வீல் பெண்ட் எடுக்க வேண்டிய ஸ்டாண்டு மற்றும் உபகரணங்கள், பஞ்சர் ஒட்ட பேசினில் தண்ணீர், ஸ்பானர் செட், சுத்தி, டூல் பாக்ஸ் எல்லாம் கடைக்கு வெளியே அதனதன் இடத்தில் வைத்து, ஒரு சிறிய மர ஸ்டூலையும் போட்டுக்கொள்வான். கடைக்கு உள்ளே முதலாளியின் நாற்காலி, மேசை, வாடிக்கையாளர் உட்கார மரபெஞ்ச் எல்லாவற்றையும் ஒரு ஈரத்துணியால் துடைத்துவிட்டு, பக்கத்தில் சாந்தி பூக்கடையில் 4 முழம் பூ வாங்கி வந்து பலகை மேல் வைத்துவிட்டு, ஊதுபத்தி, தீப்பெட்டி எல்லாம் தயாராக வைத்துவிட்டு டீக்கடைக்குப் போய் முதலாளியை ரிலீவ் செய்வான்.

அவர் வந்து செருப்பை ஓர் ஓரமாக வைத்துவிட்டு பக்தி சிரத்தையுடன் ஊதுபத்தி ஏற்றி, பூ சார்த்திவிட்டு “முருகா” என்றபடி நாற்காலியில் உட்கார்ந்துவிட்டால் அன்றைய கிழமை துவங்கிவிடும். இதற்குள் நாட்ராயனும் டீ குடித்துவிட்டு வந்துவிடுவான். லுங்கியையும் சட்டையையும் கழற்றி கடைக்குள்ளே ஆணியில் மாட்டிவிட்டு காக்கி டிராயர், சிவப்பு டன்லப் பனியனுடன் வெளியே வருவான். கடைக்குள் உத்திரத்திலிருந்து கொஞ்சங்கூட இடைவெளியில்லாமல் தொங்கிக்கொண்டிருக்கும் விதவிதமான டயர் மற்றும் ரிம்களை ஒரு நோட்டம் விடுவான்.

“ஐயா… இந்த 5 டயரும் வெடிப்பு விட்டுருச்சு. அந்த களவாணிப்பய சங்கர் வந்தா இந்த 5 டயரையும் மாத்திக்குடுத்தரோணும்னு கண்டிசனா சொல்லீருங்… பில் போட்டு காசு வாங்க மட்டும் கரைட்டா வாரானல்ல… நாமுளும் கண்டீசனா இருக்கோணும்…”

“செரிடா… செரிடா… நான் சொல்றேன். காலங்காத்தால கோவப்படாத” என்று முதலாளி சிரிப்பார்.

“அப்பறம்… நம்ம பெட்ரோல் பங்க் திலுமூர்த்தி இருக்காரல்லங்… அவுரு வண்டி ஓவராயிலுக்கு இன்னம் 20 ரூவா பாக்கி தரோணும். எப்பக் கேட்டாலும் இதா தாரன் அதா தாரன்கறாருங்”

“ஆ…. தெரியும் தெரியும். அவுரு சம்சாரத்துக்கு சொகமில்ல. அதான் கொஞ்சம் கை கட்டிருக்குதாமா. குடுக்கறம்னு சொன்னாரு… பாவம் சம்சாரி…”

“ஊர்ல ஆருதான் சம்சாரி இல்லீங்? அல்லார் ஊட்லயும் எதாச்சி பிரச்னை இருக்கத்தானுங் இருக்குங். அதுக்காக நம்ம உட்ற முடியுங்களா?”

“யாவாரம்னா கொஞ்சம் அப்பிடி இப்பிடித்தாண்டா… விடு… விடு… முருகன் பாத்துக்குவான்.”

“நல்லாப் பாத்துக்குவான். செரி… இன்னைக்கி டியூப்பு, மர்காடு, செயினு, பெடலு எல்லாம் ஸ்டாக் வரோணும். இல்லீன்னா அதா… அந்த நாலு சைக்கிளும் அனுப்ப முடியாது. அப்பறம் என்னியை சொல்லாதீங்க”

“ஆமாமா… 12 மணி ஆனமலை லாரி சர்வீஸ்ல வருது. இந்தா வே பில்லு. பத்தரம்.  போய் பார்சல எடுத்துட்டு வந்துரு”

இதற்குள் வழக்கம்போல அடுத்த பஸ்ஸுக்கு  அரைமணி நேரம் காத்திருக்கும் ஆட்களில் ஓரிருவர் முதலாளிக்குத் தெரிந்தவர்களாக இருந்தால் கடைக்கு வந்து பெஞ்சியில் உட்கார்ந்து ‘நாயம்’ பேச ஆரம்பித்துவிடுவார்கள். இவர்களை வைத்துக்கொள்ளவும் முடியாது; ஒதுக்கவும் முடியாது.

“வாங்க கவுண்டரே… நல்லாருக்கீங்களா? பாத்து நாளாச்சு. ஊட்ல? அறுவடை ஆகிப்போச்சா?” என்று குசலம் விசாரித்தபடியே “டீ சாப்புடுவீங்களாமா” என்பார். அவரோ “கருப்பராயன் தயவுல எல்லாம் நல்லா இருக்கு. டீயெல்லாம் எதுக்கு? இந்தா பஸ் வந்துரும்…” என்பார்.

முதலாளி நாட்ராயனைப் பார்த்து தலையை ஆட்டிச் சிரித்தபடியே “ரெண்டு டீ சொல்லுப்பா” என்பார்.

நாட்ராயனுக்கு மட்டுமே அதன் அர்த்தம் புரியும். எழுந்து நின்று எதிர்ச்சாரியில் இருக்கும் டீக்கடையைப் பார்த்து “ராசண்ணே… ரெண்டு டீ” என்று இரண்டு விரல்களை விரித்துக் காட்டி இடவலமாக ஆட்டுவான். டீ வரவே வராது.

வந்த கவுண்டரும் டீ வரும் என்ற நப்பாசையில் ஏதேதோ பேசிகொண்டு காலத்தைக் கடத்துவார். முதலாளியோ நோட்டுப்புத்தகத்தில் ஏதோ எழுதியபடியே “ம்” போட்டுக்கொண்டிருப்பார். அவ்வப்போது “ரெண்டு டீக்கு எம்புட்டு நேரம் பாருங்க” என்று அலுத்துக்கொள்வார். இதற்குள் 11ம் நம்பர் பஸ் உள்ளே தள்ளாடியபடி வருவதைப் பார்த்தவுடன் “ஆ… இதா வண்டி வந்துருச்சே… வெகு சோலி கெடக்கு. பெறகு பார்ப்போம். நான் வாரன்” என்றபடி கிளம்பிவிடுவார்.

“வாரவிக போறவிகவெல்லாம் நம்ம கடைய மோர்ப்பந்தல்னு நெனைக்கிறாங்களாட்ட இருக்குது” என்று 8 போல வளைந்திருக்கும் ரிம்முக்கு பெண்ட் நிமிர்த்தியபடியே சிரிப்பான். முதலாளியும் சிரித்துக்கொள்வார்.

“வாங்கய்யா…. என்ன வண்டியைத் தள்ளிட்டு வாரிக… பஞ்சரா?” என்று அடுத்த வாடிக்கையாளரை வரவேற்பான்.

“அட ஆமப்பா… அண்ணா நகர் தாண்டும்போதே ரிம் அடிச்சுது. என்றான்னு பாத்தா… கெரகம் இத்தச்சோடு ஆணி. கெரகம் புடிச்சவனுக சூதானமாக் கொண்ட்டுபோகமாட்டனுக? வளியெல்லாம் எறச்சுக்கிட்டேவா போவாங்க?”

“இவனுகளுக்கு இதே சோலியாப் போச்சுங். வண்டியை இப்பிடி நிப்பாட்டுங். பாப்போம்”

மளமளவென டயரைக் கழற்றி ட்யூபை இழுத்து காற்றடிப்பான். அடிக்கும்போதே ‘புஸ்’ என்ற சத்தம் வரும். சட்டெனெ நிறுத்தி பஞ்சரான இடத்தில் ஒரு தீக்குச்சியை செருகி அடையாளம் செய்துவிட்டு “ட்யூப் நெம்பப் பளசாட்ட இருக்குது. வண்டி வாங்கும்போது போட்டதா? பாத்துருவோம் இன்னும் எங்காச்சி இருக்குதான்னு…” என்று இன்னும் கொஞ்சம் காற்றடித்து தண்ணீர் பேசினில் முக்கி முக்கிப் பார்ப்பான். “பாருங்க ரெண்டு எடத்துல. இங்குட்டு குத்தி அங்குட்டு வந்துருச்சு. இத்தப் பெரிய பஞ்சருக்கு ஒட்டுனாலும் நிக்காதுங். புது ட்யூப்பு போட்டரலாமா? டன்லப் நேத்துதான் பார்சல் எடுத்துட்டு வந்தேன். என்னங்?”

“அப்பிடியா? பஞ்சர் தாங்காதா? இங்கதானப்பா போன மாசம் போட்டேன்”

“ஏனுங்… இது பாருங்… பேரே இல்லாத ட்யூப்பு. நம்ம கடைல ஐயா டன்லப் விட்டா எதும் வெக்கறதில்லீங்களே… ஏனுங் முதலாளி?”

முதலாளியும் “ஒட்டிப் பாரு. நிக்காதுன்னா டன்லப் போட்டரலாம். 28 ருவா வரும்” என்பார்.

வந்தவர் “சரிப்பா… என்ன பண்றது? இன்னக்கி நேரஞ்சரியில்ல… இன்னும் நாலு பக்கம் போகோணும். நீ புதுசே போடு” என்று சொல்லிவிட்டு முதலாளியிடம் “கொஞ்சம் சகாயம்” கேட்டு 26க்கு பில் போடப்படும்.

முதலாளி மதிய சாப்பாட்டுக்கு வீட்டுக்குக் கிளம்பிப் போனதும், வெயிலுக்கு மறைப்பாக தார்ப்பாயை கீழே இறக்கிவிட்டு தூக்குப்போசியில் கொண்டுவந்திருந்த மோர்ச்சோறும் சின்ன வெங்காயமுமாகச் சாப்பிட்டுவிட்டு பக்கத்தில் கைவண்டிகள் நிறுத்திவைக்கும் இடத்திற்குப் போவான். அங்கே கைவண்டி இழுப்பவர்கள் ஓலைத்தடுப்பிற்குப் பின்னால் தண்ணீர்ப்பானைக்குப் பக்கத்தில் உட்கார்ந்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள். இவனும் போய்ச் சேர்ந்துகொள்வான்.

“வா நாட்ராயா…. சாப்டியா?”

“ம்ம்… அதெல்லாம் ஆச்சு.  ரெண்டு ராலே ஆர்டர் வந்துருக்குது. இந்தா போயி பூட்டோணும். 4 மணிக்கே பார்ட்டி வந்துரும்” என்று அலுத்துக்கொள்வான். அவர்களும் நமுட்டுச் சிரிப்பு சிரித்தபடி கேட்டுக்கொள்வார்கள்.

“சைக்கிள்னா அது ரட்ஜ் சைக்கிள்தான். சீமைல… லண்டன்ல இருந்து வருதாமா. அந்த பிரேமே இடி கெனம் கெனக்கும். அதுக்குன்னு பெசலா சீட்டு, ப்ரிங்கு எல்லாம் வருது. ராலேல்லாம் அக்கட்ட நிக்கணும்”

“எங்கட்ட கூட ஒரு ஹெர்குலஸ் இருக்குது… 20 வருசமாச்சு… சும்மா குதிர கணக்கா சொகுசா….” என்று ஒருவன் ஆரம்பிப்பான்.

“அந்தப் பேச்சு மட்டும் பேசாதீங்க. கீரோ, கெர்குலஸ் இதெல்லாம் நம்மூர் வண்டிக. தக்கையாட்ட மொதக்கும். அதையும் ஒரு வண்டின்னு… அதையும் என்றகட்ட சொல்லாதீங்க” என்று ஆரம்பித்து அடுத்த அரைமணி நேரம் பொழிந்துதள்ளுவான். குறட்டைச் சத்தம் அதிகமானதும் “தூங்குமூஞ்சிப் பசங்க” என்று பானைத்தண்ணீரைக் குடித்துவிட்டு எழுந்துவந்துவிடுவான்.

(தொடரும்)

ஓவியம்: ராஜன்

 

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

1
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

2
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...