“நீங்கள் நோபல் பரிசு பெற வாழ்த்துகிறேன்” என்றார்.

“நீங்கள் நோபல் பரிசு பெற வாழ்த்துகிறேன்” என்றார்.
Published on

உலகக் குடிமகன் –  28

– நா.கண்ணன்

பிரபஞ்சத்தில் வேதிமங்கள் ஒன்றோடு ஒன்று கலந்து கிடக்கின்றன. தங்கம் மண்ணோடுதானே கலந்து கிடக்கிறது. தனிமங்களைப் பிரிப்பது ஓர் கலை! இரும்புத் தாதுவிலிருந்து எஃகு எடுக்கத் தெரிந்த ஆதித்தமிழனின் வணிகமும், விவசாயமும் இதனால் மேம்பட்டது. நமது திருப்பாச்சேத்தி தொழில்நுட்பம் கொரியா வரை சென்றுள்ளதாக சரித்திரம் காட்டுகிறது. எனவே, வேதிமப் பிரித்தல் என்பதோர் தொன்மக் கலை. அதை நவீனமாக்கி நாங்கள் செய்து கொண்டிருந்தோம். உதாரணமாக நெல்லை உமியிலிருந்து பிரிக்க காற்றைப் பயன்படுத்துகிறோம். முறம் தாங்கு கலம். நெல்லும் உமியும் பிரிபொருள். காற்று பிரிக்கும் பொருள். இங்கு உமியின் இலகுத் தன்மை காற்று அடித்தவுடன் நெல்லை விட்டுப் பிரியக் காரணமாகிறது. இதே கருப்பொருளில்தான் Gas Chromatography எனும் வளிப்பிரி உபகரணம் செயல்படுகிறது. நான் முன்பே சொல்லியபடி பல்வேறு உபகரணங்கள் உள்ளன. காகிதத்தாள் கொண்டு வேதிமங்களைப் பிரிக்கலாம், சுண்ணாம்பு, மண் கொண்டு ஒரு நீள கண்ணாடிக் குழலிலிட்டுப் பிரிக்கலாம். இன்னும் நூதனமாக பல்வேறு வளிகள் கொண்டு வேதிமப் பொருள்களைப் பிரிக்கலாம்.

ஒரு காலத்தில் கல்லுப்பிள்ளையார் பால் குடித்தார். நான் ஜெர்மனியில் வாழ்ந்த போது நண்பர் கருணாகரமூர்த்தி அழைத்து கண்ணன் எங்க ஊர் பிள்ளையார் பால்குடிக்கிறார், வாருங்கள் என அழைத்தார். குடும்பத்தோடு போனோம். தும்பிக்கையில் நனைக்கும் பால் உறிஞ்சப்பட்டது. ஆச்சர்யத்தோடு மூர்த்தி கேட்டார், இதற்குப் பின்னுள்ள அறிவியல் என்ன என்று.

இதை Capillary Liquid Chromatography எனலாம். நான் நினைப்பதைவிட சில கற்களில் நுண் இடைவெளிகள் இருக்கும். அதில் காற்றுப் போக்குவரத்து இருக்கும். அப்படிப் போகும் காற்றுதான் கல்லுக்குள் இருக்கும் தேரைக்கு உயிரளிக்கிறது. எல்லாப் பிள்ளையாராலும் பால் குடிக்க முடியாது. உதாரணமாக ஐம்பொன் பிள்ளையார் குடிக்க மாட்டார். கருங்கல் கிரானைட் பிள்ளையார் குடிக்க மாட்டார். மண்கல் எனும் சாண்ட்ஸ்டோன் பிள்ளையார் நன்றாகக் குடிப்பார்.

இதே கருப்பொருளில்தான் எங்கள் சூழல்வேதிமவியல் பிரிதுறை வேலை செய்கிறது. நான் ஜப்பானில் செய்து காட்டியது, எவ்வாறு ஒன்றுடன் ஒன்று கூட்டுக் கலவையாய் சூழலில் கலந்து இருக்கும் PCBs எனும் தொழிற்சாலை வேதிம எச்சங்களைப் பிரிப்பது என்பது. பிரிப்பது என்றால்? மண்ணில் கலந்திருக்கும்போது, கடல் அடிமண்ணில் மண்டியிருக்கும் போது, காற்றில், நீரில் கலந்து இருக்கும்போது, இறுதியாக நம் உடலில், கடல்வாழ் பாலூட்டிகளின் உடலில் கலந்து இருக்கும்போது எப்படிப் பிரித்து எடை கட்டுவது என்பதே என் ஆய்வு. இதை நுண்மை வேதியியல் நுட்பம் எனலாம். இந்த பிரிப்பு முறையை நான் வெளியிட்ட போது பெரிய பரப்பு பரப்பு ஏற்பட்டது. எங்கோ வீட்டுக் கொல்லையில் வீசும் பூச்சிக் கொல்லியின் எச்சங்கள் நாடு தாண்டி, கடல் தாண்டி, தூர சமுத்திரத்தில் வாழும் திமிங்கலத்தின் உடலில் போய் சேர்கிறது என்பது நினைத்துப் பார்க்க முடியாதது. இதை நிரூபிப்பதற்கு பிரிதுறை பயன்பட்டது. ஒருவகையில் இது ஷெர்லாக் ஹோம் துப்புத்துலக்குவது போலத்தான். இதை சூழல் துப்புத்துறை (Environmental Forensic) என்றே அழைப்பர். நான் 80 களில் செய்த ஆய்வு இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு பி.பி.சி ஆவணத்தில் பாடு பொருளாக வருகிறது.

துப்பு துலக்கும் போது சவால்கள் வருவது இயற்கைதானே! எனது தொழில் நுட்பத்தை ஜெர்மன் கீல் பல்கலைக் கழக கடல்சார் ஆய்வகம் சவால் விட்டது. சும்மா இல்லை, வேலை கொடுத்து ஜெர்மனியில் வந்து அந்த சவாலை ஏற்றுக் கொள்ளுமாறு. வாழ்க்கை முழுவது சவால்களை எதிர்கொண்ட எனக்கு 'சவால்' என்றால் 'வாய்ப்பு' என்று பொருள். எனவே, பெட்டியைக் கட்டிக்கொண்டு ஜெர்மனி வந்து விட்டேன். இன்றளவும் உலகின் ஆகச் சிறந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் ஜெர்மானியர்கள் என்பது கண்கூடு. அங்கு சீமன்ஸ் எனும் நிறுவனம். உண்மையில் இதற்கும் Gas Chromatographykகும் சம்பந்தம் கிடையாது. ஆனால், அது பல்ப்பரிமாண வளிப்பிரி பொறி ஒன்றை உருவாக்கி வைத்திருந்ததை உலகம் அறியவில்லை. அதன் மூலம் மூலக்கூறுகள் கோடியில் ஒரு பங்கு எனும் எடை விகிதத்தில் இருந்தாலும் அவைகளைப் பிரித்து அளவிட முடியும். அதை வைத்துக் கொண்டு உலகைச் சவால் விட்டுக் கொண்டிருந்தது ஜெர்மன் கடலாய்வகம். நான் அங்கு போய் எனது பிரித்தல் முறையையும், அவர்களது பிரித்தல் முறையையும் ஒப்பு நோக்கி ஆய்வுக் கட்டுரைகள் வெளியிட்டோம். அமெரிக்காவிலும் ஒத்த சிந்தனை இருந்ததைப் பின்னால் அறிந்து கொண்டேன். நான் மிஸவ்வுரி மாநிலத்தில் இருக்கும் கொலம்பியா ஆய்வகம் சென்றபோது டாக்டர் பிலிப்ஸ் எனும் விஞ்ஞானியைச் சந்தித்தேன். அவர் ஜெர்மானியை சிந்தனைக்கு வேறொரு வடிவம் கொடுத்திருந்தார். அதுவும் பல்பரிமாணப் பிரித்தல் முறைதான். ஒரு நிலையில் இந்த புதிய முயற்சிகளை ஒருங்கிணைக்கும் விஞ்ஞானியாக நான் காணப்பட்டேன். இவை அனைத்தும் சூழல் துப்புத்துலக்கும் துறைக்குக் கிடைத்திருக்கும் அரிய பொக்கிஷங்கள்.

நான் 'புத்ரா' பல்கலைக் கழகத்தில் வேலை செய்தபோது பல சமயங்களில் கழிவுப் பொருட்களை ஏரியில் கொட்டிவிடுவது, தொழிற்சாலைக் கசடுகளை இரவோடு இரவாக ஆற்றில் கொட்டி விடுவது போன்ற சம்பவங்கள் நடந்தன. இதிலெல்லாம் குற்றவாளியைக் கண்டுபிடிக்க பல்பரிமாண பிரிவுத் தொழில்நுட்பம் பயன்பட்டது. இதன் ஆகச்சிறந்த பயன்பாடு நான் கொரியாவில் வேலை செய்த போது நிகழ்ந்தது. தலைநகரான சியோலுக்கு அருகிலுள்ள தேஅன் எனுமிடத்தில் கொரியாவின் ஆகப்பெரிய எண்ணெய்க் கசிவு நிகழ்ந்தது. இதில் எத்தனை வகையான எண்ணெய்கள் கொட்டின, அவை எந்தெந்த நாடுகளில் கொள்முதல் செய்யப்பட்டன போன்ற விவரங்களை நாங்கள் கண்டுபிடித்துச் சொன்னோம். அது மட்டுமில்லாமல் இக்கசிவினால் ஏற்பட்ட சூழலியல் கேடுகளையும் கணக்கிட்டுச் சொன்னோம். உலகில் எங்குமில்லாத அளவில் இவ்வாய்விற்கான பத்தாண்டுகள் நிதியைக் கொரிய அரசு பெற்றுத்தந்தது.

ஒரு விபத்து என்பது நிகழும் வரை வேதிமங்கள் பற்றிய விழிப்புணர்வு மனிதனுக்கு வருவதில்லை. போபால் எனும் நகரில் அமைந்திருந்த ஓர் அமெரிக்கத் தொழிற்சாலை பூச்சிகொல்லி மருந்தைத் தாயாரித்து விற்பனை செய்துகொண்டு இருந்தது. பொதுவாக, இவர்கள் என்ன தயாரிக்கிறார்கள், என்னென்ன விஷப்பொருட்கள் கலக்கிறார்கள், விபத்து ஏற்பட்டால் என்னென்ன செய்ய வேண்டும் என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்லி ஆக வேண்டும் என்பது சட்டம். ஆனால், ஒருநாள் விஷக்கசிவு காற்றில் நடந்தது. அருகில் வாழ்ந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கானோர் மூச்சுமுட்டி செத்தனர். வைத்தியர்களுக்கு என்ன மாற்று சிகிச்சை செய்வது எனத் தெரியவில்லை. காரணம் அமெரிக்கக் கம்பெனி எது காற்றில் கலந்தது எனக் கடைசிவரை சொல்லவில்லை. ஆனால், துப்புத்துலக்கியத்தில் தெரியவந்தது காற்றில் கலந்தது என்னவென்று. விஷயத்தன்மையை முறியடிக்க செய்திருக்க வேண்டியது ஒரு ஈரத்துண்டை முகத்தில் போட்டுக் கொள்ள வேண்டியதுதான்! நீரில் முறிந்துவிடும் வேதிமமது!

ஆக, வேதிமங்களின் விஷத்தன்மை, அது உலகளவில் பரவும் விதம் போன்றவைகளை எனது ஆய்வு தெளிவாகக் காட்டியது. ஜெர்மன் கடலாய்வு மையம் உலகப் பிரசித்து பெற்றது. உலகக் கடல்களின் நீரோட்டங்களைக் கண்டறிந்து அவை எவ்வாறு துருவப் பிரதேசங்களிலிருந்து உஷ்ணப் பிரதேசங்களுக்கு பயணிக்கிறது என்பதை conveyor belt model எனும் கருத்தியல் மூலம் காட்டியவர்கள் எங்கள் ஆய்வக விஞ்ஞானிகள். எனவே, கடலின் தன்மைகள், அதன் உயிர்வேதிமச் சுழற்சிகள் என பலதுறைகளில் ஆய்வுகள் மும்முரமாய் இருந்த காலம். அப்போதுதான், இந்த வேளாண்சார் வேதிமங்கள், தொழிற்சாலை வேதிமங்கள் இவை உலகின் மூன்றில் இரண்டு பாகம் வகிக்கும் கடலுக்கு எப்படிப் போகின்றன, எப்படிக் கலக்கின்றன, அவற்றின் இறுதி இலக்கு எது போன்ற கேள்விகளுக்கு விடையளிக்கும்போது கடலின் இயக்கத்தைப் புரிந்துகொள்ள முடிந்தது. அப்படித்தான் நான் ஜெர்மன் – ஜப்பானிய கூட்டாய்விற்கு வழி செய்தேன். அது குணக்கடல் அல்லது ஜப்பான் கடல் என அழைக்கப்பட்ட மிக ஆழமான கடலில் நடந்தது. நாங்கள் செய்த ஆய்வின் முடிவுகள் எவ்வளவு வேகமாக கடல் சூடாகி வருகிறது, நாம் எதிர்பாரா வேகத்தில் நிலம் சார் கழிவுகள் எப்படி இப்பெரு கடற்பரப்பில் விநியோகிக்கப்படுகின்றன என்பதைத் தெளிவாகக் காட்டியது. இத்தகைய ஆய்வுகளை மேற்கொண்டதால்தான் நான் அதிகம் மேற்கோள் காட்டப்பட்டு நோபல் நாயகர் தரத்தில் அமர்ந்திருக்கிறேன். இன்று நினைத்தால் வேடிக்கையாக இருக்கிறது, என் ஆய்வகத்தில் என்னை வந்து சந்தித்த மதுரை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் பார்வதிதேவி, "நீங்கள் நோபல் பரிசு பெற வாழ்த்துகிறேன்" என்றார். அவர் ஆசி ஒருவகையில் நிறைவேறித்தான் இருக்கிறது.

(தொடரும்)

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com