காலத்தின் கட்டாயம் -சாட்டையைச்  சுழற்றுங்கள்

காலத்தின் கட்டாயம் -சாட்டையைச்  சுழற்றுங்கள்
Published on

தலையங்கம்

ன்றைய நாகரிக உலகில் தொழில்நுட்பமானது பிரம்மாண்டமான வளர்ச்சியைப் பெற்றுள்ளது. ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும். உலகில் நடக்கும் அனைத்து விஷயங்களையும் அறிந்து கொள்ளலாம். வளர்ச்சி ஒருபுறம் பிரமிக்க வைத்தாலும், மறுபுறம் பல இன்னல்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. உயர்நீதி மன்றம் மதுரைக் கிளையில், ஒரு  யூடியூபர் தொடர்பான வழக்கில் நீதிபதி தெரிவித்த கருத்துகள் மிகவும் முக்கியமானவை. ''இணையதள வசதி 21ம் நூற்றாண்டின் அற்புதமான கண்டுபிடிப்பு. இதனால் பலரது வாழ்க்கை முறை மாறியுள்ளது. அதேநேரம் அவதூறான, தவறான யூடியூப் வீடியோக்களை ஊக்கப்படுத்த முடியாது. சர்ச்சைக்குரிய வீடியோக்களை அதைப் பதிவு செய்தவர்கள் நீக்க வேண்டும். மீறினால் போலீசார் வழக்குப் பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' எனத் தெரிவித்துள்ளார்.

இன்று ஒரு செல்போன் வைத்திருக்கும் யாராக இருந்தாலும், ஒரு கூகுள் ஐடி மூலம் தனக்கென்று ஒரு சேனல் தொடங்கி, வீடியோக்களை எடுத்துப்  பதிவிடலாம். காப்புரிமை பிரச்னை வரும் வீடியோக்களை மட்டுமே யூடியூப் நீக்குகிறது. இன்று யூடியூப்களில் ஒரு நிமிடத்தில் சுமார் 500க்கும் மேற்பட்ட வீடியோக்கள் பகிரப்படுவதாக யூடியூப் நிறுவனம் தெரிவிக்கிறது.

கொரோனாவால் வாழ்வாதாரம் முடங்கிய பலருக்கு, யூடியூப் கைகொடுத்தது. சமையல், நகைச்சுவை மற்றும் பயனுள்ள தகவல்கள் தொடர்பான வீடியோக்களை வெளியிட்டனர். தமிழகத்தில் ஒரு கிராமத்தில் வெட்டவெளியில், இயற்கையான முறையில் சமைக்கும் ஒரு வீடியோ, கோடிக்கணக்கான பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது. வெளியில் சென்று படிக்க முடியாத கல்வி தொடர்பான சந்தேகங்களை சிலர் வீடியோக்களை பார்த்தே தெரிந்து கொள்கின்றனர். இப்படி யூடியூப் சானல்களின் மூலம் குறிப்பிட்ட அளவு பணமும் ஈட்டி வந்தனர். என்பதும் உண்மைதான். ஆனால்  ஒரு சேனலைத்தொடங்கினால் உடனே  அதிக பணம் ஈட்டமுடியாது. ஓராண்டில் 4 ஆயிரம் மணி நேரம் பார்வையாளர்களால் அந்த வீடியோ பார்க்கப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ஒரு சேனல் ஆயிரம் சந்தாதாரர்களையாவது பெற்றிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட விதிமுறைகள் உள்ளன. பலர் இந்த விதி முறைகளை அறியாமலேயே சேனல்களை  தொடங்குகிறார்கள். இன்று வீட்டுக்கு ஒரு மரம்  வளர்க்கிறார்களோ இல்லையோ ஒரு யூடியூபர் இருக்கிறார்கள் என்ற நிலை உருவாகியிருக்கிறது.

இன்று  சிலர் ஜாதி, மதம் தொடர்பான சர்ச்சைக்குரிய வீடியோக்களையும் பதிவிடுகின்றனர். பிரச்னைகள் ஏற்படுகின்றன.குக்கரில் சாராயம் காய்ச்சுதல், வீட்டிலேயே பிரசவம் பார்த்தல், பிரச்சினைக்குரிய நோய்களுக்கு எளிய மருத்துவம் என்ற பெயரில் வெளியாகும் வீடியோக்களால், பலர் உடல்ரீதியாக பாதிப்புகள், மரணமடையும் நிகழ்வுகள் அதிகரித்தவண்ணம் உள்ளன. பொது இடங்களில் இளம்பெண்களிடம் ஆபாசமான கேள்விகளைக் கேட்டு, பதிலைப் பெற்று அதில் மசாலாக்கள் சேர்த்து  வீடியோவாக்கியதால் பல பிரச்னைகளும் எழுந்தன. சிறுவர்கள் மனதைக் கெடுக்கக்கூடிய அளவில் ஆபாசமான வீடியோக்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

திரைப்படங்களுக்கு சென்சார் இருக்கிறது.  ஆனால் அந்தச் சட்டங்கன் மூலம் இவற்றின்  மீது  நடவடிக்கை எடுப்பது கடினமான செயல். யூடியூப் உலகளாவியது போன்ற பதில்களைச் சொல்லி காவல்துறை இனி பொறுப்பைத் தட்டிக் கழிக்க முடியாது.

தமிழக காவல்துறையினரே!  சர்ச்சைக்குரிய வீடியோக்கள், பதிவுகளை வெளியிடுவோர் மீதும், வெளியிடும் இணையதளங்கள் மீதும் இருக்கும் சட்டங்களின் மூலமாகவே நடவடிக்கை எடுக்க முடியும் என்பது தான் நீதியரசரின் வார்த்தைகளின் பொருள்.

காலத்தின் கட்டாயத்தைப் புரிந்து கொள்ளுங்கள்… சாட்டையை எடுங்கள்…

Loading content, please wait...

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com