0,00 INR

No products in the cart.

‘ இசைக்கருவிகள் எழுப்பும் இனிய ஓசையே என் சுவாசம்’

நேர் காணல்

”எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர்”

  ஸ்வர்ண ரம்யா

 

‘திருவிளையாடல்’  திரைப்படத்தில் “பாட்டும் நானே-பாவமும் நானே” என்ற பாடலில்  சிவாஜி பாடும் பாடலுக்கு அவரே பல வாத்தியங்களை இசைப்பதாக  காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அப்படி உண்மையிலேயே  வாய்ப்பாட்டு, வீணை, புல்லாங்குழல், வயலின், பியோனோ, கிதார் போன்ற அனைத்துக் கருவிகளையும்   அநாயசமாக வாசித்துப் பிரமிப்பூட்டுகிறார் கனடாவில் வசிக்கும் ஒரு  தமிழ்ப் பெண். பெயர்  ஸ்ருதி.  கனடாவில் டொரோண்ட்டோ பகுதியில்  பெற்றோர்களுடன் வசிக்கும் இவருக்கு,  இவருடைய அன்பு பெற்றோர்கள் சரியாகத்தான் பெயரிட்டிருக்கிறார்கள். இசையையே சுவாசிக்கும் இவருக்கு நடனமும் தெரியும். முறையாகக் கற்று அரேங்கற்றமும் செய்திருப்பவர். இவரின் யூட்யூப் சேனலில் இவர் வெளியிடும் வயலின் – புல்லாங்குழல் காம்போ இசை வீடியோக்களுக்கு   ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்கள்.  இவரது இசை சங்கமம் நிகழ்ச்சி  கனடா  –
வட அமெரிக்கத் தமிழ் அமைப்புகளில் மிகப் பிரபலம், பல தமிழ் இசையமைப்பாளர்களின் பாடல்களைத் தன் வயலினிலும், குழலிலும் உயிர்ப்பித்துக் கேட்போரை மெய்மறக்கச் செய்கிறார். இசையைப்போலத் தன் படிப்பையும் நேசிக்கிறார் ஸ்ருதி. டொரொண்டோ பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ. மேனேஜ்மெண்ட் மற்றும் பி.எஸ்சி. ஸ்டாட்டிஸ்டிக்ஸ் இரட்டை பட்டப்படிப்பு படித்து வரும்  இவர், பல்கலைக்கழக மாணவர்களின் அமைப்பான  தலைமைப்பண்பு திறன் வளர்க்கும் DECA   என்ற அமைப்பின் மார்கெட்டிங்  துணைத்தலைவராகவும் இருக்கிறார்.

கல்கிக்காக இவரைச் சந்தித்தபோது…

எப்படி இத்தனை இசைக்கருவிகளையும் மாயாஜாலம் போல் இயல்பாக, அழகாக வாசிக்கிறீர்கள்இ எப்போது எங்கு இதையெல்லாம் கற்றீர்கள்?

மூன்று வயதில் முதன்முதலில் என் அப்பாவின் வயலினை நான் வாசிக்க முயன்றேன். என் பிஞ்சுக் கைகளுக்கு அது சரியாக எட்டாது. என் இசையார்வத்தைக் புரிந்துக் கொண்டு எனக்காக ஹாஃப் சைஸில் ஒரு வயலினை அப்பா வாங்கித் தந்தார். அவரின் பயிற்சியில் என் வயலின் பயணம் அப்போதே தொடங்கிவிட்டது. என் பெற்றோர் இருவரும்  இசையில் மிக அதிக ஆர்வம் கொண்டவர்கள்.

அப்பா ‘பேங்க் ஆஃப் அமெரிக்கா’வின் ஐ.டி. பிரிவில் பணிபுரிந்து வருகிறார். அம்மா தொலைத் தொடர்பில் தொழில்நுட்ப அதிகாரியாக பணிபுரிந்தவர். ஆனாலும், இருவருக்கும் இசையில் அதிக ஆர்வம் இருந்ததால், ஆசிரியர் தேர்ச்சி பெற்று சொந்தமாக இசைப் பள்ளியையும் ஆரம்பித்தனர். உலகளாவிய மாணவர்களுக்கு அவர்கள் நடத்திய வகுப்புகள், கச்சேரிகள், ரெக்கார்டிங் எனச் சிறு வயதிலிருந்தே பெற்றோரின் இசையோடுதான் நான் வளர்ந்தேன். வாய்ப்பாட்டு, வீணை என ஒவ்வொன்றாக அப்பா, அம்மா எனக்குக் கற்றுத் தந்தனர். சொல்லப்போனால் நான் தினசரி ஒலிக்கும் பல வகை இசையுடன் வளர்ந்தவள்.

இப்போது மேற்கத்திய புல்லாங்குழல் மற்றும் பியானோவை கற்கும் வாய்ப்பையும் எனக்கு அமைத்துக் கொடுத்தனர். தற்போது லண்டன் ட்ரினிட்டி இசைக் கல்லூரியில் மேற்கத்திய பாரம்பரிய இசையில் டிப்ளமா படித்துக்கொண்டிருக்கிறேன்.

வயலின், புல்லாங்குழல் போலவே இனிய குரலில்  கர்நாடக இசையைப் பாடவும் செய்கிறீர்கள் , உங்கள் குரு யார்?

என் அன்புத்தந்தை தான் எனக்கு குரு- என்னை இயக்கும் சக்தி எல்லாம்.  நான் எப்போதுமே அப்பாவின் மகள்தான். என்னுடைய இசைப் பயணத்தின் அனைத்து நொடிகளிலும் அப்பா எப்போதும் தன் முழு ஆதரவைத் தந்துள்ளார். நான் ஒரே மகள் என்பதால் அப்பா, அம்மா இருவருமே என் சிறந்த நண்பர்கள். எங்களுடைய உலகம் எந்த ஓர் ஒளிவு மறைவுமில்லாத மகிழ்ச்சியான உலகம்.

இந்தியாவிலிருந்து இங்கு வரும் பல இசைக்கலைஞர்களுடன் இணைந்து நிகழ்ச்சிகள் செய்திருக்கிறீர்கள். அதில்  எது சிறப்பானது என்று சொல்லுவீர்கள்? 

எல்லா நிகழ்ச்சிகளுமே  சிறப்பானது தான் ஆனால் ‘பத்ம விபூஷன்’ டாக்டர்.கே.ஜே.யேசுதாஸ் அவர்களுடன் சேர்ந்து செய்த இசை நிகழ்ச்சி  அனுபவம் இன்றும் மனதில் நிற்கிறது. அவருடைய பல கச்சேரிகளுக்கு அப்பா வயலின் வாசித்துள்ளார்.   நான் வளர்ந்து பல இசை நிகழ்வுகளில் வாசித்துக்கொண்டிருந்த  சமயத்தில், டொரொண்டோவில் நடைபெற்ற ஓர் இசை நிகழ்ச்சிக்கு யேசுதாஸ் சார் வந்திருந்தார். அவரின் வருகைக்குப் பிறகு அந்த அரங்கமே கம்பீரமாகக் காட்சியளித்தது. அவர் பாடிய “‘ப்ரமதவனம் வேண்டும்”’ என்ற புகழ்பெற்ற பாடலுக்கு இசை முன்னுரையாக என்னைப் புல்லாங்குழல் வாசிக்குமாறு கூறினார். ஒத்திகையின் போது என்னை அவர் அருகில் அழைத்து, பொறுமையாக ஆலாபனைகளைக் கற்றுக் கொடுத்தார். அதே  நிகழ்ச்சியில் ‘பூவே செம்பூவே’ பாடலுக்கு நான் வாசித்த புல்லாங்குழல் இசைக்குக் கைதட்டி, என்னை வெகுவாகப் பாராட்டினார். என்னால் மறக்க முடியாத நாள் அது.

எல்லா வகையான வயலின்கள், புல்லாங்குழல்களில் கலக்கிக் கொண்டிருக்கிறீர்கள், வேறு கருவிகளை கற்கும் ஆசை இருக்கிறதா?

பல இசைக்கருவிகளைக் கற்கும் தாகம் எனக்குச் சிறு வயதிலிருந்தே ஆரம்பித்துவிட்டது. சில நாட்கள் தபேலாவைக் கற்றேன். கிட்டாரையும் சில நாட்கள் வாசிக்கப் பழகினேன். கிட்டாரை வாசித்தால் விரல்களின் மென்மை குறைந்துவிடும். வயலினை வாசிப்பதற்கு அது ஒரு இடையூறாகிவிடும். அதனால் கிட்டார் வாசிப்பதைத் தொடரவில்லை. டபுள் பேஸ், சலோ, ஹார்ப், சிதார் இவற்றையும்  கற்க ஆசை.

பாரம்பரிய இசையையும். இசைக்கருவிகளை வாசிக்க முறையாக கற்ற நீங்கள் இன்று பாப்புலாராகிக்கொண்டிருக்கும் ஃபியூஷன் இசையைப் பற்றி  என்ன நினைக்கிறீர்கள்?

பொதுவாக பிரபலக் கலைஞர்கள் பாடிய பாடல்களை இசைக் கருவிகளில் கேட்பதே ஒரு புதிய அனுபவம்தான். சமீபகாலங்களில் ‘ஃப்யூஷன்’ இசையை மக்கள் விரும்பிக் கேட்கின்றனர். வரவேற்கின்றனர். அதற்குக் காரணம் அது அமைந்திருக்கும் முறை ‘ஃப்யூஷன்’ இசையின் ஓர் அழகு என்னவென்றால் நமக்குப் புதிதாய் தோன்றும் சிந்தனைகளை அதில் முயற்சி செய்யலாம். பல இசை வகைகளில் தேர்ந்த ஒருவருக்கு அதில் ஆராய்ந்து பார்க்கும் முழுச் சுதந்திரம் உள்ளதாகக் கருதுகிறேன். ரசிகர்களுக்கும் அது ஒரு வித்தியாசமான அனுபவத்தைத் தரும்.  நான் கூட ‘டெஸ்ப்பசிட்டோ’ மற்றும் ‘ஷேப் ஆஃப் யூ’ போன்ற மேற்கத்திய பாடல்களை  நம் பாரம்பரிய வயலினில் வாசித்திருக்கிறேன்.

உங்களின் இசையைப் போலவே, உங்கள் இசை வீடியோக்களில்  இயற்கையின் எழில் கொஞ்சுகிறது. வீடியோகிராஃபியை யார் செய்கிறார்?

என் அனைத்து யூ-ட்யூப் இசை வீடியோக்களுக்கும் அப்பாதான் வீடியோகிராஃபி செய்துள்ளார். முதலில் நாங்கள் வெளியிடும் பாடலை இண்டோர் ஷூட் செய்வதா, அவுட்டோர் ஷுட் செய்வதா என தீர்மானித்துக் கொள்வோம். இண்டோர் ஷுட்டிற்கு வீட்டிலேயே அப்பா அமைத்துள்ள ஸ்டூடியோவில் காட்சிகளை அமைப்போம். வெளியில் படமாக்க வேண்டுமென்றால் என் அம்மாதான் இணையதளத்தில் அலசி இடங்களைத் தேர்வு செய்வார். அது மட்டுமல்லாமல் என் சோஷியல் மீடியா சம்பந்தமான அனைத்து நிகழ்வுகளையும் ஒரு மேனேஜரைப் போல் என் அம்மாவே பார்த்துக் கொள்வார். அனைவரும் விரும்பும் அக்கால மெலடிகள் முதல் இக்காலப் பாடல்கள் வரை எந்தப் பாடலைப் பதிவு செய்வது என்பதையும் அம்மா முடிவெடுப்பார். என் முதல் ரசிகையும் என் அம்மாதான். நான் வெளியிடும் இசைப் பதிவுகளை நாள் முழுவதும், நான் போதுமென்று சொன்னால்கூட சலிக்காமல் கேட்டு ரசிப்பார். வீட்டில் ரெக்கார்ட் செய்யும் பாடல்களின் இசையை லைவ்வாக பதிவு செய்வோம். வெளியில் சுற்றுப்புறச் சத்தங்கள் இருப்பதால் லைவ் பதிவு சாத்தியப்படுவதில்லை. அதனால் முதலில் இசையைத் துல்லியமாகப் பதிவு செய்துவிட்டு, பின்னர் வீடியோவுடன் அதை சிங்க் செய்வோம். இந்த ரீ-மிக்ஸ் பணியையும்  அப்பாதான் செய்வார்.

நீங்கள் நடனத்திலும்  சாதனை செய்திருப்பதாக அறிகிறோம். அதைப்பற்றிச் சொல்லுங்கள்

2021இல் கொரோனா தீவிரமாக இருந்த காலகட்டம். கனடா, அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளிலிருந்து பல மாணவர்களை சென்னையைச் சேர்ந்த ‘கலைமாமணி’மதுரை முரளிதரன் அவர்கள் திரட்டினார். ‘ஜூம்’ செயலியில்தான் பயிற்சி வகுப்புகள் நடந்தன. அந்த வாரம் நாங்கள் கற்க வேண்டிய ஜதி நடனங்களின் வீடியோக்களை பாகம் பாகமாக முன்கூட்டியே எங்களுக்கு அனுப்புவார். அந்த அறுபது ஜதிகளையும் நினைவில் வைத்துக் கொண்டு, அனைத்து மாணவர்களும் ஒருசேர ஆடுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதைச் செய்ய உடல் வலிமையும் மிக அவசியமானதாக இருந்தது. முரளி சார் தந்த  ஊக்கத்தாலும், எங்கள் கடின உழைப்பாலும் இரண்டு மணிநேரத் தொடர் கூட்டு நடன சாதனை சாத்தியமானது. அந்த  ‘தமிழ் அன்னை வர்ணம்’ மற்றும் ’60 ஜதிகள்’ என்ற இரண்டு கின்னஸ் சாதனைகள்…   என் வாழ்வின் மறக்க முடியாத அனுபவங்களில் இதுவும் ஒன்று.

நீங்கள் பல விருதுகளைப் பெற்றிருக்கிறீர்கள் . அதில் எது சிறந்தது என்று நினைக்கிறீர்கள்?

எந்த ஒரு விருதும் கலைஞனுக்குச் சிறந்தது தான். சிறந்த இன்ஸ்ட்ரூமெண்டலிஸ்ட் 2020’ – எடிசன் விருது, ‘இன்ஸ்ட்ரூமெண்டல் சூப்பர் ஸ்டார் 2020’ – சூப்பர்ஸ்டார் இ-விருது, ‘சிறந்த மல்டி இன்ஸ்ட்ரூமெண்டலிஸ்ட் 2022’ – நோபல் கோல்டன் க்ரௌன் விருது –  என்ற அண்மைக்காலத்தில் நிறைய விருதுகளைப்  பெற்றிருந்தாலும்  என் இசையை ரசிக்கும் ரசிகர்களின் பாராட்டுக்களைத்தான் பெரிய விருதாக கருதுகிறேன் ‘உங்கள் இசைக்கு நான் அடிமை’, ‘உன் இசைகேட்டால் என் கண் கலங்குகிறது’, ‘என் ஸ்ட்ரெஸ்பர்ஸ்டரே உங்கள் இசைதான்’ போன்ற கமெண்ட்டுகளை இசை வீடியோக்களில் பார்க்கும்போது  நெகிழ்ச்சியாக யிருக்கிறது.  இசையைக் கற்று வளர்ந்த காலத்தில், எதிர்காலத்தில் இத்தனை உள்ளங்களின் அன்பைப் பெறுவேன் என நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. கனடா, இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளிலும் என்னை ஆதரித்து வரும் மக்கள் அனைவருக்கும் என் இதயபூர்வமான நன்றிகள். இவர்கள் தரும் உற்சாகம், நான் மேன்மேலும் நல்ல, தரமான இசையை வழங்குவதற்கான ஓர் உந்துசக்தியாக இருக்கிறது.

உங்களுக்குப் பிடித்த பொழுதுபோக்குகள்?

நேரம் கிடைக்கும் போது பெற்றோருடன் சேர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது மிகவும் பிடிக்கும். ஓவியம் வரைவது, பென்சில் ஸ்கெட்ச் செய்வது, பேட்மிண்டன், கைப்பந்து, கூடைப்பந்து, நீச்சல் இவை எனக்கு மிகவும் பிடித்த பொழுதுபோக்குகள்.

இசையும் நடனமும் இனிய குரலும் கொண்ட நீங்கள் திரைத்துறையில்  உங்கள் திறனைக்காட்டும் எண்ணமுண்டா?

இசையை மையமாக வைத்து உருவாக்கப்படும் கதையாக இருந்தால் யோசிக்கலாம்.  எம்.எஸ்.சுப்புலட்சுமி அம்மா  போன்ற சாதனையாளர்களின்  வாழ்க்கை வரலாற்றைப் படமாக எடுத்தால்,  அதில்  நடிப்பது ஒரு மிகப்பெரிய கௌரவம். அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக அதில் பங்கு பெறுவதைப் பெருமையாகக் கருதுகிறேன்

டப்பிங் காணொளிகளைப் பார்த்து எப்போதுமே ஆச்சர்யப்படுவேன். எப்படி அந்த நடிகரின் பாவனைகளைக் கச்சிதமாகக் குரல் மூலம் உணர்த்துகிறார்கள் என்பதை நினைக்கும்போது பிரமிப்பாக உள்ளது. ஒரு முறையாவது டப்பிங் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசையும்  உண்டு. நயன்தாராவும், கீர்த்தி சுரேஷும் எனக்கு மிகவும் பிடித்த நடிகைகள். கீர்த்தி சுரேஷுக்கு என் குரல் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். அவர் பேசும் விதமும், தோரணையும் என்னைப் போலவே உள்ளது என என் அம்மாவும் மற்றும் பலரும் சொல்லுகிறார்கள்.

எதிர்காலத் திட்டம் என்ன?

அப்பாவும் அம்மாவும் நடத்தும்  ‘ஸ்ருதி மியூசிக் அகடமி’யில்  வருங்காலத்தில் பல நாடுகளைச் சேர்ந்த மாணவர்களை ஒருங்கிணைத்து பயிற்சிப் பட்டறைகள் நடத்தவும், பயிற்சிகள் கொடுக்கவும் திட்டமிட்டுள்ளேன். என்னைப் பொறுத்த வரையில் ஆரம்பப் பள்ளிக் கல்வித் திட்டத்தில் இசையை ஒரு பாடப்பிரிவாகவே வைக்கலாம். கலையில் ஆர்வமுள்ள மாணவர்கள் இதனால் பயனடைவார்கள். களையாற்றலை வளர்த்துக் கொள்வது அவர்களின் ஆரோக்கியமான மனவளர்ச்சிக்கும் உதவும். எந்த இசை முறையில் சாதிக்க நினைத்தாலும், முறையான அடிப்படைப் பயிற்சிகளை எடுத்துக் கொள்வது ஒருவரின் இசையாற்றலுக்கு உதவியாக இருக்கும். நாம் தேர்ந்தெடுக்கும் தளத்தைப் பற்றிய அறிவையும் வளர்த்துக் கொள்வது அவசியம். தன் தனித்திறமையைக் கண்டறிந்து, பிறரிடமிருந்து மாறுபட்டு புதிய இசைப் பரிமாணங்களை முயற்சி செய்யும் ஆர்வமும் இருக்க வேண்டும். எதைச் செய்தாலும் அதை ரசித்து, நேர்மையாகச் செய்தால் மக்கள் தங்கள் ஆதரவைத் தரத் தயாராக உள்ளனர். என்பதை   எங்கள்  அகடமியின் மாணவர்களுக்குப் புரிய வைத்துச் செயல்படவைக்க வேண்டும் என்று நினைக்கிறேன், அப்பா,  அம்மா ஆசியுடன் இது நடக்கும் என நம்புகிறேன்.

1 COMMENT

Swarna Ramya
பி.ஸ்வர்ண ரம்யா, சென்னையில் எலெக்ட்டிரானிக் மீடியாவும், விஷுவல் டெக்னாலஜியும் படித்தவர். தமிழில் மிக ஆர்வம் கொண்டவர். பத்தாம் வகுப்பில் மாநிலத்திலேயே முதல் மதிப்பெண் பெற்றவர், கவிதைகள், கட்டுரைகள் எழுதுபவர். தற்போது கனடாவில் வசிக்கிறார்.

Stay Connected

261,037FansLike
1,932FollowersFollow
11,900SubscribersSubscribe

Other Articles

‘பேலன்ஸ்’ செய்யும் பறவைகள்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் முதல் சைக்கிள் ஓட்டும் அனுபவம் எல்லோருக்கும் கிடைத்திருக்கும். வாடகை சைக்கிளில் சீட்டில் உட்கார்ந்தால் கால்கள் தரையில் உந்த முடியாமல், முதலிரவு பையன் போலத் தத்தளிக்க ஒருவழியாக அப்பா மெல்லத்...

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

நூலகத்தில் கிட்டத்தட்ட 600க்கும் மேல் புத்தங்கள்

0
முகநூல் பக்கம்   Eniyan Ramamoorthy (இனியன் தமிழ்நாடு)   காவல் நிலையத்தில் நூலகம். ஊரில் உள்ள இளைஞர்களை வரவழைத்து போட்டித் தேர்வு வகுப்புகள், இலக்கிய உரையாடல்கள் என்றெல்லாம் அசத்திக் கொண்டிருக்கிறது சின்னமனூர் காவல் நிலையம். காலை 8 மணி முதல்...

“குருஷேத்திரத்தில் ராவண வதம்; யுத்தபூமியில் சீதையின் சுயம்வரம்”

0
சினிமா விமர்சனம்   - லதானந்த்   ராணுவ வீரர் ஒருவரின் கடிதத்தை அவரது மனைவியிடம் சேர்க்கும் கட்டாயம் ஓர் இளம்பெண்ணுக்கு ஏற்படுகிறது. அந்த மனைவியைத்  தேடிப் பல இடங்களிலும் அலைகிறார் அஃப்ரீன் வேடமேற்றிருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த...

அவரைப் போல ஆசிரியர் மீது பக்தி கொண்ட நிருபர்களை பார்ப்பது மிக மிக அபூர்வம்!

1
ஒரு நிருபரின் டைரி - 33 எஸ். சந்திரமௌலி   பால்யூ : பத்திரிகை உலகத்து தேனீ   வழக்கமாக எழுத்தாளர்கள் புனைப்பெயர் வைத்துக்கொண்டு சிறுகதைகள்,  தொடர்கதைகள், நாவல்கள் எழுதுவார்கள்.  வெகு அபூர்வமாக சிலர், ஸ்ரீவேணுகோபாலன், புஷ்பா தங்கதுரை மாதிரி...