
Ø "தரமான படத்தை தாங்கிப்பிடிக்க ரசிகர்கள் தவறியதே இல்லை' என கமல் கூறியுள்ளாரே?
– ஆ. மாடக்கண்ணு, பாப்பான் குளம்.
! அவருடைய விக்ரம் வசூலில் வெற்றிப்பெற்றுவிட்டதால் பேசும் பேச்சு இது. கமலின் படங்கள் உட்பட பல தரமான படங்களைத் தூக்கி கிழே போட்டவர்களும் இவர் சொல்லும் ரசிகர்கள்தான். படத்தின் தரம் வசூலால் மட்டும் தீர்மானிக்கப்படுவதில்லை. இது கமலுக்கும் தெரியும். ஆனால் அவர் அரசியல்வாதியாகி விட்டதால் தனக்கு வசதியானவற்றை மட்டும் தான் பேசுவார்.
Ø "தமிழக மக்கள் கடவுளை நம்பி ஆன்மீகவாதிகளாக மாறிவிட்டனர்" என்ற பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் கருத்து பற்றி…?
– எம். பானுமதி, கெங்கராம்பாளையம்
! பாவம் தமிழக மக்கள்… எல்லோரும் இது நாள்வரை கடவுளை நம்பாமலிருந்தார்கள், தேவ தூதர்களாக இவருடைய கட்சிக்காரர்கள் வந்து சொன்னவுடன் ஆன்மீகவாதிகளாக மாறிவிட்டனர், கடவுள் இவர்களை காப்பாற்றட்டும்.
Ø அரசு சார்பாக அரசியல்வாதிகளுக்கு பயிற்சி பட்டறை நடத்தினால் எப்படி இருக்கும்?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! அரசு என்பது அதிகாரிகள் என்ற மனிதர்களால் இயக்கப்படும் ஒர் இயந்திரம். இயந்திரங்கள் மனிதர்களுக்கு பயிற்சி கொடுப்பதில்லை.
Ø "இந்தியாவில் சுதந்திரத்திற்கு முன்பு 93% இந்துக்கள் இருந்தனர். ஆனால் தற்போது 80% இந்துக்கள் மட்டுமே இருக்கின்றனர்" என்று துறவியர் மாநாட்டில் பேசப்பட்டிருக்கிறதே… இது உண்மைதானா ?
– இரா. அருண்குமார், வாணரப்பேட்டை, புதுச்சேரி
! இந்த துறவிகளுக்கு யார் புள்ளிவிபரங்கள் கொடுக்கிறோர்களோ தெரியவில்லை.
எப்போதுமே இந்துக்கள் 93 % இருந்ததில்லை. இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையம், 2011 ஆம் ஆண்டு மத அடிப்படையில் எடுக்கப்பட்ட மக்கள் தொகையின்படி இந்துக்கள் 79.8 சதவீதம். 2001லிருந்து 2011 வரையிலான 10 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை 0.7 % குறைந்திருக்கிறது. இதனால் இந்துகளில் பலர் மதம் மாற்றப்படிருக்கிறார்கள் என்று சொல்வது சரியான வாதமில்லை. எந்த ஒரு மதத்தையோ அல்லது நம்பிக்கையோ பின்பற்றாதவர்கள் அல்லது தங்கள் மதங்களை பதிவு செய்யாதவர்களின் எண்ணிக்கை 0.5% என்றும் இந்த கணக்கீடு சொல்லுகிறது. பிரச்னைகளை கிளப்பி நாட்டின் அமைதியைக் குறைக்க இந்த முற்றும் துறந்த முனிவர்கள் கையிலெடுத்திருக்கும் ஆயுதங்களில் ஒன்று இப்படிப்பட்ட தவறான புள்ளிவிபரங்கள்.
Ø தாரத்துக்கும் பொருளாதாரத்துக்கும் ஸ்பெஷல் சம்பந்தம் உண்டோ?
– நெல்லை குரலோன், பொட்டல்புதூர்
! நிறைய… நலிந்து வரும் நாட்டின் பொருளாதாரத்தால் சரியும் இல்லத்தின் பொருளாதாரங்களை நம் நிதியமைச்சரை விட திறமையாகச் சமாளிப்பவ்ர்கள் இந்த " தாரங்கள் " தானே.
Ø "பா.ஜ.க-வை எதிர்க்கட்சியாக உருவாக்குவதே தி.மு.க. தான்" என்ற அண்ணாமலையின் கருத்து பற்றி…
– எம். பானுமதி, மாங்குப்பம்
! கட்சியை வளர்ப்பதற்கு ஆளும் கட்சி மீது தொடர்ந்து புகார்களைச் சொல்லி அதற்கு அவர்களை பதில் சொல்ல வைப்பதின் மூலம் மீடியாவை ஈர்ப்பது தமிழக அரசியல் மாடல். இதை அண்ணாமலை நன்கு கற்றுத் தேர்ந்துவிட்டார். ஆனால், எதிர்கட்சியாக உருவாக மக்கள் ஆதரவு வேண்டுமே?
Ø "அநீதி நடக்கும்போதெல்லாம் கிருஷ்ண பரமாத்மாவின் அவதாரம் எடுப்பேன்" என்று சீமான் பேசியிருக்கிறாரே…
– கி. சோழராஜன், புதுச்சேரி – 605107
! "என் முப்பாட்டன் முருகன்" என்று சொன்னவர் இன்று "கிருஷ்ண அவதாரம் எடுப்பேன்" என்கிறார். கடவுள் மனிதானாக அவதாரம் எடுத்ததாகச் சொல்வது நம் புராணம். மனிதன் கடவுளாக அவதாரம் எடுப்பேன் என்று சொல்வது அரசியல்.
Ø ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆராய ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதே?
– மு. மதிவாணன், அரூர்
! வரவேற்கவேண்டிய விஷயம். அவசர சட்டம் அறிவிக்கபட்டால் உடனே நீதிமன்றத்தில் அதற்கு தடை பெறும் முயற்சிகளை முன்னெடுக்குமளவுக்கு இந்த சூதாட்டதின் பின்னே இருக்கும் லாபி வலிமையானது. அதைத் தவிர்க்க ஒரு நீதியரசரின் ஆலோசனைகளை முன்கூட்டியே பெறுவது நல்லது.
Ø "கொரோனா வராமல் இருந்திருந்தால் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. தான் ஆட்சியமைத்திருக்கும்" என்று ஜே.பி.நட்டா பேசியிருக்கிறாரே…
– இராமதாசு, ரங்கநாதபுரம்
! அந்த தேர்தல் காலத்தில் தேர்தல் நடந்த மற்ற 4 மாநிலங்களில் கொரோனா இல்லை என்கிறாரா?
Ø அன்றைய விக்ரம் – இன்றைய விக்ரம் !!! எந்த கமல்ஹாசன் பிரமிக்க வைக்கிறார்?
– சி. கார்த்திகேயன், சாத்தூர்
! அன்றைய விக்ரமில் சுஜாதா குமுதத்தில் படம் வருமுன்னரே எழுதிய தொடர் மூலம் படம் எப்படியிருக்கும் என பிரமிக்கவைத்து ஏமாற்றினார்.
இன்றய விக்ரமில் வயதானாலும் வழக்கம்போல் படம் முழுவதும் ஆக்கரமிக்காமலும், முதல் பாதியில் ஒரு வசனம் மட்டும் பேசினாலும், நீண்ட லீவு எடுத்துக்கொண்டு அரசியலுக்குப் போய் திரும்பி வந்தாலும் தான் "வசூல்ராஜாதான்" என்று இந்த விக்ரமில் பிரமிக்க வைக்கிறார்.
Ø "ரிஷிகளாலும் முனிவர்களாலும் சனாதன தர்மத்தின் ஒளியால்தான் இந்தியா உருவாக்கப்பட்டது" என்ற ஆளுநர் ஆர்.என் ரவியின் கருத்து பற்றி…
– இரா. அமிர்தவர்ஷினி, புதுச்சேரி
! "இந்தியா என்பதே பிரிட்டிஷ்காரர்கள் உருவாக்கியதுதான்" என்று கற்று வந்த பாடத்தை மறந்துவிட்டாரா?
Ø சாவர்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கேட்கவில்லை என்கிறது பா.ஜ.க – இது உண்மையா? வரலாறு சொல்வதென்ன?
– வைதேகி ராமசந்திரன், பெங்களூரு
!. . . .பல முறை "கைது செய்யப்பட்ட பின்னர் யதார்த்தத்தை எதிர்கொண்டார் சாவர்கர். 1911 ஜூலை 11 ஆம் தேதி சாவர்க்கர் அந்தமானுக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சென்ற ஒன்றரை மாதங்களுக்குள் அதாவது ஆகஸ்ட் 29 ஆம் தேதியன்று அவர் தனது முதல் மன்னிப்புக் கோரிக்கையை எழுதினார். அதன்பிறகு 9 ஆண்டுகளில், அவர் 6 முறை மன்னிப்புக் கடிதங்களை கொடுத்தார். "… என்று சாவர்க்கர் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு சாவர்கர் குறித்து நூல் எழுதிருக்கும் நிரஞ்சன் தக்லே.
Ø அதானி இலங்கைக்கு உதவப்போகிறாரேமே?
– சண்முக சுந்திரம், பாளையங்கோட்டை
! "நிதி மிகுந்தவர் பொற்குவை தாரீர்" என்ற ரீதியில் இலங்கை அதிபர் கெஞ்சிக்கொண்டிருக்கும் இந்த நேரத்தில் அந்த நாட்டின் சீரழிந்த பொருளாதாரத்தை மீட்க யார் உதவினாலும் வரவேற்க வேண்டும். அந்த நன்றியை அவர்கள் மறவாமலிருக்க வேண்டும்.
Ø உக்ரைன் – ரஷ்யா போர் ஓயாதா?
– கண்ணகி வேலன், மேலூர்
! ஒரு போரை நடத்துவதும், நிறுத்துவதும் நாட்டு தலைவர்களின் மனதில் எழும் எண்ணங்கள்தான். ஜார் மன்னர் மகாபீட்டரை வியந்து போற்றுபவர் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின். இது பரவலாக அறியப்பட்டதுதான். ஆனால், இப்போது மகாபீட்டரைப் போன்றே தாம் செயல்படுவதாக இப்போது கருதத் தொடங்கியிருக்கிறார். மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்பு மகாபீட்டர் நடத்திய போர்களுடன் இன்று தாம் நடத்திக் கொண்டிருக்கும் யுக்ரேனியப் போரை புதின் வெளிப்படையாகவே ஒப்பிடுகிறார், அந்தப் போர் 21 ஆண்டுகள் நடந்தது வரலாறு.
Ø ஓடிடிக்கு சென்சார் வராதா?
– சந்திரா செல்வகுமார், பெரம்பூர்
! ஹாலிவுட் படங்களைப் போல இந்தியாவில் தயாரிக்கப்படும் சீரியல்களிலும் அதிகரிக்கும் ஆபாசக் காட்சிகளைப் பார்க்கும்போது வரவேண்டும்… கட்டாயம் உடனே வரவேண்டும் என்று தோன்றுகிறது.
Ø சிலர் தனக்கு தானே பேசிக்கொண்டே நடக்கிறார்களே?
– சந்திரமோகன், ஶ்ரீவில்லிபுத்தூர்.
! கவனித்துப் பாருங்கள் பாக்கெட்டிலிருக்கும் செல்போனில் புளுடூத் வழியாக யாருடனாவது பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது பலர் கையில் போன் இல்லாத போது பேசுவதேயில்லை.