
கூர்மையான சங்கீத விமர்சகர்கள் சிறந்த பாடகர்களாக இருக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லையல்லவா? அதைப் போலவே பலப் பல திரைப்படங்களை நார் நாராகக் கிழித்துத்தொங்கவிட்ட ப்ளூ சட்டை மாறன் இயக்கியிருக்கும் 'ஆன்டி இண்டியன்' திரைப்படமும் முழுமை பெற்ற திரைக் காவியமாக உருப்பெறவில்லை என்பதை முதலிலேயே சொல்லிவிடுகிறோம்.
ஒரு பிரேதத்தைச் சுற்றியே தட்டையான நேர் கோட்டில் கதை பயணிக்கிறது. இறந்தவரின் பெயர் பாட்சா; தந்தை முஸ்லிம்; தாய் கிறிஸ்தவராகப் பின்னாளில் மதம் மாறிய இந்து. இறந்தவரின் சடலத்தை எந்த மத சம்பிரதாயங்களுடன் எங்கு நல்லடக்கம் செய்வது என்பது குறித்து மூன்று மதத்தாருக்கும் கருத்து வேறுபாடு நிலவுகிறது. எந்நேரமும் கலவரம் வெடிக்கக் கூடும் என்ற சூழல். கலவரமும் வெடித்துப் பலர் சாகிறர்கள். ஆனால் கலவரத்துக் காரணம் மதவாதிகள் அல்ல என்பதும் அரசியல்வாதிகளால் பிரச்னை எப்படி வன்முறையாக வெடிக்க வைக்கப்படுகிறது என்பதும்தான் கதை.
வசனங்கள் பல இடங்களில் சமகால அரசியலை நையாண்டி செய்கிறது. 'கபாலி என்ற நடிகர் அரசியலுக்கு வருவதாகச் சொல்லி 25 ஆண்டுகளாகத் தன் ரசிகர்களை ஏமாற்றிவருகிறார்' என்று போகிற போக்கில் ஒரு பிட்டை வீசுகிறார்கள். 'கபாலி' யார் என்பது புரிகிறதுதானே!
"மதத்தை நம்புகிறவன் கோவிச்சுக்க மாட்டான்; மதத்தை வச்சுப் பொழைப்பு நடத்துறவன்தான் கோவிச்சுக்குவான்" போன்ற பஞ்ச் டயலாக்குகள் படம் நெடுகிலும் நிரம்ப வருகின்றன.
மிக அருவருக்கத்தக்க கொச்சையான வார்த்தை ஒன்றைப் படத்தில் பேசுவதாகக் காண்பித்திருக்கிறார்கள். சென்ஸாரில் எப்படித் தப்பித்தது இது? கண்டிக்க வேண்டிய விஷயம். சென்னையின் விளிம்பு நிலை மக்கள் பயன்படுத்தும் இன்னொரு சொல்லும் காட்சிக்குக் காட்சி பேசப்படுகிறது. தவிர்த்திருக்கலாம்.
காவித் துண்டு அணிந்த அரசியல்வாதியிடம் 'தமிழ்நாட்டையே மறைமுகமாக நீங்கதானே ஆளுறீங்க' என்பதுபோன்ற அரசியல் ஊசிகள் அநேகம் இடம்பெற்றிருக்கின்றன.
சின்ன சின்னப் பாத்திரங்களும் கச்சிதமாகப் பொருந்தி, இயல்பாக நடித்திருக்கிறார்கள். உதாரணமாக ஷாமியானா பந்தல் போடும் பையன், சவ ஊர்வலத்தில் ஆடும் 'நடனக் கலைஞர்கள்', இரங்கற் பா பாடும் கானாப் பாடகர்கள் போன்றவர்களைச் சொல்லலாம்.
ஊடகங்கள் சாதாராண விஷயத்தை எப்படிப் பரபரப்பாக்க முயற்சிக்கின்றன என்பதையும் அங்கதமாகச் சாடியிருக்கிறார்கள். ஓட்டுக்குப் பணம் கொடுப்பதையும், அதை இயல்பாக மக்கள் பெறுவதையும் துல்லியமாகச் சித்தரித்திருக்கிறார்கள்.
இசையும், பின்னணி இசையும் சொல்லிக்கொள்ளும் வகையில் இல்லை.
பல காட்சிகள் தொலைக்காட்சி சீரியல்களை நினைவுபடுத்துகின்றன.
மொத்தத்தில் : அடுத்த படமாவது குறையே இல்லாதபடி எடுக்க முயற்சியுங்கள் ப்ளூ சட்டை சார்!